எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு

இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம்!

நடைபெறுவது இந்திய தேசியமா? இந்தி - சமஸ்கிருத பார்ப்பன தேசியமா?

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுவோம் வாரீர்!

மத்திய அரசுக் கல்வித் துறை ஆசிரியர்களுக் கான தேர்வினை இனி இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில்தான் எழுத முடியும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

மத்திய அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஆசிரி யர்களுக்கான தகுதித் தேர்வுப் பட்டியலிலிருந்து தமிழ் உள்ளிட்ட 16 மாநில மொழிகள் நீக்கப்பட்டு சமஸ்கிருதம், இந்தி மட்டுமே தகுதித் தேர்விற்கான மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலம் பொதுமொழியாக இருந்துவருகிறது.

சிபிஎஸ்இ-அமைப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் தகுதித்தேர்வான சிடிஇடி (Central Teacher Eligibility Test) தேர்வு  மே 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் உள்ள 92 நகரங்களில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும். இந்த தேர்விற்கான பணிகள் ஜூன் 22 ஆம் தேதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளன. அதற்கான இணையதள முகவரி அறிமுகப்படுத்தி தேர்வெழுதுபவர்கள் ஜூன் 22 முதல் பதிவிடலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலத்தில்

மட்டும்தான் தேர்வாம்!

நாடு முழுவதிலுமிருந்து ஆசிரியர்கள் இந்த தேர்விற்காக தயாராகிக்கொண்டு இருக்கும்போது திடீரென மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை விட்டுள்ளது. அதில் வரும் ஆண்டிலிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்குப் பொதுமொழியான ஆங்கிலத்துடன், இந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே இருக்கும். வேறு எந்த ஒரு மாநில மொழியிலும் தேர்வு எழுத முடியாது என்று கூறி, தமிழ் உள்பட 16 மாநில மொழிகளை இப்பட்டியலில் இருந்து நீக்கி உடனடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் மொழிப்பாடம் மட்டுமின்றி அறிவியல், கணிதம், வரலாறு போன்ற பொதுப்பாடங்களுக்குத் தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கும் இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டாயமாக இந்தி - சமஸ்கிருதம் படிக்கச்

செய்யும் ஏற்பாடு!

நாடு முழுவதும் பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் உள்ளன. தென் இந்தியாவில் இந்தியே தெரியாத ஆசிரியர்கள்  பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால் தற்போதைய மனிதவளத்துறை சுற்றறிக்கையின் படி தென் இந்தியா மற்றும் இந்திஅல்லாத அனைத்து மாநிலத்தவர்களுமே ஆசிரியர்களாக வர இயலாத நிலை உருவாகிவிடும். மேலும் இந்தி பேசாத மாநிலங் களில் உள்ள ஆசிரியர்களை கட்டாயம் இந்தி, மற்றும் சமஸ்கிருதம் கற்க வற்புறுத்தும் ஒரு அத்துமீறல் நடவ டிக்கை ஆகும் இது.  இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்கமொழி மற்றும் குஜராத்தி பேசும் மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

தமிழ்நாடு அரசு 50 ஆண்டுகளாகப் பின்பற்றிவரும் இருமொழி - தமிழ் - ஆங்கிலம் - கொள்கை முடிவுக்கு விரோதமான ஏற்பாடு. செம்மொழி தமிழுக்கு ஏன் இடமில்லை?

ஆசிரியர் தகுதித் தேர்வானது முதல் தாள் முதலாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்புவரை, இரண்டாம் தாள் 6 ஆம் வகுப்பு முதல் எட்டு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்பிற்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் தேர்வு ஆகும்.

இந்த இரண்டு தேர்வுகளையுமே கட்டாயமாக இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலம் இவற்றில் தான் எழுதவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு  எழுதும் ஆசிரியர்கள் இந்த மூன்றை மட்டுமே தேர்ந் தெடுக்க முடியும். இது தொடர்பாக முன்னாள் அரசுத் தேர்வாணையத் தலைவர் கே.தேவராஜன் கூறியதாவது:

தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் முதல் தேர்வு தமிழ் மொழியாகத்தான் உள்ளது. இரண்டாம் பட்சமாகத்தான் அவர்கள் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக் கின்றனர். இந்த நிலையில் இந்தி, சமஸ்கிருதத்தைக் கொண்டுவந்து மற்ற மொழிகளை அகற்றி இருப்பதும் தேவையற்ற செயலாகும். இதனால் இந்தி மொழி ஆசிரியர்கள் அதிகம் பேர் தமிழகப் பள்ளிகளில் ஊடுருவும் நிலை ஏற்படும். இதன் மூலம் தமிழக ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவது நிச்சயம் என்றார்.

இந்திய தேசியமா? இந்தி - சமஸ்கிருத

பார்ப்பன தேசியமா?

இந்திய தேசியம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, மாநில மொழிகளைப் புறக்கணிப்பது என்றால், இதன் பொருள் இந்திய தேசியம் அல்ல - இந்தி தேசியம், பார்ப்பன சமஸ்கிருதத் தேசியம்தானே!

சமஸ்கிருதம் 0.01 சதவிகித மக்கள் பேசுவதாகக் கூறப்படுகிறது - எண்ணிக்கையில் 10,112 பேர்களே! இதுவும் கூட மதம், சடங்குகள் சம்பந்தப்பட்ட அளவான எண்ணிக்கைதான். செத்தொழிந்து போன இந்த சமஸ்கிருதத்தில் தேர்வு எழுதலாம் என்பது பச்சைப் பார்ப்பன பாசிசம் அல்லாமல் வேறு என்ன? செம்மொழி தமிழோ உலகம் முழுவதும் பற்பல நாடுகளில் பேசப்படும் மொழி அல்லவா! ஆரிய - திராவிடர் போராட்டத்தைத் தூண்டும் வேலை இது.

வட மாநிலங்களில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, சமஸ்கிருதம் எதிர்ப்பு, இவற்றின் மூல ஊற்றான பார்ப்பனர் எதிர்ப்பும் வெடிக்கப் போவது உறுதி.

கல்வித் துறையில் பி.ஜே.பி. அரசு தொடக்க முதல் செய்துவரும் ஒவ்வொரு ஏற்பாடும் பார்ப்பனியம், இந்துத்துவா, சமஸ்கிருத கலாச்சாரத்தை, ஆதிக்கத்தைத் திணிக்கும் மிக மோசமான ஏற்பாடாகும்.

ஏக இந்தியா என்பவர்களே, ஏக இந்தியாவை உடைக்கும் அணுகுண்டு'களைத் தயாரிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

இதுகுறித்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் - அதற்கான முயற்சிகளிலும் திராவிடர் கழகம் ஈடுபடும்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

18.6.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner