எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார்! உஷார்!! உஷார்!!!

கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம் வாரீர்!

குருகுலக் கல்வி எனும் பெயரால் ராஜாஜியின் பழைய குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான கல்வியைத் திணிக்க மத்திய பார்ப்பனீய பாசிச பி.ஜே.பி. அரசு திட்டமிட்டுள்ளது. இந்தக் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாய்த் திரளுவோம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அதிமுக்கிய அறிக்கை வருமாறு:

நமது நாட்டை வேத காலத்திற்கே அழைத்துச் செல்லும் சமஸ்கிருதத்தையும், வேதக் கல்வியையும் மீண்டும் புதிய கல்வித் திட்டமாக - பழைய குருகுல முறையைப் புதுப்பிக்கும் திட்டம் என்பதை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி, அதனை நடைமுறைப் படுத்திட தீவிர ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன!

கல்விக் கண்ணை குத்த திட்டம்!

நமது இளந்தளிர்'களின் கல்விக்கண் முழுமையாக குத்தப் பட்டு, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் எல்லோருமே பார்ப்பனீய - சமஸ்கிருத - வேதக் கல்வியைத்தான் சிறுவயதிலிருந்து - குருகுல முறையில் படித்தாகவேண்டும்.

இதற்கென  (சமஸ்கிருத - வேதப் படிப்புக்காக) தனி பரிசு போல, இதை சில ஆண்டுகளில் முடித்த சிறுவர்கள் - தாங்களே தனக்குத்தானே சான்றிதழ் வழங்கி, எடுத்த எடுப்பிலேயே 10 ஆம் வகுப்பில் நேரிடையாகச் சேர்ந்துவிடலாமாம்!

ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் விபரீதத்தைப் பாரீர்!

ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் இத்திட்டம்பற்றிய வேதனை தரும் விபரீதத் தகவல்கள் இதோ:

பழைய குருகுலக் கல்வியை மீண்டும் புதுப்பித்து கல்வியை மாற்றி அமைக்கும் திட்டம்பற்றி, இந்து, சமஸ்கிருத பாடசாலை - மடாதிபதிகள் ஆகியவர்களை அழைத்து உஜ்ஜயினியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநாட்டின் முக்கிய வழிகாட்டியவர் ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத் என்ற பார்ப்பனர் ஆவார்! மாநாடு முடிந்தவுடன் - இதன் (Follow up) செயலாக்க ஏற்பாடுகள் - தாமதமின்றி உடனடியாகத் தொடருவதோடு, பெற்றோர்களின் மனநிலை இதற்கு எதிர்ப்பாக இருப்பதை மாற்றிட அனைவரும் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றார் அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்.

முதல் நடவடிக்கையாக, குருகுலம் என்ற பெயரில் வீட்டிலோ, வேறு தனி இடத்திலோ சிறுவயதிலேயே,

1. வேத அத்யாயனம் (வேதம் கற்றல்)

2. பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை)

3. சமஸ்கிருத வியாகரணம் (சமஸ்கிருத இலக்கணம்)

4. சமஸ்கிருத சாகித்திய (சமஸ்கிருத பாடப் புலமை)

5. சமஸ்கிருத மொழி (புலமை) கற்றல்

தனக்குத்தானே சான்றொப்பம்

இந்த 5 பாடங்களில் கற்று தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று அந்த மாணவரே தானே சான்றிதழ் எழுத்துமூலம் கொடுப்பதை வாங்கி வைத்துக்கொண்டு, உடனடியாக நேரே 10 ஆம் வகுப்பு (X Standard) வகுப்பில் சேரலாம் (பழைய கால Private Study என்பது போன்றது) பிறகு 11, 12 வகுப்பினை முடித்துவிடலாம்.

மேலே காட்டிய 5 பாடங்களில் வெற்றி பெறுவதற்கு வெறும்  33 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றாலே போதுமானது.

அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல்

பாடங்களைப் படிக்கத் தேவையில்லையாம்!

10 ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையாக பல வகுப்புகளில் 6, 7, 8, 9 வகுப்புகளில் - மாணவர்கள் படிக்கும் பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் போன்றவைகள் ஏதும் படிக்கத் தேவையில்லை. குருகுலத்தில் கணிதம் ஏதாவது சொல்லிக் கொடுப்பதோ, கற்கப்படுவதாகவோ இருப்பின், அது வேதக் கணிதமாம்! (Vedic Mathematics).

மேற்கண்ட சமஸ்கிருதக் கல்வி பயிற்சி பெற்றிட குருகுலக் கல்விக் கூடங்களில் மட்டும்தான் சாத்தியப்படும்.

மத்திய அரசின் நிதி உதவிகள்

கல்வியை சமஸ்கிருத மயம், வேத மயம் ஆக்கிவரும், பெரிதும் சமஸ்கிருதத்தைப் பரப்பிடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் இயக்கப்படும் சமஸ்கிருத பாரதி'' பள்ளிக் கூடங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் மானிய உதவி (Grant) மக்கள் வரிப் பணத்தில் திருப்பி விட்டுப் பயன் பெறச் செய்யவும், பார்ப்பன சமஸ்கிருத பண்டிதர்களுக்கு ஆசிரியர் வேலை வாய்ப்பைப் பெருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சித் திட்டமே இது!

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தைவிட

மோசமானது!

1952 இல் சி.ராஜகோபாலாச்சாரியார் முதல்வராக இருந்த பொழுது கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைவிட இது -  மிக, மிக, மிக, மோசமான, நம்முடைய பார்ப்பனரல்லாத பிள்ளைகளை மீளாப் படுகுழியில் தள்ளும் திட்டமாகும்! உஷார்! உஷார்!!

18.5.2018 தி இந்து' (The Hindu) ஆங்கில நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தி (அருகில் காண்க) வெளியிடப் பட்டுள்ளதோடு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆங்கில வார ஏடான ஆர்கனைசர்' (Organiser) ஏட்டில் படத்துடன் வெளிவந்துள்ளதையும் (8 ஆம் பக்கத்தில்) வெளியிட்டுள்ளோம்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

நேற்று (22.5.2018) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற 1. தி.மு.க. 2. திராவிடர் கழகம் 3. காங்கிரசு 4. ம.தி.மு.க. 5. இந்தியக் கம்யூனிஸ்ட் 6. இந்திய கம்யூனிஸ்ட் (The Hindu) 7. விடுதலைச் சிறுத்தைகள் 8. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 9. மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கலந்துகொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த ஆபத்துபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டு, இதனை மத்திய அரசு செயல்படுத்த இருப்பதை உடனே கைவிடவேண்டும் என்று வற்புறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது!

ஓரணியில் திரளுவோம்!

நமது பிள்ளைகளின் எதிர்கால கல்விக் கனவுகள் அடியோடு சிதைந்து, மிகப்பெரிய இருண்ட காலத்திற்கு இந்நாட்டை - நிகழ்கால - வருங்கால மாணவர்கள் சமூகத்தைத் தள்ளிவிடும். இந்த சமூக அநீதியை கல்விக் கண்ணைக் குத்திடும் கொடுமையை எதிர்த்து, அனைவரும் ஓரணியில் திரண்டு நின்று விரட்டியடிக்க வேண்டும்!

கல்வி பயங்கரவாதக் கூட்டத்திடமிருந்து

கல்வியைக் காப்போம்!

பெற்றோர்கள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், எழுத் தாளர்கள், பேச்சாளர்கள் அனைவராலும் ஒன்றிணைந்து முளையிலேயே இந்த முயற்சி கிள்ளி எறியப்பட்டு,  முற்றாக முறியடித்திட ஒன்று சேர்ந்து ஓங்கிக் குரல் எழுப்பி, நாட்டை இந்த கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து காப்பாற்றிட, காலதாமதமின்றி அறப்போர்களை நடத்தியாகவேண்டும்!

மீண்டும் மனுதர்ம யுகத்திற்கே அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியுமா?

 

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

23.5.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner