எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி கரை புரண்டு ஓடுகிறது. நீண்ட இடவெளிக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. காவிரி நதிக்கரை  ஒட்டி வாழும் குடி மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு முன்னறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.

கொள்ளிடம் கரையோரம் உள்ள ஏழு கிராமங்கள் தண்ணீரில் சூழ்ந்து தந்தளிக்கின்றன.  மூன்று நாள்களுக்கு முன் கீழணையில் 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேலும் பல கிராமங்களுக்குள் நீர்ப் புகுந்தது. கடந்த ஞாயிறு மாலை கீழணையில் 2 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இதுவரை இல்லாத அளவுக்குக் கொள்ளிடம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் அசரநல்லூரில் பழைய கொள்ளிடம் ஆற்றின் கரையில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் மேலும் பல கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு புயல் பாதுகாப்பு மய்யங்கள், திருமண மண்டபங்கள், அரசுப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலையில் கீழணையிலிருந்து 3 லட்சம் கன அடிதண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் சிதம்பரம் அருகில் மேலும் பல கிராமங்கள் தத்தளித்துக் கொண் டுள்ளன. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இப்படியெல்லாம் ஒருபுறம் செய்திகள் வந்து கொண் டிருக்க மறுபுறம் வரும் செய்திகள் அதிர்ச்சியையூட்டு வனவாக உள்ளன. இன்னும் சில பகுதிகளில் கடை மடைவரை தண்ணீர் வந்து சேரவில்லை என்பதுதான் அந்தத் துயரச் செய்தியாகும்.

குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களிலும், ஏரிகளிலும் தண்ணீர்ப் போய்ச் சேரவில்லை, வாய்க்கால்களிலும் தண்ணீர் அறவே கிடையாது.

வடுவூர் தொடங்கி உள்ளிக்கோட்டை, பாவாக் கோட்டை, திருமக்கோட்டை பகுதிகளிலும் கோட்டூர்ப் பகுதியில் விக்கிரவாண்டியம் இருள் நீக்கி பகுதிகளிலும் வலங்கைமான் பகுதியில் உபரி வாய்க்காலிலும் கொரடாச் சேரி பகுதியில் 18 வாய்க்காலிலும்  மற்றும் திருத் துறைப்பூண்டி பகுதிகளிலும் தண்ணீர் சென்றடையவில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவிரியின் கிளை ஆறு களான வீரசோழன் ஆறு, மஞ்சளாறு, மானங்கொண்டான் ஆறு ஆகியவற்றில் இன்னும் கடைமடை வரை நீர் வரத்து இல்லை. இதற்கான காரணம் என்ன? கருநாடக அரசு ஒரு பக்கத்தில் திட்டமிட்டுத் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்றால், இன்னொரு பக்கத்தில் தமிழ்நாடு அரசு வேறு வகையில் வஞ்சித்து வருகிறதா?

அதுதான் தூர்வாருதல் என்ற முக்கிய பணி முற்றிலுமாக முடக்கப்பட்டு விட்டது. பொதுவாகக் கோடைக் காலங் களில் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் தூர்வாறும் பணி திட்டமிட்ட வகையில் போர்க்கால அடிப்படையில் இந்த அடிப்படையான வேலைகள் முடுக்கி விடப்படும்.

ஆனால் அஇஅதிமுக ஆட்சியில் இந்தப் பணி கண்டு கொள்ளப்படாததுதான் கடைமடை வரை காவிரி நதி நீர் சென்று அடையாததற்கான விழுமிய காரணமாகும்.

தண்ணீர் திறந்து விடப்பட்ட பிறகு அவசர அவசரமாக சில இடங்களில் தூர்வாருவது கடைந்தெடுத்த நகைச் சுவையே.

இன்னொரு கொடுமையையும் சுட்டிக் காட்டாமல் இருக்கவே முடியாது. ஒவ்வொரு வருடமும் 'காவிரிக்கு தண்ணீர் விடுக தண்ணீர் விடுக' என்று கருநாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்திக் கொண்டிருக் கிறோம். போராட்டங்களை நடத்திக் கொண்டும் இருக் கிறோம். நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகள்மீது நடந்து சென்று கொண்டு நீதிமன்றத்தின் கருணைக் கண்களுக்காக ஏங்கிக் கொண்டுள்ளோம்.

கருநாடகத்திலிருந்து திறந்து விடப்படும் நீர் கல்லணைக்கு வருகிறது. அங்கிருந்து காவிரி வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. காவிரி, கொள்ளிடம் நதிகள் திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி வழியாக பழையாறு கடல் முகத்துவாரம் சென்று கடலில் கலக்கிறது.

இதேபோல் கல்லணையாறு, நீடாமங்கலம், மூன்று தலைப்பு,கோரையாறு திருத்துறைப்பூண்டி, மன்னார்க்குடி பகுதிகள் வழியே கடலில் வீணாகச் சங்கமமாகிறது.

90 டி.எம்.சி. நீர் கடலில் வீணாகக் கலக்கிறது.

இப்படி வீணாக கடலில் கலக்கும் நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் இல்லாதது ஏன்? நிதிப் பற்றாக்குறையா? அல்லது நீர் மேலாண்மைப் பற்றிய அறிவில் பற்றாக் குறையா?

கருநாடகமோ சட்டத்துக்கு மாறாக அணைகளைக் கட்டிக் கொண்டு திரிகிறது.

தமிழ்நாட்டிலே மழைநீரைத் தேக்கி வைப்பதிலும் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் முனைப்பின்றிக் கடலில் கலக்க விடுகிறோமே இது என்ன நியாயம்! பொறுப்பற்ற தன்மை என்பதை விட வேறு என்ன காரணம் கூற முடியும்?

மக்களிடத்தில் விழிப்புணர்வும், மத்திய மாநில அரசு களிடத்தில் திட்டமிடும் மனப்பான்மையும் இல்லாததே இந்நிலைக்குக் காரணமாகும் வெட்கக் கேடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner