தொடர்

இது மூன்றாம் பக்கம் அல்ல;  முன்னுரிமை கருத்துக் களம்

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

இராஜஸ்தானுக்கும், பீகாருக்கும் ஒரு நீதி தமிழகத்திற்கும், மே.வங்காளத்திற்கும் ஒரு நீதியா? இணையதள எழுத்தாளர்கள் உரிமைக்குரல்!

 

இந்தியா தமிழர்களுக்குரிய நாடு இல்லையா?

பன்னாட்டு மன்றமான அய்.நா. உலக மனித உரி மைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights)
மூலம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல உரிமை களைத் தெரிவித்துள்ளது. பன்னாட்டு மன் றத்தின் பொது அவையால் பாரிசு நகரில் 1948 இல் ஏற்கப்பெற்ற இச்சாற் றுரை அடிப்படையில் உலக நாடு கள் பலவும் தம் மக்க ளுக்கு உரிமைகள் வழங்கியுள்ளன.

மனித உரிமைகள் சாற்றுரையில் குறிப்பிடத்தக்கன, கருத்து வெளிப்பாட்டு உரிமை, மொழி உரிமை, நேர்மை யான உசாவலுக்கான உரிமை, சட்டத்தின் முன் சமநிலை உரிமை ஆகும்.

இவற்றின் அடிப்படையில் இந்திய அரசியல் யாப்பு இந்திய மக்களுக்குக் கருத்தை வெளிப்படுத்துவதற்கான பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் ஏட்டளவில் வழங்கியுள்ளது. இந்தியா, அரசியல் யாப்பில் சமவு டைமை நாடாகக் குறித்துக்கொண்டுள்ளது. சமவு டைமை என்றால் நாம் பொருளாதார அடிப்படையில் மட்டும் பார்க்கிறோம். மொழிசார் சம உடைமையையும் அது குறிக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்தி, சமற்கிருதம் தவிரப் பிற மொழிகள் உள்ளன என மத்திய அரசு எப்பொழுதும் நினைப்ப தில்லை. பாதிப்பிற்குள்ளாகும் தமிழ்மொழி, தமிழர்கள் கண்ணோட்டத்தில் நாம் கூறினாலும் பிற தேசிய மொழிகளுக்கும் இது பொருந்தும்.

தமிழ்நாட்டு உயர்நீதி மன்றத்தில்  தமிழர்கள் நீதி வேண்டும் தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில்  தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாடும் உயர்நீதிமன்றத்தில்  தமிழில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும் என்று கேட்கின்றோம். அரசியல் யாப்பின் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும சமம் என்று குறிக்கிறதே , அது தமிழ்மக்களுக்கும் பொருந்தும் அல்லவா?

எந்தக் குடிமகனையும் இனம், பிறப்பிடம் முதலான எதையாவது காரணம் காட்டிப் பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்று பிரிவு 15 கூறுவது தமிழ்மக்களுக்கும் பொருந்தும் அல்லவா?

மக்களாட்சிக் குடியரசாக இந்தியஅரசமைப்பு யாப்பு அறிவிக்கிறதே, நாட்டு மக்களுக்கான அடிப்படை உரிமையான நீதி மன்றங்களில் தாய்மொழியில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அளிக்காத பொழுது இவர் களெல்லாம் இந்தியரல்லர் என்று எடுத்துக் கொள்வதா?

அரசியல் நீதி வழங்குவதாகக் கூறுகிறதே! அறமன் றத்தில் தமிழுக்கான அறம் மறுக்கப்படுவதுதான் அரசி யல் நீதியா?

தகுதிநிலையிலும் வாய்ப்பிலும் சமத்துவம் கொடுப் பதாக இந்திய அரசியலமைப்பு உறுதி கூறுகிறதே! நயன்மை கூறும் வழக்குமன்றங்களில் மொழிச்சமநிலை தர மறுப்பதுதான் அந்த உரிமையை நிலைநாட்டுவதா?

அலகாபாத்து, பாட்னா, மத்தியப் பிரதேசம், இராசத்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி இருக்கும்பொழுது தமிழ்நாட்டின் உயர்நீதி மன்றத்தில் தமிழ் இருக்கத் தடை ஏன்?

பாஜக அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு எனத் திணிப்பதற்கு வாய்ப்பாக நாட்டின் தேசிய மொழி கள் பெற வேண்டிய உரிமையை மறுத்து வருகிறது. தமிழ் முதலான மொழிகள் மறுக்கப்படும்பொழுது இந்திய மொழி என்ற போர்வையில் இந்தியைத் திணிக் கும் பணி எளிதாகும் எனக் கருதுகிறது. எனவேதான் தமிழர்கள் தங்கள் மொழிக்கான சமவாய்ப்பைத் தொடர்ந்து வேண்டியும் மறுத்து வருகிறது.

தமிழ்நாட்டு-புதுச்சேரி உயர்நீதிமன்றமான சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதன் மதுரை அமர்வு நீதிமன்றத் திலும் வழக்காடுமொழியாகத் தமிழை ஏற்க 2006இல் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இது மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.

ஆனால் இதனை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11.10.2012 இல் மறுத்துள்ளது. அதன் பின்னரும் இதற்கு எதிராகத் தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத் தில் தமிழை வழக்காடுமொழியாக ஏற்குமாறு தமிழன் பர்களும் வழக்குரைஞர்களும் பொதுமக்களும் போராடி வருகின்றனர். மேலும், மதுரை வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு ஆளுநர் உரையிலும் மத்திய அரசின் ஆட்சிமொழி யாகவும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் தமிழையும் ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், மத்திய அரசு பழையகுப்பையைக் காட்டி இதை மறுப்பதாக அறிவிக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புட்பா இது குறித்து எழுப்பிய வினாவிற்கு மத்திய சட்டத்துறை இணைஅமைச்சர் பி.பி.சவுதரி, பழைய மறுப்புச் செய்தியைக் கூறித் தமிழை உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக்க முடியாது என மறுத்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான கொந்தளிப்பை ஏற்படுத்தும் சிக்கலுக்கு இணையமைச்சர் எளிதாக எழுத்து மூலமான மறுப்புரையைத் தெரிவித்துள்ளார். இச்செயல், அவர்களின் முகவரான ஆளுநரை மட்டு மல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையே இழிவு படுத்து வதாகும். தமிழக அரசிற்கு உயர்நிலையில் இருந்து இந்த மறுப்பைத் தெரிவித்திருக்கலாம். தமிழக முதல்வரிடம் தெரிவித்திருக்கலாம். தமிழக நலனில் கருத்து செலுத்து வதுபோல் காட்டிக் கொள்ளுவதால், தமிழக மக்கள் நலனுக்காக அக்கருத்தை மறுத்து வழக்காடுமொழியாகத் தமிழை அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கலாம். குடியரசுத் தலைவர், தீர்ப்புகள் தமிழில் வரவேண்டும் என்பனபோல் பேசி வருவதால் மக்கள் மொழிகளை மதிக்கும் அவரி டம் சிக்கலை எடுத்துரைத்து அவரது ஒப்புதலைப் பெற் றுத் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறி வித்து இருக்கலாம்.

ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அடிப்படை உரிமைகளை ஒவ்வோர் இந்திய குடிமகனுக்கும் வழங்கு வதாகக் கூறிக் கொண்டு தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கிறதே! அப்படியானால், இந்தியஅரசு தமிழர்களுக்கான அரசு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

தமிழ் மக்களுக்கான மொழி உரிமையை இந்திய அரசு வழங்க மறுக்கிறதே! இந்திய அரசுக்குத் தமிழர்கள் அயலவர்கள் எனக் கருதலாமா?

தமிழர்களுக்கான மொழிச்சமநிலை வழங்கப்படாத தால் அதற்கான தகுதியற்றவர்கள என இந்திய அரசு கருதுவதாக நம்பலாமா? இதன் மூலம் தமிழர்களுக்கான அரசு இந்திய அரசு அல்ல என மத்திய அரசு சொல்லா மல் சொல்வதாக அறிவிக்கலாமா?

இந்தியாவில் தமிழ்நாடு உள்ளதா? இல்லையா? என மத்திய அரசு அறிவித்தால் நாம் முடிவெடுக்க எளிதாகும்! நாம், நமக்கான மொழி உரிமையைக் காக்க சரியான வழியை தேர்வு செய்து, அதனை நோக்கி செல்வோம்!

கட்டுரையாளர்: குவியாடி

மாநில மொழியே வழக்காடு மொழி சட்டம் வேண்டும்!

நீதிமன்றங்கள் மக்களுக்குரியது எல்லா நாடுகளிலும் அவரவர் தாய் மொழியில்தான் நீதிமன்றங்களும் நடை பெறுகிறது. அந்நிய மொழியில் எந்த நாட்டு நீதிமன்றங் களும் நடைபெறவில்லை. ஆங்கிலேயனின் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று 67ஆவது சுதந்திர தின விழாவில் கொடியேற்றினோம். அந்நிய மொழியான ஆங்கில மொழிக்கு அடிமையாக இருக்கிறோம்.

அரசியல் அமைப்புச்சட்டத்தின் சரத்து 348(1) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழி ஆங்கிலம் என்று கூறுகிறது. சரத்து 348(2) மாநில ஆளுநர் குடியரசுத்தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தியையோ, அல்லது அந்தந்த மாநிலங்களின் அலுவல் மொழியையோ உயர்நீதிமன்றத்தின் மொழியா ககலாம் என்று கூறுகிறது. இந்திய ஆட்சிமொழிச்சட்டம் பிரிவு 7 உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலத்தின் அலு வல் மொழியையோ உயர் நீதிமன்றத்தின் மொழியாக் கலாம் என்று கூறுகிறது. இந்திய ஆட்சிமொழிச்சட்டம் பிரிவு 7 உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழியில் தீர்ப்பு வழங்கலாம் என்று கூறுகிறது.

1961 முதல் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அலுவல் மொழியான இந்தி உயர்நீதிமன்ற மொழியாக ஆக்கப் பட்டது. இதைப்போலவே தமிழ்நாட்டின் அலுவல் மொழியான தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக ஆக்கக்கோரி 2006ல் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது. இத்தீர்மானம் சரத்து 348(2)ன் படி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற நடுவண் அரசுக்கு அனுப்பபட்டது. ஆனால் மன்மோகன்சிங் தலைமையில் இருந்த நடுவண் அரசு குடியரசுத்தலைவர் அப்துல்ல் கலாமிடம் அனுப்பாமல் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக் உச்சநீதிமன்றத்திற்கு அனுப் பியது.

பல வழக்குகளில் இது அரசின் கொள்கை முடிவு நாங்கள் தலையிடமுடியாது என்று தீர்ப்புரைக்கும் உச்ச நீதி மன்றம் சரத்து 348(2)க்கு தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு தமிழை நீதிமன்ற மொழியாக்கு வதற்கு தடையாக இன்று வரை இருந்து வருகிறது. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் “வட்டார மொழிகளை உயர்நீதிமன்ற மொழிகளாக்க முடியாது, இந்தி வளர்ந்து கனியும் வரை ஆங்கிலம் இருக்கும், அதன்பின் ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் மொழியாக இந்தி ஆக்கப்படும்“ என்று கூறி தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஏற்க மறுத்தார். இதைக் காரணம் காட்டி மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்ச கத்தின் அலுவல்மொழிப் பிரிவும் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் கோப்பை குடியரசுத்தலைவரின் ஒப்புத லுக்கு அனுப்பாமல் முடக்கி வைத்தது.

நடுவண் அரசு 1961லேயே உ.பி. ம.பி. பீகார். ராஜஸ் தான் ஆகிய மாநிலங்களில் இந்தியை உயர்நீதிமன்ற மொழியாக ஆக்கிவிட்டு தமிழ்நாடு, வங்காளம் ஆகிய மாநிலங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. எனவே அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் மொழி ஆங்கிலம் என்று இருப்பதை திருத்தி அந்தந்த மாநிலங்களின் அலுவல் மொழியே உயர் நீதிமன்றத்தின் மொழியென மாற்றம் செய்ய வைக்க வேண்டும்.

தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம், மாவட்ட நீதிமன் றங்கள் வரை அனைத்து நீதிமன்றங்களின் நடவடிக் கைகளும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழில்தான் தீர்ப்பு அளிக்கவேண்டும் என்று கூறுகிறது. அச்சட்டத்தின் பிரிவு 4(பி)(1) சில சூழ்நிலை களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத உயர்நீதிமன்றம் அனுமதிக்கலாம் என்று கூறுகிறது.

நாம் உயர்நீதிமன்ற மொழியாக தாய்மொழியான தமிழை ஆக்கு என கேட்டுக்கொண்டிருக்கும் போது 1994ல் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்திற்கு விரோதமாக மாவட்ட நீதிமன்றங்களில் தமிழை ஒழித்துக்கட்ட ஒரு தீர்மானம் போட்டது. அது எந்தக் கால எல்லையும் விதிக்காமல் நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதிக்கொள்ளலாம் தமிழில் கட்டாயமில்லை என அனுமதித்தது.

எனவே 1994க்கு முன் தமிழைத் தாய்மொழியாக கொண்டிராத கீழமை நீதிமன்ற நீதிபதிகள் "ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு” தாங்கல் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத உயர் நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற்றனர். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் தமிழறிவையும் வளர்த்துக்கொண்டனர். ஏனெனில் அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்தால் அவர்கள் ஆட்சி மொழிச் சட்டத்தின்படி தமிழில் மட்டும் தீர்ப்பு எழுத வேண்டும். ஆனால் 1994க்குப்பின் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட நீதிபதிகள் ஆங்கில மோகத் திலும், ஆங்கிலத்தில் திர்ப்பு எழுதினால்தான் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிசீலிப்பார்கள் என்ற தவறான எண்ணத்திலும் ஆங்கிலத்திலேயே தீர்ப்பு எழுதுகின்றனர்.

எனவே இந்த 19 ஆண்டுகளில் இந்த தீர்மானம் 1956 இயற்றப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தின் முக்கிய நோக்கமான கீழமை நீதிமன்றங்களில் தீர்ப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்ல்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தையே அழித்துவருகிறது. எனவேதான் இன்றுவரை பல கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பெழுதி தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தை மீறி வருகிறார்கள். இந்நிலையில் தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதி களின் தீர்மானத்தை எதிர்த்து வழக்குரைஞர் சோலை சுப்பிரமணியம் அவர்கள் தாக்கல் செய்த நீதிப்பேராணை வழக்கில் (W.P..2394/2010) நீதிபதிகள் சித்ரா வெங்கட் ராமன், விமல ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 22.02.2013 அன்று இத்தீர்மானத்தில் குறிப்பிட்ட காலவரையறை குறிப்பிடாமல் இருப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல இந்நிலையில் தலைமை நீதிபதி கே.ஏ.சாமி தலைமையிலான நீதிபதிகளின் தீர்மானத்தை எதிர்த்து வழக்குரைஞர் சோலை சுப்பிரமணியம் அவர்கள் தாக்கல் செய்த நீதிப்பேராணை வழக்கில் (W.P. 2394/2010) நீதிபதிகள் சித்ரா வெங்க்ட்ராமன்,விமல ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 22.02.2013 அன்று இத்தீர்மானத் தில் குறிப்பிட்ட காலவரையறை குறிப்பிடாமல் இருப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றம் ஏற்கெனவே நடத்திய மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் அனைத்து கேள்வித்தாள்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந் தது. ஆனால் தற்போது நடந்த தேர்வில் முக்கியமான முதலாவது தாளை ஆங்கிலத்தில் மட்டுமே உருவாக்கி தங்கள் தமிழ் விரோதப் போக்கை காட்டியுள்ளார்கள்.

1857இல் முதல் இந்திய நீதிபதியான மாயூரம் வேத நாயகம் பிள்ளை 150 ஆண்டுகளுக்கு முன்பே “தேச பாசையும் தமிழ் கோர்ட்டில் வழங்கப்படும் பாசையும் தமிழ், நியாயாதிபதியும் தமிழர், வாதிக்கிற வக்கீ லும் தமிழர், மற்ற வக்கீல்கள் கட்சிக்காரர் முதலா னவர்களும் தமிழர்களே, இப்படியாக எல்லாம் தமிழ் மயமாகி இருக்க, இந்த வக்கீல்கள் யாருக்காக இங்கிலிஸில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை” என்று வருத்தப்பட்டார் (பிரதாப முதலியார் சரித் திரம்). முன்னாள்  உச்சநீதிமன்ற நீதிபதி திரு.கிருஷ் ணய்யர் அவர்களும் “சாதாரண மனிதர்கள், தொழி லாளிகள், விவசாயிகள் சமூக செயல்பாட்டாளர்கள் போன்றோர் நேரடியாக நீதிமன்றத்தின்முன் தங்கள் வழக்கை தாங்களே வாதாடக்கூடிய வகையில் நீதியமைப்பு இருக்க வேண்டும்“ என்று கூறுகிறார். (19.03.2012 இந்து நாளிதழில் அவரது கட்டுரை).

உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு. மு.மு இஸ்மாயில் அவர்கள் 1980 வந்த முதல் தீர்ப்பு திரட்டு என்ற புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் “இந் திய சுதந்திர இயக்கம் அந் நிய அரசியல் ஆதிக்கத்தை விலக்குவதென்ற எதிர்மறையான நோக்கத்தை மாத் திரம் கொண்டதன்று. அப்படி அந்நிய அரசியல் ஆதிக் கத்தை விலக்குவதன் மூலம் இந்திய நாட்டினுடைய அரசியல், பொருளாதார, கலாச்சார, சமுதாய வளர்ச்சி முழுமையடைய வேண்டும் என்பதும் அதன் உடன் பாடான நோக்கமாகும்.... அந்திய அரசியல் ஆதிக்கத்தின் காரணமாக ஆங்கில மொழி உச்சநிலையை வகித்த தனால் இந்த நாட்டு மொழிகள் தங்களுடைய உரிய இடத்தை பெறாததோடு உரிய வளர்ச்சியையும் அடையமுடியவில்லை...

ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும், அந்த மொழியையே தங்கள் வாழ்க்கையில் பேசிவருப வர்களும் தங்கள் சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கை களும் அம்மொழியிலேயே நடைபெற வேண்டும் என்று விரும்புவது தவறில்லை. எனவே அவர்கள் சம்பந்தப் பட்ட சட்ட நடவடிக்கைகள் தமிழிலேயே நடைபெறுமே யானால் அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு தங்கள் உரிமைகள் பாதிக்கப்படும்பட்சத்தில் அவற்றை திரும்பப் பெறுவதற்காகவும், நிலைநாட்டவும் எடுக்கப் படும் சட்ட நடவடிக்கைகள் எப்படி நடைபெறுகிறது என்பதை தாங்கள் நேரிலேயே தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதினார்கள்” என்று கூறியுள்ளார்.

அதேபோல் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.இப்ராகிம் கலிபுல்லா அவர்கள் 2011ல் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றபோது அவருக்கு நடந்த வழியனுப்பு விழாவில் மரபுப்படி தமிழக அரசின் தலைமை வழக்குரைஞ்ர் திரு.பி.எஸ்.ராமன் ஆங்கிலத்தில் வாழ்த்திப் பேசினார். அதன்பின் ஏற்புரை நிகழ்த்திய இப்ராகிம் கலிபுல்லா அவர்கள் “இங்கு வழக்கத்திற்கு மாறாக நான் ஏன் தமிழில் உரை யாற்ற விழைகிறேன் என்பதை முதற்கண் தெளிவு படுத்தக் கடமைபட்டுள்ளேன்.

அதில் முக்கியமான முதற்காரணம், தமிழ் நாட்டில், தமிழில் நான் உரையாற்றுகின்றபோது தன்னம்பிக்கை யோடும் சகசமாகவும், சொல்லுகின்ற கருத்தை தெளி வாகவும், அழுத்தமாகவும் பேசுகின்ற உணர்வைப் பெறு கிறேன்...

எனது நலனில் அக்கறை கொண்ட ஒரு மாபெரும் சபையில் மீண்டும் உரையாற்றக்கூடிய வாய்ப்பு அமை யுமா என்கின்ற எண்ணமும் ஒரு காரணம். ஆகவே இந்த ஒரு வாய்ப்பை நான் முழுமையாகப் பயன்படுத்தி எனது எண்ணங்களை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று பேச ஆரம்பித்தார் (2011).

மகாராஷ்டிரத்தை சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சிர்புர்கர் அவர்கள் தமிழ் நாடு உயர்நீதிமன்றத்தில் முத்த நீதிபதியாக இருந்தபோது தமிழ் கற்றுக்கொண்டு தாக்கல் செய்யப்பட்ட தமிழ் ஆவணங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லாமலே படித்துப் புரிந்து கொண்டு தீர்ப்புகளை வழங்கினார். காஷ்மீரைச் சேர்ந்த டோங்ரி மொழியை தாய்மொழியாகக் கொண்டு, பின் உ.பி.யில் படித்து வளர்ந்து நீதிபதியான முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு அவர்கள் தமிழ்நாட்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அண்ணா மலைப் பல்கலைக் கழக்த்தில் தமிழ்ப் பட்டய படிப்பு படித்து தமிழ் கற்றுக்கொண்டார்.

1994ல் தலைமை நீதிபதி கே.ஏ.சாமி, அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழமை நீதிமன்ற நீதி பதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பெழுதலாமென தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டத்திற்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை (ஆர்.ஒ.சி. எண் 3649/93/1 தேதி 05.01.1994)தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக்கோரும் 2006 சட்டமன்ற தீர்மானத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கவேண்டும்.

அரசமைப்பு சட்டத்தின் சரத்து 348(1) உயர்நீதிமன்றங் களின் மொழி ஆங்கிலம் என்று இருப்பதை, அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழியே உயர்நீதிமன்றங்களின் மொழியென திருத்தச்சட்டம் கொண்டுவர வேண்டும்.மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்: ஏ.கே.இரவி சங்கர்

தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தடை ஏன்?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

வடஇந்திய மாநிலங்களில் உள்ளதுபோல

வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும்!

இந்திக்கு உள்ள உரிமை; தமிழுக்கு வேண்டாமா?

2013லேயே கலைஞரின் உரிமைக்குரல்!

(வேறு சில வட இந்திய மாநிலங்களில் தற்போது நடைமுறையிலே இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போலவே, தமிழகத்திலே உள்ள உயர் நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக தமிழை சட்டப்படி கையாளுவதற்கு, உச்ச நீதிமன்றத் தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவரிடம் தி.மு.கழக ஆட்சிக் காலத்திலிருந்து ஒப்புதலுக்காக நிலுவையிலே உள்ள சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று 14.7.2013இல் முகநூலில் கலைஞர் எழுதியவை. - ஆசிரியர்)

உடன்பிறப்பே,

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்றைய தினம் (12-7-2013) சவுதி அரேபியாவில் தவிக்கும் கணவரை மீட்டுத் தரக் கோரிய வழக்கில் தமிழில் வாதாட அனுமதி மறுத்து, “உயர்நீதி மன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க இய லாது” என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார் என்ற செய்தி வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஆயிஷாபானு என்ற பெண்மணி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் தன் கணவர் பக்கீர் மைதீன் என்பவர் துபாய்க்கு வேலைக்காகச் சென்றவரிடம் இருந்த பாஸ்போர்ட்டை கம்பெனி உரிமையாளர் பறித்துக் கொண்டதாகவும், கணவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதால் அவரால் இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், கடந்த 21 மாதங்களாக அவர் சிரமப்பட்டு வருவதாகவும், தன் கணவரை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பெண்மணிக்காக வாதாட விரும்பிய வழக் கறிஞர் தமிழில் வாதாட விரும்புவதாகவும், அதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பு பெஞ்ச், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன் றத்திலும் ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டுமென்று தெரிவித்திருப்பதாகக் கூறி, தீர்ப்பின் நகலையும் வழக்கறிஞரிடம் காட்டியதோடு, ஆயிஷா பானு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக் கிறார்.

நீதிபதியின் மீது எந்தவிதமான குறையும் சொல்ல நான் முன்வரவில்லை. அவர் தனது தீர்ப்பில் கூறும் போது, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 348, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்காடு மொழியாக ஆங்கில மொழிதான் இருக்கும் என்று கூறுகிறது. ராஜ் நாராயணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகி இந்தியில் வாதாடினார். அப்போது அட்டார்னி ஜெனரலாக இருந்த தப்தாரி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த பெஞ்சில் இருந்த நீதிபதிகளில் சிலரும் இந்தியில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்பு, இந்தியில் பேச நீதிபதிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

அப்போது நீதிபதிகள், வழக்கு தொடர்ந்தவர் ஆங்கிலத்தில் பேசலாம் என்றும், இல்லாத பட்சத்தில் தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம் என்றும், இல்லை யென்றால் வக்கீல் ஒருவரை நியமித்து வாதாடலாம் என்றும் உத்தரவிட்டனர். அப்போதும், கோர்ட்டு வழக்காடு மொழி ஆங்கிலம்தான் என்பதை அரசியலமைப்பு சட்டப் பிரிவு 348அய் சுட்டிக்காட்டி, நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தி.மு. கழக ஆட்சி நடைபெற்றபோது, 22.11.2006 அன்று என்னைச் சந்தித்த பத்திரிகையாளர்களிடம், “சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத் திலும், இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 348இல் உயர் நீதிமன்றத்திலும் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழியிலேயே அனைத்து நடவடிக்கைகளும் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கில மொழியே சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும், அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 348, உட்பிரிவு (2)இல் மாநில மொழியில் உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெற வேண்டு மென்றால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப் பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள அரசியல் சாசனச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளிலும் வழக்கு மொழியாக நமது தாய்மொழியாம் தமிழை அறிமுகப் படுத்திடத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது” என்று அறிவித்தேன். இந்த என் அறிவிப்பு தமிழக அரசின் செய்திக் குறிப்பாகவும் வெளியிடப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்றமும், வழக்கறிஞர் கள் சங்கமும் வரவேற்பு தெரிவித்தது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாண்புமிகு ஏ.பி.ஷா அவர்கள் இந்த முடிவினை ஆதரித்ததோடு, அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்ற வழிமுறை களையும் அவரே தெரிவித்திருந்தார். நான் அதற்கு நன்றி தெரிவித்துக் கடிதமும் அவருக்கு அப்போதே எழுதினேன்.

அந்த அறிவிப்பு வந்தவுடன் “அன்றைய” டாக்டர் ராமதாஸ் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலைப் பாட்டை, கலைஞரை விட்டால் வேறு யார் நிறைவேற்ற முடியும்? அதன் தொடக்கத்தை அவர் ஆரம்பித்து விட்டார்” என்று என்னைப் பாராட்டி அறிக்கை விடுத்தார்.

உயர் நீதிமன்றத்திலே உள்ள வழக்கறிஞர்களின் தமிழ் மன்றத்தின் சார்பில் 2001ஆம் ஆண்டு செப்டம் பர்த் திங்களில் இதே பிரச்சினைக்காக ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் அப்போது அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அப்போது என்ன காரணம் சொன்னார்கள் என்றால், “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ் ஆணை பிறப்பிக்கக் கூடிய அதிகாரம் ஆளுநருக்கு மட்டும்தான் உள்ளது, எனவே அவர் ஆணை பிறப்பிக்க வேண்டுமே தவிர, நீதி மன்றத்தில் வாதாடிப் பயனில்லை” என்று கூறினார்கள். அப்போது ஆட்சியிலே அ.தி.மு.க. இருந்தது எனினும், தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

22-11-2006 அன்று நான் செய்த அறிவிப்பினைத் தொடர்ந்து, 6-12-2006 அன்று உயர் நீதி மன்றத்தில் தமிழ் வழக்கு மொழி என்ற அரசினர் தீர்மானத்தை நானே தமிழகச் சட்டப்பேரவையில் முன் மொழிந்தேன். அந்தத் தீர்மானத்தின் வாசகங் கள் வருமாறு:-

“சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத் திலும் இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 348 (1) ஆவது பிரிவின்படி உயர் நீதிமன்றத்தி லும் உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கில மொழி யிலேயே அனைத்து நடவடிக்கைகளும் இருந்திட வேண்டு மென்று கூறப்பட்டுள்ளது. எனினும், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப் பிரிவு 7இன் படி, உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று, மாநில ஆட்சி மொழியிலேயே நடத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

நமது மாநிலத்தில் தமிழிலேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படை யில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப் பிரிவு 7இன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நமது மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக வரலாற்றில் பொன் னெழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டிய இம்முடி வினை செயற்படுத்த விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்வதென இந்தச் சட்ட மன்றப் பேரவையில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப்படுகிறது”

2006, டிசம்பர் 6ஆம் தேதியன்று தி.மு. கழக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட “உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி” எனும் அரசின் தீர்மான நகலை, தமிழக ஆளுநர் அவர்களின் பரிந்துரையுடன், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து நானே வழங்கியதோடு; அந்தத் தீர்மானத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடை முறைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொண்டேன். குடியரசுத் தலைவர் அவர்களும் அதனைக் கவனிப்பதாக உறுதி அளித் தார்கள். ஆனால் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் துறை 27-2-2007 தேதிய கடிதத்தில், “உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து இந்தப் பிரச் சினை பரிசீலிக்கப்பட்டதாகவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பிராந்திய மொழியைத் தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று இந்தியத் தலைமை நீதிபதி கருதுவதாகவும்“ தெரிவிக்கப்பட்டிருந்தது.

11-3-2007 அன்று நான் இதுபற்றி விளக்கமாக பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், உள்துறை அமைச்ச ராக இருந்த சிவராஜ் பட்டீல், சட்டத் துறை அமைச்சராக இருந்த பரத்வாஜ் ஆகியோருக்கும் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில உயர் நீதி மன்றங்களில் பிராந்திய மொழியான இந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிற முன்மாதிரிகளையெல்லாம் சுட்டிக்காட்டிவிட்டு, இறுதியாக தமிழக மக்களின் நீண்ட கால விருப்பத் திற்கு வடிவம் கொடுக்க அவசர நடவடிக்கைகளை எடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரை வாகப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டேன்.

11ஆம் தேதி நான் எழுதிய கடிதத்திற்கு, அடுத்த நாளான 12ஆம் தேதியே மத்திய சட்டத்துறை அமைச் சராக இருந்த எச்.ஆர். பரத்வாஜ் அவர்கள் எழுதிய பதிலில் “நான் தங்கள் கடிதத்தைக் கவன மாகப் படித்து, இந்த விஷயத்தில் தாங்கள் எழுப்பியுள்ள கருத்துகளை மனதில் கொண்டு இந்த விஷயத்தைப் புதிதாகப் பரிசீலித்து, கூடிய விரைவில் இந்தியக் குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெறு மாறு என்னுடைய துறையை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்”” என்று தெரிவித் திருந்தார்.

12-3-2007 அன்று மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர். பாலு, ஆ. இராசா, எஸ். ரகுபதி, க.வேங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் கையெழுத்திட்டு, பிரதமரை சந்தித்து கொடுத்தனர்.

கழக அரசு இந்தப் பிரச்சினையில் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு சூன் மாதம் கோவையில் நடை பெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்ப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக; 2006ஆம் ஆண்டு தமிழக அரசு, சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, மேதகு தமிழக ஆளுநரின் பரிந்துரையினையும், மாண்பமை சென்னைஉயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையினையும் பெற்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே தாமதமின்றி உடனடியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்ப் பயன்பாட்டு மொழியாக அங்கீ கரிக்கப்பட வேண்டுமென்று இந்த மாநாடு; மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் நிறை வேற்றப்பட்ட நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர், மதுரை பொன்.முத்துராமலிங்கம் தமிழிலேயே முழுவதும் வாதாடினார்.

அது அப்போதே “இந்து” நாளிதழில் “Judges impressed: “First case argued entirely in Tamil”  என்ற தலைப்பிலே,

“Pon. Muthuramalingam, a former Minister and lawyer, argued the criminal appeal, filed by two convicts in a 2007 murder case, before a Division Bench comprising Justice M. Chockalingam and Justice M. Duraiswamy. The judges recorded their appreciation of the counsel’s effort.”   விரிவாக வெளியிட்டிருந்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வளவிற்குப் பிறகும், உச்சநீதிமன்றம் இதற்கு ஆட்சேபணை தெரிவித்த காரணத்தினால் மத்திய அரசினால் அப்போது தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க முடியவில்லை. இருந்தாலும் தமிழகத் திலே அப்போது தி.மு.கழக அரசு இருந்த காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றத்திலே பெரும்பாலான வழக்குகளின் விசாரணைகள் எல்லாம் தமிழிலேயே நடைபெற்றன. தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய் இக்பால் அவர்களும், கழகம் ஆட்சியிலே இருந்த காலத்தில், 2010ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால் தற்போது, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஜனவரி 3ஆம் தேதியன்று ஒரு வழக்கறிஞரிடம் தமிழில் வாதம் செய்ய அனுமதி மறுத்ததோடு; தமிழில் வாதம் செய்ய அரசியல் சட்டத்தில் அனுமதி வழங்கப்பட வில்லை என்றும் கருத்துக் கூறியுள்ளார். இதனை எதிர்த் துத்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்கக்கோரி, வழக்கறிஞர்கள் போராட்டத் தில் ஈடுபட்டார்கள். அவர்களின் போராட்டம் மிகவும் நியாயமான போராட்டம் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மத்திய அரசு இந்தப் பிரச்சினையிலே தலையிட்டு, வேறு சில வட இந்திய மாநிலங்களில் தற்போது நடை முறையிலே இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக் கப்பட்டுள்ளதைப் போலவே, தமிழகத்திலே உள்ள உயர் நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக தமிழை சட்டப் படி கையாளுவதற்கு, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவரிடம் தி.மு.கழக ஆட்சிக் காலத்திலிருந்து ஒப்புதலுக்காக நிலுவையிலே உள்ள சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Banner
Banner