தொடர்

தந்தை பெரியார்

தலைவர் அவர்களே!  சகோதரிகளே!! சகோதரர்களே!!!


இன்று இந்து சமுகம் என்பதற்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.  ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரி கூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும், அதைக் கொண்டாடினால் மோட்சம் அடையலாம் என்றும், பிரசங்கம் செய்யக் கூட்டு வார்கள்.  ஆனால் நீங்கள் இம்மாதிரி பண்டிகையை இனி வெறுக்கும்படி எடுத்துச் சொல்லும் உணர்ச்சி உள்ளவனை கூப்பிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.

இக்கூட்டத்திற்கு நீங்கள் ஒரு அருமையான தலை வரைக்கண்டுபிடித்தது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.  தலைவர் திரு.வி.எஸ்.செங்கோட்டையார் அவர்கள் பெரும்செல்வவான், பொது ஜனங்களுக்குப் பெரிதும் உபகாரியாய் இருந்து வருபவர். அநேக நல்ல பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். அதுபோலவே மத விஷயங்களிலும் பெரிதும் ஈடுபட்டு மத சம்பந்தமான விஷயங்களில் அநேக காரியங்கள் செய்து வருபவர்.  ஆதலால் அவரை இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஏற்பாடு செய்த உங்களைப் பாராட்ட வேண்டியதே.  எனது உபன்யாசம் பயன்படுமானால் சீர்திருத்தத் துறைக்குத் தலைவரால் அநேக லாபம் ஏற்படும்.  அவர்கள் என்னை குருவென்றும் மற்றும் பிரமாதமாய் புகழ்ந்து பேசினார்.  நான் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை.  நானும் அவரும் மற்றும் இந்த ஊர்க்காரர்களும் ஒன்றேயாவோம்.  30,40 வருஷங்களாகவே தாய்பிள்ளைகள்போல் நெருங்கி பழ கினவர்கள்.  ஒரே துறையில் வியாபாரம் செய்துவந்தவர்கள்.  அநேகர் எனக்கு வரவு செலவுகாரர்களாய் இருந்தவர்கள்.  அக்கிராசனர் வியாபாரத்துறையில் மேலோங்கிவிட்டார்.  நான்  வேறு துறையில்  இறங்கிவிட்டேன்.  இவ்வளவு தான் வித்தியாசம்.  தலைவரும் இந்தத் துறையில் இறங்கி இருந்தால் அபாரமான காரியங்களைச் சாதித்து இருப்பார்.  ஆதலால் அவரை விட நான் ஒன்றும் சிறந்தவனல்ல.  அவர் போன்றவர்கள் இவ்வித உபன்யாசங்களுக்குத் தலைவராகக்கிடைத்துமனமாறுதல் அடைந்தால் நாட்டில் எவ்வளவோ திருத்துப்பாடு ஏற்படும். தவிரவும் வயதில் மூத்தவன் என்கின்ற காரணத்திற்காக மரியாதை செய்வது என்கின்ற மூடப்பழக்க வழக்கத்தை ஒழிப்பது சீர்திருத் தத்தில் பட்டது என்று தலைவர் திரு. செங்கோட்டையா அவர்கள் கருதாததால் தன்னை வயதில் சிறியவன் என்று பல தடவை சொல்லி விட்டார்.  அது சரியல்ல.  அறிவுள்ள வர்களும் , அரும் பெரும் காரியங்களைத் தன்னலமற்று தியாகபுத்தியுடன் செய்கின்றவர்களும்தான் பெரியவர்களே யொழிய, வெறும் வயதைப்பார்த்து, நரையைப்பார்த்து, நடுக்கத்தைப்பார்த்து பெரியவர்கள் என்று மயங்குவது தவறுதலாகும்.  ஆகையால் இன்று நமக்குக்கிடைத்த தலைவர் சரியானதலைவரேயாவர்.  பெரியவரேயாவர். மற்றும் எனக்குப் பல வரவேற்புப் பத்திரங்கள் கொடுத் தீர்கள்.  அதில் நீங்கள் எனது கொள்கைகளை நன்றாய் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் அந்தக் கொள்கை களுக்கு என்னை ஊக்கமாய் உழைக்கும்படி எதிர்பார்க் கீன்றீர்கள். தூண்டுகின்றீர்கள் என்றுமேதான் கருதி அவற்றை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.

சீர்திருத்தம்

தவிர 'சீர்திருத்தம்' என்பதைப்பற்றிப் பேசுவதில் யாருக் குச் சீர்திருத்தம்?  எப்படிப்பட்ட சீர்திருத்தம்?  எதற்காகச் சீர்திருத்தம்?  எது சீர்திருத்தம்?  அவற்றை எப்படி நிர்ண யிப்பது?  அதற்கு முட்டுக்கட்டை எது?  பிறகு அவற்றை எப்படி அமலுக்கு கொண்டு வருவது?  என்பவைபோன்ற விஷயங்கள் சீர்திருத்தத்தலைப்பில் பேச வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.  அப்படிப்பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும் அறிவுக்குட்பட்ட சீர்திருத்தம் என்றும், மனிதத் தன்மையும் சுதந்திரமும் அடைவதற்கு என்றும், உலக அக்கம் பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமையுடன் போராடி சீர் திருத்தமடைய வேண்டுமென்றும்தான் சொல்லக்கூடும்.  எவ்வித சீர்திருத்தத்திற்கும் பலவிரோதிகள் உண்டு.  அவை பழைமை, முன்னோர்வாக்கு, மகான்வாக்கு, வேதத்தின் கட்டளை, சாஸ்திரசம்மதம், வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம், நம்பியே ஒப்புக்கொண்டாக வேண்டியது என்பவைபோன்ற நிர்ப்பந்தம் முதலியவைகள் எல்லாம் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவை களுமாகும்.

தன்னைச் சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக் கொள் ளுகின்றவர்கள் மேற்கண்ட அவ்வளவையும் தங்கள் அறிவால் பிரதிட்சயக் கண்களால் அலசிப் பார்க்க உரிமையும் தைரியமும் உடையவர்களாக இருக்கவேண்டும்.  அதைவிட்டு விட்டு 'மற்றதெல்லாம் சரி' ஆனால் 'மதத்தைப் பற்றி பேசலாமா?  கடவுளைப்பற்றி பேசலாமா?  தேசியத் தைப்பற்றி பேசலாமா?  புராணங்களைப்பற்றி பேசலாமா?  மகான்களைப்பற்றி பேசலாமா?  மகான்கள் அபிப்பிரா யத்தைப்பற்றி பேசலாமா?  நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டா' என்பது போன்ற பிடிவாதகுணங்களும், தன்னம் பிக்கையற்ற குணங்களும், 'ஆனால்'களும் உடைய வர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது.  ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும், தனது அறிவில் நம்பிக்கையும், பரீட்சிக்கும் தாராள தன்மையும் வேண்டும்.  இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்த மடைந்துவிட்டது.  நாம் மாத்திரம் யாரைத் தொடலாம்?  யார் வீட்டில் சாப் பிடலாம்?  எதைச் சாப்பிடலாம்?  என்பது போன்றவைகளில் இப்பொழுது , இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம்.

உலக மக்கள் ஆகாயத்தில் பறக்கின்றார்கள்.  நம் மகான்கள் பிணங்கள்போல் மக்கள் தோள்களின் மீது சுமந்து செல்லப்படு கின்றார்கள்.  மற்ற நாட்டு மக்கள் புதிய, புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சீர்திருத்தமடை கின்றார்கள்.  நமது நாட்டு மக்கள் நம்பாட்டன் காலத்தில் இருந்த சாதனத்தைத் தேடிப் பிடித்து அட்டாலியில் இருந்து இறக்கி அமலுக்குக் கொண்டு வருகின்றார்கள்.

முன்னேற்றம், சீர்திருத்தம் என்கின்ற துறையே நமது நாட்டு மக்களுக்குத் தடைப்படுத்தப்பட்டு விட்டது.  அந்தப்பக்கம் திரும்புவதென்றால் "உயிரை விடுகின்றேன்" என்கின்றார்கள்.  ஏனெனில் இன்றைய இந்திய நிலைமை நமது பாட்டன் காலத்து நிலைமை.  ஆகிய எல்லாம் சோம்பேறிகள் வயிற்றுப் பிழைப் புக்கும் ஒருவர் பிழைக்க ஒருவர் உழைக்கும் முறைமைக்கும் அனுகூலமாய் கற்பிக் கப்பட்டிருப்பதால் அதிலிருந்து மாறுவதற்கு சோம்பேறி களும், ஊரார் உழைப்பில் சாப்பிடுகின்றவர்களும் ஒரு நாளும் ஒப்பமாட்டார்கள் ஆதலால் நம் நாட்டுமக்களே நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின் றார்கள்.  இந்தக் கூட்டம் ஒரு நாளும் இந்தியாவை - இந்து மக்களை முன்னேற விடவே விடாது.  சுதந்திரமாய் வாழவும் சம்மதிக்க மாட்டார்கள்.  அதனாலேயேதான் அவர்கள் பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும், அவர்களுக்குச் செல்வம் சேராமல் இருக்கும் படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால், கடவுள் பெயரால் தேசியத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90-மக்களை 100-க்கு 10 மக்கள் ஏமாற்றி வருகின்றார்கள்.  இந்த சூழ்ச்சி மாறுதலடைய வேண்டுமானால் கடவுள், மதம், தெய்வீகம், தேசியம் முதலாகிய எல்லா புரட்டுகளையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும் அதற்கு மக்கள் சம்மதிப்ப தென்பது மிகக் கஷ்டமான காரியமாகும். ஏனெனில் இவை சம்பந்தமான மூட நம்பிக்கையும், பிடிவாதமும் நம் மக்களது இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது.  அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத்தையும், வயிற்றுப் பிழைப்பாய்க்கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டுவருகின்றார்கள்.  அவர்களது தொல்லை அடி யோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோ, முன்னேற்றமோ சுலபமான காரியமல்ல.

உதாரணமாக, மதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதிவித்தியாசம் தப்பு, பழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள் ளுவானா?  என்று பாருங்கள்.  அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக்கட்டை யாக இருப்பானா?  அல்லது இருக்கமாட்டானா?  என்று பாருங்கள், அன்றியும் மதப் பிரசாரம் செய்யவும் வெளி கிளம்பமாட்டானா?  என்றும் பாருங்கள்.  இதுபோலவே கடவுள், தேசியம் என்பதின் பயனாய் வயிறுவளர்க்கும் சோம்பேறிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா?  என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசிய பிரசாரம் செய்ய மாட்டார்களா?  என்றும் யோசித்துப் பாருங்கள்.

இந்த முட்டுக்கட்டையும் எதிர்பிரசாரக்கூட்டமும் இயற்கையே யானாலும் அவை யொழிந்தாகவேண்டும்.  நமது மக்கள் படித்தவர்கள் என்றாலும், பாமர மக்கள் என்றாலும் இவ்விஷயங்களில் ஒரே மாதிரி மூடர்களாகவே இருக்கின்றார்கள்.

உதாரணமாக, ஒரு 'வடுகனோ' ஒரு 'கைக்கோளனோ', 'ஒரு செட்டியோ',  எவ்வளவு தான் சுத்தமாய் இருந்து கொண்டு ஒருபடி அரிசிக்கு 30 இட்லி போட்டு இட்லி 1-க்கு கால் அணாவுக்கு விற்றாலும் நமது அறிவாளிகள் என்பவர்கள் வாங்குவதில்லை.  ஆனால் பார்ப்பனன் என்கின்ற ஒருவன் எவ்வளவு அழுக்குத்துணியுடனும், சொரிசிரங்குடனும், வேர்வை நாற்றத்துடனும், வெள்ளைப் படையுடனுமிருந்தாலும் ஒரு படிக்கு 60 இட்லி வீதம் போட்டாலும், இட்லி ஒன்று 0-0-6 பை வீதம் முன் பணம் கொடுத்து 'சாமி, சாமி' என்று 'சொர்க்கவாசல் பிரசாதம்' போல் கேட்டு வாங்கிச் சாப் பிடத் தயாராயிருக்கின்றோம்.  இது பாமர மக்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.  பண்டிதர்களிட மும், நாகரிக செல்வவான்களிட முமே இந்தக் குணத்தை பார்க்கின்றேன்.

ஆகவே சீர்திருத்தத்திற்கு யார் முட்டுக்கட்டை என்று பாருங்கள்.  இதுபோலவே கடவுள் விஷயத்திலும், கடவுள் என்பதை மனிதன் தனது அக்கிரமங்களுக்குப் பரிகாரம் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இம்சித்துத் தப்பித்துக் கொள்வதற்கும், ஏமாற்றுவதற்கும், தான் மற்றமக்களை  விட அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தி அதனால் அடைந்த பயனை நிலை நிறுத்திக்கொள்ள கடவுளை ஒரு சாக்காய் வைத்து அதற்குக் கோவில் கட்டவும், கும்பாபிஷேகம் செய்யவும், விளக்குப்போடவும், அதன் தலையில் பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய வஸ்துக்களைக் கொட்டிப் பாழாக்கவும், அதை ஆதாரமாய்க் கொண்டு இந்தக்காரியம் செய்து வயிறு பிழைப்பதையே ஒரு தொழிலாய்க் கொண்டு அநேக சோம்பேறிகள் பிழைக் கவுமான காரியத்தில் அமர்ந்திருக்கும் கூட்டத்தார், கடவுள் புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா?  மேலும் முட்டுக் கட்டையாய் இருக்கமாட்டார்களா?  மற்றும் கடவுள் பிரசார மும் செய்யமாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப்புரட்டில் ஏமாறுகின்றவர்களும், இதற்கு அனு கூலமாய் இருப்பவர்களும் எல்லோரும் முழு மூடமக்கள் என்றே சொல்லிவிடலாமா?  என்றும் பாருங்கள்.

அப்படியும் இல்லையே, நல்ல சாமர்த்தியக்காரர்கள், வெகு தந்திரமாய்ப் பணம் சம்பாதிப்பவர்கள், ஜால வித்தைபோல் கெட்டிக்காரத்தனம் செய்து மற்ற மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் யுக்தி சாலிகள் ஆகிய மக்களே இவ்வளவு புத்தி நுட்பத்துடனும், தந்திரத்துடனும், கஷ்டத்துடனும் எத்தனையோ மக்கள் வயிரெரிய-எரிய அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் கல்மனதுடனும், பசியுடன் குழந்தைகளும்.  பெண்களும், மொண்டி முடங் களும், கிழடுகளும் பசியால் பதறப் பதற அதைச் சற்றும் லட்சியம் செய்யாத உலுத்த சிகாமணிகளும் ஆயிரம் ஆயிரமாய், லட்சம் லட்சமாய் இம்மாதிரி கடவுள் புரட்டு காரியங்களில்செலவு செய்து பாழாக்குவதென்றால் இதை முட்டாள்தனமென்றும், அறியாத்தனமென்றும், சுலபத்தில் அசட்டுத்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா?  என்று யோசித்துப்பாருங்கள்.  ஆகவே இந்த மக்கள் கடவுள் புரட்டை வெளியாக்க முட்டுக்கட்டையாயிருக்க மாட் டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இந்த மாதிரி ஆட்களின் காரியங்களால் பிழைக்க விருக்கும் கோயிலைக்காத்துப்பிழைக்கும் மக்கள் கடவுள் பிரசாரம் செய்யமாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இதுபோலவே தேசியமென்பதும், ஏழைகளுக்குத் துன்பம் விளைவித்து வருவதும் குடியானவர்களுக்குத் தொல்லை விளைவித்துவருவதும், தொழிலாளிகளுக்கும், சரீரத்தால் பாடுபடுகின்றவர்களுக்கும் அரைபட்டினியையே அளித்து வருவதும் சோம்பேறிகள் மூன்றுவேஷ்டியுடன் வாழவும் சரீரத்தில் வேர்வை ஏற்படாமல் மெலுக்காக வெள்ளைவேஷ்டியுடன் திரியவும், பதவி, ஓட்டுக்கும், உத்தியோகத்திற்கும் அலையும் கூட்டத்தார் இத் தேசி யத்தை நம்பியே முன்னுக்கு வர வேண்டுமென்று கருதி யிருக்கும் கூட்டத்தார், கண்மூடித்தனமாய் வியாபாரத்திற்கு முன்முதல் போடுவதுபோல் தேசிய அர்ச்சகர் களுக்கு - தரகர்களுக்கு அள்ளி அளித்துக் கொண்டிருக்கும் போது தேசியப்புரட்டை வெளியாக்குவது சுலபமா?  அல்லது சாத்தியமா?  என்றும் யோசித்துப்பாருங்கள், இவர்கள் முட்டுக் கட்டையாயிருக்க மாட்டார்களா?  என்றும் யோசித் துப் பாருங்கள்.  அதுமாத்திரமல்லாமல் ஒரு கூட்டம் சீர்திருத்தத்திற்கு எதிர்ப் பிரசாரமும் செய்யமாட்டார்களா?  என்றும் கருதிப் பாருங்கள். ஆகவே, எந்தப் புரட்டை யொழிக்க வேண்டுமானாலும் அதனால் லாபமடை கின்றவர்கள் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள்.  பேசிப் பேசி, எழுதியெழுதி இந்தக் கூட்டத் தார்களால் வசவும் தொல்லையும் பட்டுப்பட்டு பிறகு ஏதாவது சிறிது கண் விழிப்பை உண்டாக்க முடியுமே யொழிய மற்றபடி உண்மை சீர்திருத்தம் என்பது திடீரென்றாகக்கூடிய சுலபமான காரியமல்ல.

ஆனபோதிலும் விடாமுயற்சியுடன் சுயநலப்பற்றற்ற வாலிபர்களும்.  நம்பிக்கையுள்ள பெரியவர்களும் பாடு பட்டால் சீர்திருத்தம் சீக்கிரம் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை உலகம் சீர்திருத்தப் பக்கம் திரும்பி விட்டது.  இந்தியாவைப் பார்த்து உலகத்தில் எல்லா நாடும் பரிகாசம் செய்கின்றது.  ஆதலால் தானாகவே சீர்திருத் தத்திற்குப் பல நற்குறிகள் காணப்படுகின்றன, நான் உங்களைக் கேட்பதெல்லாம் அதைத் தடுக்கவராதீர்கள் என்பதேயாகும்.  சீர்திருத்தக்காரியங்களில் வேறு காரி யத்தைப் போட்டு குழப்பாதீர்கள்.  சீர்திருத்தவாதிகள் முதலில் ஜாதிப் பிரிவை அழிக்க முன்வாருங்கள். பெண் களுக்கும் ஆண்களுக்கும் சிறிதும் வித்தியாசமில்லாமல் ஒன்று போலாக்குங்கள்.  பிறகு உங்களால் என்ன காரிய மாகாது என்று நினைக்கிறீர்கள்?  சுயராஜ்யம் பரராஜ்யம் என்பதெல்லாம் உங்கள் காலடியில் தானாகவே வந்துவிடும்.  அதில்லாமல் வெறும் கூப்பாடு உண்மைப்பயனளிக்காது.  இந்த ஊரில் சுயராஜ்யக்காரர் 100க்கு 75 பேர்கள் இருப்ப தாகக் கத்தலாம், கதர் கட்டலாம், கொடி பிடிக்கலாம், காந்திக்குல்லாய் போடலாம், தீண்டாமை விலக்குவதுதான் சுயராஜ்யத்தின் முதல் கொள்கை என்றுசொல்லலாம், மகாத்மாவுக்கு ஜே! என்றுகத்தலாம்.  சுயமரியாதை இயக்கம் தேசியத்திற்கு விரோதம் என்றும் சொல்லலாம்.  ஆனால் இந்த ஊர் தண்ணீர் கிணற்றில் ஒரு பறையன் வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் மெள்ள ஒரு நான்கு பெயர்கள் சம்மதிப்பார்களா?  தண்ணீர் மொண்டவனை உதைக்காமல் இருப்பார்களா?  பாருங்கள்.  சுயராஜ்யம் என்பது வந்தால் மாத்திரம் இந்த ஊர் ஜனங்களுக்குப் புத்தி மாறிவிடுமா?  யோசித்துப்பாருங்கள்.

ஆகவே ஒருவன் "கங்காதரா மாண்டாயோ" வென்றால் எல்லாரும் விபரம் தெரியாமல் அழுகாதீர்கள்.  இந்தப் பலக் குறைவேதான் சீர்திருத்தத்திற்கு முட்டுக் கட்டை, ஆகை யால் கவனித்து உங்களுக்குக் தோன்றுகிறபடி நடவுங்கள்.  நான் சொன்னதை யோசித்து ஆராய்ந்து பார்க்காமல் நம்பிவிடாதீர்கள்.

(02-08-1931-ஆம் தேதி மாலை 5 மணிக்கு செங்குந்தர் சாவடியில் கூடிய கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 09.08.1931

 

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! - 7

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி

கூறப்படும் தடைகளும் அதற்கான விடைகளும்!

கூறப்படும் தடைகள்

“சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட் டில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலி யுறுத்தி உள்ளார். இதில் எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியம் உள்ளது?

தொன்மையும் வளமும் நிறைந்த மொழி தமிழ் மொழி என்பதில் சந்தேகமில்லை; இதற்கு தடை யார் என தெரிந்து கொள்ள வேண்டும்

இந்திய அரசியல் சட்டத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றப் பரிபாலன மொழி என்ன என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு முன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 214 (5) மற்றும் 227இன் கீழ் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலனம் இருக்க வேண்டிய காரணத்தால், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசில் இயற்றப்படும் சட்டங்கள், ஆளுநர் மற்றும் அரசு உத்தரவு, அதைப் பரிசீலனை செய்து தீர்ப்பு அளிக்கும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும். இதைப் போக்க வேண்டுமானால் அனை வரும் ஏற்கும் ஒரே மொழியில்தான் சட்டம் மற்றும் தீர்ப்புகள் தேசிய மற்றும் மாநில அளவில் இருக்க வேண்டும். இன்றுள்ள இந்திய அரசியல் பின்னணி யில் “ஆங்கிலம்” ஒன்றே “ஓர் இணைப்பு மொழி’. ஹிந்தியோ, தமிழோ அல்லது மற்ற மொழிகளோ அல்ல.

அரசியலமைப்புச் சட்டம் 348ஆவது பிரிவில் கூட முதல் பிரிவு இதையே வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு மாற்றாக அல்லது விதிவிலக்காக 348(2)ஆவது பிரிவில் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் அந்த மாநிலத்தில் இயற்றப்படும் சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற நடவடிக்கை (வழக்காடு மொழி) அந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கலாம் என்று வழிவகை செய்கிறது.

அதேநேரத்தில் உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழி, தமிழில் இருந்தாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் இருக்க முடியும், தமிழில் அல்ல. மேலும் அரசு சட்டங்கள் கூட தமிழில் இயற்றினாலும் அதனுடைய அதிகாரப்பூர்வ மொழியாக்கம் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அவ்வாறு மொழிமாற்றம் செய் யப்பட்ட ஷரத்துகளே அதிகாரப்பூர்வ சட்டமாகும் என்று உள்ளது.

இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரு மொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு?

நான், தமிழில் என்ன பேசினேன் என்பது ஆங்கிலத் தீர்ப்பாக வரும்போது மொழிபெயர்க்கும் (ஆங்கிலத் தீர்ப்பு எழுதும்) நீதிபதி சரியாக மொழி இடைவெளி இல்லாமல் புரிந்துகொண்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இதுமட்டுமல்ல, உயர் நீதிமன்றங்கள் மாநில வரம்புக்குள் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் ஒன்றே. ஆனால் 21 மொழிகள் அலுவலக மொழி என்று அட்டவணை 8இல் உள்ள போது, 21 அட்டவணை மொழிகளும் உயர் நீதிமன் றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?

அப்படியானால் அலகாபாத், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கிறதே என்ற வாதத்துக்கு, அங்கு கூட ஒரு நீதிபதி ஹிந்தியில் போடும் மனுக்கள் போன்ற வைக்கு ஆங்கில மொழியாக்கம் பெற நிர்ப்பந்திக் கலாம். மேலும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஏற்கெனவே நீதிமன்ற நடவடிக்கை தாமதம் ஆகும் இவ்வேளையில், மொழியாக்க நேரம், செலவு தேவைதானா? அது விரயம் இல்லையா? தமிழில் வாதாடினால் சட்டம் தெரியும் என்று அர்த்தம் அல்ல. மொழி வேறு, ஒரு பிரிவில் பாண்டித்யம் என்பது வேறு. சட்டம் தெரியா மல் தமிழ் தெரிந்தவர்கள் எவ்வளவு பேர்?

இந்தியா போல பல மொழி பேசும் மாநிலங்களின் கூட்டாக ஒரு தேசம் இருக்கையில் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல. அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, இதர நாடுகளின் பரிவர்த்தனைக்கும்! இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லை.

இந்தியராய் எந்த மாநிலத்திலும் தங்கி, உயிர் வாழ்ந்து, தொழில் செய்யும் உரிமை, அடிப்படை உரிமையாக இருக்கும்போது, ஒரு மாநிலத்தின் ஆட்சிமொழி ஓர் அளவுக்கு மேல் இந்த அடிப்படை உரிமையைப் பாதிக் காததாக இருக்க வேண்டும்.

தமிழ் வழக்காடு மொழியாவதற்கு முன், தேவை யாக உள் கட்டமைப்பு, எல்லா சட்டங்களின் தமிழாக் கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக் காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லா மல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது!

- ஷான் (மயிலாடுதுறை)

==================================

தடைகளுக்கான விடைகள்

- நீதியர தடைகளுக்கான விடைகள்

சர் ஏ.கே.ராஜன் -

 

தமிழ், உயர்நீதிமன்ற மொழியாக வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான வேலைகள் என்ன என்பதுதான். ஆக்கப்பூர்வமான யோசனைகள் என்ன என்பதைப் பற்றித்தான் சிந்தித்துப்பேச வேண்டும். அதிகம் படித்தவர்களுக்கு நாம் தவறு செய்து விடு வோமோ என்ற அச்ச உணர்வுதான் அதிகமாக இருக் கும். தவறு செய்துவிடக்கூடாது என்ற அந்த அச்ச உணர்வுதான் அதிகமாக இருக்கும். மெத்தப் படித்தவர் கள் அச்சம் அதிகம் கொண்டவர்கள்தான்; அதில் நிச்சய மாக சந்தேகமே இல்லை. எனவே அதிகம் படித்தவர்களி டம் கருத்துக் கேட்டால் அதிகமான பயத்தைத்தான் உண்டு பண்ணுவார்கள். எதிர்மறை விளக்கம் அதிகமாக இருக்கும்.

அந்த அச்சத்தை விட்டொழியுங்கள். நம்மால், தமி ழில் முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள். தமிழில்தான் இப்போதும் வாதங்கள் நடைபெறுகின்றன. தமிழில்தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. தமிழில்தான் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழில்தான் தட்டச்சு செய்து தருகிறார்கள். சுருக்கெழுத்தர்கள் எழுதிக் கொள்கிறார் கள். தமிழ் சுருக்கெழுத்தர்கள், தட்டச்சர்கள் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. நம்மு டைய தமிழ் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கற்றறிந்த, தகுதி பெற்ற தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. நீங்கள் மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று பார்த்தீர் களேயானால், தமிழில் மிக வேகமாகத் தட்டச்சு செய்ப வர்களை நீங்கள் பார்க்கலாம். பேசுகின்ற பொழுதே தட்டச்சு செய்து தருபவர்கள் என்னிடம் பணிபுரிந்திருக் கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லும்போதே தட்டச்சு செய்து முடித்தவர்கள் என்னிடம் பணியில் இருந்திருக் கிறார்கள். இப்பொழுதும் பலர் இருக்கிறார்கள். எனவே, நம்முடைய தமிழ் நாட்டில் தமிழ்த் தட்டச்சுத் திறமையில் எந்தவிதமான குறையுமில்லை. சுருக்கெழுத்தாளர்களும் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றனர். அவர்களை நாம் பயன்படுத்திக்கொள்வதுதான் நாம் செய்ய வேண் டிய செயல். தடைகளைக் கடந்து நடைமுறைப்படுத்துவ தற்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லி வழி நடத்த வேண்டும்.

கலைச் சொற்கள் என்பது ஒரே நாளில் உருவாகி விடுவதல்ல. பல அறிஞர்கள் ஒன்றுகூடி அமர்ந்து சிந் தித்தாலுங்கூட, சில, பல, நாட்களில் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துவிட முடியாது. ஒரு சொல், சரியான  நிலையை அடைவதற்குப் பல நாட்கள், பல ஆண்டுகள் தேவை. 50 ஆண்டுகள் கழித்துத்தான் மிஸீபீவீணீஸீ சிஷீஸீstவீtutவீஷீஸீ என்பதற்கு “இந்திய அரசமைப்பு” என்ற சொல் கிடைத் திருக்கிறது.

மேலும், வழக்குத் தமிழ் வேறு, சட்டத் தமிழ் வேறு என்ற வார்த்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயல வில்லை. வழக்குத் தமிழ் தான் சட்டத் தமிழ். சட்டத் தமிழ்தான் வழக்குத் தமிழ். சில வார்த்தைகள் சட்டத்தில் வருமே தவிர வழக்குத் தமிழை விட்டு மாறிவிடாது.

நீதிமன்றங்களில் வாதிடுவதற்கு வாதத் திறமை வேண்டும், தமிழில் எங்களுக்கு வாதத்திறமை வராது. ஆங்கிலத்தில்தான் வரும் என்றும் சொன்னார்கள். நிச்சயமாக இது உண்மை அல்ல. ஒரு நீதிபதியை ஏமாற்றி வாதத் திறமையால் வென்றுவிடுவது எல்லாம் அந்தக் காலம். இப்பொழுது எந்தவொரு நீதிபதியையும் வாதத்தால் ஏமாற்றி வென்று விட முடியாது. ஏனென்றால், அவர்கள் சட்டத்தைப் பார்த்துத்தான் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

தமிழில் வாதிக்க முடியாது எனவே, தமிழில் வேண் டாம் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல என்பதற்காக இதைச் சொல்கிறேன். தற்பொழுது தமிழில் சட்டம் இல்லை என்றார்கள். அரசியல் சட்டம் இன்னும் தமிழில்; மொழி மாற்றம் செய்யப்படவில்லை என்றார்கள். பல சட்டங்கள் மாற்றப்படவில்லை என்றார்கள். அவை எல்லாம் உண்மை அல்ல. இந்திய அரசு அமைப்புச் சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்துவிட்டது. அகில இந்திய அனைத்துச் சட்டங்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்துவிட்டன. குறிப்பாக, தற்பொழுது தமிழ் நாடு சட்டசபையில் இயற்றப்படுகின்ற சட்டங்கள் அவ்வப்பொழுது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப் படுகின்றன. எனவே, மொழி மாற்றம் இல்லை என்பது சரியான வாதம் அல்ல.

ஆட்சி மொழி குறித்தான 1963ஆம் ஆண்டு சட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. இச் சட்டம், உயர் நீதிமன்ற வழக்கு மொழியை மாற்றிக் கொள்ள வழிவகை செய்துள்ள சட்டமாகும். உயர் நீதி மன்றங்களைப் பொருத்தமட்டில் அரசமைப்பன் 348வது பிரிவு நடைமுறையில் இல்லை. அப்பிரிவு உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே பொருந்தும். தற்போது, உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் ஆட்சி மொழி ஆங்கிலம்தான். உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, ஆங்கிலத்துடன் அந்தந்த வழக்கு மாநிலத்தின் ஆட்சி மொழியும் வழக்கு மொழி ஆகலாம். நாம் தமிழை மட்டும் வழக்கு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்கவில்லை. ஆங்கிலத்துடன் தமிழையும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதே நேரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தீர்ப்புகளை தமி ழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதுவதற்கு முழு உரிமை உண்டு. தமிழில்தான் தீர்ப்புகளை எழுத வேண் டும் என்று கட்டாயமில்லை. நீதிபதிகள் தமிழில் தீர்ப்பு கள் எழுத விரும்பினால் அவர்களுக்கு தக்க மொழி பெயர்ப்பாளர் அமர்த்தப்படும். தற்போது மொழி பெயர்க்க வழிவகைகள் மிகவும் அதிகம். மொழி பெயர்ப்பாளர்கள் உயர் நீதிமன்றத்திலே உள்ளனர். சுருக்கெழுத்தாளர்களும் உள்ளனர். தற்போது நடை முறையில் உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் நீதிபதி அவர்கள் பேசினாலே, தானே மொழி பெயர்த்து விடும் வசதி வாய்ப்புகளும் உள்ளன. இன்னும் வசதி வாய்ப் புகள் வளர்ச்சி அடைந்து இப்பணியை மிகச் சுலபமாக மாற்ற வாய்ப்புள்ளது. தற்போது தமிழில் தீர்ப்புகள் வழங் குவதற்கும் தமிழ் மொழியை நீதி மன்ற மொழியாகப் பயன்படுத்துவதற்கும் எந்தவித தடையும்; இல்லை. சட்டச் சிக்கலும் இல்லை.

 

================

- நீதிபதி தாவிது அன்னுசாமி -

எல்லா சுதந்திர நாடுகளிலும் அந்தந்த நாட்டின் மொழியே நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலும் அவ்வாறே அமைய வேண்டுமென்று தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எண்ணினர். எனினும் நாடு சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலமே வேரூன்றி நிற்கிறது. அது மக்களுக்கு சங்கடத்தையும் கவலையையும் அளித்து வருகின்றது.

வழக்குத் தொடர்பவர்கள் தம் சார்பாக அல்லது தமக்கு எதிராக என்ன எழுதப்பட்டுள்ளது; என்ன பேசப் படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவர்களின் இயற்கையான உரிமை. மேலும் ஒரு குடிமகனுக்கு மரண தண்டனையை உறுதி செய்யும் போதும் கூட அவனுக்குபுரியாத மொழியில் தீர்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் உயர்நீதிமன்றம் உள்ளது. அதே நீதி மன்றம் குற்றவாளியின் தாய் மொழியிலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்கவேண்டும் என்பதை பலமுறை தெரிவித்திருக்கிறது. குற்றப்பத்திரிகை தமிழில் இருக்க வேண்டும் என்றும் ஆணை இட்டிருக்கிறது.

தாமதத்தின் காரணம்

சிலர் உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு தமிழ் தகுதி அற்றது என்று கருதி வருகின்றனர். இதற்கு ஒரு ஆதா ரமும் இல்லை. மொழி உயிருள்ளது. நாம் எதற்கு அதை உபயோகப்படுத்துகிறோமோ அதற்கு ஒத்துவரக்கூடிய தன்மை உள்ளது.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின் முதற்பகுதியில் வட்டார நீதிமன்றங்களில் தமிழில்தான் தீர்ப்பு அளிக்கப் பட்டு வந்தது... (பேரெழுத்தாளர் வேதநாயகம் பிள்ளைத் தீர்ப்புகளும் இருக்கின்றன) நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அந்நீதிமன்றங்கள் நவீன முறையில் தங்களது தீர்ப்பை தமிழில் மக்கள் - புரிந்துக்கொள்ளும்படி வழங்கி விடுகின்றன. இப்போது ஆங்கிலத்தில் உள்ள உச்சநீதிமன்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்கூட தமிழில் செம்மையாக மொழி பெயர்க்கப்பட்டு சட்டக் கதிர் இதழில் வெளிவருகின்றன. உயர் நீதிமன்றமும் அவ்வா றான ஒரு தீர்ப்புத் திரட்டை பல ஆண்டுகளாக வெளி யிட்டு வருகிறது.

தாமதத்திற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. தீர்ப்புத் தமிழில் அமைந்து விட்டால் அது மற்ற உயர் நீதிமன்றங்களுக்கு உதவாமல் போய்விடும் என்பது. அதேதொனியில் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யும்போதும் சங்கடம் ஏற்படும் என்று சொல்லப்படு கிறது. இது குறித்து - நம் மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால் எல்லாத் தீர்ப்புகளும் அச்சிடப்படுவ தில்லை. எல்லாத் தீர்ப்புகள் மீதும் மேல்முறையீடு செய் யப்படுவதில்லை. மிகச் சிலமட்டும் இவ்விரண்டிற்கும் உட்படுகின்றன. அவைகளை முன்வைத்து எல்லாத் தீர்ப்புகளையும் ஆங்கிலத்தில் எழுதுவது சரியாகாது. தேவையான தீர்ப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப் பதற்கு எளிதில் ஏற்பாடு செய்துவிடலாமே.

எதிர்ப்புக்கு மூலக்காரணம் என்னவென்றால் சிலர் ஆங்கில மொழியைக் கற்பதற்கு நிறைய பணமும் முயற்சியும் செலவிட்டிருக்கின்றனர். அந்த முதலீடு பறிபோய்விடுமோ என்ற அச்சம். இரண்டாவதாக ஒரு பழக்கத்தைத் கைவிடுவதென்றால் மனம் இடம் தருவ தில்லை. இந்த மனப்பான்மை வழக்குரைஞர்களுக்கு அவர்கள் பயிற்சியினால் அதிகமாகவே காணப்படும். இம்மாதிரிதான் இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டுவரை ஆங்கிலம் நீதிமன்ற உபயோகத்திற்கு சரிவராது என்று கூறி பிரெஞ்சுமொழியைப் பயன்படுத்திவந்தனர். அதே சமயத்தில் பிரெஞ்சு நாட்டில் பிரெஞ்சுமொழி தகுதியற்ற தாகக் கருதப்பட்டு இலத்தீன் பயன்படுத்தப்பட்டு வந் தது. ஆங்கிலத்தை நிலை நாட்டுவதற்காக சிக்ஷீஷீனீஷ்மீறீறீ என்ற முதல் அமைச்சர் தீவிர ஏற்பாடு செய்து வெற்றி கண்டார்.

மொழிமாற்றத்தால் சங்கடங்கள் ஏற்படுவது இயல்பே. எனினும் அதை வழக்குரைஞர்களால் சமாளிக்கமுடியும். அதுவுமின்றி மக்கள் தேவை எனும் போது சிலரின் சங்கடம் பொருட்படுத்தத்தக்கதன்று. அவர்கள் மாற்றத் திற்கு ஆயத்தம் செய்துகொள்ளவேண்டியது தான். மாற்றம் கொண்டு வரும்போதும் அவர்களின் சங்கடம் குறை இருக்கும் அதை போக்க முடியும். மேலும் சங்கடம் எல் லோருக்கும் ஒரே அளவில் இருக்காது. இளம் வழக்கறி ஞர்களுக்குத் மொழி மாற்றம் நல்ல வாய்ப்பை அளிக்கும்.

எப்படி செயல்படுத்துவது?

நீதிமன்ற ஆணையினால் தமிழை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு வரமுடியாது என்பதை முன்பே சுட்டிக் காட்டினோம். அதற்கான வழிவகைகள் இந்திய அரசு சட்டத்தில் 348 (2) ஆம் அங்கத்தில் தெளிவாக உள்ளது. முதற்படியாக தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு ஆளுநர் உத்தரவைப் பெறலாம். அதற்கு தமிழக அர சாங்கத்தின் முயற்சி தேவை. முறையாக அரசாங்கத்தை அணுகினால் அது ஆவன செய்யுமென்று நம்பலாம்.

நாடாளுமன்ற ஒப்புதலும் தேவை. இதற்கு தமிழக அரசாங்கத்தையும் தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்களையும் அணுகி ஏற்பாடு செய்ய வேண்டிக் கொள்ளலாம். இதற்குத் தகுந்த முயற்சி எடுத்தால் எல்லா கட்சியினரும் இதை ஆதரிப்பார்கள்.

அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் 15 ஆண்டுகளுக்குள்ளாகவே மாநில மொழிகள் உயர்நீதி மன்றங்களில் புழக்கத்தில் வந்துவிடலாமென்று எதிர் பார்த்தனர். அதற்கென தனிவழிமுறையை 349 ஆம் அங்கத்தில் குறிப்பிட்டனர். இப்போது 50 ஆண்டு களுக்குமேல் ஓடிவிட்டதால் உடனடி யாக மேற்கண்ட செயலில் இறங்கினால் இது நிறைவேறும்.

 

 

தந்தை பெரியார்

கனவான்களே! இந்த இடங்களில் இதற்குமுன் அநேக தடவைகளில் வந்து பேசியிருக்கிறேன். அப்போது வந்த சமயங்களில் நான் எதைப்பற்றிப் பேசினேனோ அதே விஷயங்களைப்பற்றித் தான் இப்போதும் பேசவந்திருக் கிறேன். ஆனால் அந்தக்காலங்களில் எனது பிரசங்கத்தைக் கேட்க, வந்த ஜனங்களை விடவும் உற்சாகத்தை விடவும் இப்போது எத்தனையோ மடங்கு அதிகமான ஜனங்களும் உற்சாகங்களும் காணப்படுவது எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது. ஒரு சமயம் எனது கொள்கைகள் ஏதாவது மாற்றமடைந்து விட்டதா என்பதாக நானே யோசித்து பார்ப்பதுண்டு. எவ்வளவு யோசித்தாலும் எனது பழைய கொள்கைகளிலிருந்து ஒரு சிறிதும் மாற்றிக் கொண்டதாக எனது மனச்சாட்சி சொல்லுவதே இல்லை.

மகாத்மா காங்கிரஸ் காலத்திலும், அதற்கு முன் நான் தனியே அபிப்பிராயம் கொண்டிருந்த சமயத்திலும் எந்தக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தேனோ அவற்றில் ஒரு சிறிதும் மாற்ற மேற்பட்டதாக எனக்குத் தோன்றுவதே இல்லை. அதாவது மகாத்மாவின் ஒத்துழையாமை காங்கிரசுக்கு முன்னால் பார்ப்பனரல்லாதார் அரசியல் உரிமைகளுக்கும், சமுக உரிமைகளுக்குமாக காங்கிரஸ் சார்பாக ஏற்பட்டிருந்த சென்னை மாகாணச்சங்கம் என்னும் பார்ப்பனரல்லாதார் மக்களுக்காக மாத்திரம் ஏற்பட்டிருந்த சங்கத்தில் நானும் ஒரு முக்கியஸ்தனாக இருந்த காலத்தில் எனது கொள்கையும் அச்சங்கக் கொள்கையுமான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திலும், மகாத்மா காங்கிரசில் நான் இருந்த போது காங்கிரஸ் கொள்கையாகவும் எனது கொள்கையாகவும் இருந்த நிர்மாணத்திட்டம் அதாவது கதர், தீண்டாமைவிலக்கு, மதுவிலக்கு ஆகிய கொள்கை களிலும் ஒரு சிறிதும் மாறுபடாததோடு அவைகள் அப்பொழுதைவிட இன்னமும் பலமாக என்மனதில் பதிந்து கிடக்கின்றன. வகுப்புவாரி உரிமை இல்லாமல் நமது நாட்டி லுள்ள வகுப்புகள் ஒற்றுமைப்படாது என்பதும், நிர்மாணத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதல்லாமல் வேறொன்றும் சுயராஜ்யமடைய மார்க்கமல்ல என்பதும் எனது சரீரத்திலும் ரத்தத்திலும் மயிர்கால்களிலும் இரண்டறக்கலந்து ஊறிவிட்டதோடு, இவ்விரண்டையும் பெறுவதன் முன்னம் மக்கள் சுய மரியாதை அடைய வேண்டும் என்பதும் சித்திரவதை செய்தாலும் மாற முடியாதபடி பதிந்து ஊறிக்கிடக்கின்றது.

ஆனால் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப்பற்றி என்னுடன் கூட அக் காலத்தில் ஒத்துழைத்த தலைவர்கள் என்போர் அரசியல் தந்திரம் என்னும் பேரால் சுயநலத்தைக் கொண்டோ பிற நலத்தைக்கொண்டோ குட்டிக்கரணங்கள் போட்டுக் கொண்டிருந்தாலும் எந்தக்காரணத்தை முன் னிட்டும் எனக்கு அதில் ஒரு சிறிதும் மாற்றமேற்படவில்லை. அது போலவே நிர்மாணத் திட்டங்களைப் பற்றியும் மகாத்மாகாந்தி காங்கிரஸ் காலத்தில் என்னுடன் ஒத் துழைத்த தலைவர் களும் காங்கிரசுசபை என்பதும் சுய நலத்தை உத்தேசித்தோ சுயநலப்பட்டவர்கள் காங்கிரசைச் சுவாதீனப்படுத்திக் கொண்டு மகாத்மாவை வெளியேறச் செய்ததினாலோ முறையே மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டு விட்டாலும் காங்கிரசின் ஆதிக்கத்திலிருந்து இத்திட்டங்கள் மாறுபாடடைந்து விட்டாலும்கூட அதன் தத்துவங்களும்  அவசியங்களும் எனது மனதிலும் வாக்கிலும் செய்கை யிலும் ஒரு சிறிதும் மாறுபடமாட்டேன் என்கின்றன. ஆனால் சென்னை மாகாண சங்கத்தின் மூலம் செய்து வந்த வகுப்புவாரி உரிமை பெறும் தொண்டும் காங்கிரன் மூலம் செய்து வந்த நிர்மாண திட்டப் பிரசாரத் தொண்டும் இப்போது எந்த சமுகத்தாருக்கு முக்கியமாயும், உண்மையாயும் அது யாருக்கு ஏற்பட வேண்டுமோ அந்த சமுகத்தார் சங்கம் மூலமாக நிறைவேற்றி வந்திருக்கிறேன். இது தான் வித்தியாசம் என்று சொன்னால் சொல்லலாம். ஆனால் இச்சங்கத்தின் மூலம் தான் இவற்றை உண்மையாய் நிறைவேற்றி வைக்க முடியுமேயல்லாமல் இக்கொள்கை களுக்கு பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்கள் அவர்கள் சம்மந்தப் பட்டதும் அவர்கள் ஆதிக்கத்தி லிருப்பதும் அவர்கள் சுயநலத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டதான சென்னை மாகாணச்சங்கத்தின் மூலமாகவோ காங்கிரசின் மூலமாகவோ நிறைவேற்றப் பாடுபட்டதைப்போல முட்டாள்தனமான காரியம் வேறில்லை என்பதை நான் இப்போது நன்றாய் உணர்ந்தேன். நான் மாத்திரமல் லாமல் மகாத்மா காந்தியும் உணர்ந்து தனியே இவற்றை நடத்தி வைக்கப்பாடுபட்டு வருகிறதையும் நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? உதாரணமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் திற்கு பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? 100-க்கு மூன்று பேராயுள்ள சமுகத்தார் 100-க்கு 97 பங்கு உத்தியோகத்தையும் அரசியல் சுதந்திரங்களையும் அனுப வித்துக்கொண்டு

100-க்கு 97 பேர்களாய் உள்ள நமக்கு 100-க்கு மூன்று பங்கு வீதம் அதுவும் பிச்சைக்கொடுப்பது போல் கொடுத்து மீதியை ஏகபோகமாய் அனுபவித்துக் கொண்டு நம்மை அடக்கி ஆண்டு கொண்டி ருப்பவர்கள் 100-க்கு 3 போக பாக்கி 100-க்கு 97 இழக்கும்படியான வகுப்புவாரி உரிமையை ஒப்புக் கொள்ளுவார்களா? என்பதை யோசித்துப்பாருங்கள். அது போலவே நிர்மாணத் திட்டம் என்பதையும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருக்கும் இயக்கங்களே ஒப்புக்கொள்ள முடியுமா என்பதையும் யோசியுங்கள்.

கதரினால் பார்ப்பனர்களுக்கு ஏதாவது லாபமுண்டா? அவர்கள் பெண்டு பிள்ளைகள் கூலியில்லாமலும் வயிற் றுக்கு ஆகாரமில்லாமலும் எங்காவது பாடுபடுகிறார்களா? அல்லது கதர் நிறைவேற்றப்படுவதால் அவர்களுக்கு ஒரு காசாவது ஆதாய முண்டா? வேஷத்திற்கும் இத்திட்டம் நிறைவேற்றுவது என்கிறபேரால் நம்மை ஏமாற்றி நம்மிடம் பொருள் பறிக்கவும் ஓட்டுப்பெறவும் அந்தப் பேரைச் சொல்லிக்கொண்டு சில பார்ப்பனர்கள் நம்மை ஏமாற்றி வயிறு வளர்க்கவும் ஒட்டுப்பெறவுமே அல்லாமல் வேறு எதற்கு அவர்கள் பாடுபட அவசியமிருக்கிறது.

அதுபோலவே தீண்டாமை விஷயத்திலும் பார்ப்பனர் களுக்கு ஏதாவது அக்கறை உண்டா? அவர்கள் நம் எல்லோரையும் தீண்டாதவர்கள் தாழ்ந்த வர்கள் இழிந்த வர்கள் தங்களது வைப்பாட்டிமக்கள் என்று சொல்லிக் கொண்டு ஆதிக்கம் செலுத்திவாழுகிறவர்கள் நம்முடன் சமமானவர்கள் என்று சொல்லிக்கொள்ள சம்மதிப்பார்களா? தீண்டாமை ஒழிந்தால் இந்த நாட்டில் பார்ப்பனர்கள் பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ள இடமுண்டா? ஆதலால் அவர்களோ அவர்கள் ஆதிக்கத்தில் உள்ள சங்கங்களோ இதை நிறைவேற்றி வைக்க சம்மதிக்கும் என்று நினைப்பதைப்போன்ற பெரிய இளிச்சவாய்த்தனமான காரியம் வேறில்லை. ஏதோ சில பார்ப்பனர் தீண்டாமை ஒழிப்பதில் வெகு அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டாலும் 'பறையர்', 'சக்கிலியர்', 'நாயக்கர்', 'நாடார்' என்று சொல்லப்படுகிறவர்கள் வீட்டில் சாப்பிட்டாலும் தீண்டாமை ஒழியவும் மக்கள் பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லவும் செய்யப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள் என்பது பொய்யல்ல. அதுபோலவே மதுவிலக்கு செய்யவேண்டிய அவசியமும் நமது பார்ப்பனருக்கு எப்படி ஏற்படும்? பார்ப்பனர்களா மதுவருந்திக் கெடுகிறார்கள்? அவர்களிலும் சிலர் மதுவருந்துவதாக வைத்துக் கொண்டாலும் அது அவர்கள் குடும்பம் கெடும் மாதிரியோ ஒழுக்கம் கெடும்மாதிரியோ இல்லை. அவர்கள் மதுவருந்துவதினாலும் லாபமடைகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அதனால் சமுகச் சீர்திருத்தக்காரர்கள் என்கிற பேரும் பெற்று பெரிய துரைகள் சிநேகமும் பெற்று பணமும் பதவியும் உத்தியோகமும் சம்பாதிக்க வழிசெய்து கொள் ளுகிறார்களே அல்லாமல் நம்மைப்போல் 'குடிகாரர்கள்' ஆவதில்லை. உண்மையாய் பார்ப்பனரல்லாதாராகிய நம் சமுகத்தில் அடியோடு குடி எடுபட்டுப் போகுமானால் பார்ப்பனர்கள் உத்தியோகத்தின் மூலமாகவும் வக்கீல் உத்தியோகத்தின் மூலமாகவும் இப்போதைப் போல் பிழைக்கமுடியுமா? குடி நின்றுவிட்டால் பார்ப்பன உத்தி யோகத்தில் பகுதி எடுபட்டுப் போகாதா? பார்ப்பன வக்கீல் போர்டுகள் எல்லாம் காப்பி ஓட்டல் போர்டுகளாகவும், பஞ்சாங்கப் போர்டுகளாகவும், பிச்சை எடுக்கும் தொழில் போர்டுகளாகவும் ஆகிவிட வேண்டாமா? ஆதலால் அவர்கள் மதுவிலக்குக்கு அனுகூலமாய் இருப்பார்கள் என்பது ஓநாய் ஆட்டுக்கு வைத்தியம் செய்வதுபோல்தான் இருக்கும். ஏதோ சில பார்ப்பனர் மதுவிலக்குக்குப் பாடு படுவதாய்ச் சொல்லுவது நம்மை ஏமாற்றவே அல்லாமல் வேறென்ன? உதாரணமாக ஒரு ஒத்துழையாமைப் பார்ப்பனர் ஒரு கள்ளு உற்பத்தி செய்து பணம் சம்பாதிக்கும் பார்ப்பனருக்கு மதுவிலக்குப் பேரால் ஓட்டு வாங்கிக் கொடுக்கவில்லையா? தவிர சுயராஜ்யக் கட்சியார் மதுவிலக்கு செய்ய ஒப்புக்கொண்டார்கள்; அவர்களுக்கு ஓட்டுக் கொடுங்களென்று குறள் எழுதவில்லையா? இப்பொழுது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அந்த 'ஒத்துழையாமை' பார்ப்பனருக்குத் தெரியவில்லையா? ஆகவே பார்ப்பனர்களோ பார்ப்பன ஆதிக்கமுள்ள சங்கமோ மதுவிலக்குச் செய்யும் என்று எண்ணுவதைப் போன்ற ஏமாந்த தன்மை வேறில்லை.

ஆதலால்தான் அவர்கள் சம்பந்தமும் ஆதிக்கமும் உள்ள சங்கங்களை விட்டுவிட்டு உண்மையாய் அவசிய முள்ள சங்கத்திற்கு வந்து பிரசங்கம் செய்ய வந்திருக் கின்றேன். அதைவிட பல மடங்கு ஜனங்கள் இங்கு வந்திருப்பதின் மூலமும் நீங்கள் காட்டும் உணர்ச்சியின் மூலமும் உங்கள்  கடமைகளை அறிந்திருக்கிறீர்கள் என்பதை உணருகிறேன். அதுவும் சென்ற மதுரை மகா நாட்டில் இத்தீர்மானங்களை ஏக மனதாய் ஒப்புக் கொண்ட திலிருந்தும் அதற்குப்பிறகு நாட்டில் எங்கு பார்த்தாலும் கதர்விருத்தியும் சுய மரியாதையில் கவலைகொண்டு அதற்குப் பூர்வாங்கமான வேலையும் நடத்துவருவதைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் மனத்திருப்தியும் ஆனந்தமும் அளவிடக் கூடவில்லை. இவ் விஷயங்களை நடந்துவிப்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருந்தாலும் அது அரசியலில் செலவழித்த காலத்தை இதில் செலவழித்ததாக சொல்ல முடியவில்லை.

ஜஸ்டிஸ் கட்சியார் இத்திட்டங்களை நிறைவேற்றவும் நிறைவேற்றுகையில் இத்திட்டங்களின் எதிரிகளால் ஏற்படும் கொடுமைகளிலிருந்து தப்பவும் சிறு சிறு அரசியல் சுதந்திரங்களைப் பெறலாம் என்று நினைத்து அதில் கருத்தைக்செலுத்த ஆரம்பித்ததும் ஏற்கனவே அரசியல் சுதந்திரத்தை ஏகபோமாய்க் கைப்பற்றிக் கொண்டிருந்த கூட்டத்தார் தங்களுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கருதி ஒன்று சேர்ந்து கொண்டு பல வழிகளின் மூலமாகவும் இக்கட்சியாருக்கு செய்து கொண்டு வந்த தொந்திரவுகளும் உபந்திரவங்களும் சூழ்ச்சிகளும் கொடுமைகளும் தாங்க முடியாததானதோடு இக்கூட்டத்தாருடன் சமாளிக்கும் வேலைக்கே தங்கள் காலமுழுவதும் செலவழிக்க ஏற்பட்டு விட்டதாலும் அதிகமாக உத்தேசித்த காரியங்களை நிறைவேற்றமுடியாமல் போயிற்று.

ஆனாலும் நமது மக்கள் எவ்வழியிலும் மற்றொரு சமுகத்தாருக்கு தாழ்ந்தவர்கள் அல்ல என்பதையும், பங்கா இழுத்தல் செடிக்குத் தண்ணீர் ஊற்றல், தபால் ஆபீசுக்குப் போதல், வீதி கூட்டுதல், குழந்தைகுட்டிகளைத் தூக்கிக் கொண்டு திரிந்து மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்குதல், ஜட்கா வண்டி ஒட்டுதல் முதலிய வேலைகள் அல்லாமல் வேறு வேலைக்கு லாயக்கில்லை என்று மற்ற நாட்டாரும் அரசாங்கத்தாரும் நினைக்கும்படி நமது  பார்ப்பனர்கள் செய்து வைத்திருந்த மீளாத இழிவிலிருந்து தப்பிக் கரையேறி அவர்களின் உண்மையான யோக்கிய தைகளாகிய அரசாங்க நிர்வாகம் நடத்துதல் முதல் எல்லா உயர்ந்த பதவிகளையும் வகிக்கத் தகுந்தவர்கள் என்பதை நிலைநிறுத்தி உயர்தர நீதிமன்றம் மந்திரி பதவி முதலிய எல்லா ஸ்தானங்களிலும் நம்மவர்களையும் அமரச்செய்து மற்றெல்லோரையும் விட எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்ல என்பதையும் உலகத்திற்கு மெய்ப்பித்து நம்மிலும் பலரை அந்த ஸ்தானங்களிலும் இருத்தி ஒருவகையான சுயமரியாதையை உண்டாக்கி இருப்பதோடு நமது எதிரிகள் பிச்சைக்கு லாயக்குடையவர்கள் என்பதையும் உலகமறியச் செய்து விட்டார்கள்; என்றாலும் பாமர மக்களிடம் செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ அவ்வளவும் செய்தார்கள் என்று சொல்ல முடியாது ஆதலால், அதை நிறைவேற்றவே இப்போது இக்கட்சியாருக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத் திருக்கின்றது. அதுவும் இரண்டு விதத்தில் என்றே சொல்ல லாம். அதாவது (1) இக்கட்சியார் பதவியில் இருந்தகாலத்தில் இவர்கள் பேரில் பலவித பழிகளைச்சுமத்தியும் பார்ப்பனரல் லாதாரிலும் சில ஆகாதவர்களைப் பிடித்து கூலியும் விலையுங்கொடுத்து இழி மொழிகளால் பழி சுமத்தியும் பாமர ஜனங்களை ஏமாற்றிய அயோக்கியத் தனமானது வெளியாகவும் அரசியலிலும் நமது எதிரிகள் கூட்டத்தாரே பதவியும் ஆதிக்கமும் பெறத்தகுந்த நிலைமையை அடைந்திருப் பதன் மூலம் தாங்கள் இக் கட்சியாரைவிட என்ன சாதிக்க யோக்கியதை உள்ளவர்கள் என்பதை ஜனங்கள் அறிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதும், (2) தேர்தல் மூலம் ஜஸ்டிஸ் கட்சியார் பாமரமக்களிடம் இறங்கி வேலை செய்ய தாராளமான சவுகரியமும், மற்றொரு விதத்திலும் பெற்றிருக்கிறார்கள்.

ஆகவே இந்தச் சமயத்தைக் கைவிடாமல் பார்ப்பன ரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து இதை உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான பிரசாரம் செய்வதற்குப் பத்திரிகைகளும், அவைகளை ஆதரிக்க உங்களுடைய ஆதரவுகளும் வேண்டும். நமது பாமர மக்களின் மனம் பெரும்பாலும் விஷத்தன்மையானதற்குக் காரணம் நமது எதிரிகளின் பத்திரிகைகளும் அவர்கள் தயவில் நடக்கும் நம்மவர்கள் பத்திரிகைகளும் அவர்களிடம் கூலி பெற்று நம்மவர்கள் செய்த பிரச்சாரங்களுமே தவிர வேறில்லை. ஆதலால் அதை நாம் வெல்ல வேண்டுமானால் உறுதியும், தைரியமும், உண்மையுள்ள பத்திரிகைகளும், பிரசாரகர் களும் நமக்கு வேண்டும்; அவைகள் இல்லாமல் நாம் எவ்வளவு யோக்கியமாய் நடந்தாலும் உண்மையான கொள்கைகளை வைத்துக் கொண்டிருந்தாலும் பிரயோ ஜனப்படாது, மகாத்மாவை ஜனங்கள் அறியவும், அவரது கொள்கையை மக்களிடம் பரப்பவும், ஒரு கோடி ரூபாய் இருந்தாலும் 20000  'யங் இந்தியா' பிரதிகளும் 30000 'நவஜீவன்' பிரதிகளும் உலவியதாலும் தானே ஒழிய வேறில்லை. இப்பொழுது மறுபடியும் ஒரு கோடி ரூபாய் கிடைக்குமானால் மறுபடியும் மகாத்மா காங்கிரசைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி தனது கொள்கை களைப் பரப்பக்கூடும். ஆதலால் பணமும் பத்திரிகையும் இல்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியாது. நம்மில் எத்தனை பேர் லட்சாதிபதிகள், பத்து லட்சாபதிகள் கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்! ஆனாலும் அவர்கள் இந்த முக்கியமான விஷயங்களைக் கவனிப்பதில்லை.

இவ்வளவு கோடி செல்வவான்களாயிருந்தாலும் அரசியலில் ஒருசிறு ரெவினியூ இன்ஸ்பெக்டரைக் கண்டால்  நடுங்கவேண்டியவர்களாகத் தானே இருக் கிறார்கள். சமுக இயலில் ஒரு தூது பார்ப்பானைக் கண்டால் சுவாமி என்று கூப்பிடவும், கையெடுக்கவும் யோக்கியதை உள்ளவர்களாகத்தானே இருக் கிறார்கள். இந் நாட்டுச் செல்வவான்கள் லட்சுமி புத்திரர்களென்று ஆணவமாய் நினைத்துக்கொண்டிருக்கும் பைத்தியக்கார பிரபுக்களுக்கு இதுபடுகிறதா? தாங்கள் தேடிவைக்கும் பொருள்கள் தங்கள் பின் சந்ததி யாளர்களுக்கு உதவுமே என்றாவது நினைக்க என்ன உறுதி இருக்கிறது. அப்படியே இன்னமும் 10 லட் சமும்  பல பங்களாக்களும், ஜமீன்களும், உத்தியோகங்களும் சேர்த்துவைத்தாலும் அவர்கள் ஒரு சிறு பிச்சைக்கார பார்ப்பனப் பையனால் தன்னை விடத் தாழ்ந்தவன் என்று நினைக்க கூடியவர்கள் தானே.

இங்கே இருக்கும் ஸ்ரீமான் பனகால் ராஜா அவர்கள் எத்தனை தலை முறைகளாக ராஜவம்சத்தைச் சேர்ந்தவ ரானாலும் எவ்வளவு சமஸ்கிருத பாண்டித்தியமுடையவ ரானாலும் இன்னும் எவ்வளவு பெரிய பூணூல் போட்டி ருந்தாலும், எவ்வளவு பெரிய பரம்பரை ராஜாபட்டம் பெற்றிருந்தாலும் இன்னும் 94 வருடங்களுக்கு மந்திரிப்பதவி வகித்தாலும் அவரும் 'சூத்திரன்' பார்ப்பனர்களின் 'வைப்பாட்டி மகன்', அடிமை, வேதம் படிக்கக் கூடாதவர்; சுவாமி அருகில் போய் சுவாமியைத் தொடக்கூடாதவர்; ஒரு இழிவான பார்ப்பனன் பக்கத்தில் கூட உட்கார்ந்து சாப்பிடக்கூடாதவர் என்று சொல்லப் படுவதை நன்றாய் உணருங்கள். இவ்வூரிலுள்ள பிரபுவான ஸ்ரீமான் தளவாய் முதலியார் அவர்கள் இன்னும் வருஷத்தில் 2,3 லட்சம் ரூபாய் அதிகமான வரும்படி வந்தாலும் இன்னும் 10 அரண்மனை மாடமாளிகை கூடகோபுரமிருந் தாலும் இன்னும் அனேக கோவில்கள் கட்டி கட்டளைகள் நடத்தினாலும், அவர்களும் அவர்கள் பிள்ளை குட்டிகளும் சூத்திரர்களென்றுதான் கருதப்படு கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இது ஒழிக்கப்பட வேண்டுமா? அல்லது இன்னும் மந்திரி உத்தியோகமும் வேண்டுமா? என்று தான் உங்களைக் கேட் கிறேன். ஆகையால் சகோதாரர்களே! நமது பார்ப்பனர்களால் பதினாயிரக்கணக்கான வருஷங் களாக நம் தலையில் வைக்கப்பட்ட இழிவானது வெகு சீக்கிரத்தில் மாறக்கூடியகாலம் வந்திருக்கிறது; இதை இழந்து விடாதீர்கள். இது சமயம் தவறினால் பின்னால் விமோசனமே இல்லையென்றே சொல்வேன். நமது உணர்ச்சியை இது சமயம் உலகம் ஒப்புக்கொண்டு விட்டது. பார்ப்பனர்களும் இதுவரை தங்கள் சூழ்ச்சியின் பெயரால் ஆணவம் அடைந்திருந்தவர்கள் இப்போது வெட்கப்படு கிறார்கள், நல்ல சமயத்தைக் கைவிட்டு விடாதீர்கள். பணங்கொடுக்கக் கூடியவர்கள் பணங் கொடுங்கள். பத்திரிகை வாங்கிப் படிக்கக் கூடியவர்கள் வாங்கிப் படியுங்கள்; ஒன்றும் உதவ முடியாதவர்கள் பார்ப்பனர்களின் காலில் விழாதீர்கள்; அவன் காலைக் கழுவிவிடாதீர்கள்; அவன் காலைக்கழுவி தண்ணீர் சாப்பிடாதீர்கள்; அவனுக்குப் பணங்கொடுத்து விழுந்து கும்பிட்டால் உங்கள் பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் உங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் மோட்சம் உண்டு என்று நினைக்கும் முட்டாள் தனத்தை ஒழியுங்கள். பார்ப்பனர் மூலம் தான் சுவாமியைத் தரிசிக்கவேண்டும், அவன்தான் தரிசனை காட்ட வேண்டும்; அவனைத்தான் தரகனாக்க வேண்டும் என்கிற அறியாமையையாவது விலக்குங்கள். சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம் காதொடிந்த ஊசிக்கும் சமானமாகாது - மனிதரின் பிறப்புரிமை சுயமரியாதை! சுயமரியாதை!! சுயமரியாதை!!!... என்பதை உணருங்கள்.

(திருநெல்வேலி ஜில்லாவில் பாளையம்கோட்டை, திருநெல்வேலி முதலிய இடங்களில் செய்த பிரசாரத்தின் சாராம்சம்)

'குடிஅரசு' - சொற்பொழிவு -  27.02.1927

 

Banner
Banner