எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குருகுலக் கல்வி எனும் மனுதர்மக் கல்வி வருகிறது - இளைஞர்களே உஷார்!

பட்டுக்கோட்டை இளைஞரணி மாநாட்டில் தமிழர் தலைவர் இடிமுழக்கம்!

பட்டுக்கோட்டை, மே 30  ஆச்சாரியார் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான ஆபத்தான கல்வித் திட்டம் - குருகுலத் திட்டம் என்ற ஒன்றை மத்திய பி.ஜே.பி. அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து முறியடிப்போம் - போராட்டத்துக்குத் தயா ராவோம், இளைஞர்களே, தோழர்களே! குருதி கையொப்ப மிட்டுப் போராட்ட வீரர் பட்டியலைத் தாருங்கள் என்று போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பட்டுக்கோட்டையில் நேற்று (29.5.2018) மாலை நடைபெற்ற தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் குறிப் பிட்டதாவது:

இப்பொழுது எங்கு சென்றாலும் இளைஞர்கள் திராவிடர் கழகத்தை நோக்கி வந்துகொண்டே இருக் கிறார்கள். இவர்களுக்கு நாங்கள் என்ன தரப் போகிறோம்? சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கப் போகி றோமா? குறைந்தபட்சம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியைத்தான் தரப் போகிறோமா?

(இல்லை, இல்லை என்று பார்வையாளர் பகுதியிலிருந்து முழக்கம்!)

மாறாக எங்கே போக அழைக்கிறோம்? போராட்டத்துக்கு அழைக்கிறோம் - சிறைச்சாலைக்குச் செல்ல அழைக்கிறோம்! (பலத்த கரவொலி!)

இன்றைக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது. திராவிடர் இயக்கம்  தோன்றி, தந்தை பெரியார் தோன்றி நம் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, கிராமப்புற மக்களுக்கு, முதல் தலைமுறையாகக் கல்விப் பயிலும் மக்களுக்கு சமூகநீதியைப் பெற்றுத் தந்தோம். அதன் காரணமாக, குப்பன் மகன் சுப்பன், காத்தான் மகன் தீத்தான்களெல்லாம் டாக்டர்கள் ஆனார்கள். ஒரு காலம் இருந்தது சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற கட்டாயம் இருந்தது. அந்தத் தடையை உடைத்தது நீதிக்கட்சியல்லவா - திராவிட இயக்கம் அல்லவா!

அதன் விளைவாக நமது சமூகத்தில் ஏராளமாக டாக்டர்கள் வெளிவந்தார்கள்  - இட ஒதுக்கீடு மூலம் படித்து டாக்டர் ஆனவர்கள் எல்லாம் அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட புகழ்பெற்ற டாக்டர்களாக ஒளிவீசுகிறார்கள்.

இது பொறுக்கவில்லை பார்ப்பனர்களுக்கு - இது பொறுக்கவில்லை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பலுக்கு.

இதே பட்டுக்கோட்டையில் மக்களவைத் தேர்தலின் போது பேசினோம் - பி.ஜே.பி.யின் வளர்ச்சி கோஷங்களைக் கேட்டு ஏமாந்து போவீர்கள் என்று குரல் கொடுத்தோம்.

அந்தக் கருத்தை ஏற்று இருந்தால், பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்திருக்குமா? இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள காரணத்தால் என்ன நடக்கிறது?

ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்வுக்குக் காரணமாக இருந்த சமூகநீதித் தத்துவத்தை சூழ்ச்சியால் ஒழிக்கத் திட்டம் போட்டுவிட்டார்கள்.

அதுதான் குருகுலக் கல்வி! மீண்டும் மனுதர்மத்துக்குக் கொடி ஏற்றுவிழா!

வெறும் சமஸ்கிருதம் படித்திருந்தால் நேரடியாக பத்தாம் வகுப்பில் சேர்ந்துவிடலாம். நாங்கள் சமஸ்கிருதம் படித்திருக்கிறோம் என்று மாணவர்களே தங்களுக்குத் தாங்களே சான்று - சர்டிபிகேட் கொடுத்துக் கொள்ளலாமாம். அப்படிப்பட்டவர்கள் நேரடியாக பத்தாம் வகுப்பில் சேர்ந்துவிடலாமாம்.

அன்று சமஸ்கிருதம் படித்தால் மருத்துவக் கல்லூரியில் சேரலாம் என்று விதி வைத்து இருந்ததுபோல, இப்பொழுது சமஸ்கிருதம் படித்ததாக தங்களுக்குத் தாங்களே சர்டிபிகேட் கொடுத்து நேரடியாக பத்தாம் வகுப்பில் சேர்ந்துவிடலாம். இது யாருக்கான வாய்ப்பு? பார்ப்பனர் களுக்குத்தானே!

ஆர்.எஸ்.எஸ். என்றால்  அது பார்ப்பனர்களுக்கானது என்று நாம் சொல்லி வந்திருக்கிறோமே, அது உண்மை என்று இப்பொழுது விளங்கிவிட்டதா? இல்லையா?

இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் பிறந்த மண்ணாகிய தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே வழிகாட்ட வேண்டும் - வழிகாட்டுவோம்!

ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும் அருமைத் தோழர்களே!

நாங்கள் குரல் கொடுப்பது, போராடுவது எங்கள் பிள்ளைகளுக்காக அல்ல - உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான். பெரியாருக்குப் பிள்ளைகள் என்றால் இந்த நாட்டில் உள்ள அனைவரும் அவர்களின் பிள்ளைகள்தான்.

95 வயதிலும் மூத்திர வாளியைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிப் பிரச்சாரம் செய்தது யாருக்கு? போராடியது யாருக்கு? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் சிந்திக்கவேண்டும்.

உங்களை ஏமாற்றுவதற்கு எதையாவது பேசுவார்கள். தமிழின் பெருமையைப்பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். அவரைக் கேளுங்கள், நீங்கள் பாராட்ட முன்வந்த தமிழ் இன்றைக்கும் எங்கள் கோவில் கருவறையில் அர்ச்சனை மொழியாக இல்லையே ஏன்? சமஸ்கிருதம்தானே அங்கே ஒலிக்கிறது! அதில் மாற்றத்தைக் கொண்டு வருவீர்களா? என்று ஆர்.எஸ்.எஸ். தோழர்களே, அந்த மோடியிடம் கேளுங்கள்! கேளுங்கள்!!

தஞ்சை மண்டல இளைஞர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

கேட்க திரண்டிருந்தோர் (29.5.2018, பட்டுக்கோட்டை)

உங்கள் பிள்ளைகள் இப்பொழுது படிக்கிறார்கள் என்றால், அதற்கு யார் காரணம்? இந்த இயக்கம் அல்லவா! தந்தை பெரியார் அல்லவா! அதற்கு ஆபத்து சூழ்ந்தி ருக்கிறது மோடி ஆட்சியில்... ஆர்.எஸ்.எஸ். திட்டம் தீட்டிக் கொடுத்து பி.ஜே.பி. அரசு செயல்படுத்தத் துடிப்பதுதான் இந்தக் குருகுலக் கல்வி.

இதனை ஒழிக்க உயிர்ப்பலிதான் தேவை என்றால், அதற்கும் தயார். 13 உயிர்ப்பலிகளைக் கொடுத்துதான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியில் நமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால்,  உயிர்களைப் பலி கொடுத்துதான் ஆகவேண்டும் என்றால், அதற்கும் நாங்கள் தயார்! தயார்தான்!! போராட்ட வீரர்கள் பட்டியல் குவியட்டும்! குவியட்டும்!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தயார்! தயார்! நாங்கள் தயார்!!

தமிழர் தலைவர் உரையாற்றி முடிப்பதற்குள் ஆயிரம் கழகத் தோழர்கள் போராட்டத்துக்குத் தயார் என்று பலத்த கரவொலிக்கிடையே தமிழர் தலைவரிடம் பட்டியல் வழங்கினர். தயார்! தயார்!! உயிர் கொடுக்கவும் தயார்! தயார்!! என்று இளைஞர்கள் முழக்கமிட்டுப் போராட்ட வீரர் பட்டியலை அளித்த காட்சி மெய்சிலிர்ப்பதாக இருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner