எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலைஞரை மதிப்பது என்பது

அவர் கட்டிக் காத்த கொள்கையை மதிப்பதே!

மானமிகுசுயமரியாதைக்காரரான''தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவ நிபுணர் களின் சீரிய  சிகிச்சையால் நலம் பெற்று வரு கிறார். இந்த நிலையில், அவர் உடல்நலம் பெற பிரார்த் தனை'' என்பது போன்ற மூடநம்பிக்கை சடங்குகளில் தி.மு.க.வினர் ஈடுபடவேண்டாம்; கலைஞரை மதிப்பது என்பது அவர் கட்டிக் காத்து வந்த - பின்பற்றி வந்த கொள்கையை மதிப்பதுதான் - எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள இடம் கொடுக்கவேண்டாம் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தமிழினத்தின்  ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள் தமது 95 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த ஆண்டை எட்டிப் பிடிக்க இருக்கிறார் இன்னும் ஒன்றரை மாதங்களில்!

வழக்கமான வயது முதுமையின் காரணமாகவும், இன்றுள்ள உலகியல் சுற்றுச்சூழலினாலும், தொற்றுக்களால் பாதிக்கப்பட்டு (எல்லா வயதினருக்கும்கூட) சிறந்த சிகிச்சை பெற்று, மீண்டு கொண்டிருக்கிறார்!

கலைஞர் உடல்நலம் நல்ல வண்ணம் சீர்பெற்று வருகிறது

வாழ்நாள் முழுவதும் போராட்டம், எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற்ற - துரோகங்களைத் தூளாக்கிய - தந்தை பெரியாரின் ஈரோட்டுக் குருகுல மாணவரும், எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அறிவுறுத்திய அண்ணாவால் அரசியல் பாசறையின் தளபதியாக உயர்த்தப்பட்டவருமான மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று ஒரு வரி சுய விமர்சனம் செய்து கொண்ட நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்பற்றி உடல் நலத்தின்மீதான கவலை, ஆர்வம் உலகெங்கும் வாழும் கோடானு கோடி தமிழர்களின் நல்லெண்ணம், விழைவைப் பெற்று, நல்ல வண்ணம் சீராகி வருகிறது!

வைதீக மூடநம்பிக்கைகளைத் திணிக்காதீர்!

கட்சி, ஜாதி, மதம், மாநிலம், கொள்கை இவைகளை யெல்லாம் தாண்டி - அந்த வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதநேயத்துடன், கலைஞர் உடல்நலம் தேறிவர வேண்டுமென்று விழையும் நல்ல உள்ளங்கள் கோடானு கோடி!

தி.மு.க.வின் செயல் தலைவர் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது பண்பாடு மிகுந்த - மாற்றுக் கட்சி, மாற்று கருத்துடையவர்களையும் அன்புடன் வர வேற்று அனுப்பி - மருத்துவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய உடல்நலம் சீராகி வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நமது கொள்கை எதிரிகள் - வைதீக மூடநம்பிக்கைக்கு - கலைஞரால் ஏற்க முடியாததை - நுழைத்துவிடும் - சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும்'' முயற்சியில் ஈடுபட்டு விடுவார்கள். எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நோய்க் கிருமிகளை எதிர்த்து அவர் போராடுகிறார்; மூடநம்பிக்கைக் கிருமிகளும் உள்ளே நுழைய யாவரும் வழிவகுத்து விடக்கூடாது.

அதற்கு பகுத்தறிவு இயக்கமான தி.மு.க. - தலைவரின் விருப்பங்கள், கொள்கைகள், விழைவுகளுக்கு முற்றிலும் மாறான செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு விடக்கூடாது.

நம் இன எதிரிகளுக்கு இடம் கொடுத்திடக் கூடாது

நம் இன எதிரிகளும், கொள்கை எதிரிகளும் அதைப் பயன்படுத்திக்கொண்டு, இயக்க வளர்ச்சிக்கு இளைஞர் கள் மத்தியில் கேடு செய்வார்கள் - அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது!

அ.தி.மு.க. தலைவி மருத்துவமனையில் இருந்தபோது நிகழ்ந்த மூடநம்பிக்கைக் கூத்துக்கள் தி.மு.க.விலும் நுழைத்துவிட சிலர் முயன்றுவிடக்கூடும்.

மருத்துவமனை முன்பு யாரோ ஒருவர் பூசணிக்காய் சுற்றி படைத்ததைத் தொலைக்காட்சியில் கண்டு வேதனை அடைந்தோம். அதைவிட வருந்தத்தக்க செய்தி - தமிழ் இந்து'  நாளேட்டில், கூட்டுப் பிரார்த்தனை என்பதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் சகோதரர் தா.மோ.அன்பரசன் அவர்களும், அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி அவர்களும்அமர்ந் துள்ள படம் வந்துள்ளது கண்டோம். வேதனை அடைந் தோம்.

நம்பிக்கையாளர்களோடு தி.மு.க. பொறுப்பாளர்களும் சேர்ந்திட வேண்டாம்!

ஏற்பாடு செய்தவர்கள் மதநம்பிக்கையாளர்கள் ஆக இருக்கலாம்; அதனை அவர்கள் நடத்திக் கொள்ளட்டும். நமது தி.மு.க. பொறுப்பாளர்கள் தாட்சண்யம் கருதியோ, அழைத்ததைத் தட்ட முடியாது என்ற பண்பு காரண மாகவோ சென்றிருக்கக் கூடும்.

என்றாலும், இது ஒரு பரவலாக ஒரு தொற்று வியாதி போல் பல இடங்களிலும் பரவக் கூடும்; அதைத் தவிர்த்தல் அவசியம் - தேவை!

கலைஞர் உடல்நலத்தோடு இருந்தால் கழக முக்கியப் பொறுப்பாளர்கள் இத்தகைய ஏற்பாடுகளில் கலந்து கொள்வதை ஏற்கமாட்டார்.

மானமிகு கலைஞரை மதிப்பது என்பது அவரது கொள்கையை மதிப்பதே!

எவ்வளவுதான் வாக்கு வங்கி அரசியல் என்றாலும், கொள்கைக்கே முன்னுரிமை தருபவர்  நமது மானமிகு கலைஞர் என்பது அவரை நெருக்கமாக அறிந்த நமக் கும், ஏன் எல்லோருக்குமே தெரியும். கலைஞரை மதிப்பது என்பதை - அவர் கொள்கையை மதிப்பதில் காட்டுவதே சரியானது.

எனவே தாய்க் கழகத்தின் உரிமையின் பாற்பட்ட வேண்டுகோளாக அந்த சகோதரர்களுக்கு நாம் இதனை வைக்க விரும்புகிறோம்.

சிறீரங்கத்தில் தளபதி நடந்து காட்டினாரே!

சிறீரங்கம் சென்றிருந்தபோது தளபதி மு.க.ஸ்டாலின் நெற்றியில் வைக்கப்பட்ட பொட்டை அங்கேயே, அப் பொழுதே அழித்ததானது - அவரது கொள்கை உணர்வின் பளிச்சென்ற வெளிப்பாடு! Spontaneous reaction இயல்பானது! கொள்கையாளர் மத்தியில் அவரை அது உயர்த்தியுள்ளது.

எனவே, கலைஞரின் உடல்நலம் மருத்துவர்களாலும், பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோடானு கோடி தொண்டர்களின், தோழர்களின் விழைவு, வாழ்த்துகள் உளமாற உண்டு!

தி.மு.க.வினர் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும்!

இந்த நேரத்தைப் பயன்படுத்தி பிரார்த்தனை, சடங் குகள், சம்பிரதாயங்கள் என்ற மூடநம்பிக்கைகளில் யாரா வது ஈடுபட்டால், அதைத் தடுக்க இயலாவிட்டாலும், கலந்து கொள்வதையாவது தவிர்க்கவேண்டும் என்று தி.மு.க. பொறுப்பாளர்களை, தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்றபடி அவ்விருவரும் நம்மால் பெரிதும் நேசிக் கப்படக் கூடிய சகோதரர்கள் - நல்ல இயக்கப் பணிச் செம்மல்கள்தான். எனவேதான் உரிமையுடன் சுட்டிக் காட்டுகிறோம். தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம்.

நமது கொள்கை உணர்வுகளை எதிரிகள் கொச்சைப் படுத்திட ஒருபோதும்  இடந்தந்துவிடக் கூடாது என்பது முக்கியம் அல்லவா!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

30.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner