எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘க.ச.' அய்யா என்று அந்தப் பகுதியில் மிகுந்த அன்போடும், மதிப்போடும் அனைவராலும் அழைக்கப்படும் பொத்தனூர் மானமிகு க.சண்முகம் அவர்களின் 96 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்.

திருச்சி நேஷனல் கல்லூரியில் படித்த மாணவர் பருவந்தொட்டு, திராவிடர் கழகக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் தொடங்கி இன்றுவரை நூலிழை பிறழாமல் கொள்கைத் தீவிரத்துடனும், கட்டுப்பாட் டுடனும், கண்ணியத்துடனும் பண்பாட்டின் பெட்டகமாக அடக்கத்தின் உருவமாக நம்மிடையே அவர் வாழ்ந்து வருகிறார் என்பது அவருக்கு மட்டுமல்ல; நமக்கும், இயக்கத்திற்கும் பெருமையாகும்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தலைவராகவும், மண்டலத் தலைவராகவும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் (தந்தை பெரியார் காலத்திலேயே), அதன் துணைத் தலைவராகவும், தற்போது அதன் தலைவராகவும் இருக்கக் கூடிய கொள்கைச் சீலர் ஆவார்.

சேலம் மாவட்டத் தலைவராக இருந்து கழகம் நடத்திய பேராட்டங்களில் எல்லாம் புன்னகை முகத்தோடு பங்கு கொண்டு சிறைப்பட்டவர்.

‘மிசா'வில் சிறைப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தவர்.

அவருடைய பொதுவாழ்வு என்பது திறந்த புத்தகம் - கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மதிக்கத் தக்க பண்பாளர்.

அவரின் தனிவாழ்வுக்கும், பொதுவாழ்வுக்கும் உற்ற துணைவராக இருந்தவர் அவரது துணைவியார் மறைந்த திருமதி சுந்தரம்பாள் அம்மையார் ஆவார். இந்த நேரத்தில் அவரையும் நினைவு கூர்வது அவசியமாகும்.

இவர் தந்தை பெரியார் வாழ்ந்த வயதுவரை வாழ விரும்பினார் - அதனைச் சாதித்தும் முடித்துள்ளார்! மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நூற்றாண்டும் கண்டு இயக்கத்திற்கும், பொதுத் தொண்டுக்கும் பயன்படவேண்டும் அதற்கு நல்ல உடல் நலத்துடன் அவர் நீடு வாழ வேண்டும் என்பதே நமது அவா!

கடவுள் மறுப்பாளர்கள் பலரும் இத்தகைய 90 ஆண்டுகளைத் தாண்டி 100 ஆண்டு சதம் அடித்தவர்கள் உள்பட விரைவில் ‘‘கழகப் பாராட்டு விழா'' ஒன்றை சென்னையில் சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.

96 ஆம் ஆண்டு பிறந்த நாள் காணும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்குக் கழகத்தின் சார்பில் அன்பு நிறைந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

2.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner