தொடர்

தந்தை பெரியார்

தலைவர் அவர்களே!  சகோதரிகளே!! சகோதரர்களே!!!


இன்று இந்து சமுகம் என்பதற்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.  ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரி கூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும், அதைக் கொண்டாடினால் மோட்சம் அடையலாம் என்றும், பிரசங்கம் செய்யக் கூட்டு வார்கள்.  ஆனால் நீங்கள் இம்மாதிரி பண்டிகையை இனி வெறுக்கும்படி எடுத்துச் சொல்லும் உணர்ச்சி உள்ளவனை கூப்பிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.

இக்கூட்டத்திற்கு நீங்கள் ஒரு அருமையான தலை வரைக்கண்டுபிடித்தது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.  தலைவர் திரு.வி.எஸ்.செங்கோட்டையார் அவர்கள் பெரும்செல்வவான், பொது ஜனங்களுக்குப் பெரிதும் உபகாரியாய் இருந்து வருபவர். அநேக நல்ல பொதுக் காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். அதுபோலவே மத விஷயங்களிலும் பெரிதும் ஈடுபட்டு மத சம்பந்தமான விஷயங்களில் அநேக காரியங்கள் செய்து வருபவர்.  ஆதலால் அவரை இக்கூட்டத்திற்குத் தலைமை வகிக்க ஏற்பாடு செய்த உங்களைப் பாராட்ட வேண்டியதே.  எனது உபன்யாசம் பயன்படுமானால் சீர்திருத்தத் துறைக்குத் தலைவரால் அநேக லாபம் ஏற்படும்.  அவர்கள் என்னை குருவென்றும் மற்றும் பிரமாதமாய் புகழ்ந்து பேசினார்.  நான் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை.  நானும் அவரும் மற்றும் இந்த ஊர்க்காரர்களும் ஒன்றேயாவோம்.  30,40 வருஷங்களாகவே தாய்பிள்ளைகள்போல் நெருங்கி பழ கினவர்கள்.  ஒரே துறையில் வியாபாரம் செய்துவந்தவர்கள்.  அநேகர் எனக்கு வரவு செலவுகாரர்களாய் இருந்தவர்கள்.  அக்கிராசனர் வியாபாரத்துறையில் மேலோங்கிவிட்டார்.  நான்  வேறு துறையில்  இறங்கிவிட்டேன்.  இவ்வளவு தான் வித்தியாசம்.  தலைவரும் இந்தத் துறையில் இறங்கி இருந்தால் அபாரமான காரியங்களைச் சாதித்து இருப்பார்.  ஆதலால் அவரை விட நான் ஒன்றும் சிறந்தவனல்ல.  அவர் போன்றவர்கள் இவ்வித உபன்யாசங்களுக்குத் தலைவராகக்கிடைத்துமனமாறுதல் அடைந்தால் நாட்டில் எவ்வளவோ திருத்துப்பாடு ஏற்படும். தவிரவும் வயதில் மூத்தவன் என்கின்ற காரணத்திற்காக மரியாதை செய்வது என்கின்ற மூடப்பழக்க வழக்கத்தை ஒழிப்பது சீர்திருத் தத்தில் பட்டது என்று தலைவர் திரு. செங்கோட்டையா அவர்கள் கருதாததால் தன்னை வயதில் சிறியவன் என்று பல தடவை சொல்லி விட்டார்.  அது சரியல்ல.  அறிவுள்ள வர்களும் , அரும் பெரும் காரியங்களைத் தன்னலமற்று தியாகபுத்தியுடன் செய்கின்றவர்களும்தான் பெரியவர்களே யொழிய, வெறும் வயதைப்பார்த்து, நரையைப்பார்த்து, நடுக்கத்தைப்பார்த்து பெரியவர்கள் என்று மயங்குவது தவறுதலாகும்.  ஆகையால் இன்று நமக்குக்கிடைத்த தலைவர் சரியானதலைவரேயாவர்.  பெரியவரேயாவர். மற்றும் எனக்குப் பல வரவேற்புப் பத்திரங்கள் கொடுத் தீர்கள்.  அதில் நீங்கள் எனது கொள்கைகளை நன்றாய் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் அந்தக் கொள்கை களுக்கு என்னை ஊக்கமாய் உழைக்கும்படி எதிர்பார்க் கீன்றீர்கள். தூண்டுகின்றீர்கள் என்றுமேதான் கருதி அவற்றை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொள்ளுகின்றேன்.

சீர்திருத்தம்

தவிர 'சீர்திருத்தம்' என்பதைப்பற்றிப் பேசுவதில் யாருக் குச் சீர்திருத்தம்?  எப்படிப்பட்ட சீர்திருத்தம்?  எதற்காகச் சீர்திருத்தம்?  எது சீர்திருத்தம்?  அவற்றை எப்படி நிர்ண யிப்பது?  அதற்கு முட்டுக்கட்டை எது?  பிறகு அவற்றை எப்படி அமலுக்கு கொண்டு வருவது?  என்பவைபோன்ற விஷயங்கள் சீர்திருத்தத்தலைப்பில் பேச வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.  அப்படிப்பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும் அறிவுக்குட்பட்ட சீர்திருத்தம் என்றும், மனிதத் தன்மையும் சுதந்திரமும் அடைவதற்கு என்றும், உலக அக்கம் பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமையுடன் போராடி சீர் திருத்தமடைய வேண்டுமென்றும்தான் சொல்லக்கூடும்.  எவ்வித சீர்திருத்தத்திற்கும் பலவிரோதிகள் உண்டு.  அவை பழைமை, முன்னோர்வாக்கு, மகான்வாக்கு, வேதத்தின் கட்டளை, சாஸ்திரசம்மதம், வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம், நம்பியே ஒப்புக்கொண்டாக வேண்டியது என்பவைபோன்ற நிர்ப்பந்தம் முதலியவைகள் எல்லாம் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவை களுமாகும்.

தன்னைச் சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக் கொள் ளுகின்றவர்கள் மேற்கண்ட அவ்வளவையும் தங்கள் அறிவால் பிரதிட்சயக் கண்களால் அலசிப் பார்க்க உரிமையும் தைரியமும் உடையவர்களாக இருக்கவேண்டும்.  அதைவிட்டு விட்டு 'மற்றதெல்லாம் சரி' ஆனால் 'மதத்தைப் பற்றி பேசலாமா?  கடவுளைப்பற்றி பேசலாமா?  தேசியத் தைப்பற்றி பேசலாமா?  புராணங்களைப்பற்றி பேசலாமா?  மகான்களைப்பற்றி பேசலாமா?  மகான்கள் அபிப்பிரா யத்தைப்பற்றி பேசலாமா?  நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டா' என்பது போன்ற பிடிவாதகுணங்களும், தன்னம் பிக்கையற்ற குணங்களும், 'ஆனால்'களும் உடைய வர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது.  ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும், தனது அறிவில் நம்பிக்கையும், பரீட்சிக்கும் தாராள தன்மையும் வேண்டும்.  இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்த மடைந்துவிட்டது.  நாம் மாத்திரம் யாரைத் தொடலாம்?  யார் வீட்டில் சாப் பிடலாம்?  எதைச் சாப்பிடலாம்?  என்பது போன்றவைகளில் இப்பொழுது , இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம்.

உலக மக்கள் ஆகாயத்தில் பறக்கின்றார்கள்.  நம் மகான்கள் பிணங்கள்போல் மக்கள் தோள்களின் மீது சுமந்து செல்லப்படு கின்றார்கள்.  மற்ற நாட்டு மக்கள் புதிய, புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சீர்திருத்தமடை கின்றார்கள்.  நமது நாட்டு மக்கள் நம்பாட்டன் காலத்தில் இருந்த சாதனத்தைத் தேடிப் பிடித்து அட்டாலியில் இருந்து இறக்கி அமலுக்குக் கொண்டு வருகின்றார்கள்.

முன்னேற்றம், சீர்திருத்தம் என்கின்ற துறையே நமது நாட்டு மக்களுக்குத் தடைப்படுத்தப்பட்டு விட்டது.  அந்தப்பக்கம் திரும்புவதென்றால் "உயிரை விடுகின்றேன்" என்கின்றார்கள்.  ஏனெனில் இன்றைய இந்திய நிலைமை நமது பாட்டன் காலத்து நிலைமை.  ஆகிய எல்லாம் சோம்பேறிகள் வயிற்றுப் பிழைப் புக்கும் ஒருவர் பிழைக்க ஒருவர் உழைக்கும் முறைமைக்கும் அனுகூலமாய் கற்பிக் கப்பட்டிருப்பதால் அதிலிருந்து மாறுவதற்கு சோம்பேறி களும், ஊரார் உழைப்பில் சாப்பிடுகின்றவர்களும் ஒரு நாளும் ஒப்பமாட்டார்கள் ஆதலால் நம் நாட்டுமக்களே நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின் றார்கள்.  இந்தக் கூட்டம் ஒரு நாளும் இந்தியாவை - இந்து மக்களை முன்னேற விடவே விடாது.  சுதந்திரமாய் வாழவும் சம்மதிக்க மாட்டார்கள்.  அதனாலேயேதான் அவர்கள் பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும், அவர்களுக்குச் செல்வம் சேராமல் இருக்கும் படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால், கடவுள் பெயரால் தேசியத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90-மக்களை 100-க்கு 10 மக்கள் ஏமாற்றி வருகின்றார்கள்.  இந்த சூழ்ச்சி மாறுதலடைய வேண்டுமானால் கடவுள், மதம், தெய்வீகம், தேசியம் முதலாகிய எல்லா புரட்டுகளையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும் அதற்கு மக்கள் சம்மதிப்ப தென்பது மிகக் கஷ்டமான காரியமாகும். ஏனெனில் இவை சம்பந்தமான மூட நம்பிக்கையும், பிடிவாதமும் நம் மக்களது இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது.  அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத்தையும், வயிற்றுப் பிழைப்பாய்க்கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டுவருகின்றார்கள்.  அவர்களது தொல்லை அடி யோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோ, முன்னேற்றமோ சுலபமான காரியமல்ல.

உதாரணமாக, மதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதிவித்தியாசம் தப்பு, பழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள் ளுவானா?  என்று பாருங்கள்.  அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக்கட்டை யாக இருப்பானா?  அல்லது இருக்கமாட்டானா?  என்று பாருங்கள், அன்றியும் மதப் பிரசாரம் செய்யவும் வெளி கிளம்பமாட்டானா?  என்றும் பாருங்கள்.  இதுபோலவே கடவுள், தேசியம் என்பதின் பயனாய் வயிறுவளர்க்கும் சோம்பேறிகள் அப்புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா?  என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசிய பிரசாரம் செய்ய மாட்டார்களா?  என்றும் யோசித்துப் பாருங்கள்.

இந்த முட்டுக்கட்டையும் எதிர்பிரசாரக்கூட்டமும் இயற்கையே யானாலும் அவை யொழிந்தாகவேண்டும்.  நமது மக்கள் படித்தவர்கள் என்றாலும், பாமர மக்கள் என்றாலும் இவ்விஷயங்களில் ஒரே மாதிரி மூடர்களாகவே இருக்கின்றார்கள்.

உதாரணமாக, ஒரு 'வடுகனோ' ஒரு 'கைக்கோளனோ', 'ஒரு செட்டியோ',  எவ்வளவு தான் சுத்தமாய் இருந்து கொண்டு ஒருபடி அரிசிக்கு 30 இட்லி போட்டு இட்லி 1-க்கு கால் அணாவுக்கு விற்றாலும் நமது அறிவாளிகள் என்பவர்கள் வாங்குவதில்லை.  ஆனால் பார்ப்பனன் என்கின்ற ஒருவன் எவ்வளவு அழுக்குத்துணியுடனும், சொரிசிரங்குடனும், வேர்வை நாற்றத்துடனும், வெள்ளைப் படையுடனுமிருந்தாலும் ஒரு படிக்கு 60 இட்லி வீதம் போட்டாலும், இட்லி ஒன்று 0-0-6 பை வீதம் முன் பணம் கொடுத்து 'சாமி, சாமி' என்று 'சொர்க்கவாசல் பிரசாதம்' போல் கேட்டு வாங்கிச் சாப் பிடத் தயாராயிருக்கின்றோம்.  இது பாமர மக்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.  பண்டிதர்களிட மும், நாகரிக செல்வவான்களிட முமே இந்தக் குணத்தை பார்க்கின்றேன்.

ஆகவே சீர்திருத்தத்திற்கு யார் முட்டுக்கட்டை என்று பாருங்கள்.  இதுபோலவே கடவுள் விஷயத்திலும், கடவுள் என்பதை மனிதன் தனது அக்கிரமங்களுக்குப் பரிகாரம் என்று நினைத்துக் கொண்டு, மற்றவர்களை இம்சித்துத் தப்பித்துக் கொள்வதற்கும், ஏமாற்றுவதற்கும், தான் மற்றமக்களை  விட அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தி அதனால் அடைந்த பயனை நிலை நிறுத்திக்கொள்ள கடவுளை ஒரு சாக்காய் வைத்து அதற்குக் கோவில் கட்டவும், கும்பாபிஷேகம் செய்யவும், விளக்குப்போடவும், அதன் தலையில் பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய வஸ்துக்களைக் கொட்டிப் பாழாக்கவும், அதை ஆதாரமாய்க் கொண்டு இந்தக்காரியம் செய்து வயிறு பிழைப்பதையே ஒரு தொழிலாய்க் கொண்டு அநேக சோம்பேறிகள் பிழைக் கவுமான காரியத்தில் அமர்ந்திருக்கும் கூட்டத்தார், கடவுள் புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா?  மேலும் முட்டுக் கட்டையாய் இருக்கமாட்டார்களா?  மற்றும் கடவுள் பிரசார மும் செய்யமாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப்புரட்டில் ஏமாறுகின்றவர்களும், இதற்கு அனு கூலமாய் இருப்பவர்களும் எல்லோரும் முழு மூடமக்கள் என்றே சொல்லிவிடலாமா?  என்றும் பாருங்கள்.

அப்படியும் இல்லையே, நல்ல சாமர்த்தியக்காரர்கள், வெகு தந்திரமாய்ப் பணம் சம்பாதிப்பவர்கள், ஜால வித்தைபோல் கெட்டிக்காரத்தனம் செய்து மற்ற மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் யுக்தி சாலிகள் ஆகிய மக்களே இவ்வளவு புத்தி நுட்பத்துடனும், தந்திரத்துடனும், கஷ்டத்துடனும் எத்தனையோ மக்கள் வயிரெரிய-எரிய அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் கல்மனதுடனும், பசியுடன் குழந்தைகளும்.  பெண்களும், மொண்டி முடங் களும், கிழடுகளும் பசியால் பதறப் பதற அதைச் சற்றும் லட்சியம் செய்யாத உலுத்த சிகாமணிகளும் ஆயிரம் ஆயிரமாய், லட்சம் லட்சமாய் இம்மாதிரி கடவுள் புரட்டு காரியங்களில்செலவு செய்து பாழாக்குவதென்றால் இதை முட்டாள்தனமென்றும், அறியாத்தனமென்றும், சுலபத்தில் அசட்டுத்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா?  என்று யோசித்துப்பாருங்கள்.  ஆகவே இந்த மக்கள் கடவுள் புரட்டை வெளியாக்க முட்டுக்கட்டையாயிருக்க மாட் டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

மற்றும் இந்த மாதிரி ஆட்களின் காரியங்களால் பிழைக்க விருக்கும் கோயிலைக்காத்துப்பிழைக்கும் மக்கள் கடவுள் பிரசாரம் செய்யமாட்டார்களா?  என்று யோசித்துப் பாருங்கள்.

இதுபோலவே தேசியமென்பதும், ஏழைகளுக்குத் துன்பம் விளைவித்து வருவதும் குடியானவர்களுக்குத் தொல்லை விளைவித்துவருவதும், தொழிலாளிகளுக்கும், சரீரத்தால் பாடுபடுகின்றவர்களுக்கும் அரைபட்டினியையே அளித்து வருவதும் சோம்பேறிகள் மூன்றுவேஷ்டியுடன் வாழவும் சரீரத்தில் வேர்வை ஏற்படாமல் மெலுக்காக வெள்ளைவேஷ்டியுடன் திரியவும், பதவி, ஓட்டுக்கும், உத்தியோகத்திற்கும் அலையும் கூட்டத்தார் இத் தேசி யத்தை நம்பியே முன்னுக்கு வர வேண்டுமென்று கருதி யிருக்கும் கூட்டத்தார், கண்மூடித்தனமாய் வியாபாரத்திற்கு முன்முதல் போடுவதுபோல் தேசிய அர்ச்சகர் களுக்கு - தரகர்களுக்கு அள்ளி அளித்துக் கொண்டிருக்கும் போது தேசியப்புரட்டை வெளியாக்குவது சுலபமா?  அல்லது சாத்தியமா?  என்றும் யோசித்துப்பாருங்கள், இவர்கள் முட்டுக் கட்டையாயிருக்க மாட்டார்களா?  என்றும் யோசித் துப் பாருங்கள்.  அதுமாத்திரமல்லாமல் ஒரு கூட்டம் சீர்திருத்தத்திற்கு எதிர்ப் பிரசாரமும் செய்யமாட்டார்களா?  என்றும் கருதிப் பாருங்கள். ஆகவே, எந்தப் புரட்டை யொழிக்க வேண்டுமானாலும் அதனால் லாபமடை கின்றவர்கள் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள்.  பேசிப் பேசி, எழுதியெழுதி இந்தக் கூட்டத் தார்களால் வசவும் தொல்லையும் பட்டுப்பட்டு பிறகு ஏதாவது சிறிது கண் விழிப்பை உண்டாக்க முடியுமே யொழிய மற்றபடி உண்மை சீர்திருத்தம் என்பது திடீரென்றாகக்கூடிய சுலபமான காரியமல்ல.

ஆனபோதிலும் விடாமுயற்சியுடன் சுயநலப்பற்றற்ற வாலிபர்களும்.  நம்பிக்கையுள்ள பெரியவர்களும் பாடு பட்டால் சீர்திருத்தம் சீக்கிரம் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை உலகம் சீர்திருத்தப் பக்கம் திரும்பி விட்டது.  இந்தியாவைப் பார்த்து உலகத்தில் எல்லா நாடும் பரிகாசம் செய்கின்றது.  ஆதலால் தானாகவே சீர்திருத் தத்திற்குப் பல நற்குறிகள் காணப்படுகின்றன, நான் உங்களைக் கேட்பதெல்லாம் அதைத் தடுக்கவராதீர்கள் என்பதேயாகும்.  சீர்திருத்தக்காரியங்களில் வேறு காரி யத்தைப் போட்டு குழப்பாதீர்கள்.  சீர்திருத்தவாதிகள் முதலில் ஜாதிப் பிரிவை அழிக்க முன்வாருங்கள். பெண் களுக்கும் ஆண்களுக்கும் சிறிதும் வித்தியாசமில்லாமல் ஒன்று போலாக்குங்கள்.  பிறகு உங்களால் என்ன காரிய மாகாது என்று நினைக்கிறீர்கள்?  சுயராஜ்யம் பரராஜ்யம் என்பதெல்லாம் உங்கள் காலடியில் தானாகவே வந்துவிடும்.  அதில்லாமல் வெறும் கூப்பாடு உண்மைப்பயனளிக்காது.  இந்த ஊரில் சுயராஜ்யக்காரர் 100க்கு 75 பேர்கள் இருப்ப தாகக் கத்தலாம், கதர் கட்டலாம், கொடி பிடிக்கலாம், காந்திக்குல்லாய் போடலாம், தீண்டாமை விலக்குவதுதான் சுயராஜ்யத்தின் முதல் கொள்கை என்றுசொல்லலாம், மகாத்மாவுக்கு ஜே! என்றுகத்தலாம்.  சுயமரியாதை இயக்கம் தேசியத்திற்கு விரோதம் என்றும் சொல்லலாம்.  ஆனால் இந்த ஊர் தண்ணீர் கிணற்றில் ஒரு பறையன் வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் மெள்ள ஒரு நான்கு பெயர்கள் சம்மதிப்பார்களா?  தண்ணீர் மொண்டவனை உதைக்காமல் இருப்பார்களா?  பாருங்கள்.  சுயராஜ்யம் என்பது வந்தால் மாத்திரம் இந்த ஊர் ஜனங்களுக்குப் புத்தி மாறிவிடுமா?  யோசித்துப்பாருங்கள்.

ஆகவே ஒருவன் "கங்காதரா மாண்டாயோ" வென்றால் எல்லாரும் விபரம் தெரியாமல் அழுகாதீர்கள்.  இந்தப் பலக் குறைவேதான் சீர்திருத்தத்திற்கு முட்டுக் கட்டை, ஆகை யால் கவனித்து உங்களுக்குக் தோன்றுகிறபடி நடவுங்கள்.  நான் சொன்னதை யோசித்து ஆராய்ந்து பார்க்காமல் நம்பிவிடாதீர்கள்.

(02-08-1931-ஆம் தேதி மாலை 5 மணிக்கு செங்குந்தர் சாவடியில் கூடிய கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

'குடிஅரசு' - சொற்பொழிவு - 09.08.1931

 

தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தடை ஏன்?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

உயர்நீதிமன்றத்திலும் வழக்கு மொழியாக தமிழ்:

சட்டப்படி, நியாயப்படி சரியானதே!

தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்!

மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளை ஆகிய இரண்டு உயர்நீதிமன்றங்களிலும் வழக்கு மொழி யாக தமிழ் நடைமுறையாகும் என்ற கலைஞர் அரசு செய்த அறிவிப்பு, ஏதோ ஒரு சிலர் எண்ணுவதுபோல், வெறும் உணர்ச்சி வயப்பட்ட முடிவல்ல; அறிவுபூர் வமான, நடை முறைப்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான, தேவையான திட்டமாகும்.

நுனிப் புல்லர்கள் அறிவார்களாக!

எந்த ஒரு முடிவும் முதல்வர் கலைஞர் அவர் களது அரசைப் பொறுத்தவரை, விரைந்து எடுக்கப் படும் முடிவானாலும், ஆழ்ந்து சிந்தித்து, உரிய சட்ட வல்லுநர்கள் கருத்தை அறிந்தே மேற் கொள்ளும் முடிவுகளாகும் என்பதை ‘நுனிப்புல்லர்கள்’ அறிந்து கொள்ளவேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 348(2) பிரிவின்படிதான் இந்த முடிவை தி.மு.க., அரசு எடுத்து, தமிழர்களின் காதுகளில் தேன்பாயச் செய் துள்ளது! இது ஒரு பொதுநலத் திட்டமும் ஆகும்!

வழக்குரைஞரோ, நீதிபதியோ என்ன பேசுகிறார் கள் என்று வழக்காடிகள் அறியாத ஒரு விசித்திரமான வேதனையான நிலை இதன் மூலம் விரட்டி அடிக்கப்படுகிறது; காரணம் ஆங்கிலம் தெரியாத வழக்காடிகளே அநேகம் பேர்கள்!

சட்டம் என்ன கூறுகிறது?

348(2)-இன்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநர் முன்கூட்டியே

அரசுத் தலைவரின் ஒப்புதலையைப் பெற்று, இந்தி மொழியிலோ அல்லது அந்த மாநிலத்தின் ஆட்சிமொழி எதுவோ அந்த மொழியிலோ, அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழி யாகப் பயன்படுத்தலாம்.

ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்போ, ஆணையோ டிக்கிரியோ, நீதிபதி கூறும்போது, அவற்றில் இது பொருந்தாது (இதனால் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று கூறப் பட்டுள்ளது) பிறகு இதுகூட 1963 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத்திய ஆட்சி மொழிச் சட்டம் (No. XIX of 1963) 1967 ஆம் ஆண்டு திருத்தப் பட்டபடி அதன் 7 ஆம் செக்ஷன்படி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புகள், ஆணைகள், டிக்கிரிகள் எது வும்கூட, குடியரசுத் தலை வரின் முன் அனுமதியோடு அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியில் அமையலாம் என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது). அதன்படி உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி யாகத் தடையேதுமில்லை.

பழம் நழுவி வாயிலும் விழுந்தது

இதனை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர். முதல்வர் கலைஞர் சொன்னதுபோல், “பழம் நழுவி வாயிலும் விழுந்தது” போன்ற மகிழ்ச்சியான ஒன்றாகும்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.என்.சுக்லா, கோபிநாத் ஆகிய இருவர் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்'

பிரபந்திக் சமிதி Vs ஜில்லா வித்தியாலய நிர்ஷாக் என்பவர்களுக்கிடையே வழக்கு ஒன்று 1976இல் நடைபெற்றது. (AIR 1977 அலகாபாத் பக்கம் 164) அந்த வழக்கில் தந்த தீர்ப்பு இதுபற்றி மிகவும் தெளிவாகவே - (உ.பி.,யில் இந்தியில் உயர்நீதிமன்ற ரிட் மனுவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தையொட்டி எழுந்த வழக்கு இது தீர்ப்பு எழுதப் பட்டுள்ளது.

மத்திய அரசின் சட்டம் மத்திய அரசு 1963 ஆம் ஆண்டைய ஆட்சி மொழிச் சட்டத்திற்கு திருத்தத் சட்டமாக(Act 19 of 1963) 1967 ஒரு சட்டம் கொண்டு வந்தது.

அதில் 7 ஆம் பிரிவின்படி,

“As from the appointed day or any day thereafter the Governor of the State may, with the previous consent of the President authorise the use of Hindi or the official language of the State, in addition to the English language for the purpose of any judgement, decree, or order passed or made by the High Court for that State and where any judgement, decree, or order, is passed or made in any such language (other than the English language) it shall be accompanied by a translation of the same in English language issued under the authority of the High Court.

குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் ஒரு மாநில ஆளுநர் ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது அதன்பின் எந்த ஒரு நாள் முதற் கொண்டோ, அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவோ, கட்டளை அல்லது உத்தரவு பிறப்பிக்கவோ ஆங்கில மொழி யுடன் இந்தி அல்லது அம் மாநிலத்தின் ஆட்சி மொழியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கலாம்; அது போன்று ஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழியில் அந்த மாநில உயர்நீதி மன்றத்தால் வழங் கப்படும் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் கட்டளை அல்லது உத்தரவுடன் உயர்நீதி மன்றத்தின் அத்தாட்சி வழங்கப்பட்ட அதற்கான ஆங்கில மொழிமாற்ற தீர்ப்பு நகலும் இணைக்கப் படவேண்டும்.

இந்த 7 ஆம் பிரிவின்படி,

1. ஏற்கெனவே குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுச் செய்யவேண்டும்

2. ஆங்கிலத்துடன் கூடுதலாக இந்த மொழியும் வழக்கு மொழியாக நீதிமன்றத்தில் இருக்கலாம்.

3. இந்த மாநில ஆட்சி மொழியிலேயே தீர்ப்புகள், ஆணைகள், டிக்கிரிகள் தரப்படலாம், அதற்கு எவ்விதத் தடையும் இல்லை.

4. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் இந்த மாநில ஆட்சி மொழியில் தரப்படும் தீர்ப்புகளோடு கூடுதலாக தருதல் வேண்டும்.

அண்ணாவின் சாதனை

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா முதல்வராக வந்தவுடன் அவர் அறிவித்த மூன்று புரட்சிகரமான திட்டங்களில் - சாதனைகளில் - இருமொழி (தமிழ், ஆங்கிலம்) என்பது ஒன்று. இதனை வழக்காடி களுக்கும் பயன்பெறச் செய்ததன் மூலம் - தமிழைச் செம்மொழி என அறிவிக்க வைத்த கலைஞர் அவர்கள் மேலும் தனது ஆட்சி என்ற மணி மகுடத்தில் ஒளிரும் வைரம் ஒன்றையும் ஆழப் பதித்து விட்டார்கள்!

தமிழ் கூறும் நல்லுலகம் கலைஞருக்கும், அவர் தம் அமைச்சரவைக்கும் என்றென்றும் நன்றி கடன் பட்டது.

அண்ணா பெயரில் கட்சி நடத்தும் இன்றைய ஆட்சியாளர்கள் இவற்றை உணர்ந்து நடக்க வேண்டும்!

அதற்கான நடவடிக்கைகளில் முனைந்து செயல் படவேண்டும்.

 

=======================

தமிழ் வழக்குமொழியாக தக்கோர் தரும் தீர்வுகள்

 

நீதிபதி ஆர்.இலட்சுமணன்

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆட்சி மொழி ஆணையத்தை பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாடு அரசு இரண்டு அல்லது மூன்று ஆணையங்களை இதற்கு முன்பு நீதிபதி அனந்த நாராயணன், நீதிபதி மகராசன் மற்றும் பிறரைக் கொண்டு அமைத்திருந்தது.

ஆணையமானது மூன்று கலைச் சொற்களை வெளியிட்டது. இது ஏற்ற நேரம். ஒரு புதிய ஆட்சி மொழி ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் - ஆங்கிலச் சட்டங்களை தமிழில் மொழிபெயர்ப்புப் பணியினை எடுத்துக் கொள்ளலாம். மற்றும் இது செய்யப்பட்டால் அது அதிகாரப்படியான மொழிபெயர்ப்புக்கும் கொள் ளப்படும்.

இதனை உயர்நீதிமன்றங்களும் பிற நீதிமன்றங் களும் அதிகாரப்படியான மொழி பெயர்ப்பாக ஏற்கும். அரசானது உயர்நீதிமன்றத்தில் உண்மை யாகவே தமிழை ஒரு கூடுதல் மொழியாகப் புகுத்த அக்கறைகாட்டுமானால், அரசானது உட னடியாக ஆட்சி மொழி ஆணையத்தை அமைத் தல் வேண்டும். அது மொழிபெயர்ப்புப் பணி யையும் பிற இதுபோன்ற பணிகளையும் செய்தல் வேண் டும். தமிழை நீதிமன்றங்களில் புகுத்துவது, தமிழை நீதிமன்றங்களில் கூடுதல் மொழி யாகக் கொண்டு வருவதற்கு உள்கட்டமைப் புகளைச் சட்டத்தமிழில் கொண்டு வருவது அவசியம். இத்துடன் இணையாக - 348 ஆம் உறுப்பில் வகைசெய்யப்பட்டவாறு ஆளுநர், இந்திய அரச மைப்பின் 348 ஆம் உறுப்பிற்கிணங்க அறிக்

கையினை வெளியிட நடவடிக்கை எடுக்க முன் வருவார்.

மாநிலச் சட்டப்பேரவை - 348 ஆம் உறுப்பில் (3) ஆம் கூறின் படி - அதனால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் சட்டங்களுக்கு ஆங்கிலம் அல்லாது வேறு மொழிகளைப் பயன்படுத்தும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

==================

 

தலைமை நீதிபதி

 

தமிழை வழக்கு மொழியாக நடைமுறைப்படுத்து வதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்ய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கூறிய கருத்துகள்:

1. சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்றும் கீழமை நீதிமன்றங் களிலும் தமிழில் வெளிவந்துள்ள சட்ட நூல்கள், இதழ்கள் அடங்கிய கிளை நூலகம் உரு வாக்கிட வேண்டும்.

2. தமிழ் மென்பொருள் உயர் நீதிமன்றத்தில் அமைத்து அனைத்து கணிப்பொறியிலும் பொருத்துவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டும்.

3. கணிப்பொறியை இயக்கத் தெரிந்த தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் நியமித்திட வேண்டும்.

4. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்திட, மொழி பெயர்ப்புக் குழு ஏற்படுத்திட வேண்டும்.

5. தமிழில் மூல சட்ட நூல்கள், சட்ட விளக்க நூல்கள் அனைத்தும் கொண்டு வர சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும்.

6. தமிழில் வெளிவருகின்ற சட்ட நூல்களுக்கு சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.

7. தமிழில் வெளிவரும் சட்ட இதழ்களுக்கும் சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.

8. மாநில ஆட்சி மொழி ஆணையத்தை விரைவில் உருவாக்கிட வேண்டும்.

9. உயர்நீதிமன்றத்தில் தமிழை நடைமுறைப் படுத்துவதற்காக மூத்த நீதிபதி தலைமையில் நீதிமன் றத்தில் ஒரு குழு ஏற்படுத்திட வேண்டும்.

10. சட்ட கலைச்சொற்கள் உருவாக்க தனிக்குழு நியமித்திட வேண்டும்.

11. தமிழில் வெளிவந்து கொண்டிருக்கின்ற சட்டக்கதிர், தீர்ப்புத் திரட்டு இந்த இரண்டு இதழ்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது நூலகங்கள், ஊராட்சிமன்ற படிப்பகங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நீதிமன்றங்களின் நூலகங்கள் அனைத் திலும் இடம்பெற சிறப்பு உத்தரவினை வழங்கிட வேண்டும்.

12. அரசு விளம்பரங்களை சட்டக்கதிர் இதழில் வெளியிட சிறப்பு உத்தரவினை வழங்கிட வேண்டும். சட்டக் கதிருக்கென சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.

இதுபோன்ற பணிகளை செய்து முடித்தால்தான் தமிழ் நாட்டில் சென்னை உயர் நீதி மன்றத்திலும் அதன் கீழ் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்கு மொழியாக உயர்ந்து நிலைபெறும்.

==================

உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சாந்தகுமாரி

உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழ் ஆவதற்கு செய்ய வேண்டியவை:

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழி யில் பெயர்தல் வேண்டும்” என்ற எம் பாட்டன் பாரதியின் வாக்குக்கு இணங்க லத்தீன் வார்த்தைப் பிரயோகங்களில் உள்ள கொள்கை நெறிகளை தமிழில் மொழி பெயர்ப்போம்.

மத்திய - மாநிலச் சட்டங்கள் அனைத்தையும் அதிகாரப் பூர்வ மொழியாக்கத்தில் தமிழில் கொண்டு வருவோம்.

சட்டச் சொல் அகராதியை வளப்படுத்தும் வகையில் சட்ட நீதியான புதுப்புது சொல்லாக்கத்தை முன் வைப்போம்.

நீதிபதிகளது தீர்ப்புரைகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ய புதிய மொழிபெயர்ப்புத் துறையை உருவாக்கிடுவோம்.

சட்ட மொழி தமிழாக மாற உயர்நிலைக்குழு அமைப்போம்; அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மை யிலேயே உயர் நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க உயிர் கொடுக்கும் அன்பர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைப்போம்.

சர்வதேச மாநாடுகளில், அய்க்கிய நாடுகள் சபையில் எந்தமொழியில் பேசினாலும் அடுத்த சில மணித் துளிகளில் ஆங்கிலத்தில் வருவது போல நீதிமன்றத் தில் நாம் தமிழில் வாதிடும் போது அவையனைத்தும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் உடனடி மொழிபெயர்ப்புக் கருவி மூலம் தமிழறியா நீதிபதிகள் காதிலே தேன் தமிழாகப் பாய ஆவன செய்வோம்.

அனைத்திற்கும் மேலாக அரசியல் விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழே எனும் தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை வலியுறுத்தி அதற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவோம்.

அதனடிப்படையிலேயே மாநில ஆளுநரின் அனுமதியோடு தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக பிரகடனப் படுத்துவோம். ஆக்கப்பூர்வ மான இப்பணிகளுக்காக தமிழ் காக்க விரும்பும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், ஆட்சியாளர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்து ஆரோக்கியமாக செயல்படுவோம்.

இவையெல்லாம் நடந்து முடிவதற்கு சில காலம் ஆகத்தான் செய்யும். இங்கே காலம் கனியக்காத் திருத்தல் தவிர்க்க முடியாதது. அதுவரை கவிஞர் ஞானக் கூத்தன் சொன்னது போல “எனக்கும் தமிழ் தான் மூச்சு : ஆனால், அதைப் பிறர்மேல் விடமாட் டேன்” என்பதை நினைவில் கொள்வோம். நமது ஒன்றிணைந்த பணியால், ஓயாத உழைப்பால் மாற்று மொழி பேசுவோரும் உயர் நீதிமன்றத்தில் தமிழில் நிகழ்வுகளை நடத்த வழி சமைப்போம்.

உயர்நீதி மன்றத்தில் தமிழே வழக்கு மொழி யென்பது நாளைய வரலாறு என்பதறிந்து பாடுபடு வோம்.

 

 

 

 

 

Banner
Banner