எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியத் திருநாட்டின் தலைநகரம் டில்லி மாநகரம். குடியரசுத் தலைவர் மாளிகை முதல் நாடாளுமன்றம், சட்டமன்றம், தலைமைச் செயலகம் - பல்வேறு பல்கலைக் கழகங்கள் எல்லாம் இடம்பெற்ற நாட்டின் தலைநகரம்!

அது அத்துடன் நில்லாது, சாமியார்கள், மக்களை ஏமாற்று வதிலும், பெண்களிடம் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வல்லுறவு - பலாத்காரங்களும்கூட அடிக்கடி நடைபெறும் நகரம். அதன் காரணமாக, உலக நாடுகளிடையே இந்தியா, சுற்றுலா பயணிகளுக்குப் பாதுகாப்பான நாடல்ல என்ற பதிவைப் பதியச் செய்துள்ள நம் பாரத மாதா'வை தலைகுனிய வைத்துள்ள நகரமும்கூட!

அது மூடநம்பிக்கையாளர்களுக்கும் தலைநகரமோ என்று பலரும் அச்சுறும் நிலையில், 11 பேர் கொண்ட ஒரே குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்டு மாண்ட செய்தி பரபரப்பானதாக வந்துள்ளது!

பற்பல குடும்பங்களில் வறுமைக் கொடுமை - ஏழ்மை காரணமாகவோ அல்லது வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லையே; நமது நாணயம் இப்படிக் கெட்டுப் போகலாமா என்று மனம் வருந்தி, தற்கொலை செய்துகொள்ளும் மானஸ்த'' உணர்வு காரணமாகவே தற்கொலைகள்!

எதுவானாலும், தற்கொலைகளை பகுத்தறிவாளர்கள் ஆத ரிக்கவே மாட்டார்கள். மேற்காட்டிய செய்தி அந்த வகைப்பட்ட தற்கொலை அல்ல.

இன்று (4.7.2018) தமிழ் இந்து' நாளேடே கொடுத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா?

மூடநம்பிக்கையால்தான் 11 பேர் தற்கொலை''

டில்லி போலீஸ் தகவல்

டில்லி புராரி பகுதியில் ஒரே குடும்பத்தில் கடந்த ஞாயிறு (1.7.2018) அன்று 77 வயதான நாராயண் தேவி மற்றும் அவரது பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என 11 பேர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது பிரேதப் பரிசோதனையில் உறுதியானது.

தற்கொலைக்கு அவர்களது மூடநம்பிக்கையே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாராயணதேவியின் இளைய மகன்  லலித் கண்டவா என்பவர் எழுதிய குறிப்புக்களிலிருந்து இது தெரிய வந்துள்ளது!

"உலகம்  அழியப் போவதாகவும், நான் உங்களை வந்து காப்பாற்றுவேன் என்று 10 ஆண்டுகளுக்குமுன் இறந்த தன் தந்தையிடமிருந்து செய்தி வந்துள்ளதாகவும், குடும்பத்தாரிடம் கூறிய லலித் கண்டவா, எல்லோரையும் தற்கொலைக்குத் தூண்டியுள்ளார். மூடநம்பிக்கை அதிகம் கொண்ட அவரது குடும்பத்தாரும், அவர் கூறுவதை நம்பியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்!''

இந்த 2018 இல் மனிதன் செவ்வாய்க் கிரகம்பற்றி முழு படப்பிடிப்பை விண்வெளியில் நடத்தி கண்டறிந்த நிலைக்குப் பின்னரும், செவ்வாய் தோஷத்தை'' நம்பும் மடச் சாம்பிராணி களைப்போல், இந்தக் குடும்பமும் நம்பியுள்ளது எவ்வளவு பரிதாபமானது!

மின்னணு அறிவியலை - செல்போனை - இணையத்தைப் பயன்படுத்தியும் இன்று அறிவியல் மனப்பாங்கு வரவில்லையே!

கடவுள்களையே கடத்தி வெளிநாட்டில் விற்று, அந்நியச் செலாவணி ஈட்டும் பக்த கேடிகள் ஏராளம் உள்ள நாட்டில், கடவுள் பக்தியால் விளைந்த கேட்டினைப் பார்த்தீர்களா கடவுள் நம்பிக்கையாளர்களே!

பக்தி வந்தால் புத்தி போய்விடும்' என்று சொன்ன தந்தை பெரியாரின் அறிவுரை - கருத்துரை எவ்வளவு உண்மை என்பது இப்போதாவது புரிகிறதா, பக்தர்களே!

நேபாளத்திற்கு கைலாஷ் யாத்திரை போனவர்களை மீட்க எந்தக் கடவுளும் துணைக்கு வராமல் மனிதர்கள் தானே பெருமுயற்சி எடுக்க வேண்டியுள்ளது!

ஜப்பானிலும் இப்படி ஒரு மூடநம்பிக்கையை ஆதாரமாகக் கொண்ட ஒரு பிரிவு மதம் பிடித்தவர்கள்'', கடவுளைக் காண தற்கொலை புரிந்துகொள்ளுவோர் உண்டு என்று சில ஆண்டுகளுக்குமுன் செய்தி வந்ததே!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்தான் கேட்டார், தனது சொடுக்கு கவிதை வரிகளில்,

கடவுள் கடவுள் என்றெதற்கும் கழறுகின்ற மனிதர்காள்;

உடை வெளுக்கும் தோழர்தம்மை -

கடவுள்தான் முன்னேற்றுமா? தன் கழுதையைத்தான்

முன்னேற்றுமா?'' என்று.

கடவுளால் முடியாத கருத்தரிப்பை, உடல் உறுப்புகள்  மாற்று தலை மனித பகுத்தறிவு - மருத்துவ விஞ்ஞானம் செய்து காட்டி யும், அதே டாக்டர்களில் பலர் கடவுளைத் தங்கள் மேஜைக்குப் பக்கத்தில் துணைக்கு வைத்து, வைத்தியம் செய்யும் விந்தை யைப்பற்றி என்ன சொல்வதோ தெரியவில்லை.

மூடநம்பிக்கை ஒரு மோசமான தொற்றுநோய் என்பது புரியவில்லையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner