எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"ஊசி மிளகாய்''

இதுவரை விஞ்ஞான உலகம், மருத்துவ உலகம் கேட்டிராத அதியற்புத கண்டுபிடிப்புச் செய்தியை உத்தரப்பிரதேச துணை முதல்வராக உள்ள - யோகி ஆதித்யநாத்திற்கு அடுத்த அதிகாரம் படைத்தவரான தினேஷ் சர்மா என்ற பூணூல் புத்திசாலி உலகுக்கு அறிவித்துள்ளார்!

எல்லோரும் பலமாக ஒருமுறை கைதட்டுங்கள்!

இராமாயண காலத்திலேயே டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெறும் நவீன மருத்துவ வசதிகள் இருந்ததாக ஏ.என்.அய். செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

சீதாதேவி மண் பானையிலிருந்து பிறந்தார் என்று மக்கள் கூறுகின்றனர். இப்போது டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறப்பதற்கு ஒப்பாக இது இருக்கிறது!'' (அதுமட்டுமா?)

இப்போது தொலைக்காட்சிகளில் எங்கோ நடப்பதை உடனுக்குடன் நேரலை நிகழ்ச்சிகள்மூலம் நாம் பார்க்கிறோம். மகாபாரத காலத்திலேயே இந்தத் தொழில்நுட்பம் இருந்துள்ளது. அஸ்தினாபுரத்தில் அரண்மனையில் இருந்தபடி எங்கோ நடக்கும் மகாபாரதப் போர் காட்சிகளை கண் பார்வை தெரியாத திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் நேரடியாக விளங்குகிறான்!

மகாபாரத காலத்திலேயே நேரலையாக நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது!''

அதோடு மேலும் இந்த அறிவுக்கொழுந்து, பிரபல பிரகஸ்பதியின் மச்சான்,

மதுராவில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் மகாபாரத காலத்திலேயே இதழியல் துறை இருந்துள்ளது. கூகுள் இணைய தளம்போல, நாரத முனிவர் எல்லா தகவல்களையும் எல்லோருக்கும் தெரிவித்துள்ளார்!

எப்படி சிரிப்பது என்று திகைக்கிறீர்களா?

அது உங்கள் விருப்பம்!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., தலைவர்கள் வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்கள் காலத்தினையே பாரத புண்ய பூமியில்' - பித்ரு பூமியில்' விஞ்ஞான விந்தைகள் செய்துள்ள நாடு.

இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் நமது நாட்டில் அப்போதே இருந்துள்ளது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (டிரான்ஸ்பிளன்டேசன்) யார் முன்னோடி, நம்ம பரமசிவன்தானே!

தன் மனைவி பார்வதி கதவில்லா பாத்ரூமில்' குளிக்கச் சென்றபோது கழுத்தில் திரண்ட அழுக்கைப் பிடித்துப் பிள்ளையாராக வைத்து காவலுக்கு வெளியில் வைக்க, அவசர அவசரமாக அந்த நிலையில், பார்வதி தரிசனம்' செய்ய சிவன் வருகையில், அவரை வெளியில் நின்ற பிள்ளையார் தடுக்க, அவனுடைய தலையை வெட்டிப் போட்டு, அத்துமீறி சிவன் உள்ளே பிரவேசித்ததும், உடனே பார்வதி, எப்படி வந்தீர்கள்'' என்று கேட்க, இவர் நடந்ததை சொல்கிறார்.

அய்யோ, அந்த அழுக்குருண்டை என் பிள்ளையாயிற்றே! உடனே உயிர்ப்பித்துத் தாருங்கள் என்று வற்புறுத்தி அழ, யானைத் தலையை வெட்டியதுதானே  உலகின் முதல் டிரான்ஸ்பிளன்டேசன் சர்ஜரி. டாக்டர் பரமசிவனின் அற்புத மெடிக்கல் சாதனை என்றார் நம் பிரதமர் மோடி. அதுவும் எங்கே பேசினார் தெரியுமா? சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்தபோது திருவாய் மலர்ந்தருளினார்!''

உலக விஞ்ஞானிகள்எல்லாம் ரகசியமாக இப்படிப்பட்ட உலக மகா அறிவாளிக்கு நோபல் பரிசை விட பெரிய பரிசு ஒன்றைத் தரும் அரிய முயற்சியில், ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்களாம்!

மற்றொரு காவி விஞ்ஞானி'', சர் அய்சக் நியூட்டனுக்கு முன்பே புவிஈர்ப்பு என்ற எதிர்வினை விதியை நமது முனிவர்களே புராணங்களில் கண்டுபிடித்துள்ளார்கள்'' என்று கூறியுள்ளார்.

இப்படி நாளும் புதிய புதிய, அரிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மேதைகளின் தகவல்கள் வந்துகொண்டே உள்ளன!

இதைப் பரிகசித்தோ, கேலி பேசியோ யாராவது பேசினால், தேசத் துரோக வழக்கை அந்த சமூக விரோதிகள்'மீது போட்டு, ஆயுள் பரியந்தம் அவர்களை ஜெயிலில்தள்ள புதிய சட்டம் ஒன்று தயாராகிறதாம்!

ஓம்! ஓம்! ஆம்! ஆம்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner