எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும்!

நாட்டின்  மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கது. திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை (16.8.2018) நடைபெறும் போராட்டம் எழுச்சி யுடன் நடைபெறட்டும்  என்று  திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக மிகக்குறைந்த அளவிலேயே உள்ளனர். மாநிலங்கள் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் குறித்த புள்ளிவிவரம் அளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் கோரப்பட்டது. அதன்படி, மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள் என இடஒதுக்கீட்டின்படி நியமிக்கப்பட வேண்டிய விகிதாச்சாரத்தில் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை எனும் விவரம் தெரிய வந்துள்ளது.

அதன்படி 11 மாநிலங்கள் அளித்த தகவலின்படி, இந்திய மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ள விகிதாச்சாரத்தைவிட மிகக்குறைந்த அளவிலேயே 12 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும், 14 விழுக்காட்டுக்கும் குறைவாக தாழ்த்தப் பட்ட வகுப்பினரும், சுமார் 12 விழுக்காட்டளவில் பழங்குடி வகுப்பினரும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2011 புள்ளி விவரம் என்ன கூறுகிறது?

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிவரங் களின்படி, தாழ்த்தப்பட்டவர்கள் 16.6 விழுக்காட்டளவிலும், பழங்குடி வகுப்பினர் 8.6 விழுக்காட்டளவிலும் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பணியிடங்களில் இட ஒதுக்கீட்டு முறையை முழுமையாக கடைப்பிடிக்காத காரணத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் போதுமான எண்ணிக்கை யில் பணிநியமனம் செய்யப்படவில்லை.

கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதிகளாக 16,693 நீதிபதிகள் தற்போது பணியாற்றிவருகின்றனர். 11 மாநிலங்களில் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள் எண்ணிக்கை 3,973. இடஒதுக்கீடு பின்பற்றப்படுகின்ற மாநிலங்களிலிருந்தே புள்ளிவிவரங்கள் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப் பப்பட்டுள்ளன.

நீதித்துறையில் பெண்களின் பரிதாப நிலை!

அடுத்தது பெண்களுக்கு அளிக்கப்படுகின்ற இட ஒதுக்கீடு முக்கியமானதாகும். ஏற்கெனவே ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, கீழமை நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தாக 28 விழுக்காட்டளவில் பெண் நீதிபதிகள் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 10 விழுக்காட்டளவிலும், உச்சநீதிமன்றத்தில் 4 விழுக் காட்டளவிலும் பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர். பெண் கள் நீதிபதிகள் என்பதில்கூட உயர்ஜாதிப் பெண்களே ஆக்கிரமிக்கும் நிலையும் உள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மகாராட்டிரா போன்ற பெரிய மாநிலங்களில் நீதிபதிகள் நியமனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீடுகுறித்த தகவல்கள் வெளி யாகவில்லை. இன்னும் சில மாநிலங்களால் அளிக்கப்பட்ட விவரங்களும் தெளிவில்லாமல் உள்ளன.

2011 ஆம் ஆண்டு புள்ளி விவரம் என்ன சொல்லுகிறது?

2011 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 21 உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 850. இதில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் எண்ணிக்கை 24 பேர் மட்டுமே! மற்றொரு முக்கிய கொடுமை 14 உயர்நீதிமன்றங்களில் ஒரே ஒரு நீதிபதிகூட தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை என்பது எவ்வளவுப் பெரிய சமூக அநீதி?

(நீதிமன்றங்களில் நீதிபதிகள் எண்ணிக்கைபற்றிய தகவல்கள் பெரும்பாலும் இருட்டறையில்தான் உள்ளன).

நான்கு தூண்கள் என்று கூறப்படுவதில் ஒன்றான நீதித் துறையில் நீதிபதிகள் நியமனத்தில் காலம் காலமாக வாய்ப்பு மறுக்கப்படும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர்களுக்கும், பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால், இங்கே சமூகநீதி மறுக்கப்படுவதாகத்தான் பொருள். நீதித்துறையிலும் சமூகநீதி இட ஒதுக்கீடு தேவை என்ற நமது தொடர் குரலில் உள்ள நியாயம் இப்பொழுது புரிகிறதா - இல்லையா?

தாழ்த்தப்பட்டவர் ஒருவர்கூட தலைமை நீதிபதியாக இல்லை

கடந்த 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்றங்களில் பணி யாற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்து வழக்குரைஞர்களுக்கு நீதிபதிகளாக இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. நாட்டில் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட தலைமை நீதிபதியாக பணியாற்றியது இல்லை.

கடைசியாக 2010 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பால கிருஷ்ணன் ஓய்வு பெற்றதுடன் சரி. அதன்பிறகு அப்பதவிகளுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் யாரும் நியமனம் செய்யப்படவில்லை

முந்தைய மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்ப் பட்டியலை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்து அனுப்பி இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அழுத்தமும் நின்றுபோய்விட்டது.  ஆகையால் உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட நீதிபதிகள் யாருமே இல்லாத நிலை உருவாகிவிட்டது.

கருநாடக மாநில அரசின் தீர்மானம் 27.8.2017

நாட்டில் உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டுமானால், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன் றங்களில் நீதிபதிகள் நியமனம் செய்யும் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப் பினரை தேர்வு செய்ய வசதியாக இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது உள்பட 41 தீர்மானங்கள் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

கமிட்டிகள் கூறியது என்ன?

கரியமுண்டா கமிட்டி (2000 ஆண்டு), சுதர்சன நாச்சியப்பன் கமிட்டி (2007 ஆம் ஆண்டு)களின் பரிந்துரைகள் இதுவரை செயல்பாட்டுக்கே வரவில்லை. செயல்பாடு இருந்திருக்குமானால், சமூகநீதிக் கொடி உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் பறந்திருக்கும். நமது போராட்டத்துக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது.

உச்சநீதிமன்றத்தில் இன்று 31 நீதிபதிகள், அதில் ஒருவர் கூட (எஸ்.சி., எஸ்.டி.,) தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி இல்லை.

பிற்படுத்தப்பட்டவர் எண்ணிக்கையோ ஊறுகாய் போல் ஏதோ ஒன்று!

இதுதான் நிலை!

ஒரு புள்ளி விவரம் - பெரும் அதிகரம் படைத்த உச்சநீதிமன்றம் யாருடைய ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டாகும். (புள்ளி விவரம் அருகே காண்க).

இந்தியாவில் உச்சகட்ட அதிகார மய்யமான உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லையென்றால், அது என்ன ஜனநாயகம் - சுதந்திரம்? நாளை மாவட்டத் தலைநகரங்களில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

15.8.2018

குறிப்பு: இதே காரணத்திற்காக 19.2.2015 அன்று சென்னையிலும், மதுரையிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்பதும் நினைவூட்டப்படவேண்டிய ஒன்று.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner