எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்களின் கைது கண்டிக்கத்தக்கது

2019 தேர்தலில் பா.ஜ.க. - காவி சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டவேண்டும்!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்களையும் கைது செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும்,  மத்திய  பா.ஜ.க. ஆட்சியின் முடிவு காலம் நெருங்கிவிட்டது. பிரச்சாரப் புயல் நாடெங்கும் சுழன்றடிக்க வேண்டும். 2019 தேர்தலில் பா.ஜ.க. - காவி - சர்வாதிகாரத்துக்கு ஒரு முடிவு கட்டப்படவேண்டும்  என்றும்   திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை  வருமாறு:

மகாராட்டிர மாநிலம் - புனே அருகில் உள்ள பீமா கோராகான் என்ற பகுதி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வீரம் செறிந்த ஒரு போருக்கான அடையாளக் கல்வெட்டாகும்.

28 ஆயிரம் பார்ப்பன பேஷ்வாக்களின் படையை எதிர்த்து...

வெள்ளையர் ஆட்சியின்போது அதன் இராணுவத்தின் 28 ஆயிரம் பார்ப்பன பேஷ்வாக்களின் படையை எதிர்த்து எண் ணிக்கையில் 800 பேர் கொண்ட மகர்கள் (தாழ்த்தப்பட் டோர்) பட்டாளம் போரிட்டு வென்றது (1818, ஜனவரி முதல் தேதி).

வெள்ளைக்காரர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல அது; பேஷ்வா என்னும் பார்ப்பனீய ஆட்சியின்  தீண்டாமைக் கொடு மைக்கு எதிரான தன்மானப் போராட்ட வெளிச்சம் அது!

அந்தப் போரில் தாழ்த்தப்பட்டவர்களும் பலியானார்கள். அதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் நாளன்று வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர் தலித் மக்கள்.

இவ்வாண்டு இரு நூறாம் ஆண்டு என்ற முக்கியத்துவம் பெறுவதால், கடந்த ஜனவரி முதல் தேதியன்று பெரும் எண் ணிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.

வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது

இரு நூறு ஆண்டுகால வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியில், சமஷ்த் ஹிந்து அகாதி என்னும் சங் பரிவார்க் கும்பலுடன் கைகோத்து உயர்ஜாதி ஆதிக்கக் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. வாகனங்களை எரித்தனர். ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் கொல்லப்பட்டார்.

மகாராட்டிர மாநில பி.ஜே.பி. அரசோ எய்தவர்களை விட்டு விட்டு, தலித் உரிமை செயல்பாட்டாளர்களான சுதிர் தாவ்லே, சுரேந்தர் கட்லிக், மகேஷ் ரெவுட், ஷோமாசென், ரோனா வில்சன் ஆகியோரை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது.

அதோடு பி.ஜே.பி. அரசின் செயல்பாடு நின்றுவிடவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி எழுத்தாளர்களையும் கைது செய்துள்ளது.

மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரபல எழுத்தாளர்களான பி.வரவரராவ், கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வெர்னான் கன்சல்வெஸ், அருண் பொரைரா ஆகியோர் இப்பொழுது கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்காகத் திட்டம் தீட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டு இவர்கள்மீது.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனித உரிமையாளர்கள்மீது பழி சுமத்தி கைது செய்யப்பட்டிருப்பது அறிவார்ந்த மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருந்ததிராய், இந்திரா ஜெய்சிங் போன்றோர் கண்டனக் குரலை எழுப்பியுள்ளனர். நெருக்கடி நிலைப் பிரகடனம் போன்ற நடவடிக்கை இது என்று அருந்ததி ராய் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால், அவரையும் கூடக் கைது செய்திருப்பார்கள் என்கிறார் வரலாற்று அறிஞர் இராமச் சந்திர குகா.

அய்ந்து பேர் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல்

புனே காவல்துறையின் அடக்குமுறையையும், அடாவடித்தன மான கைது நடவடிக்கைகளையும் எதிர்த்து பிரபல வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பார், பொருளாதார வல்லுநர்கள் பிரபாத் பட்நாயக், தேவிகா ஜெயின் உள்ளிட்ட அய்ந்து பேர் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர் என்றால்,  இதன் முக்கியத்துவத்தை எளிதில் உணரலாம்.

காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையான கணைகளை வீசியிருக்கிறார். சி.பி.எம். தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, லாலு பிரசாத் போன்றோர் கண்டித்துள்ளனர்.

காங்கிரசு தலைவர் ராகுலின் குமுறல்!

ஆர்.எஸ்.எசை மட்டும் விட்டுவிட்டு மற்ற மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களையெல்லாம் இழுத்து மூடிவிடுங்கள். அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும் சுட்டுத் தள்ளி விடுங்கள், யார் யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ, அவர் களையெல்லாம் சுட்டுத் தள்ளுங்கள்' என்று குமுறியிருக்கிறார் ராகுல் காந்தி.

தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டு மகாராட்டிர மாநில அரசு மற்றும் மாநிலக் காவல்துறைக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஆறுதல் தரும் செய்தி!

உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பச் சொல்லி உத்தரவிடவில்லை. செப்டம்பர் ஆறு வரை அவர்களை வீட்டுக் காவலில் வைக்குமாறு கூறிய உச்சநீதி மன்றம் முக்கியமாக ஒரு கருத்தையும் கூறியுள்ளது.

மாறுபட்ட கருத்துரிமையே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண் (Safety Volve) அதனை அனுமதிக்காவிட்டால், அது ஆபத்துக்கு வழிவகுக்கும்' என்று கூறியிருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது.

பசு பாதுகாப்பு என்ற பெயரால் நாட்டில் நடக்கும் வன்முறை கள் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான கொலை வெறித் தாக்குதல்கள் - அதில் சம்பந்தப்பட்ட காவித் தீவிரவாதிகள் பக்கம் பி.ஜே.பி. அரசின் கண்கள் செல்வதில்லை.

இதே மகாராட்டிர மாநிலத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இதற்குக் காரணம் முசுலிம்கள் என்று முதலில் செய்தி பரப்பி, பலரையும் கைது செய்த நிலையில், ஹேமந்த் கர்கரே என்ற புலனாய்வுத் துறை அதிகாரியின் தலைமையிலான குழு உண்மைக் குற்றவாளிகளைக் கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்தவில்லையா?

படுகொலை செய்யப்பட்டது எப்படி?

முன்னாள் இராணுவ அதிகாரி சிறீகாந்த் புரோகித், அபிநவ் பாரத்தின் (ஆர்.எஸ்.எஸ். இளைஞர் அமைப்பு) பொறுப் பாளரான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், அசீமானந்தா என்ற சாமியார்கள்தான் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்த ஹேமந்த் கர்கரே, விஜய சாலங்கர், அசோக் சாம்டே ஆகியோர் மர்மமான' முறையில் படுகொலை செய்யப்பட்டது எப்படி?

எஸ்.எம்.முசரப் உசேன் (மும்பை மேனாள் காவல்துறை அய்.ஜி.), Who Killed Karkare என்ற நூலில் கொலையாளிகள் யார் என்று ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்திய பிறகும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?

கொலை வழக்கில் சிறைக்குச் சென்று பிணையில் வரும் இந்துத்துவாவாதிகளை மாலை போட்டு வரவேற்பதற்குப் பா.ஜ.க. அமைச்சர்கள் வெட்கப்படுவதில்லை.

பி.ஜே.பி. அதிகார பீடத்தில் அமர்ந்த நாள் தொடங்கி சட்டத் தைக் கையில் எடுத்துக்கொள்ளும் அறிவிக்கப்படாத அதிகாரம் காவிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது எல் லோருக்கும் தெரிந்த பச்சையான உண்மை.

மத்திய ஆட்சியின் முடிவு காலம் நெருங்கிவிட்டது

அறிவார்ந்த மக்கள், பொதுநலச் சான்றோர் பெருமக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்லியிருப்பதுபோல, அறிவிக்கப் படாத நெருக்கடி நிலைக்குப் பெயர்தான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி. அரசு.

ஆட்சியின் முடிவு காலம் நெருங்கிவிட்டது. பிரச்சாரப் புயல் நாடெங்கும் சுழன்றடிக்க வேண்டும். 2019 தேர்தலில் பா.ஜ.க. - காவி - சர்வாதிகாரத்துக்கு ஒரு முடிவு கட்டப்படவேண்டும்.

வாக்காளர்கள் இதில் உறுதியாக இருக்கவேண்டும். பி.ஜே.பி.யோடு கூட்டு சேர தமிழ்நாட்டில் எந்த கட்சியாவது முன்வந்தால், அவர்களும் ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் நரி கதையாகவே ஆகும் நிலை - எச்சரிக்கை!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

30.8.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner