எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நீட்' தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது தானா?

கடந்த ஆண்டு 'நீட்' தேர்வில் தமிழில் எழுதியோருக்கு அளிக்கப்பட்ட வினாத்தாளில் 49 கேள்விகள் தவறானவை என்ற காரணத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்சநீதி மன்றம் சென்றனர். அதற்காகக் கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தொடக்க முதலே குழப்பம்! குழப்பம்!!

'நீட்' தேர்வு என்பது தொடக்க முதலே குழப்பத்தின் மொத்த உருவமாகவே இருந்து வருகிறது. குஜராத் மாநில முதல் அமைச்சராகவிருந்த போது 'நீட்' தேர்வைக் கடுமையாக எதிர்த்த அதே நரேந்திர மோடி தான், தற்போது பிரதமராக இருக்கும் நிலையில்  - சமூகநீதிக்கு எப்பொழுதும் எதிரான ஆர்.எஸ்.எஸின் கைப்பாவையாக இருந்து 'நீட்' தேர்வை அமல்படுத்தியே தீருவதில் தீவிரமாக இருந்து வருகிறார்.

அகில இந்திய அளவில் எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதுதான் சமூகநீதி சிந்தனையாளர்களின் உறுதியான கருத்தும் - நிலைப்பாடுமாகும்.

கல்வியாளர்களும் கூறுகிறார்களே!

இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்வி முறை இல்லாதபோது, இப்படியொரு தேர்வு எப்படி நியாயமானதாக, சரியானதாக இருக்க முடியும் என்று அரசியலுக்கு அப்பாற்பட்ட கல்வியாளர்களும் கேள்வியை எழுப்பத்தான் செய்கிறார்கள். அது எதனையும் காதில் போட்டுக் கொள்ளாத - காது கேட்காத பிறவி ஊனமுற்றவர்களாக நடந்து கொள்கிறது பிஜேபி அரசு.

பல்வேறு கல்வி முறைகள் உள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் 'நீட்' தேர்வு நடத்துவது ஒரு குலத்துக்கொரு நீதிதானே?

தவறு செய்தவர்கள் மாணவர்களா?

அதிலும் தவறான கேள்விகள் வினாத்தாளில் என்பதால், அதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர்! வினாத்தாளில் தவறு நடந்தது உண்மைதான் என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறினால் - நீதிமன்றத்தின்மீதான நம்பிக்கையையே மக்கள் இழக்கும் நிலை ஏற்படாதா?

பாதிக்கப்பட்டவர்களையே தண்டிப்பது தான் உச்சநீதிமன்றத்தின் நீதியா? சட்டமா?

இதற்குமுன் இது போன்ற பிரச்சினையில் கருணை மதிப்பெண்கண் வழங்கப்பட்ட நிலையில் இப்பொழுது மட்டும் ஏன் வேறு கண்ணோட்டம்?

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?

"ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு  இரட்டைத் தாழ்ப்பாள்" என்பதுபோன்றது - சி.பி.எஸ்.இ. நிருவாகம் தெரிவித்துள்ள கருத்தாகும்.

'நீட்' தேர்வு எழுதுபவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்' என்று கூறியிருப்பது எத்தகைய போக்கிரித்தனம்?

மாநில மொழிகளில் படித்தவர்கள் இரண்டாம் தரக் குடி மக்களா? இது மிகவும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் இவ்வாண்டு 'நீட்' தேர்வு எழுதியவர்களுள் நான்கே நான்கு இடங்கள்தான் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ஒடுக்கப்பட்டோருக்குக் கதவடைப்பு!

கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு என்பதுபோல 'நீட்' தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டால் யாருக்கு வாய்ப்பு - யாருக்குக் கதவடைப்பு என்பது வெளிப்படையாகும்.

இனி மருத்துவர்கள் ஆவதுபற்றி ஆண்டாண்டு காலம் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள் கனவிலும் ஆசைப்பட முடியாது.

இடஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளைத் தாண்டியே வந்துள்ளோம்.

அனிதா நினைவு நாளில் உறுதி ஏற்போம்!

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று 'நீட்'தேர்வில்  - 700க்கு 86 மதிப்பெண்களே பெற முடிந்தது - என்ன கொடுமை! இந்த மரண அடியைத் தாங்க முடியாமல் அந்த இளம்தளிர் தற்கொலை செய்து தன் வாழ்வை முடித்துக் கொண்டது. அதன் ஓராண்டு நினைவு நாளில் (செப்.1) சமூக நீதியாளர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்;  'நீட்' எனும் சூழ்ச்சித் தடையை உடைத்தே தீருவோம்; சமூகநீதியை வென்றெடுப்போம் என்று சூளூரை ஏற்போம்.

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

1.9.2018


 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner