எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே!

* கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா?

* அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின் தலைவிக்கு''ச் செய்யும் துரோகமே!

நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் மோடி அரசு வெற்றி பெற்றாலும், அது தோல்விக்குச் சமமான வெற்றியே! 2019 தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியுறும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை  வருமாறு:

நேற்று (20.7.2018) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளில் ஒன்றான தெலுங்கு தேசக் கட்சியினர், மோடி  அரசின்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அரசியல் சட்ட விதிப்படி - நாடாளுமன்றத்தின் மரபு விதிப்படி 50 எம்.பி.,க்கள் ஆதரித்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற நியதிப்படி,  நேற்று காலை முதல் தொடங்கி 12 மணிவரை காரசார விவாதங்கள் நடைபெற்றன.

தோற்கும் என்று தெரிந்தே நம்பிக்கை இல்லாத் தீர்மானம்!

தற்போதுள்ள கட்சிகள் நிலவரப்படி, மக்களவையில் ஆளும் பா.ஜ.க.வின் எண்ணிக்கை பெரிதும் (மாநிலங்கள் அவை போலவே) குறைந்துள்ளது என்றாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) என்ற ஆளும் (பா.ஜ.க. கூட்டணி) கட்சிகளின் பலம் காரணமாக ஆளுங்கட்சி - கூடுதல் எண்ணிக்கை பெற்று எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற முடியாது; தோற்கும் என்பது இருதரப்பினருக்குமே தெரியும்.

தோல்விக்குச் சமமான வெற்றி!

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இத்தகைய ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வருவதின் நோக்கமே - விவாதம்மூலம் ஆளுங்கட்சி - பிரதமர், இவர்கள் ஆளுமையைப்பற்றி நாடாளுமன்றத்தில் விமர்சித்து நாட்டோரின் உணர்வை நாடாளுவோரை உணர வைப்ப தேயாகும்.

எதிர்பார்த்தபடி, எண்ணிக்கைப்படி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு 126. (அதாவது மோடி ஆட்சிக்கு ஆதரவாக 325 வாக்குகள் பெற்று, நம்பிக்கையின்மைத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது).

இது ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கு பெருமையான, பெருமித வெற்றி போல் புறத்தோற்றத்தில் தோன்றினாலும், இது ஒரு தோல்விக்குச் சமமான வெற்றியே! (ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு  Pyrrhic Victory - ‘‘ a victory as bad as defeat''  என்ற பொருள் கொண்டது ஆகும்).

13 ஆண்டுகளுக்குப்பின் வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம்!

மோடி தமது  ஆட்சி ஏதோ பிரமாதமான ஆட்சியாக அமையும்; காங்கிரசு 60 ஆண்டுகளில் செய்யாததை 6 நாள்களில், 60 நாள்களில் சாதிப்பேன்'' என்று தம்பட்டம் அடித்ததுபோல எதுவும் நடக்கவில்லை. நடந்திருந்தால் 2014 இல் இவர்களது கூட்டணிக் கட்சியிலிருந்த தெலுங்கு தேசமே நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்மொழிந்திருக்குமா?

13 ஆண்டுகளுக்குப் பிறகு - இப்படி ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடந்தது மோடி அரசுக்குப் பெருமையா? சிறுமையா? பாராட்டா? குட்டா?

இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் முன்பு 2014 இல் பிரதமர் மோடி கட்சி வாங்கிய வாக்கு சதவிகித எண்ணிக்கையும், வெற்றிகளும் பின் நடந்த இடைத்தேர்தல்களில் சரிந்தே வந்துள்ளன என்பதை மறைக்க முடியுமா?

இது பிரதமர் மோடியின் செல்வாக்குச் சரிவையும்; பி.ஜே.பி.- ஆர்.எஸ்.எஸ். ஆட்சிமீது மக்களின்  பல தரப்பட்டவர்களின் அதிருப்தியும், வெறுப்பும் வளர் பிறையாகி'' வருவதைக் காட்டுவதை எவரே மறுக்க முடியும்?

என்.டி.ஏ. என்ற இவர்களது கூட்டணி கட்சிகள் - இவர்களுடன் பலமுள்ள பலர் ஏன் வெளியேறினார்கள்?

சிவசேனாவின் கடும் விமர்சனங்கள் முதல் தெலுங்கு தேசம், சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி, தமிழ்நாட்டில் வைகோவின் ம.தி.மு.க., டாக்டர் இராமதாஸ் அவர்களின் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் வரை 2014 தேர்தலில் கூட்டணி - இப்போது பா.ஜ.க. ஆட்சியின் கடும் விமர்சகர்கள் அல்லவா?

நிபந்தனையற்ற அடிமையான அ.தி.மு.க.

இதில்  ஆசை வெட்கம் அறியாது'' என்பதற் கேற்ப, நிபந்தனை அற்ற, மோடி ஆட்சிக்குத்  தலை யாட்டும் தம்பிரான் ஆட்சியாக, டில்லி அரசின் பொம் மலாட்டத்திற்கேற்ப ஆடுபவர்களாக, அ.தி.மு.க. -அம்மா'' என்று அவர்கள் கூறும் ஜெயலலிதா எடுத்த நிலைக்கு முற்றிலும்  முரணாக வாக்களித்துள்ளனர்; காரணம், வெளிப்படையானது, உலகறிந்த உண்மைகள் - வருமான வரி ரெய்டுகள் - சி.பி.அய். ஏவுகணைகள், வேடன் கையில் சிக்கிக் கொண்ட முயல்களைப் போன்ற பரிதாபம், உடனே அடிபணிந்து வாக்குப் போடும் வெட்கப்படும் நிலை!

அப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மை' என்ற ஒப்பாரி வைத்து அழுதுகொண்டே ஆதரவு பொத்தானை அழுத்திய விசித்திர இரட்டை வேடம்!

பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூப்பிட்டுப் பேசியும் சிவசேனா கட்சி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது புறக்கணித்து வெளியேறியுள்ளது - கூட்டணி கட்சியாக இருந்தும்கூட!

அந்தக் கூட்டணியில் இல்லாமலேயே அ.தி.மு.க. எடுத்த - நிலைப்பாடு - ஓட்டுப் போட்டது அவர்களது தலைவிக்கே செய்த மகத்தான துரோகம்! என்ன செய்வது? குடுமி'யை அங்கே  பிடித்து ஆட்டினால் இங்கே  ஆடு கிறது!

வரும் தேர்தலில் பி.ஜே.பி. தோற்கும்

அதே டில்லியில், விவசாயிகள் அன்றே கூடி, பா.ஜ.க. - மோடி ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை மக்கள் மன்றத்தில் நிறைவேற்றி உள்ளார்களே!

இதெல்லாம் யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே'' என்பதுபோன்ற அறிகுறிகள்; விரைந்து நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டி நடத்தினாலும், முடிவு அமைதிப் புரட்சியாக இருக்கும் - புயலுக்குமுன் உள்ள அமைதிபோல - இதைப் பாடமாக கற்கட்டும்; இந்த - வெற்றி பாடம் பெறவேண்டிய ஒன்றே!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

21.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner