எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* குருகுலக் கல்வியை எதிர்த்து நாளை மாநாட்டில் அறிவிப்பு

* தமிழ்நாட்டில் இருப்பது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அரசல்ல!

குடந்தையில் தமிழர் தலைவர் பேட்டி

கும்பகோணம், மே 28  இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம்  என்ற ஒன்றை மத்திய பி.ஜே.பி. அரசு கொண்டுவர உள்ளது. அதனை முறியடிப்பதற்கான போராட்டம் நாளை பட்டுக்கோட்டையில் நடக்கவிருக்கும் இளைஞரணி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தமிழ்நாட்டில் நடப்பது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆட்சியல்ல - மத்திய பி.ஜே.பி.,க்கு ஆமாம் போடும் ஓ எஸ்' ஆட்சி என்று குறிப்பிட்டார்.

இன்று (28.5.2018) கும்பகோணத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

கும்பகோணத்தில் ஜூலை 7 ஆம் தேதி

மாநில மாணவர் கழக மாநாடு!

வருகிற 8.7.2018 இல் கும்பகோணத்தில் மாநில மாணவர் கழக மாநாடு நடைபெறவிருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் தமிழ்நாடு முழுவதுமிருந்து திராவிட மாணவர்கள் திரளவிருக்கிறார்கள். அம்மாநாட்டில், மாணவர்களுடைய எதிர்காலத்தைப்பற்றிய மிக முக்கியமான சில முடிவுகள், மாணவர்கள் எந்தத் திசையை நோக்கிச் செல்வது என்று வழிகாட்டக் கூடிய அளவிற்கு சில புதிய திட்டங்கள் அறிவிக்கவிருக்கிறோம்.

1944 ஆம் ஆண்டில் முதன்முதல் திராவிடர் மாண வர் கழகம் உருவானதே குடந்தை அரசினர் கல்லூரி யில்தான். பார்ப்பனர்களுக்குத் தனி தண்ணீர் பானை - பார்ப்பனரல்லாதார்களுக்குத் தனி தண்ணீர் பானை என்று மாணவர்கள் மத்தியில் வைத்திருந்ததனர்; அந்தப் பானைகளை உடைத்து கிளர்ச்சி செய்து, குடந்தை கல்லூரியில் தோன்றியதுதான் திராவிடர் மாணவர் கழகம், தவமணி ராசன், பிற்காலத்தில் மக்களவையில் துணை சபாநாயகராக இருந்த லட்சுமணன், கருணானந்தம் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு அது ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி இருக்கிறது.

குலதர்மக் கல்வித் திட்டத்தைவிட,

மிக மோசமான ஒரு கல்வித் திட்டம்!

இப்பொழுது கல்வித் திட்டத்தில், பா.ஜ.க. ஆட்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள்; குலக்கல்வித் திட்டத்தை எப்படி ராஜகோபாலாச்சாரியார் காலத்தில்கொண்டு வந்தார்களோ, அதைவிட மோசமாக, குருகுல கல்வித் திட்டம் என்ற ஒன்றை வைத்து, அதில் சில ஆண்டுகள் வேதம், யோகா, சமஸ்கிருதம் இவற்றைப் படித்தால் போதும்; இவற்றை வீட்டிலேயே படித்து, ஒரு மாணவன் நானே இவை எல்லாவற்றிலும் தகுதியாகிவிட்டேன் என்று தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்து, நேரிடையாக 10 ஆம் வகுப்பில் சேரலாம். பிறகு 12 ஆம் வகுப்பிற்குச் செல்லலாம். இதுபோன்ற பள்ளிக்கூடங்களுக்கு நிதி ஆதாரங்கள் போன்றவற்றை செய்யலாம் என்கிற திட்டத்தை மிக வேகமாக உருவாக்கிக் கொண்டி ருக்கிறார்கள். உஜ்ஜயினியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமையில் மாநாடு போட்டு இத்திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். சென்ற வாரம் இந்த செய்தி சில ஏடுகளில் வெளிவந்தது. நேரிடையாக 10 ஆம் வகுப்பில் சேருவதற்கு சமஸ் கிருதம் படித்திருந்தால் போதும் என்றால், அது யாருக்கு லாபம் என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

ஆகவே, குலதர்மக் கல்வித் திட்டத்தைவிட, மிக மோசமான ஒரு கல்வித் திட்டத்தைக் கொண்டுவரவிருக் கிறார்கள்.

திராவிடர் கழகம் கிளர்ச்சித்

திட்டங்களை மேற்கொள்ளும்!

இதனை எதிர்த்து நாடு முழுவதும் கிளர்ச்சியை நடத்துவதற்கு,  9 கட்சித் தலைவர்கள் கூடிய, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற  அனைத்துக் கட்சிக் கூட் டத்தில்கூட மிகப்பெரிய அளவிற்கு இதனை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

ஆகவே, இப்பொழுது கல்வித் துறையை மிகப்பெரிய அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். மயமாக்கி, காவிமயமாக்கி, அவர்களுடைய பண்பாட்டுப் படையெடுப்பை இன் னும் உள்ள ஓராண்டு ஆட்சிக்குள் எப்படியாவது திணிக்கவேண்டும் என்று அவர்கள் அதிதீவிரமாக இருக்கிறார்கள். அதுதான் அவர்களுடைய ஆட்சிக்கே முடிவு கட்டக்கூடிய விஷயமாக நிச்சயமாக இருக்கும்.

ஆகவே, இதைப்பற்றியெல்லாம் அந்த மாநாட்டில்  தீவிரமாக முடிவெடுப்போம். அதற்கு முன்பாகவே, திரா விடர் கழகம் தேவையானால் கிளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும். பட்டுக்கோட்டையில் நாளை 29 ஆம் தேதியன்று மாநாடு நடைபெறவிருக்கிறது. அதில்கூட ஒரு திட்டத்தை அறிவிக்கும்.

மும்மொழித் திட்டத்தைப்பற்றி பரிசீலிப்போம்

என்கிறாரே மத்திய இணையமைச்சர்?

செய்தியாளர்: மாநில அரசு பரிந்துரை செய்தால், மும்மொழித் திட்டத்தைப்பற்றி பரிசீலிப்போம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: இப்பொழுது மாநில அரசு இரட்டை வேடம் போடுகிறது. அண்ணா அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள், அண்ணாவிற்குப் பிறகு கலைஞருடைய ஆட்சி. அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சி. ஏன் அதற்குப் பிறகு ஏற்பட்ட ஜெயலலிதா ஆட்சி வரையில், அவர்கள் எதை எதையெல்லாம் எதிர்த்துக் கொண்டிருந்தார்களோ, இப்பொழுது இருக்கின்ற ஆட்சியாளர்கள் தலையாட்டி பொம்மைகளாகி, பல்வேறு பலகீனங்கள் காரணமாக, இப்பொழுது தமிழகத்தில் நடைபெறுவது மோடியினுடைய ஆட்சிதான். பெயருக்குத்தான் இ.பி.எஸ்., ஒ.பி.எஸ். என்று இருக்கிறார்களே தவிர, எல்லோரும் ஓ யெஸ்'' என்று சொல்லக்கூடியவர்கள்தான். எல்லாவற்றிற்கும் ஓ, எஸ்'', ஓ, எஸ்'' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, டில்லிக்கு எஸ்'' சொல்லுகின்ற ஆட்சிதான். நீட் தேர்வில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிக மாகிக் கொண்டே இருக்கின்றது. முதலில் அனிதாவில் தொடங்கி, கடந்த வாரம், நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்களை, சிக்கிம் மாநிலத்திற்குப் போங் கள்; ராஜஸ்தானத்திற்குப் போங்கள்; கேரளாவிற்குப் போங்கள்; கருநாடகாவிற்குப் போங்கள் என்று கடைசி நேரத்தில் மாணவர்களை விரட்டியடித்து, மாணவர் களை, பெற்றோர்களை மனச்சுமையோடும், மன இறுக் கத்தோடும் அவர்கள் செல்லவேண்டிய நெருக்கடி உரு வாக்கப்பட்டது.

திருத்துறைப் பூண்டியில் ஒருவரும், திருச்சியில் ஒருவரும், மற்ற இடத்தில் ஒருவரும் உயிர் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு செய்தி வந்தது. நீட் தேர்வில் தன்னால் வெற்றி பெற முடியாது என்று நினைத்த ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான்.

எனவே, அப்பேர்ப்பட்ட நீட் தேர்விற்கு, சுலபமாக, எளிமையாக, நம்முடைய உரிமையை இந்த ஆட்சி வலியுறுத்தியிருந்தால், நிச்சயமாக அந்த நீட் தேர்வி லிருந்து விலக்கு ஏற்பட்டு இருக்கும். இங்கே இருக்கும் பா.ஜ.க.வினர்கூட தமிழர்களை ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள்.

உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று, இரு மசோதாக்களை ஒரு மனதாக நிறைவேற்றி, மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், அந்த இரு மசோதாக்களும் என்னாயிற்று? என்று இதுநாள் வரை தெரியவில்லை.

ஏனென்றால், தமிழ்நாட்டில் 21 ஆண்டுகளாக இருந்த நுழைவுத் தேர்வை எதிர்த்துப் போராடி, கலைஞரின் ஆட்சியில், அத்தேர்வு தேவையில்லை என்று 2006 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு எந்த நுழைவுத் தேர்வும் கிடையாது என்பதற்கு ஒரு சட்டமே கொண்டு வந்தார். இன்னமும் அந்த சட்டம் செல்லுபடியாகின்ற சட்டம்.

அப்படியிருக்கும்பொழுது, இன்னொன்றை கொண்டு வந்து நீட் தேர்வை அகில இந்திய அளவில் நாங்கள் திணிப்போம் என்று சொன்னநேரத்தில், அதை எந்த மாநிலம் விரும்பவில்லையோ, அந்த மாநிலத்திற்கு விலக்குக் கொடுக்கவேண்டும் என்ற வாய்ப்பு, இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும்பொழுதே, நாடாளுமன்ற நிலைக்குழுவினால் தெளிவாகப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், மாநில அதிகாரத்தில் இருந்த கல்வியை, நெருக்கடி காலத்தில் ஒத்திசைவுப் (கன்கரண்ட் லிஸ்ட்) பட்டியலுக்குக் கொண்டு சென்றார்கள். இதனைப் பொதுப் பட்டியல் என்று சொல்வார்கள், அது பொதுப் பட்டியல் அல்ல. ஒத்திசைவுப் பட்டியல். மத்திய அரசும் சட்டம் செய்யலாம்; மாநில அரசும் சட்டம் செய்யலாம். மாநில அரசின் ஒப்புதல் பெற்று மத்திய அரசு சட்டம் செய்யவேண்டும் என்பதுதான் ஒத்திசைவுப் பட்டியல். அந்த அடிப்படையிலும் நமக்கு உரிமை இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு, ஒப்புதல் தருகிறேன் என்று அவர்கள் சொல்லவேண்டும். இல்லையேல், மறுக்கிறோம் என்று சொன்னால், அதற்கான காரணத்தை சொல்லவேண்டும். அந்த மசோதாக்கள் எங்கே இருக்கிறது என்பதைப்பற்றிக் கூட நம்முடைய மாநில அமைச்சர்கள் கேட்பதற்குத் தயாராக இல்லை.

நீட் தேர்வு, நீட் தேர்வு என்று நாளுக்கு நாள் எல்லாத் துறைகளிலும் கழுத்து சுருக்குப் போடுகிறார்கள்.

தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவத் துறையில் முதுநிலை படிப்பு இடங்கள் இங்கே இருக்கின்றன. இவை அத்தனை இடங்களிலும் வடக்கே இருப்பவர்களைக் கொண்டு வந்து நிரப்புவதற்கான திட்டம்தான் இது. இதற்காகத்தான் நீட் தேர்வு.

எனவே, கல்வித் துறையில் மருத்துவர்களாக முடியாது; பொறியாளர்களாக நம்மவர்கள் ஆக முடியாது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, சமூகநீதிக்கு விரோதமாகவும், கிராமப்புற மாணவர்களின் நலனுக்குக் கேடாகவும், எல்லாவற்றையும்விட மாநில உரிமைகள் என்பது இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய நோக்கம்.

ஏனென்றால்,ஆர்.எஸ்.எஸினுடைய கொள் கையே என்னவென்றால், மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதுதான். ஒற்றை ஆட்சிதான் இருக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் மத்திய திட்டங் களையெல்லாம் மாநிலங்களில் திணிக்கிறார்கள். ஒரே  மதம் - இந்து மதம்; ஒரே மொழி - சமஸ்கிருதம் என்கிற அளவிற்கு பாசிச அளவிற்குக் கொண்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு

சட்டப்படி அனுமதி கொடுத்தது யார்?

செய்தியாளர்: தூத்துக்குடிக்கு துணை முதலமைச்சர் செல்லவிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: குதிரை காணாமல் போன பிறகு லாயத்தைப் பூட்டி என்ன பயன்? உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு சட்டப்படி அனுமதி கொடுத்தது யார்? நிலைமை கட்டுக்கடங்காமல் போனால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தவேண்டும் என்கிற விதிமுறைகள் காவல்துறைக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறதே, அதுபோன்ற விதிமுறைகள் தூத்துக்குடியில் பின்பற் றப்பட்டதா என்பதைப் பார்க்கவேண்டும்.

அதுமட்டுமல்லாமல், சில ஆஸ்தான நீதிபதிகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து விசாரணை ஆணையம் என்பது தேவையில்லை. சென்னை உயர்நீதிமன்ற மேற்பார்வையில், இப்பொழுது நீதிபதிகளாக உள்ளவர்களின் தலைமையில் விசா ரணை ஆணையத்தை வைத்து உண்மைகளை வெளிக் கொணரவேண்டும்.

அதோடு, அந்த துப்பாக்கிச் சூடு நடந்த காட்சிகள் எல்லா தொலைக்காட்சிகளிலும்  ஒளிபரப்பப்பட்டன. இது ஒரு நவீன முறை என்கவுண்டர். என்கவுண்டர் என்றால், தனிப்பட்ட நபர்களை ஓடவிட்டு சுடுவார்கள். அதேபோன்று, இவர்களையும் ஓடவிட்டு சுட்டு இருக் கிறார்கள். என்கவுண்டரிலேயே இது ஒரு புதுவகையான என்கவுண்டர். திட்டமிட்டே நடத்தப்பட்ட என்கவுண்டர்!

காரணம் என்னவென்றால், போராட்டம் நடத்துபவர் களையெல்லாம் அச்சுறுத்தவேண்டும். தமிழ்நாட்டில்தான் அதிகமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில், மோடியின் ஆட்சிக்கு வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு எதிர்ப்பு கிடையாது. தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது. ஆகவே, அப்படி எதிர்ப்பவர்களை அடக்கியாகவேண்டும், மிரட்டியாகவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

அடுத்தபடியாக அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே வரக்கூடிய அளவிற்கு, ஊடகங்கள் உள்பட எல்லாவற்றையும் அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள்.

அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார்: ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்ட நேரத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தலாமா? என்று அண்ணா அவர்களிடம் கேட்டார்கள், ரயில் பெட்டிகளை மறுபடியும் செய்துகொள்ளலாம்; ஆனால், உயிர்களை மீட்க முடியாது'' என்று சொன்னார்.

அந்த அண்ணா பெயரில் இருக்கின்ற ஒரு கட்சியின் ஆட்சி நடக்கும் நேரத்தில், இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது என்பது வேதனைக்குரியது.

13 பேர் படுகொலை என்பது முக்கியமல்ல; ஜனநாயக உரிமைகள், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றன. மிகப்பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரும்பவில்லை. அந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுகிறது. பசுமைத் தீர்ப்பாயம் அதற்கு விரோதமாக இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நாங்கள் மூடிவிட்டோம். இனிமேல் அதனைத் திறக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் அறிவித்துவிட்டால், கிளர்ச்சிகள் தானே நின்றுவிடும்.

அந்தக் கிளர்ச்சிக்காரர்களை எல்லாம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்கிறார்கள். தூத்துக்குடியில் இருப்ப வர்கள் எல்லாம் தீவிரவாதிகளா என்ன? அந்த மக் களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது;  எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

அதில் மீனவ சமுதாய நண்பர்கள் இருக்கிறார்கள், வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய நன்மை யைக் கருதி அந்த ஆலையை மூடவேண்டும் அல்லவா!

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எவ்வளவு நாள்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதி மன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த ஆலை அதிபர் என்ன சொல்கிறார் தெரியுமா? நாங்கள் ஆலையை மீண்டும் திறப்போம் என்று சொல்கிறார். விடுதலை''யில்கூடநாங்கள்அறிக்கைஎழுதி யிருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் கூட, உடனடியாக தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டு, கொள்கை முடிவு (Policy Decision) எடுக்கப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு விரோதமாகவும், மக்களுக்கு விரோதமாகவும் இருக்கின்ற காரணத்தினால், இந்த ஆலையை அனுமதிக்க முடியாது என்று சொல்லி, மூடுகின்ற முழு அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு.

ஆக, கொள்கை முடிவு என்று சொன்னால், அதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு திறப்பதற்கு உத்தரவிட முடியாது.

ஏனென்றால், எந்த அரசினுடைய கொள்கை முடி வுக்கும் எதிராக  உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுக்க முடியாது என்பது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்புகளே உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதனைத்தான் நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்.

144 தடை உத்தரவு

செய்தியாளர்: 144 தடை உத்தரவை திரும்பப் பெறலாம்; காவல்துறையினரை அங்கே இருந்து திரும்பப் பெறவில்லையே?

தமிழர் தலைவர்: 144 தடை உத்தரவு என்பது இந்த ஆட்சியில் மிகவும் விசித்திரமானது. திருநெல்வேலிக்கு, வடக்கே இருந்து இராம  இராஜ்ஜிய ரத யாத்திரை என்ற பெயரில் வந்தது. அங்கே 144 தடை உத்தரவு போட்டார்கள். அது எதற்கு என்றால், அந்த ஊர்வலம்  எந்த எதிர்ப்பும் இல்லாமல் வருவதற்காகத்தான்.

144 தடை உத்தரவு என்றால் என்ன அர்த்தம்?  மூன்று பேர், நான்கு பேருக்குமேல் பொது இடங்களில் கும்பலாகக் கூடக்கூடாது.

அந்த 144 தடை உத்தரவை குறிப்பிட்ட நேரத்தில் போடலாம்; குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துவிடலாம் என்பதுதான்.

ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை சட்ட ஒழுங்குப் பிரச்சினையல்ல.  அது ஒரு சமூகப் பிரச்சினையாகும். எந்த அரசியல் கட்சியும் முன்னின்று அந்தப் போராட் டங்களை நடத்தவில்லை. இன்னுங்கேட்டால், சில அரசியல் கட்சிக்காரர்களை வரவேண்டாம் என்று அந்த மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இதுபோன்ற போராட்டங்களை, தீவிரவாதிகள் உள்ளே புகுந்துவிட்டார்கள் என்று சொல்வது என்பது இருக்கிறதே, அது அரசு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளக்கூடியதுதான்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner