எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரிமைகளுக்காகப் போராடும் மக்களைப் பார்த்து  விஷக்கிருமிகள்'', சமுதாய விரோதிகள்'' என்று பொறுப்பற்ற முறையில் ரஜினிகாந்த் பேசுவதா?

திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி

திருச்சி, மே 31  உரிமைகளுக்காகப் போராடுபவர்களைப் பார்த்து விஷக் கிருமிகள் என்று சொல்பவர்கள்தான் உண்மையிலேயே விஷக்கிருமிகள்' என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (30.5.2018) திருச்சிக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய தலைமுறை' தொலைக் காட்சிக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

விஷக்கிருமிகளுடைய பேச்சு

செய்தியாளர்: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறாரே, அதுகுறித்து உங்களு டைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: ரஜினிகாந்த் அவர்கள் ஏற்கெனவே என்ன சொல்லி அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்? சிஸ்டம் சரியில்லை என்று சொன்னார். அந்த சிஸ்டத்தை சரிப்படுத்துவதற்குப் போராட்டத்தை தவிர மக்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? இந்தக் கேள்வியை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளோர் கேட்கக் கூடிய கேள்வியாகும்.

அதுமட்டுமல்ல, போராட்டங்களை யாரும் விரும்பி வேண்டுமென்றே செய்யவேண்டும் என்று மக்கள் செய்வதில்லை. குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்றைக்கு எடுத்திருக்கின்ற முடிவினை சரியான காலகட்டத்தில் எடுத்திருந்தால், போராட்டங்களுக்கு அவசியமிருந்திருக்காது.

ஜனநாயகத்தில் போராட்டங்கள் வெடிப்பதற்குக் காரணமே, உரிய நேரத்தில் ஆட்சியாளர்கள், அந்தந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கோ, அல்லது தீர்வு காணுவதற்கான ஆலோசனைகளை சொல்வதற்கோ வாய்ப்பு தராத காரணத்தினால்தான், வேறு வழியில்லாமல், மக்கள் போராட்டக் களத்தினை நாட வேண்டிய அவசி யம் ஏற்படுகிறது. எனவே, போராட்டம் என்பது மக்கள்மீது திணிக்கப்பட்ட ஒன்றே தவிர, மக்களாகவே களம் காணவேண்டும் என்கிற அவசியத்தில் யாரும் இல்லை.

உரிமைகளுக்காகப் போராட்டத்தில் கலந்துகொண்ட வர்களை விஷக்கிருமிகள்'', சமுதாய விரோதிகள்'' என்று பொறுப்பற்ற முறையில் பேசுவது இருக்கிறதே, அது விஷமக்கிருமிகளுடைய பேச்சு என்றுதான் கருதவேண்டும்.

காரணம் என்னவென்று சொன்னால், அந்தத் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் கிரிமினல் குற்ற வாளிகளா? அல்லது  ஏற்கெனவே ஏதாவது கிரிமினல் குற்றங்கள் செய்து அதற்காக அவர்கள் தண்டனை பெற்றவர்களா? அல்லவே, பொதுமக்கள்தானே அவர்கள்!

கட்சி, ஜாதி, மதம் என்கிற எந்த பேதமுமில்லாமல் அந்தப் போராட்டத்தில், பேரணியில் சென்றிருக்கிறார்கள். பேராயர் சென்றிருக்கிறார், பங்குத் தந்தையர்கள் சென் றிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் என்ன ஆசை? முதலமைச்சராக வேண்டும் அல்லது எம்.எல்.ஏ.,க்கள் ஆகவேண்டும் என்பதற்காகச் சென்றார்களா?

மக்களுடைய வாழ்வதார உரிமை பாதிக்கப்படுகிறது என்பதைத் திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னார்கள். கேளாக் காது, செயல்படாத அரசு என்கிற நிலையில்தான், அவர்களுக்கு வேறு வழியில்லாமல், மக்களை ஒருங் கிணைத்து அமைதி வழியில் போராடினார்கள்.

ஜனநாயகத்தின் பாலபாடம் எது?

ஜனநாயகத்தினுடைய பாலபாடம், தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் அவர்களுடைய கடமையிலிருந்து அவர்கள் நழுவுவார்களானால், வழுவுவார்களானால், செய்யத் தவறுவார்களானால், அவர்களை அந்தப் பதவியிலிருந்து விலகுங்கள் என்று கேட்பதுதான் ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான அடிப்படையான ஒன்றாகும். இது ஜனநாயகத்தினுடைய அ'னா, ஆ'வனா. இதை முதலில் அவர் கற்றுக்கொண்டால், இப்படிப்பட்ட பொறுப்பற்ற முறையில் பேசமாட்டார். அவர் சமூகத்திற்கு நண்பரா? அல்லது சமூகத்திற்கு விரோதியா? என்று பார்க்கவேண்டும்.

மற்றவர்களை சமூக விரோதிகள் என்று சொன்னால், அது மக்கள் விரோதப் பேச்சாகும். எனவே, மக்கள் விரோத அரசியலை அவர் நடத்தப் போகிறாரா? என்கிற கேள்வி எழுகிறது.

அடுத்தபடியாக, அவரே ஒரு தீர்வு சொல்லட்டும்; சிஸ்டம் சரியில்லை, அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிறார். அது எந்த சிஸ்டம்? அதை சரிப்படுத்துவதற்கு என்ன வழி? இவர் என்ன முறையைக் கையாளப் போகிறார்? எத்தனைப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டார்? என்பதையெல்லாம் அவர் தெளிவாகச் சொல்லவேண்டும்.

ஆகவேதான், ஏதோ ஒன்று, யாரோ தூண்டிவிடு கிறார்கள். அந்தத் தூண்டுதலின் அடிப்படையில், யாருக்கோ இவர் குரல் கொடுக்கிறாரே தவிர, இது அவரு டைய சொந்த சிந்தனையா என்பது புரியவில்லை.

ரஜினிகாந்த் எப்பொழுதுமே போராட்டக் களத்திற்கு வந்ததில்லையே!

செய்தியாளர்: பாதிக்கப்பட்ட மக்களை ரஜினிகாந்த் பார்த்த நோக்கத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: பாதிக்கப்பட்ட மக்களை அவர் எப்பொழுது போய் பார்க்கிறார்? போராட்டம் எத்த னையோ நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தினைப்பற்றி அவர் எப்பொழுதாவது கருத்துத் தெரிவித்திருக்கிறாரா? அந்தப் போராட்டம் ஏன் என்பதைப்பற்றியோ அல்லது தேவையில்லை என்பதைப்பற்றியோ அவர் ஏதாவது விளக்கம் சொல்லி யிருக்கிறாரா?

ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக போராட்டம் நடத்து கின்ற மக்களையோ அல்லது நாட்டில் நடைபெறும் வேறு எந்தப் போராட்டம் நடத்தும் மக்களைச் சந் தித்தோ, உங்கள் பிரச்சினை என்ன? ஏன் நீங்கள் போராடுகிறீர்கள்? என்று இவர் கேட்டு இருக்கிறாரா? இதுவரையில், அவர் எப்பொழுதுமே போராட்டக் களத் திற்கு வந்ததேயில்லையே!

அடுத்து தேர்தல் வந்துவிடும் - அதற்குமுன் சில காட்சிகளை அரங்கேற்றவேண்டும் என்று, இப்பொழுது தன்னுடைய படத்தை முடித்துவிட்டு, அடுத்த கால்ஷீட் டுக்காக வந்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் உண்மையான உருவத்தை

மக்கள் புரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பு

செய்தியாளர்: மற்றவர்கள் பேசும்போது அவர்கள் எல்லாம் அரசியல் நோக்கத்திற்காகப் பேசுகிறார்கள்; தான் மட்டும் மக்கள் நலனுக்காகப் பேசுகிறேன் என்பதுபோன்ற கருத்துகளை அவர் வெளிப்படுத்துகிறாரே?

தமிழர் தலைவர்: அவர் நிறைய பேசவேண்டும். அவர் நிறைய பேசினால்தான், அவரை மக்கள் அடையாளம் காணுவதற்கு வசதியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அவர் பேசும்போது, மக்கள் அவரை அடையாளம் காணுகிறார்கள். அவர் சமூக விரோதிகளுக்கு எதிராகப் பேசுவதாக  நினைத்துக் கொண்டிருக்கிறாரே, அவர் சமூகத்திற்கு நண்பரா? மக்கள் விரோத கருத்துகளை எடுத்துச் சொல்லி, மக்கள் விரோத ஆட்சியை நியாயப்படுத்தக் கூடிய - வழக்குரைஞராக மாறியிருக்கிறாரா? என்பதை மக்கள் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு.

இதுபோன்று அவர் அடிக்கடி பேசவேண்டும்; அப்பொழுதுதான் அவரைப்பற்றிய உண்மையான உருவத்தை மக்கள் தெரிந்துகொள்ள முடியும். ஆயிரம் பொதுக்கூட்டங்களில் மற்றவர்கள் விளக்குவதைவிட, அவர் பேசக்கூடிய தன்னிலை விளக்கத்தின் மூலமாக, அவரே தன்னைப்பற்றிய விளக்கத்தை - மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய நல்ல வாய்ப்பை ஏற்படுத்துகிறார். நிறைய பேசட்டும்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner