ஆசிரியர் விடையளிக்கிறார்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோயிலுக்குள்ளும் வெளியிலும் கடவுள் விற்பனைப் பொருளா?

கேள்வி 1: இந்தியாவில் அந்நிய ஆதிக்கத்திற்குக் காரணம் ஒற்றுமையில்லாதது தான்என்று கூறும் சங்பரிவார் - அந்த ஒற்றுமை இல்லாததற்கு காரணத்தைப்பற்றிப் பேசுவதில்லையே - ஏன்?

- ஜெ.அய்சக், படாளம்

பதில்: இந்தியாவில் ‘அந்நிய ஆதிக்கம்’ என்பதில் ‘அந்நியர் யார்?’ என்பதை முதலில் விளக்கட்டும்.

(அ)       தந்தை பெரியார் கேட்டார் ஒருமுறை: “எனது பக்கத்தில் குடியிருப்பவன் என்னைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்கிறான் - 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்தவன் என்னுடன் கை குலுக்குகிறான். இவர்களில் யார் நமக்கு அந்நியன்? - பதில் என்ன?

(ஆ) ஜாதி, மதம் மக்களைப் பிரிக்கிறதா, ஒற்றுமைப்படுத்துகின்றதா?

கேள்வி 2: இயற்கைப் பேரழிவு ஏற்படும்போது மட்டும் - எல்லாம் ஆண்டவன் செயல் என்று சொல்லப்படாதது - ஏன்?

- ம.வே.துரையரசன், புத்தகரம்

பதில்: விபத்து நடந்து சிலர் செத்து, சிலர் தப்பும்போது, “தெய்வாதீனமாக உயிர் தப்பினார்” என்ற பதில் மாதிரி இது! செத்தவர்கள் எந்த ஆதினம்?

கேள்வி 3: ஜீயரை ஏற்றுக்கொள்வார்களா சங்கராச்சாரி சீடர்கள்?

- தெ.மதன், காஞ்சிபுரம்

பதில்: அர்த்தமுள்ள ஹிந்து மதத்தில் ஸ்மார்த்தர்கள் என்ன, வடகலை, தென்கலை, பிரிவுகள் - இவர்களுள் யார் யாரை ஒத்துக் கொள்வர் - சொல்லுங்கள் பார்க்கலாம்!

கேள்வி 4: திராவிட இயக்கம் பார்ப்பனரின் ஆதிக்கத்தைச் சுட்டிக்காட்டும்போது பார்ப்பனர்கள் முசுலிம்களையும், கிறித்தவர்களையும் எதிரியாக சுட்டிக்காட்டுவது எதற்காக?

- ந.பரணிதரன், தண்டலம்

பதில்: திசை திருப்பும் திருட்டு வேலை அது!

கேள்வி 5: இந்துமதப் போக்கிரித்தனத்தை மறைக்க சமீப காலமாக ஆன்மிகம் என்பதைப் பயன்படுத்துகிறார்களே?

- அ.பொன்மொழி, கேளம்பாக்கம்

பதில்: ஹிந்து மதம் என்பது பச்சைப் பாசிசம்; ஆன்மிகம் என்பது முகமூடி! மதம் - ஆத்மா - இல்லாமல் ‘ஆன்மிகம்’ எப்படி வரும்?

கேள்வி 6: பிரார்த்தனை என்பதன் தத்துவம் என்ன?

- சி.கயல்விழி, சித்தாமூர்

பதில்: கடவுளுக்கும் பார்ப்பானுக்கும் லஞ்சம் கொடுக்கும் ஒரு ஏற்பாடு, மற்ற மதங்களை ‘மதக்குருக்களுக்கு’ என்று படியுங்கள்.

கேள்வி 7: சமீப காலமாக பாலியல் அத்து மீறல் செய்திகள் அதிகம் வருவதற்குக் காரணம் என்ன?

-ஏ.ஏ.அஜ்மல், பள்ளத்தூர்

பதில்: இளைஞர் - மாணவர்களுக்கும் - பொது மன்றங்களிலும் பாலியல் பற்றிய பொது அறிவுக் கல்வி, பொது ஒழுக்கத்தின் தேவை பற்றிய புரிதலை - விழிப்புணர்வை ஏற்படுத்தாதே முக்கிய காரணம் ஆகும்.

கேள்வி 8: முசுலிம் நாடுகளில் பெண்கள் ஓட்டுநர்களாக இருக்க அனுமதிப்பது ஒரு வகை மாற்றம் தானே?

- ஏ.பாத்திமா, தேரிழந்தூர்

பதில்: வரவேற்கத் தக்க நல்ல மாற்றம்!

கேள்வி 9: நீதிமன்றங்களில் நீதிபதிகள் சொந்த கருத்துகள் என்ற பெயரில் சட்ட விரோதமாக பேசுவது சரியா?

- வழக்குரைஞர் மு.வ.மூர்த்தி, சென்னை

பதில்: தவறானது; நீதிபதிகளுக்குக் காதும் கண்ணும் முக்கியமே தவிர, வாய் அல்ல! தேவையற்ற கருத்தை பலர் விளம்பரத்திற்காக பேசும்போக்கு விரும்பத் தக்கதல்ல.

கேள்வி 10: கடவுள் சிலைகளுக்கு மரியாதை கொடுப்பவர்கள் - சிலைகளாகவும், பொம்மைகளாகவும் செய்து விற்பனை செய்வது எந்த வகையில் சரி?

- பெ.மணியன், மதுரவாயல்

பதில்: கடவுள் கோயிலுக்குள்ளேயும் விற்பனைப் பொருள்; வெளியேயும் விற்பனை ஆகும் வெளிப்படைச் சொல்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner