எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டின் பல கோவில்களில் இருக்கிற சிலைகளைத் திருடி, பல கோடி ரூபாய் வருமானம் தேடிய பக்கா திருடர்களின் கண்ணைக் குத்தி, காலை வாங்கி, மூளையைச் செயல்  இழக்க முடியாமல் சர்வ சக்தி' சாமிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது பரிதாபம்!

அவர்களைக் காப்பாற்ற, மீட்டுக்கொண்டுவரும் திருப்பணி யை''ச் செய்வதற்கென்றே, காவல் துறையில் தனிப்பிரிவுக்யூ' பிராஞ்ச் மாதிரி, சிலை திருட்டு தடுப்பு மீட்புப் பிரிவு, திறமை வாய்ந்த அதிகாரியான அய்.ஜி. பொன்.மாணிக்கவேல் அய்.பி.எஸ். அவர்கள் தலைமையில் இயங்குகிறது!

நேற்று (27.6.2018) சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் மீட்பு வழக்கில் நேரில் ஆஜராக சொல்லிய தாக்கீது காரணமாக, உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் தமக்குள்ள குறை, தமிழக அரசின் பல அதிகாரிகளின் ஒத்துழையாமைபற்றியெல்லாம் கூற, அரசு தரப்பு வழக்குரைஞரும் பதில்கள் கூற, ஒரு சிறு பட்டிமன்றமே - நீதிமன்றத்தில் கலகலப்பாக நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன!

கோவில் சிலைகளுக்கு தக்கப் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை'' என்றும், விரைவில் தனி பாதுகாப்புப் பெட்டக (Safe Deposit Vault) த்தைக் கட்டி முக்கிய கடவுள் சிலைகளை அங்கே உள்ளே வைத்துவிட ஏற்பாடு செய்வது அவசர அவசியம்'' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்! நல்லது!!'

இதிலிருந்து பகுத்தறிவு பாழ்படாத மனிதர் எவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் என்னென்ன?

1. கடவுள், கடவுளச்சிகளான இந்து மதக் கடவுள்களுக்கு தக்கப் பாதுகாப்புத் தருவது அரசின் கடமை என்றால், இனிமேல் கருவறைக்குள் ஒருபுறம் அர்ச்சகர் மறுபுறம் காவல்துறை அதிகாரி என்று இருந்து காத்தால்தான் விசா' வாங்காமல் - பாஸ்போர்ட் எடுக்காமலேயே அயல்நாட்டுக்குப் பயணமாக மாட்டார்கள் நமது கடவுள்கள்! கடவுளால் ஆகாது, காவல்துறையால் ஆகும். (கடவுளை மற; மனிதனை நினை).

2. அதென்ன நம் சர்வ சக்தி சாமிகளை - கடவுள் கூட்டத்தை 'வெறும் சிலைகள்' என்று கூறி, அவமதிக்கலாமா? அவர்கள்மீது இ.பி.கோ. 294-ஏ - மதம் விமர்சனம் - மனதைப் புண்படுத்தும் வகையில் - அந்தப் பிரிவுகளில் வழக்குப் போடவேண்டாமா, இந்து முன்னணி வீரத் துறவிகள், அவாளின் தொண்டர்களும்?

3. பூஜை செய்தால் கடவுள்கள்'; வெளிநாடு புறப்பட்டு விட் டால் சிலைகளா? Objection My Lord இவர்கள்தான் நமது மதிப் பிற்குரிய கடவுள்கள்  (Lords) காரணம் கடவுள்களைக் காப் பாற்றும் நடமாடும் கடவுள்கள்' - லார்டுகள் அல்லவா!

கடவுள் கடத்தலைத் தடுத்திட ஒரே வழி - பிரதான கடவுள்கள், கடவுளச்சிகளை - பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ளே தள்ளி'' - திருவிழா நேரங்களில் மட்டும் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இருமுறை பரோல்' தந்து வீதி உலா'  வெளிச்சம் காட்டி, பிறகு உள்ளே தள்ளிவிடுவது நல்ல முறைதான்!

இந்து மதத்தை மட்டும் பேசுகிறீர்களே என்ற தி.க.வினரைக் கேள்வி கேட்டு மடக்கும் சாம்பிராணிகள் பல உண்டு.

அவர்களுக்கு தி.க.காரன் இப்படிச் சொல்வானே! ஏனய்யா, மற்ற மதக்கடவுள்களையே உள்ளடக்கித்தானே ஒரே வரியில் கடவுள் இல்லை, கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறுகிறோம்; எழுதுகிறோம்; சிலைப் பீடங்களில் பொறிக்கிறோம்'' என்பாரே! அது சரியானது என்று மாண்பமை நீதியரசர் ஜஸ்டீஸ் எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் தீர்ப்புக்கூட கொடுத்துவிட்டார் 1973 இல். அது ஒருபுறமிருந்தாலும், அதென்ன இந்து மதக் கடவுள்கள், கடவுளச்சிகள்மீது மட்டும் சிலை திருடர்களுக்கு அமோக பக்தி!?

ஏன், கிறித்துவ, இசுலாமிய கடவுள்களைத் திருட முடிய வில்லை? அவர்கள் கொஞ்சம் முன்யோசனையுடன் ஒருவர், பரம மண்டல பரம பிதா'' என்று சொல்லி விட்டனர்!

மற்றொருவர், அருபி'' எங்கள் அல்லா என்று சர்வ ஜாக்கிர தையாகக் கூறிவிட்டார்!

பரம மண்டல பரம பிதா'வை இதுவரை எந்த விண்வெளி வீரரும் கண்டுபிடிக்க முடியுமா? அதேபோல்தான், அவரில்லாத இடமே இல்லை என்று கூறிவிட்டதால், தனியே திருடப்பட முடியாத ஏற்பாட்டைச் செய்துவிட்டனர்.

அர்த்தமுள்ள இந்து மதத்தில் மட்டும்தான் இந்த வசதி வாய்ப்பு - ஏர்கண்டிஷன் அறையில் - குளிர்பதனத்தில் நம் கடவுள்கள், கடவுளச்சிகள். உல்லாச வாழ்நாள் சிறையில்.

எல்லாம் பிள்ளை விளையாட்டே'' என்று ஒரு போடு போட்டாரே நம் வடலூர் வள்ளலார்!

அவர் கூறியதுதானே இன்று நடக்கிறது - இல்லையா!

இந்த விளையாட்டில் அரசுக்கும், நீதிமன்றத்திற்கும்கூட பங்கு உண்டோ?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner