எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை!

பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாகப் படுகொலை செய்யும் போக்கு அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு, அத்தகையவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை - மத்திய அரசு உடனடியாக இதனைச் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூக ஆர்வலர்கள் காந்தியாரின் பேரன் துஷார் காந்தி, நஷின் பொன்னவாலா ஆகியோர் தொடுத்த பொது நல வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு - மிக முக்கிய தீர்ப்பு ஒன்றை சிறப்பாக வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு

நாகரிக சமூகத்தின் அஸ்திவாரம் சட்டம். மக் களின் உரிமைகளைப் பாதுகாப்பது, சமூகத்தை ஒழுங்கு படுத்துவதே, சட்டத்தின் பிரதான நோக்கம். குடிமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும். யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

கும்பலாக சேர்ந்து அப்பாவிகளை அடித்துக் கொல் வதைத் தடுக்க, மத்திய - மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்; இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்படவேண்டும்.

வன்முறை கும்பல்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு பல்வேறு ஊடகங்கள்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

சமூகவலை தளங்களின் போக்குகள்

சமூக வலைதளங்களில் வதந்தி, வெறுப்புணர்வைத் தூண்டும் தகவல்களை, வீடியோக்களை பரப்புவோர்மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வன்முறைக்கும்பல்களைக்கட்டுப்படுத்தபிரச்சினைக் குரிய பகுதிகளில் மாவட்ட வாரியாக டி.எஸ்.பி. தகுதியுள்ள சிறப்புக் காவல் அதிகாரிகளை நியமிக்கவேண்டும். பசுக்களைப் பாதுகாக்கும் படை என்ற பேரிலும், அப் பாவிகள்மீது குழந்தை கடத்துவோர் என்ற தவறான தகவலைக் கூறி அடித்துக் கொல்லுவோர் விஷயத்திலும் - அவை தீவிர கிரிமினல் குற்றங்களாகக் கருதப்பட்டு கடும் நடவடிக்கைக்கான  சட்டமுறைகளை ஏற்படுத்தவேண்டும்'' என்பதை வலியுறுத்தி உள்ளனர்!

விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்துக!

விரைவு (தனி) நீதிமன்றங்களை ஏற்படுத்தி 6 மாதங்களுக்குள் விசாரித்து அதிகபட்ச தண்டனையை இத்தகைய சமூக விரோதிகளுக்குத்'' தரவேண்டும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறும் காவல்துறை அதிகாரிகள்மீதும் கடும் நடவடிக்கை பாயவேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வற்புறுத்தி உள்ளனர்!

பசு பாதுகாப்புப் படை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரத்தின் பல்வேறு துணை அமைப்புகள் அப்பாவிகளை அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்மீது  குறி வைத்து, அடித்துக் கொன்ற சம்பவங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மிக அதிகம்.

ஏதோ ஒப்புக்கான நடவடிக்கைகள்

ஆட்சியாளர்கள் காவிகளைக் கண்ணெதிரே  கண்டும் காணாமல், ஒப்புக்கு ஏதோ நடவடிக்கை எடுப்பதுபோல, நடந்துகொண்டு, மறைமுகமாக அந்தக் காலிக் காவிக் கும்பலை ஊக்குவிக்கும்   போக்கு - உச்சக்கட்டத்தை வடமாநிலங்களில் அடைந்ததே - இப்படி ஒரு சட்டம் தேவை என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தும் அளவிற்கு நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது!

இது எவ்வகையில் மத்தியில் உள்ள மோடி தலை மையிலான பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்குப் பெருமையானது? வெளிநாட்டவரும், மனிதநேயர்களும் இதுகண்டு வேதனையும், வெட்கமுமே அடைவார்கள் என்பது உறுதி!

குழந்தை கடத்துவோர் என்ற தவறான தகவலை, ஆதாரமில்லாத - வதந்தியைப் பரப்பியதன் காரண மாக அப்பாவி மனிதர்கள் இதுவரை 31 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள்!

பசு பாதுகாப்புப் பெயரால் படுகொலைகள்

உ.பி., குஜராத், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பசுப் பாதுகாப்புப் படை'' என்று தங்களைத் தாங்களே கரசேவகர்களாக நியமித்துக்கொண்டு, தங்களுக்குப் பிடிக்காதவர்களை இப்படி போலிக் குற்றச்சாட்டுகளைக் கூறி, அடித்துக் கொல்லும் அநாகரிக காட்டுமிராண்டித்தனப் போக்கு, இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் அறிவியல், மின்னணுவியல் யுகத்திலும் ஏற்கத்தக்கதா?

எனவே, இந்தப் போக்குக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்படாவிட்டால், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளி நாடுகளிலும் நம் நாட்டின் மானம் கப்பலேறிவிடும் என்பது உறுதி!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

18.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner