எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது

ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே!

நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சூளுரை

 

சென்னை, மே 25  தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது - இதற்கு ஒரே தீர்வு மத்திய ஆட்சியையும், அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் விரட்டுவதே என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (24.5.2018)  சென்னை எழும்பூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற  கோரிக் கையை வலியுறுத்தி உயர்நீத்தவர்களுக்கான நினைவேந் தல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நான்கு அரிய கொள்கைத் தியாகிகளை

நாம் இழந்திருக்கிறோம்

மிகுந்த துயரத்தோடும், சோகத்தோடும், கனத்த நெஞ்சத்தோடும், இழக்கக்கூடாத நான்கு அரிய கொள்கைத் தியாகிகளை நாம் இழந்திருக்கிறோம் என்பதை நினைத்து, எதை தவிர்க்க முடியாது ஏற்றுக்கொள்ளவேண்டிய துன்பமோ, அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற அடிப்படையில், நாம் ஆறுதல் அடையவேண்டும்; நமக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறவேண்டும் என்ற உணர்வோடு தொடர்ந்து இயக்கத்தை அவர்கள் தொடங்கிய காலத் திலிருந்து, இதுபோன்ற பல்வேறு இழப்புகளையெல்லாம் சந்தித்து, தாங்கித் தாங்கி தன்னுடைய இதயத்தில் விழுப்புண் ஏற்படக்கூடிய அளவிற்கு, பல்வேறு கசப்பான, துன்பமான, துயரமான அனுபவங்களையெல்லாம் பெற்று, மீண்டும் தன்னுடைய லட்சியப் பயணத்திற்கு, இவைகள் ஒருபோதும் தடையாக இருக்காது; பயணத்தை மிக வேகமாக நடத்திச் செல்லவேண்டும் என்ற அந்த உரி மையிலும், இவர்கள் எதற்காக தங்களுடைய இன்னுயிரை, நாம் விரும்பாவிட்டாலும்கூட, இழந்தார்கள்; இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள் இந்தத் தொண்டறச் செம்மல்கள் - கொள்கைக்காக, தங்களுடைய உயிரையே பணயம் வைத்து, விலையாக அதற்குக் கொடுத்தாலாவது, திறக்காத கண்கள் திறக்காதா? கேட்காத காதுகள் கேட்காதா? செயல்படாதவர்கள் செயல்படமாட்டார்களா? என்ற உணர்வோடு இங்கே கூடியிருக்கிறோம். அந்த உணர் வோடு நான்கு பேருடைய படத் திறப்பு, நினைவைப் போற்றுகின்ற நிகழ்ச்சி! இப்போதுள்ள தூத்துக்குடி நிலவரத்தையும், தூத்துக்குடி மாநகரமே ஒரு சுடுகாடாக மாற்றப்பட்டுள்ள கொடுமையையும் நினைத்து, 13 உயிர்கள் பலிவாங்கப்பட்டு இருக்கிறது கொடுங்கோல் ஆட்சியினால்; துயர அலைபாயும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கிடையே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கக் கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அருமைத் தலைவரும், பொதுச்செயலாளர் என்றாலும், அவர்தான் இந்த இயக்கத்திற்குத் தலைவர். பல்வேறு சோதனை களையும், சாதனைகளாக்கிக் காட்டக் கூடிய அளவிற்கு வலிமை மிகுந்தவர். கொள்கைப் போர்வாளாக இருக்கக் கூடிய எனது அருமை சகோதரர் மானமிகு வைகோ அவர்களே,

மின்னல்கூட இவ்வளவு வேகமாக மின்னுவது கிடையாது

இங்கே சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தி, நாளைய முழு கடையடைப்பு உள்பட, எல்லோரும் நினைவில் வைத்து செயல்படவேண்டும் என்பதை சிறப்பாக, காலை யில் கைது செய்யப்பட்டு, மாலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபொழுது நான் சொன்னேன், தூத்துக்குடியில் இருக்கிறீர்கள்; அடுத்து சென்னை சட்டமன்றத்தில் இருக்கிறீர்கள்; அதற்கடுத்து இந்த மேடையில் மின்னல் போல் இருக்கிறீர்கள்; மின்னல்கூட இவ்வளவு வேகமாக மின்னுவது கிடையாது. உங்களுடைய கொள்கைத் துடிப்பு என்பது மிகச் சிறப்பாக இருக்கிறது. அதற்குரிய விளைவுகளை நாம் நிச்சயம் அறுவடை செய்வோம்; பலன் அளிக்கும் என்ற அளவில், சிறப்பாக இங்கே கருத்து களை எடுத்துச்சொன்ன, தமிழகத்தினுடைய நம்பிக்கை நட்சத்திரம் - அன்பிற்குரிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் தளபதி அவர்களே,

இந்நிகழ்வில் நம்முடைய அருமைத் தோழர் சிவகாசி ரவி அவர்களுடைய படத்தினை தளபதி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

சரவண சுரேசு அவர்களுடைய படத்தினை திறந்து வைத்தார்  நம்முடைய மேனாள் காங்கிரசு கமிட்டி தலைவரும், சிறந்த சமூகநீதி போராளியுமான அன்பிற்குரிய சகோதரர் தங்கபாலு அவர்கள்.

அதேபோல, இந்நிகழ்வில் மணிகண்டன் அவர்களு டைய படத்தினை திறந்து வைத்தார் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவேண்டிய அவசிய மில்லை. இன்னும் பேசவேண்டியவர்கள் நிறைய இருக் கிறார்கள்.

தமிழகத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக எதையும் எதிர்பாராமல்

நம்முடைய உணர்ச்சிபூர்வமான இந்நிகழ்ச்சி இருக்கிறதே, இந்நிகழ்ச்சியில் நாம் படங்களைத் திறந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால், அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியிருக்கிறோம் என்று சொன்னால், அடிப்படையில் ஒன்றை நாம் கோடிட்டு மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும். அந்த நான்கு பேர்களாக இருந்தாலும் சரி, தூத்துக்குடியில் அப்பாவிகள் பலியாகி இருக்கிறார்களே அந்த சகோதரர்கள், போராட்ட வீரர்களாக இருந்து, ஆபத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக எதையும் எதிர்பாராமல், துப்பாக்கிச் சூட்டிலே பலியாகியிருக்கிறார்களே அவர்கள் எல்லாம் புதைக்கப்படவில்லை, இன்னும் அவர்களுடைய உடல் மருத்துவமனையில் இருக்கிறது. நாளைக்கு அவர்கள் புதைக்கப்பட்டாலும், ஏற்கெனவே இவர்கள் புதைக்கப்பட்டாலும், வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இன எழுச்சி கண்ணோட்டத்தில், நம்முடைய நியாயமான லட் சியப் பயணம், லட்சியப் போராட்டம் என்கிற கண் ணோட்டத்தில், அவர்கள் புதைக்கப்படமாட்டார்கள்; விதைக்கப்பட்டவர்கள் என்பதை எல்லோரும் உணர வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

விதைக்கப்பட்டவர்கள் - முளை கிளம்பும். அதனுடைய விளைவுகளுக்குத்தான் இந்தக் கூட்டம் ஒரு அடித்தளம் என்பதை மறக்கவேண்டாம்.

படம் மட்டுமல்ல;  வருங்கால சந்ததியினருக்குப் பாடமும் கூட!

இந்த முறை சாவுகளை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அவர்களுடைய உணர்ச்சிக்கு நாம் தலைவணங்க வேண்டும். அவர்கள் தங்களுடைய குடும்பத்தைப் பற்றி கவலைப்படவில்லை; நட்பைப்பற்றி கவலைப்படவில்லை. தங்களுடைய வாழ்வு, தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகும் என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. மாறாக, இந்த நாடு என்னாவது? இந்த சமுதாயம் என்னாவது? சமுதாயத்திற்காக தங்களைத் தாங்களே சர்வபரி தியாகம் செய்துகொண்ட மாமேதை களுடைய படத்திறப்பு என்று சொன்னால், இவர்கள் படம் மட்டுமல்ல, நமக்கும், நம் சமுதாயத்திற்கும், இந்த சந்ததி யினருக்கும், வருங்கால சந்ததியினருக்குப் பாடமும் கூட!

புரட்சிக்கவிஞர் அருமையாக ஒரு வரியை எழுதினார்:

சாகின்றாய் தமிழா

சாகச் செய்வானை

சாகச் செய்யாமல்

சாகின்றாய் தமிழா!

என்றார். இந்த வரிகளுக்குள் எல்லாமும் அடக்கம்!

தனிப்பட்ட முறையில் சிலரைக் கொல்லவேண்டும் என்பதல்ல அதனுடைய பொருள். சாகடிக்கப்பட வேண் டிய நபர்களைவிட, சாகடிக்கப்பட வேண்டிய தத்துவங் களை சாகடிக்கவேண்டும். அதற்கு ஆயத்தம்தான் இந்த மேடை.

மத்திய - மாநில அரசுகளுக்கு இறுதி முடிவு கட்டுவோம்!

நியூட்ரினோவிற்குப் போராட்டம், மீத்தேனுக்குப் போராட்டம், நீட்டுக்குப் போராட்டம், குருகுலத்திற்குப் போராட்டம் என்று தினம் தினம் போராட்டம், போராட்டம் என்று இருக்கவேண்டிய அவசியமில்லை. தேவை ஒரே ஒரு அம்சம்தான் நண்பர்களே! அந்த அம்சம்தான், மத்திய - மாநில அரசுகளுக்கு இறுதி முடிவு கட்டுவதாகும்.

மத்தியில் பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். அரசு, அதற்கு பொம்மையாக தலையாட்டிக் கொண்டிருக்கின்ற இங்கே இருக்கின்ற ஒரு எடுபிடி அரசு. இந்த அரசுகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன  - முடிவு கட்டுவோம் என்கிற அந்த ஒரு அம்சத்தை செய்தாலே, தனித்தனியே முடிவு எடுக்கவேண்டிய அவசியமில்லை.

ஒரு நச்சு மரம் இருக்கிறது என்றால், நச்சு மரத்தின் கிளைகளையோ அல்லது இலைகளையோ தனித்தனியாக வெட்டிக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. அதனுடைய வேர் எங்கே இருக்கிறதோ அதனை வெட்ட வேண்டும். ஆட்சி பீடத்தை அகற்றவேண்டும். அதற்கு மக்களைத் தயாரிக்கவேண்டிய பொறுப்பு இந்த மேடையில் உள்ள அத்துணைத் தலைவர்களுக்கும் உண்டு. அதைத் தான் இந்தப் படங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் தங்களுக்குத் தாங்களே தீ வைத்துக்கொண்ட அந்த உணர்வாளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

புரட்சிக்கவிஞர் கேட்டார்,

கோழியும் தன் குஞ்சுதனைக்

கொல்ல வரும் வான்பருந்தை

சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத

தமிழகத்தில்!

அதுதான் மிக முக்கியமானது. கோழிக்குஞ்சைத் தூக்குவதற்குப் பருந்து வருகிறது என்று சொன்னால், தன்னுடைய குஞ்சைக் காப்பாற்றுவதற்காக அந்தப் பருந்தோடு கோழி போராடிய மண் இந்த மண். அந்த உணர்வைத்தான் இந்தப் படத்தில் தியாகிகளாக மாறியிருக்கிறவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

நாம் சோற்றாலடித்த பிண்டங்களாக வாழக்கூடாது. கொள்கையாளர்களாக இருக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் நடைபயிற்சி; ஒவ்வொரு முறையும் தனித்தனி களங்கள் என்று இருக்கவேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு பரப்புவதுதான் ஒரே வழி!

எரிவதை இழுத்தால், கொதிப்பது தானே அடங்கும். எரிவது எது? அவர்கள் தங்களை எரியூட்டிக் கொண் டார்கள்; எரித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த உணர்வை தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு பரப்புவதுதான் ஒரே வழி.

இங்கே வரலாறுகளையெல்லாம் சொன்னார்கள்; இவர் களைப் பாராட்டுவது மட்டும் நம்முடைய நோக்கமல்ல. இவர்கள் எதற்காக தங்களுடைய இன்னுயிரைக் கொடுத் தார்களோ, அந்த லட்சியம் நிறைவேறியாக வேண்டும்.

இங்கே உணர்ச்சிவயப்பட்டு சொன்னாரே நம்முடைய வைகோ அவர்களும், அதையொட்டி நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்களும் இங்கே தெளிவாக சொன்னார்களே,

வைகோ அவர்களுடைய உழைப்பு வீண் போகாது

கருப்புத் துண்டு அணிந்துகொண்டிருக்கின்ற வைகோ அவர்கள், கருப்பு அங்கியை அணிந்துகொண்டு நீதிமன்றத்தில் இருப்பார். ஆனால், அவருடைய உழைப்பு வீண் போகாது. அவர்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதற்காக போராட்டக் களத்தில் நின்றார். யார் முடியாது என்று சொன்னார்களோ, அவர்களே இன்றைக்கு வேறு வழியில்லாமல், மக்கள் புரட்சிக்குமுன் தலைவணங்கவேண்டும் என்கிற முடி விற்கு வந்திருக்கிறார்கள். அதைத்தான் இன்றைய விடுதலை'யிலும் எழுதியிருக்கிறோம், சுட்டிக்காட்டியிருக் கிறோம்.

ஒருவேளை, அவர்கள் தந்திரமாக இருந்து, நாங்கள் முடிவு செய்கிறோம், நீங்கள் மறுபடியும் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்றெல்லாம் சொல்லி, சாக்குப் போக்கைக் காட்டினால் மேலும் தொல்லைதான். இந்த அரசாங்கத்திற்கு ஒருவேளை புத்தியிருந்தால், அது பிடித்துக்கொள்ளும்; உண்மை யாகவே உறுதியிருந்தால், அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

அரசின் கொள்கை முடிவாக....

அரசின் கொள்கை முடிவாக (Policy Decision) அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடவிருக்கிறோம் என்கிற வாதத்தை நீதிமன்றத்தில் சொன்னால், அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பதுதான் உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு. எனவே அதையே அமுல்படுத்துங்கள் என்று சொல்லக் கூடிய கட்டத்திற்கு வந்திருக்கிறோம்.

எனவேதான், இந்த வீரர்களின் படத்திறப்பு நேரத்தில், இன்னும் புதைக்கப்படாமல், பிணவறையில் வைக்கப் பட்டிருக்கிற துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு இருக்கும் திசையை நோக்கிச் சொல்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்  என்று அரசு இப்பொழுது அறிவித்துள்ளதே அது வெறும் வார்த்தையாக இருக்கக் கூடாது - நடைமுறையில் இருக்கவேண்டும்.  அவர்கள் எந்த நோக்கத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்களோ - எதற்காக கால்கடுக்க நடந்தாரோ நம்முடைய வைகோ அவர்கள் - எதற்காக நம்முடைய தோழர்கள் இன்னும் பல இயக்கத் தோழர்கள், கட்சியில்லாமல் ஜெயராமன் போன்றவர்கள், எண்ணற்ற தோழர்கள் போராடினார்களோ, அவை அத்தனைக்கும் விடியல் உண்டு. இருட்டு எப்பொழுதும் தொடராது என்பதுதான் மிக முக்கியம்.

விடியல் வரும்; உதயசூரியன் தோன்றுவான்

எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. அதுதான் இயற் கையின் நியதி. நாங்கள் ஜோதிடக்காரர்கள் அல்ல; அல்லது ஆரூடக்காரர்கள் அல்ல. அல்லது நம்பிக்கைக்காரர்களும் அல்ல. அறிவுபூர்வமான பகுத்தறிவுவாதிகள். நாங்கள் சொல்கிறோம், இரவு எப்பொழுதும் இருக்கும் என்று பைத்தியக்காரர்களே நீங்கள் நினைக்காதீர்கள். நிச்சயமாக விடியல் வரும்; உதயசூரியன் தோன்றுவான். அதுதான் மிக முக்கியம். சூரியன் உதிக்கும், அந்த நேரத்தில், அந்தக் கதிர்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்பதற்கான ஆயத்தம்தான் இந்த மேடை.

எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல நண்பர்களே, எது நம்மை இணைக்கிறது என்பதுதான் மிக முக்கியம். அந்த அடிப்படையில், இந்தப் படத்திறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது, அவர்களுக்காக மட்டுமல்ல, இந்தத் தேசத்தைக் காப்பாற்றுவதற்கு, இந்த உணர்வைக் காப்பாற்றுவதற்கு, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு டில்லியிலிருந்து கிளம்பியிருக்கிறது என்று சொல்கிறபொழுது, அந்த வாய்ப்புகள் - எந்த அளவிற்கு இந்தப் போராட்டம் டில்லியை எட்டியிருக்கிறது என்பதற்கு அடையாளம் - இங்கே உரையாற்றிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் மிக அருமையாக சொன்னார்கள்.

பெரியார் மண்ணில் ஒருபோதும் பலிக்காது

ராகுல் காந்தி அவர்களுடைய அந்த செய்தி இருக்கிறதே, அதைச் சொன்னார். ஆர்.எஸ்.எஸ்.காரர்களே அல்லது மதவெறியர்களே,  இந்துத்துவாவினுடைய ஏஜெண்டுகளே, உங்களுடைய கதை வடநாட்டில் வேண் டுமானால் கொஞ்சம் பலிக்கலாம்; ஆனால், பெரியார் மண்ணில் ஒருபோதும் பலிக்காது என்று யார் சொல்கிறார், நாளைக்குப் பொறுப்பேற்கக்கூடிய ராகுல்காந்தி சொல் கிறார்.

தமிழ்நாட்டில், ஜனநாயகத்தைக் கருக விடமாட்டோம்

எனவேதான், இவர்கள் புதைக்கப்படவில்லை; விதைக் கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, அந்த எழுச்சி என்பது இருக்கிறதே, அது பலவகையான  உணர்ச்சிகளை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கொள்கை ஆயிரங்காலத்துப் பயிர். தமிழ்நாட்டில், ஜனநாயகத்தைக் கருக விடமாட்டோம். எத்தனையோ சிறைச்சாலைகளைப் பார்த்தவர்கள் இங்கே இருக்கிறவர்கள். தியாகு அவர்கள் சாதாரணமானவரா? மீண்டு வந்து அவர் முழங்கினாரே, என்ன காரணம்? இந்த லட்சியம். லட்சியத்திற்கு இருக்கின்ற வலிமை. உடம்பில் இருக்கிற வலிமை முக்கியமல்ல. நாங்கள் யார் வேண்டுமானாலும் நாளைக்கு சாகலாம், வாழலாம் அது வேறு செய்தி. ஆனாலும், பயணங்கள் நடந்திருக்கின்றன.

ஓர் அம்சத் திட்டம்!

எனவேதான் சொல்கிறோம், இந்த வீரர்களின் பெயரால் உறுதியெடுத்துக்கொண்டு நாம் வெளியே செல்ல வேண்டும். ஒவ்வொருவரையும் ஆயத்தப்படுத்தவேண் டும். ஒரே முடிவுதான் - மத்தியில் இருக்கிற மோடி அரசையும், அந்த மோடிக்கு லாலி பாடுகிற இங்கே இருக்கிற எடுபிடி அரசையும் - இந்த அரசுகள் இனிமேல் சட்டப்படி இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, எப்போது தேர்தல் வந்தாலும், அதற்கு முன்பே அவர்கள் ஓடவேண்டிய கட்டத்தை மக்கள் உருவாக் கினாலும் சரி, அந்த ஜனநாயக முறையில் அவர்களை வீட்டிற்கு அனுப்பவேண்டிய ஓர் அம்சத் திட்டம் இருக்கிறதே - அதுதான் எல்லாப் போராட்டங்களுக்கும் விடை கொடுக்கும். அதை நோக்கி நாம், நம் நாட்டை செலுத்தவேண்டும்.

மக்கள் எழுச்சிக்கு முன் மற்றவை எல்லாம் சாதாரணம்!

எனவேதான், இங்கே வந்திருக்கின்ற அருமைத் தோழர்களே, இவர்களுக்கு வீர வணக்கம் என்று சொன்னால் மட்டும் போதாது - வீட்டுக்கு வீடு திண்ணைப் பிரச்சாரகர்களாக நீங்கள் மாறுங்கள். வீதிக்கு வீதி இந்தக் கருத்துகளை சொல்லுங்கள். இந்த அக்கிரமங்களுக்கு முடிவு என்ன என்று சொல்லுங்கள். மக்கள் எழுச்சிக்கு முன் மற்றவை எல்லாம் சாதாரணம்.

எனவேதான், மக்கள் எழுச்சி என்பதை ஜனநாயக முறையில் நாம் ஏற்படுத்துவோம்.

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்

உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள்

ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆகிவிடுவார் என்று புரட்சிக்கவிஞர் சொன் னார்.

நம்முடைய பயணங்கள் முடிவதில்லை!

அது வன்முறை என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனால், நாம் அதைச் செய்யாமல், இன்னமும்கூட, ஓடப்பராய் இருக்கும் ஏழை மக்கள், ஓட்டப்பர் ஆகிவிட்டால், அதை ஒழுங்காக செலுத்திவிட்டால், விடை கிடைக்கும். எனவேதான், நாம் ஓடப்பர், உதயப்பர் ஆகவேண்டும்; ஓட்டப்பர் ஒழுங்காக ஓட்டுப் போட்டால்,  ஒழுங்கான ஆட்சியைத் தேர்ந்தெடுத்தால், ஆட்சி மாற்றத்தை உருவாக்கினால், தெளிவாக விடை கிடைக்கும். அதற்கு மக்களை ஆயத்தப்படுத்துகின்ற அச்சாரமான நிகழ்ச்சிதான் இது என்று சொல்லி, வாய்ப்பளித்த உங் களுக்கு நன்றி கூறி, உயிர்களை மாய்த்துக் கொண்ட வர்களுக்கு வீர வணக்கம் சொல்லி, நம்முடைய பய ணங்கள் முடிவதில்லை; தொடரும்! தொடரும்!! தொடரும்!!!  அதில் வைகோ அவர்களே, இனிமேல் நீங்கள் நடக்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல், ஓடவேண்டிய கட்டம்தான் வரும்.  எல்லோருமே பின்னால் ஓடி வரவேண்டிய அவசியம் வரும்.

எனவேதான், இனிமேல் நடைபயணம் அல்ல - ஓடவேண்டும்  - ஏனென்றால், ஓட ஓட விரட்டவேண்டிய வர்களை விரட்டுவதற்காக வேகமாக ஓடவேண்டும் -அதுதான் மிக முக்கியம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner