எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அவர்களின் பண்பாடு

வாஜ்பேயி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற அக்னிவேஷ் இந்துத்துவாவாதிகளால் தாக்கப்பட்டுள்ளார்; பெண்கள்கூட செருப்பால் அடித்துள்ளனர். இந்த நிகழ்வு வீடியோவாக உலா வருகிறது.

(சாவு வீட்டில்கூட காவி வெறியர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் பார்த்தீர்களா? இதற்குப் பெயர்தான் இந்துத்துவா!)

மாணவன் கொலை

திருவள்ளூரைச் சேர்ந்த அப்துல்கலாம் என்ற மாணவன், சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண் டிருந்தபோது ஏற்பட்ட சச்சரவால் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக 5 மாணவர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

(குடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்த மாணவன், ஆசிரியயைக் கத்தியால் குத்திய மாணவன் என்று தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டுள்ளனவே - நம் நாட்டுக் கல்வி முறையில் உரிய மாற்றம் தேவை. மனப்பாட மார்க்குக் கல்வியைவிட மனப்பண்பு கற்பித்தல் அவசியம்).

பேரறிவாளன் மனு

ராஜீவ் கொலை தொடர்பாக சி.பி.அய். விசாரணைக் குழு இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிடம் சில முக்கிய விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக இந்த விசாரணைக் குழு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ள சூழ்நிலையில், இந்த விசாரணை முடியும்வரை தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

(ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், விசாரணை செய்த சி.பி.அய். அதிகாரி எஸ்.பி.தியாகராசன் ஆகியோர் விசாரணை சரியாக நடத்தப்படவில்லை - குறைபாடு உள்ளது என்று சொன்ன பிறகும், தூக்குக் கயிறு தொங்கவிடப்பட்டு விட்டது -  வேறு வழியில்லை, அதில் மாட்டித்தான் தீரவேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்?)

யாகம் என்பது இதுதானா?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த புரேகிதர் சங்கர நாராயணன், காளியம்மன் கோவில் விழாவில் யாகப் பூஜை நடத்திக் கொண்டிருந்தபோது, அவருக்கு உதவியாக இருந்து செயல்பட்ட புரோகிதரின் மகன் வெங்கடேஷ் (வயது 19) மின்சாரம் பாய்ந்து யாகக் குண்டத்தில் தவறி விழுந்ததால், உயிரிழந்தார்.

(வருத்தப்பட வேண்டிய ஒன்றே! அதேநேரத்தில், ஒன்றை நினைக்கவேண்டும். இந்தக் கடவுள், யாகம், பூஜை எல்லாம் சுத்த வெத்து வேட்டு - வீண் வேலை. அவை களுக்குச் சக்தியும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது என்று உணரவேண்டாமா?)

ஏன் கூடாது?

கல்லூரியில் காலி இடம் இருந்தாலும், குறைந்த மதிப் பெண் வாங்கியவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்பக் கூடாது என்று தீர்ப்புக் கூறியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

(ஆகா! எவ்வளவுத் தாராள மனப்பான்மை! குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் கல்லூரியில் சேர்ந்து தேர்வில் வெற்றி பெற்றால்தானே டிகிரி கிடைக்கும்? பிளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கிய ஒரு மாணவன் பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண் பெறமாட்டான் என்று சட்டம் உள்ளதோ!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner