உச்சநீதிமன்ற அதிரடி தீர்ப்பு! பி.ஜே.பி. தேர்தலில் போட்டியிட முடியுமா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்ற அதிரடி தீர்ப்பு!
பி.ஜே.பி. தேர்தலில் போட்டியிட முடியுமா?

கலி.பூங்குன்றன்

தேர்தல்களில் ஜாதி, மதம் ஆகிய வற்றின் அடிப்படையில் வாக்குகளைக் கோருவது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஊழல் நடவடிக்கை என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சாந்தாகுருஸ் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் கடந்த 1990 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அபிராம் சிங். அவர் மதத்தின் பெயரால், வாக்குச் சேகரித்ததாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது என்றும் அந்த மாநில உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அபிராம் சிங் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரைக் கொண்ட அமர்வு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3)ஆவது பிரிவு தொடர்பாக அபிராம் சிங் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டிருப் பதை சுட்டிக்காட்டி, அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைத்தது.

இதேபோன்று, மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்ததாக பாஜக நிர்வாகி சுந்தர்லால் பட்வாவுக்கு எதிராக நாராயண் சிங் என்பவர் தொடுத்திருந்த மனுவும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த 5 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில், அபிராம் சிங்கின் மனுவும் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதேபோன்ற பிற மனுக் களோடு சேர்த்து, அபிராம் சிங்கின் மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் அனைத்து மனுக் களையும், 7 நீதிபதிகள் கொண்ட அமர் வுக்கு மாற்றியும் அவர்கள் உத்தரவிட் டனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, மதம், ஜாதி முதலியவற்றின் அடிப்படையில் வாக்குகளை கேட்பது அல்லது அதன் அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுப்பது, ஊழல் நடவடிக்கை என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தெரி விக்கப்பட்டிருக்கும் சரத்து மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைத்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், எம்.பி. லோக்குர், எஸ்.ஏ. பாப்தே, எல்.என். ராவ், யு.யு. லலித், ஏ.கே. கோயல், டி.ஒய். சந் திரசூட் ஆகிய 7 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை 2.1.2017 அன்று அளித்தது. அந்த 7 நீதிபதிகளில் டி.எஸ். தாக்குர், எம்.பி.லோக்குர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என். ராவ் ஆகிய 4 நீதிபதிகள் ஒரு கருத்தையும், நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் மற்றோர் கருத்தையும் வெளியிட்டனர்.

அதாவது டி.எஸ். தாக்குர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் கூறியபோது, மக்கள் பிரதிநிதித் துவ சட்டத்தின் 123(3)ஆவது பிரிவில் ‘அவரது மதம்’ என்று தெரிவிக்கப்பட்டி ருப்பது, வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் உள்ளிட்ட அனைவ ருக்கும் பொருந்தும் என்று தெரிவித்தனர். அதாவது, இந்துத்துவா தொடர்பாக கடந்த 1995 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப் பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3)ஆவது பிரிவில் ‘அவரது’ என்று தெரிவிக்கப்பட்டிருப்பது, வேட்பாளரின் ஜாதி, மதம், மொழி, இனத்தையே குறிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, வேட்பாளர்கள் மட்டுமல்ல, முகவர்கள், வாக்காளர்களுக்கும் இவை பொருந்தும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறிய தாவது:

தேர்தல் என்பது மதச்சார்பற்ற நட வடிக்கை! அதில் மதம், ஜாதி, சமூகம் அடிப்படையில் வாக்குகளைக் கோர முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட் டத்தின் 123(3)ஆவது பிரிவில், அது ஊழல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள் மற்றும் இறைவனுக்கு இடையேயான உறவு என்பது, தனிநபர்களின் விருப்பு வெறுப்பு தொடர்புடையது. மதத்தை நாட்டோடு தொடர்புபடுத்தக் கூடாது. அதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமளிக்கப்படவில்லை.

யார் வேண்டுமானாலும் எந்த மதத் தையும் பின்பற்றவும், அதுதொடர்பான பிரச்சாரத்தில் ஈடுபடவும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலில் அதைப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

3 நீதிபதிகள் கருத்து

யு.யு.லலித், ஏ.கே. கோயல், டி.ஒய். சந்திரசூட் ஆகிய 3 நீதிபதிகளும், 123(3) ஆவது பிரிவில் ‘அவரது மதம்’ என்று குறிப் பிடப்பட்டிருப்பது வேட்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, 7 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகளின் கருத்து பெரும்பான்மை யானதாக இருந்ததால், அது தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரை வில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் உத்தரப்பிரதேச தேர்தலின்போது ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்டவை எழுப் பப்படுவது வழக்கம். இதேபோன்று பஞ்சாப் தேர்தலிலும் மதம் தொடர்பான விவ காரங்கள் பிரசாரத்தில் முன்வைக்கப்படும்.

இந்நிலையில், மதம், ஜாதி முதலிய வற்றை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படு கிறது.

(By DIN | Published on:
3rd January, 2017)

இந்தத் தீர்ப்பு வெளிவந்த இந்தக் காலகட்டத்தில் மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பி.டி.அய். செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ‘‘நடக்கவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ராமர் கோவில் கட்டுவதை முன்னிறுத்தாது’’ என்று பின்வாங்கி விட்டது குறிப்பிடத் தக்கதாகும். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.

இந்தத் தீர்ப்பு ஒன்றும் புதிதானதல்ல. ஏற்கெனவே இரு முக்கிய தீர்ப்புகள் மதவாத சக்திகளின் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்ததுபோல வந்துள்ளன.

மதத்தை தேர்தல் பிரச்சாரத்தின்முன் வைத்து வெற்றி பெற்ற இருவருடைய வெற்றி செல்லாது என்று கறாராகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மும்பை மாநிலம் தானே மக்களவைத் தொகுதியிலிருந்து பி.ஜே.பி. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்கப்சே.

இவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல் வியைச் சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஹர்பன்ஸ்சிங்தாஸ் அந்த வழக்கைத் தொடர்ந்தவர்.

விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த மதவெறிப் பேச்சாளர் சாத்வி ரிதம்பரா என் பவரும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமோத் மகாஜனும் பி.ஜே.பி. வேட்பாள ருக்கு ஆதரவாக (21.5.1991) அன்று விசுவ இந்து பரிசத் ஏற்பாடு செய்த தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில் இந்து மத அடிப்படை யில் வாக்குகள் கேட்டார்கள்.

பி.ஜே.பி. வேட்பாளர் - ராம்கப்சேயும் அந்த அடிப்படையிலேயே வாக்கு சேக ரித்தார். இந்துக்களுக்கு முஸ்லிம்கள் பகை வர்கள் என்கிற அளவுக்கு அவர்களின் பிரச்சார நாக்கு நீண்டது.

இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அகர்வால் மக்கள் பிரதிநிதித் துவ சட்டப்பிரிவு 123(3)-க்கு இது எதிரானது என்று கூறி பி.ஜே.பி. வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தீர்ப்பினை வழங்கினார்.

‘‘இந்துக்களும், முஸ்லிம்களும் நண்பர்களாக வாழும் நிலையில், இரு சமூகத்தினருக்கிடையில் பகை மையை உருவாக்கும் வகையில் சாத்வி ரிதம்பராவும், மகாஜனும் கூட்டு சேர்ந்து கொண்டு மதவெறியைக் கிளப்பிவிட் டிருக்கிறார்கள். அதற்கு வேட்பாளரும் துணை போயிருக்கிறார்’’ என்று நீதிபதி அகர்வால் தன் தீர்ப்பில் எடுத்துக்கூறி தேர்தல் வெற்றி செல்லாது என்று கூறி விட்டார்!

கேரள மாநிலத்தில் கிறித்துவ மதத்தை முன்னிறுத்தித் தேர்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளர் பி.சி.தாமஸ் பெற்ற வெற்றி செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கப் பட்டதுண்டு.

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ஏசு, போப்பாண்டவர், அன்னை தெரசா படங்கள் அச்சிட்ட நாட்காட்டியை தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார் பி.சி.தாமஸ். மேலும் கிறித்துவ மத வாக்காளர்களின் வாக்கு களைப் பெற ஏசுவின் பெயரால் சத்திய பிரமாணம் கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

கேரள மாநிலத்தில் கேரள காங் கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் பி.சி.தாமஸ். இதனை அடுத்து சுயேச்சை வேட்பாளர் இஸ்மாயில் என்ப வர் இவரது தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி கேரள உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த கேரள மாநில உயர்நீதிமன்றம், பி.சி.தாமஸ் வெற்றி பெற்றது செல்லாது என்றும், இஸ்மாயில் வெற்றி பெற்றதாக வும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாமஸ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்  அதைத் தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.

இதை அடுத்து, மத்திய தலைமை தேர்தல் ஆணையர், பி.சி.தாமஸ் ‘‘தேர்த லில் மத உணர்வுகளைத் தூண்டி பிரச் சாரம் செய்து தேர்தல் விதிமுறைகளை மீறி விட்டதாகக் கூறி அவரை மூன்றாண்டு களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரியும், தேர்தல்களில் வாக்க ளிக்கக் கூடாது என்றும் அறிவிக்கக்கோரி’’, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தார்.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவரும் அவ்வாறே ஆணை பிறப்பித்தார். அவரது உத்தரவு 2010 மே மாதம் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தத் தீர்ப்புகளின் வெளிச்சத்தில் பார்க்கப் போனால், இந்துராஷ்டிரம் அமைப்போம் என்றும், ராம ராஜ் ஜியத்தை உண்டாக்குவோம் என்றும் பிரச்சாரம் செய்தும், தேர்தல் அறிக்கை யையும் இந்து மதவாதக் கருத்தோடு தயாரித்தும் கொடுக்கிற பி.ஜே.பி. தேர்தலில் நிற்கவே தகுதி உடையது தானா என்ற கேள்வி நிச்சயமாக உருவாகத்தான் செய்யும்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் சரி, மற்றைய நிகழ்ச்சிகளிலும் சரி நரேந்திர தாமோதரதாஸ் மோடி உள்பட பலரும் இந்து மதவாத நஞ்சைத் தானே கக்கி வருகிறார்கள்.

‘‘முசாபர் நகர் கலவரத்தில் கொல் லப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க பி.ஜே.பி.க்கு வாக்களியுங்கள்.’’

- பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா பேச்சு (2014, மார்ச்)

‘‘இந்துக்கள்மீது கை வைக்க ஒரு முஸ்லிம் இங்கு இருக்கவேண்டுமா, இல்லையா என்பதை இந்துக்கள் முடிவு செய்வார்கள்.’’
- ஆதித்ய நாத் யோகி, தேர்தல் பரப்புரையின்போது

‘‘இந்துப் பெண்களை முஸ்லிம்கள் ஏமாற்றி அவர்களைத் தங்களின் இச் சைக்குப் பயன்படுத்தி, பிறகு அவர் களை முஸ்லிம்களாக மாற்ற வற்புறுத் துகிறார்கள். குஜராத், அசாம், தற்போது முசாபர் நகர் கலவரம் (உ.பி.) இவை களையெல்லாம் மறக்கவேண்டாம். மீண்டும் ஒரு குஜராத் நிலைமை உருவாகவேண்டுமா?’’

விசுவ இந்து பரிசத் பொதுச்செயலாளர்
பிரவீன் தொகாடியா (27.3.2014)

‘‘ஓர் இந்து பாதிக்கப்பட்டால் 10 முசுலிம்களைப் பழிவாங்க வேண்டும். இது உண்மையான இந்துக்களின் கடமை.’’
- சங்கித் சோம்

(தூண்டிவிடப்பட்ட உ.பி. முசாபர் நகர்க் கலவரத்தின் சூத்ரதாரி இவர் - பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினரும்கூட. இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பாம்).

‘‘இந்துக்கள் அனைவரும் மோடிக்கு வாக்களிக்க வேண்டும். மோடிக்கு வாக் களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிடவேண்டும்.’’
- கிரிராஜ் சிங் (பீகார் தேர்தல் பிரச்சாரத்தில், 2.5.2014).

‘‘இந்துக் கோவிலின் ஒரு பகுதியே தாஜ்மகால்.’’
- காந்த் பஜாஜ், உத்தரப்பிரதேச மாநில பி.ஜே.பி. தலைவர், ‘தினமணி’, 8.12.2014)

‘‘இந்தியாவில் ராமனை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் ராமரின் பிள்ளைகள். ராமனை ஏற்றுக் கொள் ளாதவர்கள் (ஹராம் ஜாதி) முறை தவறிப் பிறந்தவர்கள்.’’

- மத்திய அமைச்சர்

சாத்வி நிரஞ்சன் ஜோதி

‘‘இந்துக்கள் நான்கு குழந்தை களைப் பெற வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் அரசி யல் தலைவர்கள் கூறினால், தேச நல னுக்கு எதிரான சிலர் இந்தக் கூற் றைத் தவறாகச் சித்தரித்து மக்களி டையே பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இவர்கள் இந்து நலனுக்கு எதிரான வர்கள். இந்துராஷ்டிரம் அமைவதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். இவர் களால் நமக்கு என்றென்றும் தொல் லைதான்.

ஆனால், ‘லவ் ஜிகாத்’ (முசுலிம் கள்) செய்பவர்கள் 40 குழந்தைகளை - நாய்களைப்போல் பெற்றுத் தள்ளு கிறார்கள்.’’

-பிராசி சாமியாரிணி (அய்.பி.என். லைவ், 2.2.2015)

‘‘இந்த நாடு இந்து நாடு. இங்குள்ள வர்கள் அனைவரும் இந்துக்கள். ஒரு வர் முசுலிமாகவோ, கிறித்தவரா கவோ இருக்கலாம். அதைப்பற்றிக் கவலை யில்லை. ஆனால், இந்த நாட் டில் வசிப் பவர்கள் அனைவரும் இந்துக்களே! அவர்கள் இந்துக்களின் வழிபாட்டு முறையைப் பின்பற்றவேண்டும்.’’

- ஆர்.எஸ்.எஸ். தலைவர்

மோகன் பாகவத்

இன்னும் இந்து மதவாத வெட்டரி வாள் வீச்சு வெறிப் பேச்சுப் பட்டியல் தேவையா? கீழேயுள்ள பெட்டிச் செய்தி யைப் படியுங்கள்!
தேர்தல் பிரச்சாரத்தில் மதக் கருத்தை முன்னிலைப்படுத்தினால், மத அடிப்படை யில் வாக்குகளைச் சேகரித்தால், அது சட் டப்படி குற்றம், வெற்றி பெற்றாலும் அந்தத் தேர்தல் செல்லாது என்று உயர்நீதிமன்ற,

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் திட்டவட்டமாக இருந்தாலும், பி.ஜே.பி. என்ற ஒரு தேசிய கட்சி - இன்றைய மத்திய ஆளும் கட்சி பச்சையாக இந்து மதவெறி நஞ்சை கக் குவதும், தேர்தல் அறிக்கையிலேயே இந்து மதவெறி அம்சங்கள் இடம்பெறுவதும் எப்படி? இவை எப்படி அனுமதிக்கப்படு கின்றன? இத்தகு கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி உடையவைதானா?

தேர்தல் ஆணையம் எப்படி இதனை அனுமதிக்கிறது? முக்கிய கேள்வி! முக்கிய கேள்வி!! முக்கிய கேள்வி!!! நாடெங்கும் கிளப்பப்படவேண்டிய கேள்வி? கேள்வி? கேள்வி?

உரத்த சிந்தனைகள் வெடித்துக்

கிளம்பட்டும்! கிளம்பட்டும்!! கிளம்பட்டும்!!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner