எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சரிந்து போன பொருளாதாரம் பொதுமக்கள் குமுறல்

புதுடில்லி, ஜூன் 14 பொதுத் தேர்தலுக்கு ஒரு ஆண்டு உள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தியது. அதில் 48 சதவீதம் பேர் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதென தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 இல் நடத்தப்பட்ட இதே ஆய்வில் 38 சதவீதம் பேர், பொருளாதாரம் மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மே 2018 இல் சுமார் 48 சதவீதம் பேர் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இனிவரும் காலத்தில் பணவீக்கம், மத்திய அரசின் விலை நிர்ணயம் மூலம் சாமானியர்கள் பயன்படுத்தும் பொருள்கள் விலை அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு பெங்களுரூ, சென்னை, அய்தராபாத், கொல்கத்தா, மும்பை, டில்லி என 6 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது. இதில் 5,077 பேர் கலந்துகொண்டனர்.

இதில் பொருளாதார சூழ்நிலை, வேலைவாய்ப்பு இழப்பு, விலையேற்றம், தனிமனித வருவாய் இழப்பு, வாங்கும் தன்மை குறைதல் போன்ற பிரச்சினைகள் அடுத்த ஆண்டு தேர்தலில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்.  44 விழுக்காடு மக்கள், மோடியின் வேலை வாய்ப்பு உத்திரவாதம் குறித்த பேச்சினால் கடுமையான கோபமடைந்துள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆண்டிற்கு 2 கோடி வேலை வாய்ப்பு தருவேன் என்று கூறிவிட்டு, தற்போது வேலை கேட்டு வரவேண்டாம்; பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று கூறுவது, தொழில்நுட்ப மாணவர்கள் மாடுகளை மேய்த்து அதன் மூலம் நல்ல வருவாயைப் பெறலாம் என்று பா.ஜ.க.வினர் கூறுவதையும் கேட்டு படித்த மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக 88 விழுக்காடு மக்கள் இந்த அரசு ஓராண்டிற்குள் பொருளாதராம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்கும் வாய்ப்பு இல்லை என்று கவலை தெரிவித்துள்ளனர்.

தாஜ்மகாலை ராம்மகால் என்று

மாற்ற வேண்டுமாம்! ஆக்ரா, ஜூன் 14    உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலின் பெயரை ராம் மகால் அல்லது சிவாஜி மகால் என மாற்ற வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் அவருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம், பைரியா சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங். இவர் கூறும் கருத்துக்களால் சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்வார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகளைவிட பாலியல் தொழில் செய்பவர்கள் எவ்வளவோமேல் என்றும், அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் வேலையை சரியாக செய்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இவரது இந்தக் கருத்துக்குப் பெரும் எதிர்ப்பு உருவாகியிருந்தது.

இந்த நிலையில், உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலின் பெயரை ராம் மகால் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று இவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்ஏ சுரேந்தர் சிங், இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்றுச் சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

அவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது; அந்த வகையில் தாஜ்மகாலின் பெயரை ராம் மகால் அல்லது சிவாஜி மகால் என்று மாற்ற வேண்டும் என்று கூறினார். பாஜக எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங்கின் இந்த கருத்துக்கு எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மோடிக்கு கொலை மிரட்டல் என்பது

ஒரு திகிலூட்டும் திரைக்கதை: சிவசேனா சாடல்

மும்பை, ஜூன் 14  பிரதமர் மோடி, மகாராஷ்ட்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரைக் கொலை செய்ய நக்சலைட்டுக்கள் சதித்திட்டம் தீட்டப்படுவதாக பாஜகவினர் கூறிவரும் நிலையில், இது ஒரு பரபரப்பான திகிலூட்டும் திரைக்கதை என்று சிவசேனா சாடியுள்ளது.மகாராஷ்ட்டிர மாநில முதல்வர் பட்னாவிஸை கொலை செய்யப் போவதாக 2 கடிதங்கள் வந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது; ஏனெனில், தங்களின் கடிதம் பாதுகாப்புத்துறையிடம் கிடைக்கும் அளவிற்கு நக்சலைட்டுக்கள் என்ன அவ்வளவு அஜாக்கிரதையானவர்களா? என்று சிவசேனா தனது சாம்னா இதழில் கேள்வி எழுப்பியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாத் அளிக்கும் பாதுகாப்புக்கு இணையாக பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனி அதுபோல மகாராஷ்ட்டிர முதல்வருக்கும் பாதுகாப்பு அளிக்கலாம் என்று கூறியுள்ள சிவசேனா, அவ்வாறு செய்துவிட்டால், வானில் பறக்கும் ஒரு பறவைகூட அந்த பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முடியாது என்றும் கிண்டல் அடித்துள்ளது. இதுபோன்று பாஜகவினர் கிளப்பி விடும் சம்பவங்கள், ஒரு விறுவிறுப்பான திகிலூட்டும் திரைப்படக் கதைக்கு சற்றும் குறைந்ததாகத் தெரியவில்லை என்றும் சிவசேனா விமர்சித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner