தொடர்

தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தடை ஏன்?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

வடஇந்திய மாநிலங்களில் உள்ளதுபோல

வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும்!

இந்திக்கு உள்ள உரிமை; தமிழுக்கு வேண்டாமா?

2013லேயே கலைஞரின் உரிமைக்குரல்!

(வேறு சில வட இந்திய மாநிலங்களில் தற்போது நடைமுறையிலே இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போலவே, தமிழகத்திலே உள்ள உயர் நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக தமிழை சட்டப்படி கையாளுவதற்கு, உச்ச நீதிமன்றத் தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவரிடம் தி.மு.கழக ஆட்சிக் காலத்திலிருந்து ஒப்புதலுக்காக நிலுவையிலே உள்ள சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று 14.7.2013இல் முகநூலில் கலைஞர் எழுதியவை. - ஆசிரியர்)

உடன்பிறப்பே,

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்றைய தினம் (12-7-2013) சவுதி அரேபியாவில் தவிக்கும் கணவரை மீட்டுத் தரக் கோரிய வழக்கில் தமிழில் வாதாட அனுமதி மறுத்து, “உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க இய லாது” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார் என்ற செய்தி வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஆயிஷாபானு என்ற பெண்மணி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் தன் கணவர் பக்கீர் மைதீன் என்பவர் துபாய்க்கு வேலைக்காகச் சென்றவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை கம்பெனி உரிமையாளர் பறித்துக் கொண்டதாகவும், கணவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதால் அவரால் இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், கடந்த 21 மாதங்களாக அவர் சிரமப்பட்டு வருவதாகவும், தன் கணவரை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பெண்மணிக்காக வாதாட விரும்பிய வழக் கறிஞர் தமிழில் வாதாட விரும்புவதாகவும், அதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பு பெஞ்ச், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன் றத்திலும் ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டுமென்று தெரிவித்திருப்பதாகக் கூறி, தீர்ப்பின் நகலையும் வழக்கறிஞரிடம் காட்டியதோடு, ஆயிஷா பானு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக் கிறார்.

நீதிபதியின் மீது எந்தவிதமான குறையும் சொல்ல நான் முன்வரவில்லை. அவர் தனது தீர்ப்பில் கூறும் போது, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 348, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்காடு மொழியாக ஆங்கில மொழிதான் இருக்கும் என்று கூறுகிறது. ராஜ் நாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகி இந்தியில் வாதாடினார். அப்போது அட்டார்னி ஜெனரலாக இருந்த தப்தாரி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த பெஞ்சில் இருந்த நீதிபதிகளில் சிலரும் இந்தியில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்பு, இந்தியில் பேச நீதிபதிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

அப்போது நீதிபதிகள், வழக்கு தொடர்ந்தவர் ஆங்கிலத்தில் பேசலாம் என்றும், இல்லாத பட்சத்தில் தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம் என்றும், இல்லை யென்றால் வக்கீல் ஒருவரை நியமித்து வாதாடலாம் என்றும் உத்தரவிட்டனர். அப்போதும், கோர்ட்டு வழக்காடு மொழி ஆங்கிலம்தான் என்பதை அரசியலமைப்பு சட்டப் பிரிவு 348அய் சுட்டிக்காட்டி, நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தி.மு. கழக ஆட்சி நடைபெற்றபோது, 22.11.2006 அன்று என்னைச் சந்தித்த பத்திரிகையாளர்களிடம், “சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத் திலும், இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 348இல் உயர் நீதிமன்றத்திலும் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கில மொழியே சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும், அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 348, உட்பிரிவு (2)இல் மாநில மொழியில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெற வேண்டு மென்றால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள அரசியல் சாசனச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளிலும் வழக்கு மொழியாக நமது தாய்மொழியாம் தமிழை அறிமுகப் படுத்திடத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது” என்று அறிவித்தேன். இந்த என் அறிவிப்பு தமிழக அரசின் செய்திக் குறிப்பாகவும் வெளியிடப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்றமும், வழக்கறிஞர் கள் சங்கமும் வரவேற்பு தெரிவித்தது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாண்புமிகு ஏ.பி.ஷா அவர்கள் இந்த முடிவினை ஆதரித்ததோடு, அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறை களையும் அவரே தெரிவித்திருந்தார். நான் அதற்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் அவருக்கு அப்போதே எழுதினேன்.

அந்த அறிவிப்பு வந்தவுடன் “அன்றைய” டாக்டர் ராமதாஸ் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலைப் பாட்டை, கலைஞரை விட்டால் வேறு யார் நிறைவேற்ற முடியும்? அதன் தொடக்கத்தை அவர் ஆரம்பித்து விட்டார்” என்று என்னைப் பாராட்டி அறிக்கை விடுத்தார்.

உயர் நீதிமன்றத்திலே உள்ள வழக்கறிஞர்களின் தமிழ் மன்றத்தின் சார்பில் 2001ஆம் ஆண்டு செப்டம் பர்த் திங்களில் இதே பிரச்சினைக்காக ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் அப்போது அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அப்போது என்ன காரணம் சொன்னார்கள் என்றால், “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ் ஆணை பிறப்பிக்கக் கூடிய அதிகாரம் ஆளுநருக்கு மட்டும்தான் உள்ளது, எனவே அவர் ஆணை பிறப்பிக்க வேண்டுமே தவிர, நீதி மன்றத்தில் வாதாடிப் பயனில்லை” என்று கூறினார்கள். அப்போது ஆட்சியிலே அ.தி.மு.க. இருந்தது எனினும், தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

22-11-2006 அன்று நான் செய்த அறிவிப்பினைத் தொடர்ந்து, 6-12-2006 அன்று உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்கு மொழி என்ற அரசினர் தீர்மானத்தை நானே தமிழகச் சட்டப்பேரவையில் முன் மொழிந்தேன். அந்தத் தீர்மானத்தின் வாசகங் கள் வருமாறு:-

“சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத் திலும் இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348 (1) ஆவது பிரிவின்படி உயர் நீதிமன்றத்தி லும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழி யிலேயே அனைத்து நடவடிக்கைகளும் இருந்திட வேண்டு மென்று கூறப்பட்டுள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப் பிரிவு 7இன் படி, உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று, மாநில ஆட்சி மொழியிலேயே நடத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

நமது மாநிலத்தில் தமிழிலேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படை யில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப் பிரிவு 7இன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நமது மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக வரலாற்றில் பொன் னெழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டிய இம்முடி வினை செயற்படுத்த விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்வதென இந்தச் சட்ட மன்றப் பேரவையில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப்படுகிறது”

2006, டிசம்பர் 6ஆம் தேதியன்று தி.மு. கழக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட “உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி” எனும் அரசின் தீர்மான நகலை, தமிழக ஆளுநர் அவர்களின் பரிந்துரையுடன், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து நானே வழங்கியதோடு; அந்தத் தீர்மானத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடை முறைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டேன். குடியரசுத் தலைவர் அவர்களும் அதனைக் கவனிப்பதாக உறுதி அளித் தார்கள். ஆனால் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் துறை 27-2-2007 தேதிய கடிதத்தில், “உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து இந்தப் பிரச் சினை பரிசீலிக்கப்பட்டதாகவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பிராந்திய மொழியைத் தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று இந்தியத் தலைமை நீதிபதி கருதுவதாகவும்“ தெரிவிக்கப்பட்டிருந்தது.

11-3-2007 அன்று நான் இதுபற்றி விளக்கமாக பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், உள்துறை அமைச்ச ராக இருந்த சிவராஜ் பட்டீல், சட்டத் துறை அமைச்சராக இருந்த பரத்வாஜ் ஆகியோருக்கும் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில உயர் நீதி மன்றங்களில் பிராந்திய மொழியான இந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிற முன்மாதிரிகளையெல்லாம் சுட்டிக்காட்டிவிட்டு, இறுதியாக தமிழக மக்களின் நீண்ட கால விருப்பத் திற்கு வடிவம் கொடுக்க அவசர நடவடிக்கைகளை எடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரை வாகப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டேன்.

11ஆம் தேதி நான் எழுதிய கடிதத்திற்கு, அடுத்த நாளான 12ஆம் தேதியே மத்திய சட்டத்துறை அமைச் சராக இருந்த எச்.ஆர். பரத்வாஜ் அவர்கள் எழுதிய பதிலில் “நான் தங்கள் கடிதத்தைக் கவன மாகப் படித்து, இந்த விஷயத்தில் தாங்கள் எழுப்பியுள்ள கருத்துகளை மனதில் கொண்டு இந்த விஷயத்தைப் புதிதாகப் பரிசீலித்து, கூடிய விரைவில் இந்தியக் குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெறு மாறு என்னுடைய துறையை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்”” என்று தெரிவித் திருந்தார்.

12-3-2007 அன்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர். பாலு, ஆ. இராசா, எஸ். ரகுபதி, க.வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் கையெழுத்திட்டு, பிரதமரை சந்தித்து கொடுத்தனர்.

கழக அரசு இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு சூன் மாதம் கோவையில் நடை பெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்ப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக; 2006ஆம் ஆண்டு தமிழக அரசு, சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, மேதகு தமிழக ஆளுநரின் பரிந்துரையினையும், மாண்பமை சென்னைஉயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையினையும் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே தாமதமின்றி உடனடியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்ப் பயன்பாட்டு மொழியாக அங்கீ கரிக்கப்பட வேண்டுமென்று இந்த மாநாடு; மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் நிறை வேற்றப்பட்ட நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர், மதுரை பொன்.முத்துராமலிங்கம் தமிழிலேயே முழுவதும் வாதாடினார்.

அது அப்போதே “இந்து” நாளிதழில் “Judges impressed: “First case argued entirely in Tamil”  என்ற தலைப்பிலே,

“Pon. Muthuramalingam, a former Minister and lawyer, argued the criminal appeal, filed by two convicts in a 2007 murder case, before a Division Bench comprising Justice M. Chockalingam and Justice M. Duraiswamy. The judges recorded their appreciation of the counsel’s effort.”   விரிவாக வெளியிட்டிருந்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வளவிற்குப் பிறகும், உச்சநீதிமன்றம் இதற்கு ஆட்சேபணை தெரிவித்த காரணத்தினால் மத்திய அரசினால் அப்போது தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க முடியவில்லை. இருந்தாலும் தமிழகத் திலே அப்போது தி.மு.கழக அரசு இருந்த காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றத்திலே பெரும்பாலான வழக்குகளின் விசாரணைகள் எல்லாம் தமிழிலேயே நடைபெற்றன. தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய் இக்பால் அவர்களும், கழகம் ஆட்சியிலே இருந்த காலத்தில், 2010ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால் தற்போது, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஜனவரி 3ஆம் தேதியன்று ஒரு வழக்கறிஞரிடம் தமிழில் வாதம் செய்ய அனுமதி மறுத்ததோடு; தமிழில் வாதம் செய்ய அரசியல் சட்டத்தில் அனுமதி வழங்கப்பட வில்லை என்றும் கருத்துக் கூறியுள்ளார். இதனை எதிர்த் துத்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக்கோரி, வழக்கறிஞர்கள் போராட்டத் தில் ஈடுபட்டார்கள். அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமான போராட்டம் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு, வேறு சில வட இந்திய மாநிலங்களில் தற்போது நடை முறையிலே இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக் கப்பட்டுள்ளதைப் போலவே, தமிழகத்திலே உள்ள உயர் நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக தமிழை சட்டப் படி கையாளுவதற்கு, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவரிடம் தி.மு.கழக ஆட்சிக் காலத்திலிருந்து ஒப்புதலுக்காக நிலுவையிலே உள்ள சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 

எத்தனையோ தடைகளைத் தாண்டி எதிர்நீச்சலில் வென்று வந்தது,

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்!

திராவிட - ஆரிய போரில் நாம் பெற்ற வெற்றி இது!

தமிழர் தலைவர் தரும் வரலாற்று ஆதாரங்கள்!

தமிழ்நாட்டில் இந்து அறநிலைய பாதுகாப்புத்துறை உருவானது நீதிக்கட்சி ஆட்சியின்போது; 1920-23, 1923-26 ஆகிய இரண்டு தடவைகளிலும் நீதிக்கட்சி ஆட்சியிலி ருந்தது.

1817ஆம் ஆண்டு முதல் அரசின் ரெவின்யூ போர்டுதான், கோயில் அறக்கட்டளைகளை நிர்வகித்து வந்தது.

‘மத விஷயங்களில் தலையிடாக் கொள்கை' என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்த காரணத்தால் 19ஆம் நூற்றாண்டில் ஒருவகையான கேட்பாரற்ற நிலைமையே இருந்து வந்தது.

கோயில் பெருச்சாளிகளின் எதிர்ப்பு

1863ஆம் ஆண்டில்  Religious Endownment Act XX of        1863 என்ற சட்டம் அந்த அடிப்படையிலேயே நிறைவேற்றப் பட்டது. கோயில் நிர்வாகப் பொறுப்பை இச்சட்டம் மூலம், அரசு தன்னிடமிருந்து விடுவித்துக் கொண்டது.

கோயில்களுக்கு விடப்பட்ட அறக்கட்டளைகள் சரியாக நடைபெற வேண்டுமென்ற பொதுக் கருத்து வேகமாகப் பரவியது. அதன் விளைவாக 1874, 1876, 1884, 1894 ஆகிய ஆண்டுகளில் கமிட்டிகள் நியமிக்கப்பட்டு, அரசு இக்கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.

ஆனால், கோயில் பெருச்சாளிகளும், ஆதிக்க சக்திகளான பார்ப்பனர்களும், இதனைக் கடுமையாக எதிர்த்து, இதில் அரசு தலையிடாது தங்களது ‘சர்வ கொள்ளை சுதந்திரமாக' நடைபெற வேண்டுமென வற்புறுத்தினர்.

இதைத் தடுக்க வேண்டுமென்று பொதுவாக மக்களி டையே ஒரு சிந்தனை உருவாகியது.

1905இல் உருவான அமைப்பு

1905-ல் பெல்லாரியில் கூட்டப்பெற்ற சென்னை மாகாண மாநாட்டில் (ஆந்திர பகுதிகள் பிரியாத சென்னை மாகாணம் அப்போது என்பதை வாசகர்கள் மறந்துவிடக் கூடாது) ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாகாணத்தில் உள்ள ஏராளமான கோயில்களில் ஊழல்களும், செலவினங்களில் விரயமும், தவறான நிர் வாகமும் தலைவிரித்தாடுவதாலும், அதனைச் சரிவரக்கண் காணித்து ஒழுங்குபடுத்த போதிய சாதனம் இல்லாததாலும், கோயில் கணக்குகளை பகிரங்கமாக வெளியிடவும், அறங் காவலர்கள் எண்ணிக்கையைக் குறைத்து ஒரு கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இதன் அடிப்படையில் இந்துமதப் பெரியவர்கள் சிலரைச் சேர்த்து 1907இல் "தர்ம ரட்சண சபா" என்ற கோயில் அறக்கட்டளைகளின் விவகாரங்கள் பற்றி ஆய்வு செய்ய மதுரையில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

தவறான முறைகளில் நடந்துகொள்ளும் அறங்காவலர் களின் செயல்களைத் தடுக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடரவும், நீதிமன்றங்களே அந்த டிரஸ்டிகள் எப்படி கோயில் பணிகளைச் செய்திட வேண்டும் என்று தாக்கீது (ஞிவீக்ஷீமீநீtவீஷீஸீ) வழங்கி நெறிகாட்டவுமான முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தின.

இவர்களில் சிலர் இந்த ‘தர்ம ரட்சண சபா'வின் செயல் களை நன்கு பயன்படுத்தி, பார்ப்பனரல்லாத தர்மகர்த் தாக்களின்மீது பழிதூற்றி, தேவையில்லா போலிக் குற்றச் சாட்டுகளை சுமத்தி நீக்கினர்.

இதுபற்றி சமூகநீதி (Social Justice) என்ற புனைப்பெயரில் 'மெட்ராஸ் மெயில்' நாளேட்டில் அதன் நிருபர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் (நவம்பர் 17, 1916).

இதற்குமுன்பே ‘மெயில்' நாளேட்டில் இந்த ‘தர்மரட்சண சபா'வின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் வக்கீல்களான ஸ்மார்த்த பார்ப்பனர்கள் என்று எழுதி இருந்தார்

கோவை பார்ப்பனரல்லாதார் மாநாடு

கோயில் பணிகளைத் திருத்துகிறோம் என்ற போர்வையில் பார்ப்பனரல்லாத் அறங்காவலர்களை நீக்கி, பார்ப்பன மயமாக்குவதையே குறியாகக் கொண்டு ‘தர்ம ரட்சண சபா' பணிபுரிகிறது. இதனை மாற்றி, இத்துறையில் ஓர் சிறப்பான தனி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 1917 ஆம் ஆண்டு கோவையில் கூட்டப்பட்ட, பார்ப்பனரல்லாதார் மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது.

அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில், இந்து அறநிலைய அமைப்புகளுக்கும், மதப்பணிகளுக்கும் உரிய நிதி சமஸ்கிருத பள்ளிகளை ஏற்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது. பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்குப் பயன்படும் வகையில், அந்த நிதி, ஆரம்பப்பள்ளிகளுக்குப் பயன்படுத்தப் பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

சமஸ்கிருதப் பாடசாலைகள் மூலம் பயன் அடைவது பார்ப்பன் சமூகம்தான் என்பதையும் அம்மாநாட்டில் அத் தீர்மானத்தின்மீது பேசிய பல பேச்சாளர்கள் குறிப்பிட்டார்கள்.

இக்கருத்து நாளாவட்டத்தில் வலுப்பெற்றது: அரசு தலையிட. வேண்டும் என்ற கோரிக்கைக்கு நல்ல ஆதரவு பெருகியது.

13:1.1920இல் ‘மெயில்' ஏடு எழுதிய ஒரு தலையங்கத்தில், பிரிட்டிஷ் அரசு கடைப்பிடித்த, மதவிஷயங்களில் தலையிடாக் கொள்கை என்பதால் ஏற்பட்ட விளைவுகள் மோசமானதாகவே ஆயின என்றும், அரசு இந்த நிர்வர்கச் சீர்கேடு, தவறாகப் பயன்படுத்தப்படல், இவைகளை நீக்க தக்க வழிமுறை கண்டாக வேண்டும் என்று குறிப்பிட்டது.

தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் நான்காவது மாநில மாநாடு 1921இல் நடைபெற்றதிலும், பார்ப்பனரல்லாதாரது மடங்களுக்குரிய வகையில் சரியான இடத்தை அவைகளுக்கு அளிக்கப்படும் வகையில், தனித்து ஒரு சட்டம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

நீதிக்கட்சி ஆட்சியில் வந்த மசோதா

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை, அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வகையில், இதுபற்றி தீவிரமாகப் பரிசீலனை செய்தது. மாநிலத்தில் உள்ள இந்து அறநிலை யங்கள், மதக்கூடங்கள் பற்றிய நிர்வாகத்தினைக் கவனிக்க ஒரு தனி மசோதா கொண்டுவர ஒரு தனிக்கமிட்டியே நிய மித்தது அந்த அமைச் சரவை. 1922ஆம் ஆண்டு மே மாதத் தில் இந்த கமிட்டி நியமிக்கப்பட்டு, 1922ஆம் ஆண்டு டிசம் பரில் - அதாவது சுமார் 7 மாதங்களில் ஒரு மசோதா தயாரிக் கப்பட்டு வெளியிடப்பட்டது.

இம்மசோதா மிகவும் புரட்சிகரமான ஒன்றாகக் கருதப் பட்டது. இந்த அற நிறுவனங்களில், வரும் உபரி நிதியை எதற்காகவென்று அவைகள் ஏற்படுத்தப்பட்ட வையோ, அப்பணிகளுக்கு அப்பால் பொதுமக்களுக்குப் பயன்படத் தக்க வகையில் செலவழிக்க வழி வகை செய்தது அம்மசோதா.

பல ஆண்டுகளுக்கு இம்மசோதா சர்ச்சைகளைக் கிளப்பிய ஒன்றாக அமைந்தது. இதன்படி, மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற பொது மக்கள் அனைவருக்கும் பயன்படும் பணிகளை ஏராளம் செய்ய வழிவகை செய்தது என்பதால் இதனை ‘மெயில்' போன்ற ஏடுகள் வரவேற்றுப் பாராட்டின. வைதீகர்களும், பார்ப்பனர்களும் மற்றும் பிற்போக்குவாதி களும் கடுமையாக எதிர்த்தனர்.

1922 டிசம்பர் 21ஆம் தேதி ‘இந்து' நாளேடு இம்மசோதாவை எதிர்த்து எழுதியது.

அப்போது, இந்த மசோதாபற்றி சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் சர்ச்சை மிகப்பெரும் அளவில் கிளம்பியது.

திராவிடர் இயக்கத் துவக்க நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் சி. நடேச முதலியார் அவர்கள், குறிப்பிட்ட சமுதாய மான பார்ப்பனர் சமுதாயத்திற்காக இதுவரையில் கோயில் நிதிகள் பயன்படுத்தப்பட்டுவந்தன. இந்த மசோதாவின் மூலம் பரவலாக அனைத்துப் பொதுமக்களுக்கும் பயன்படும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறி வரவேற்றார்கள்.

எதிர்ப்பை முறியடித்த பனகல் அரசர்

வைதிக மனப்பான்மையுள்ள பார்ப்பனரல்லாதவர்களும் எதிர்த்தனர் இந்த மசோதாவை கைவிட வேண்டும் - சட்டசபையில் நிறைவேற்றக்கூடாது என்று, தருமபுரம் மடத்தவர்கள் தீர்மானம் நிறைவேற்றினார்கள்!

கோயில்களுக்கு ஏராளமான சொத்துகளை எழுதி வைத்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பர்மாவில் ரங்கூனில் கூடி இம்மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள்!

இந்த எதிர்ப்பினைக்கண்டு நீதிக்கட்சி பனகல் அரசர். சளைத்துவிடாமல் - ஆனால் அதே நேரத்தில் சில முக்கிய. பாதுகாப்புகளை ஏற்படுத்தி, உபரி நிதியைச் செலவழிக்க தக்கவகைகளை உருவாக்கி, தகுந்த முறைகளையும் ஏற்பாடுகளையும் உள்ளடக்கியதாக மசோதா ஆக்கப்பட்டது.

மசோதாவின்

மூன்று முக்கிய அம்சங்கள்!

1) ஏற்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்து சமய அறக்கட்டளை போர்டுதான் எந்த கோயில்களில் உபரி நிதி உள்ளது என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் பெறும்.

2) அந்த உபரி நிதி அந்தக்கோயிலின் ரிசர்வ் நிதியாக தேவைப்படும் அளவுக்கு ஒதுக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்பதை ஆராய்ந்து பிறகு உபரி நிதி ஒதுக்கப்படும்;

3) இதற்குப் பிறகு உபரியாக உள்ள நிதியினை, அந்த அறக்கட்டளை நிறுவியதன் அடிப்படை நோக்கத்திற்கு மாறாகப் போகாமல், அந்த உபரிநிதி மற்ற பொது நல தரும காரியங்களுக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு மூன்று பாதுகாப்புகளை உத்திரவாதமாக ஏற்று, இதுசம்பந்தமாக மத்திய போர்டு இதனைக் கண்காணிக்க செம்மைப்படுத்த இயக்ககம் (Central Board of Control) ஒன்று ஏற்படுத்தப்படும் என்று செலக்ட் கமிட்டியாரால் மாற்றம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட மசோதா நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையின் முதலமைச்சரான பனகல் அரசரால் மிகவும் வெற்றிகரமாக 1923 ஏப்ரல் மாதத்தில் நிறைவேறியது.

‘இந்து'வின் எதிர்ப்பும்,

மெயிலின் ஆதரவும்

உத்தேசிக்கப்பட்ட தனி இந்து மத அறநிலைய போர்டு, கோயில் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும். உள்ளூர் குழுக்கள் முடிவுக்கு எதிராக மேல் முறையீட்டு அப்பீல்களை பைசல் செய்து முடிவு கூறும் வகையில் அமையும் என்று, மசோதா செய்த ஏற்பாட்டினை 'இந்து' நாளேடு அதன் 5.3.1923 தலையங்கத்தில் எதிர்த்து எழுதியது.

ஆனால் - பார்ப்பன வெறியற்ற மெயில் நாளேடு அதன் ஆசிரியர் அப்போது ‘ஹெயிஸ்' என்ற ஓர் வெள்ளைக்காரர்; மசோதாவை நன்கு பாராட்டி வரவேற்று எழுதினார்.

மிகவும் சிறப்பாக-சிந்தித்து, துணிகரமான முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டம் பல ஆண்டுகாலமாக சீர்திருத்தக்காரர்களை தோற்கடித்த நிலையை மாற்றிய ஒரு அருமையான சட்டம் 'A well - devised courageous effort to grapple with a situation that has defeated reformers for many years")    என்று எழுதினார்.

தந்தை பெரியார் வரவேற்றார்

அப்போது  தமிழ்நாடு காங்கிரசின் மாநில தலைவராய் இருந்த தந்தை பெரியார்,  ''கட்சி வேற்றுமை பாராட்டாமல் அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்க வேண்டும். இதனால் அறநிலையங்களுக்கு ஆபத்து இல்லை. அவை களின் செல்வங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மதத்தின் பெயரால் கொள்ளையடித்துக் கொண்டி ருந்தவர்களுக்குத் தான் இதனால் ஆபத்து" என்று அறிக்கை வெளியிட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் விடுத்த இவ்வறிக்கையை அப்போது காங்கிரஸ் தலைமை பொறுப்பாளராக இருந்த டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு, திரு.வி.க., எஸ்.ராமநாதன் ஆகியோரும் ஆதரித்தனர்.

வைஸ்ராயிடம் முறையீடு

மற்றொருபுறம், எஸ்.சீனுவாசய்யங்கார், விஜய ராகவாச் சாரியார் போன்ற பல பார்ப்பன வழக்கறிஞர்கள் இதனை முழுமையாக எதிர்த்தனர்!

இம்மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்பும்கூட பல மடாதிபதிகள் ஒன்று சேர்ந்து வைஸ்ராய் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் (கிssமீஸீt) கொடுக்கக் கூடாது என்று தூதுக் குழுவை அனுப்பி வேண்டுகோள் விடுத்தனர்.

இத்தூதுக் குழுவின் நடவடிக்கைகளால், ஒப்புதல் பெறக் கால தாமதம் ஆகியது. அத்துடன் லார்டு ரீடிங் என்ற வெள்ளைக்கார வைஸ்ராய்க்கும், சென்னை ‘மாகாண வெள்ளைக்கார கவர்னரான லார்டு வெல்லிங்டனுக்கும் இதனால் மோதல்களும், ஏற்பட்டன.

இம்மசோதா நிலைமைகளை ஒழுங்குபடுத்தி, ஊழல்களை களைந்து சீர்படுத்துவது ஆகும், இதற்கு ஒப்புதல் தர மறுப்பது நியாயமல்ல என்று கவர்னர் வாதிட்டார் வைசிராயிடம். அதற்குமேல் நீங்கள் பிடிவாதம் காட்டினால் அடுத்து உடனடியாக வரும் தேர்தலில் மக்கள் ஆதரவு இதற்கு உண்டா, இல்லையா என்று சோதித்துப்பாருங்கள் என்று ஓங்கி அடித்தார்.

இரட்டை ஆட்சி முறையின்கீழ் அமைந்த நிலையில் "ஜஸ்டிஸ் கட்சி" இரண்டாம் முறையாக 1923 தேர்தலில் பெரும்பான்மை பெற்றது. இதனால் வைஸ்ராய்க்கும், கவர்னருக்கும் இப்பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து மாறுபாடு குறுகியது!

இரண்டாவது முறையாகவும்

மசோதா நிறைவேற்றம்!

மீண்டும் இரண்டாவது முறையாக, 1924 ஏப்ரலில் இரண்டாவது அமைச்சரவையின் முயற்சியால் புது சட்டமன்றத்தில் மீண்டும் பிரரேபிக்கப்பட்டு இச்சட்டம் மீண்டும். ஒரு முறை அதுவும் இரண்டே மணி நேரத்தில் - நிறைவேறியது!

1925ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த மசோதாவிற்கு வைஸ்ராய் தனது ஒப்புதலை அளித்து சட்டமாக்கினார்!

இவ்வளவு, தடை ஓட்டப் பந்தயங்களைக் கடந்து, எதிர்நீச்சலில் வெற்றி பெற்று நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் ஆகும்.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தின் மற்றொரு வெற்றியின் வடிவம் இந்தச் சட்டம்.

- இத்தலைப்பு நிறைவு

 

================================================

கோயில் சொத்துக்களை கொள்ளையிட முயலும் பா.ஜ.க. பார்ப்பன கும்பலுக்கு கேரள அமைச்சர் கடும் கண்டனம்!

=====================

குருவாயூரில் உள்ள பார்த்தசாரதிகோயிலை மலபார் தேவசம்போர்டு நிர்வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் இட்ட உத்தரவை அமல்பமுத்துவதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் பா.ஜ.க.வை கேரள அரசின் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கண்டித்துள்ளார்.

குருவாயூர் கோவில் நிர்வாகத்தை நடத்தி வந்த சிலரால் நிர்வாகச் சீர்கேடுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன. அதைத்தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் நிர்வாக பொறுப்பை மலபார் தேவசம்போர்டு ஏற்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நீண்ட சட்டப்போராட்டம் நடந்ததைத் தொடர்ந்து தேவசம்போர்டிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவின்படி தேவசம் போர்டு பொறுப்பேற்கவும் செய்தது. ஆனால் பணம் வைக்கும் அறை. உள்ளிட்ட லாக்கர்களின் சாவி கைமாறி னால் முறைகேடுகள் குறித்த விவரம் வெளியாகிவிடும் என்கிற அச்சத்தில் பழைய நிர்வாகக் குழுவினர் சாவிகளை வழங்க மறுத்ததுடன் மீண்டும் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றார்கள். ஆனால் அடுத்த சில மாதங்களுக்குள் தடை உத்தரவை ரத்து செய்ததுடன் மலபார் தேவசம்போர்டு கோவில் பொறுப்பை ஏற்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமலாக்கச் சென்ற தேவசம்போர்டு அதிகாரிகளை தடுத்தபோது மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தலையிட்டு நீதிமன்ற உத்தரவை அமலாக்கினர்.

கோவில் பொறுப்பை ஏற்க வேண்டும் என தேவசம் போர்டை கேட்டுக்கொண்டது நம்பிக்கையாளர்களும், கோவில் ஊழியர்களுமாவர். இந்த உண்மையை மறைத்து கோவிலை அரசு கைப்பற்றுகிறது என்று அடிப்படையே இல்லாமல் பிரச்சாரம் செய்கிறார்கள். கோவில் சொத்துக் களை கைப்பற்றவே கோவில் பொறுப்பை ஏற்பதாக பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் உள்ளிட்ட சிலர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை தடுக்கவே மலபார், தேவசம்போர்டு வசம் கோவிலை நீதிமன்றம் ஒப்படைத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கணக்கு காட்டாமல் ஆதாயமடைந்தவர்கள்

மலபார் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் களுக்கு அரசு கோடிக் கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்து உதவி வருகிறது. ஆனால் இதை மறைத்து கோவில் பணத்தை அரசின் கஜானாவிற்கு கொண்டு செல்வதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். எந்த ஒரு கோவில் பணத்தையும் அரசு எடுத்துக்கொள்வ தில்லை. தேவசம் போர்டின் கீழ் உள்ள கோவில்களின் வருமானம் முழுவதும் அந்தந்த கோவில்களுக்கும், மற்ற கோவில் களுக்குமான அன்றாடச் செலவுகளுக்கும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவர்களது நலத்திட்டங் களுக்கும் பயன் படுத்தப்படுகிறது. இந்த உண்மைகளை மறைக்க கண் களை மூடி இருட்டாக்கிக் கொள்வதால் எந்த பயனும் ஏற்படாது.

கோவில் உண்டியல் பணத்துக்குக்கூட கணக்கு காட்டாமல் சில நபர்களும், ஆதாயம் அடையும் கும்பல்களும் இப்பணத்தை வீணாக்கியுள்ளனர். அந்தந்த தேவசம்போர்டு வழியாக கணக்கு தணிக்கை செய்து முறையாக நிர்வாகம் நடத்துவதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

அரசு நிதியுதவி

ஒருவேளை விளக்கு ஏற்றக்கூட வருவாய் இல்லாத கோவில்களை தேவசம்போர்டு ஏற்பதில்லை என்பது. இதில் உண்மையில்லை. ஏராளமான கோவில்களில் அரசு அளித்து வரும் பணத்தில் நித்திய பூஜை நடக்கிறது. கேரளம் என்கிற மாநிலம் உருவாவதற்கு முன்பே தேவசம் போர்டுகள் உருவாக்கப்பட்டன. மன்னராட்சி ஒழிந்தபோது கோவில்கள் நாட்டின் சொத்தாகின. அவற்றுக்கு தேவை யான கோடிக்கணக்கான ரூபாய் பணம் மாநில அரசு வழங்கி வருகிறது. ஒரு ரூபாய் கூட கோவில் களிலிருந்து அரசு எடுத்துக்கொள்வதில்லை. கோவில் களின் நிர்வாகத் தில் அரசு தலையிடுவதும் இல்லை. நம்பிக்கையாளர்களைக் கொண்டுள்ள தேவசம்போர்டு தான் கோவில் நிர்வாகங் களை கவனித்து வருகிறது. எனவே இந்த அரசுக்கு எதி ரான பிரச்சார தந்திரங்கள் கேரளத்தில் விலை போகாது என்று வகுப்புவாத சக்திகளைக் கடுமையாக சாடியுள்ளார்.

- நன்றி: 'தீக்கதிர்', 17.1.2018

 

 

 

 

Banner
Banner