தொடர்

தந்தை பெரியார்

நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல் போய்விட்டது. ஆகையால், இவ்வியக்கத்தின் மூலம் தங்கள் பிழைப்பிற்குப் பாதகம் உண்டான கூட் டத்தார் அனைவரும், நமது இயக்கத்தை மறைமுகமாகவும், சில சமயங்களிலும் வெளிப்படையாகவும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவு தான் எதிர்த்தாலும் இவ்வெதிர்ப்பினால் நமது இயக்கத்தின் ஒரு உரோமங்கூட அசைக்கப்படவில்லை என்பதை நாம் பல தடவைகளில் எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இதற்கு மாறாக இவ் வியக்கம் ஒவ்வொரு நாளும் தேச மக்களின் மனத்தைக் கவர்ந்து வேரூன்றி வருகிறதென்பதை நாம் எடுத்துக் கூறுவது மிகையேயாகும்.

மதத்திற்காக மிகவும் பரிந்து பேசி, நமது இயக்கத்தை எதிர்க்கும் கூட்டத்தார் யார்? அவர்கள் செய்கையென்ன? அவர்கள் நமது இயக்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதன் நோக்கமென்ன என்னும் விஷயங்களைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இவ்வியக்கத்தின் பெருமையும் இதை எதிர்ப்பவர்களின் சிறுமையும் விளங்காமற் போகாது. ஆகையால் அவ்விஷயமாகக் கொஞ்சம் கூற விரும்பு கின்றோம்.

இன்று நமது இயக்கத்தைப் பற்றி, மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப் படையாகவும் எதிர்த்துப் பிரசாரம் பண்ணிக் கொண்டிருப்பவர்களில் முதன்மையாக இருப்பவர்கள் கீழ்க்காணும் கூட்டத்தினரே யாவார்கள் அவர்கள். அரசியல்வாதிகள், பண்டிதர்கள், புரோகிதர்கள், புத்தக வியாபாரிகள், புராண பத்திரிகைக்காரர்கள், கோயில் தருமகர்த்தாக்கள், மடத்தலைவர்கள் முதலியவர்கள்,

இவர்களில் முதலில் அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுவோம். நமது இயக்கந் தோன்றிய நாள் முதல், நாம் அரசியல்வாதிகளின் புரட்டுக்களையும், சூழ்ச்சி களையும் வெட்ட வெளிச்சமாக்கி வருகிறோம் 'சுயராஜ்யம்' என்பதும், 'சத்தியாக்கிரகம்' என்பதும், ஆகிய வார்த்தை களெல்லாம் பாமர மக்களை ஏமாற்றி ஒட்டுப் பறிப்பதற்காகக் கூறும் தந்திர வார்த்தைகள் என்று கூறி வருகிறோம். மக்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் ஒழிவதற்கு முன், ஜாதியினாலும், மதத்தினாலும் மனிதனை மனிதன் அடிமையாகவும், மிருகங்கள் போலவும் நடத்துகின்ற நிலை மாறுவதற்குமுன் இந்நிலைமையை கொஞ்சங் கூட மாற்றுவதற்கு முயற்சியும் செய்யாமல் 'சுயராஜ்யத்'திற்கும் பாடுபடுகிறோம் என்று கூறுவது சுத்த அயோக் கியத்தனத்தைத்தவிர வேறல்ல என்றே கூறி வருகிறோம். ஆகையால், அரசியலை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டி ருக்கும் கூட்டத்தார் நமது இயக்கத்தை எதிர்ப்பதும் இதைப் பற்றித் தப்புப் பிரசாரம் பண்ணுவதும் இயல்பேயாகும். இவ்வாறு, செய்வதன் நோக்கம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப்பில் மண் விழுகிறது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அறியலாம்.

இரண்டாவது, பண்டிதக் கூட்டத்தார், ஏன் நமது இயக்கத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள் எதிர்க்கிறார்கள்? என்று பார்ப்போம். நாம் குறிப்பிடும் பண்டிதர்கள் என்ப வர்கள் புராணங்களையும் இராமாயண பாரதக் கதை களையும், வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளை படித்துவிட்டு மூளை மழுங்கி, சொந்த மூளை அதாவது ஆராய்ச்சி அறிவு கொஞ்சங்கூட இல்லாமல், தாங்கள் படித்த புத்தகங்களில் சொல்லப் பட்டவைகள் தான் உண்மை. அவைகளின் படி நடப்பதுதான் ஒழுங்கு. அவை களை மீறி நடந்தாலோ அல்லது அவைகளை நம்பா விட் டாலோ, 'பாவம்' 'நரகம்' முதலியவைகள் சம்பவித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களேயாவார்கள். இப்படிப் பட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களையெல்லாம் நாம் 'பண்டிதர்கள்' என்று குறிப்பிடுகின்றோம். இப்பண்டிதர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப் பாகும். அவர்கள் புராணப் பிரசங்கம் செய்வதன் மூலமும், வருணாசிரம தருமப் பிரசங்கம் செய்வதன் மூலமும் ஜனங்களிடம் காசு பறித்து வந்தார்கள். சுயமரியாதை இயக்கப் பிரசாரத்தால் பொய்ப் புராணங்களுக்கும், அர்த்தமற்ற வருணாசிரம தர்மங்களுக்கும் ஆட்டங் கண்டு விட்டபடியால், இவைகளை வயிற்றுப் பிழைப்பாக வைத் துக் கொண்டிருந்த 'பண்டிதர்கள்' பிழைப்புக்கும், கவுரவத் திற்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இக்கூட்டத் தார் இவ்வியக்கத்திற்கு விரோதமாக இருப்பது ஆச் சரியமல்ல.

இனி மூன்றாவதாக, புரோகிதர்களை எடுத்துக் கொள் வோம். புரோகிதர்கள் என்பவர்கள் மதத்தின் பெயரைச் சொல்லி, பல சடங்குகளைப் பாமர மக்களின் தலையிற் சுமத்தி, அவைகளின் மூலம் பொருள் பறித்து ஜீவனம் பண்ணும் சோம்பேறிக் கூட்டத்தாரேயாவார்கள், இக்கூட் டத்தாரின் கையிலேயே உலக மக்கள் பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளாகவும் சிக்கித் துன்புற்று அடிமையாகக் கிடந்து வந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய சீர் திருத்தவாதிகள் எல்லோரும் முதலில் புரோகிதர்களின் ஏமாற்றல்களை ஒழிக்கவே முயன்றிருக்கின்றனர். இம் முயற்சி காரணமாகப் பல, தேசங்களில் புரோகிதர்களின் ஆதிக்கங்கள் அழிந்து விட்டன. ஆனால், நமது நாட்டில் மாத்திரம் இன்னும் புரோகித ஆதிக்கம். அழியவேயில்லை, நமது நாட்டில் இந்த புரோகித ஆதிக்கம் இந்து மதத்திலும், கிறிஸ்தவ மதத்திலும், முசுலீம் மார்க்கத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆகையால் நமது இயக்கம் ஆரம்ப முதலே புரோகிதத்தையும், புரோகிதர்களையும் பலமாகக் கண்டித்து அவர்களின் சூழ்ச்சிகளை வெளிப் படுத்தி வருகிறது. இதன் பயனாக, இந்துக்களில் அநேகர் இப்பொழுது புரோகிதத்தை ஒழித்தும் புரோகிதர்களைப் பகிஷ்கரித்தும் தங்கள் காரியங்களை நடத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். முசுலீம்களிலும் முல்லாக்களின் ஆதிக்கத்தையும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட 'பஞ்சா' வணக்கம், சமாதி வணக்கம் 'கூடு' எடுத்தல் முதலிய மார்க் கத்திற்கு விரோதமான காரியங்களையும் ஒழிக்க வேண்டும் என்று கிளர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. முற்றும் புரோகி தர்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்ற 'ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மத'த்திலும் பல இடங்களில் புரோகிதர்களைப் பகிஷ்கரிக்கும் வேலை ஆரம்பித்து விட்டது. இதனால், ரோமன் கத்தோலிக்கப் பாதிரிகள், அவர்கள் கூட்டங்களிலும், மாதா கோயில்களிலும், சுய மரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேச ஆரம்பித்திருக் கிறார்கள். இவ்வாறு புரோகிதர்களின் சோம்பேறிப் பிழைப்புக்கு ஆபத்து ஏற்பட்ட காரணத் தினாலேயே அவர்கள் நமது இயக்கத்தை எதிர்த்துப் பேசப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதில் அய்யமில்லை.

இனி நான்காவதாக, புத்தக வியாபாரிகளில் சிலர் நம்மை ஏன் எதிர்க்கிறார்கள்? என்று பார்ப்போம்; இவர்கள் புராணக்கதைகளாகிய, பெரியபுராணம், திருவிளையாடல் முதலியவைகளையும், தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம் முதலியபுத்தகங் களையும் அச்சிட்டு பாடப் புத்தகங்களாக எழுதி வெளியிட்டும் ஒரு ரூபாய் புத்தகத்தை அய்ந்து ரூபாய் விலை வைத்து விற்றும் பணம் சம்பாதிக் கின்றவர்கள். இந்தப் புராண புத்தக வியாபாரிகள் சைவத்தை வளர்ப்பதாகவும் வைணவத்தை வளர்ப்ப தாகவும், தமிழை வளர்ப்பதாகவும் கூறிப் பணம் சம்பாதித் திருப்பவர்கள். நமது இயக்கம் தோன்றியபின் இத்தகைய புத்தகங்களின் மதிப்பும் விற்பனையும் குறைந்து விட்டதால், இவர்கள் வியாபாரமும் குறைந்து விட்டது. ஆகையால் இந்தப் புராணப் புத்தக விளம்பர வியாபாரக் கூட்டத்தார் நம்மைப் பற்றி தப்புப் பிரசாரம் பண்ணுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

அடுத்தபடி அய்ந்தாவதாக, நம்மை எதிர்க்கும் பத்திரிகைக்காரர்கள் யார்? என்பதைப் பார்ப்போம். 'சமயபோதனை' 'சன்மார்க்க போதனை' நல்லொழுக்க போதனை என்னும் பெயர்களால் சைவ மதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும் வைணவமதப் பிரசாரம் பண்ணும் பத்திரிகாசிரியர்களும் கிறிஸ்தவ மதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும் இன்னும் தேசியப் பத்திரிகை என்று பெயர் வைத்துக் கொண்டு மருந்து வியாபாரிகளும் புராணப் புத்தக வியாபாரிகளும் செய்யும் 'கேட்லாக்' பத்திரிகைக்காரர்ளும் நம்மை எதிர்க்கிறார்கள். இவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுடைய வயிற்றுப்பிழைப்பு போகிறதே என்பதைத் தவிர, வேறு என்னவா யிருக்க முடியும் என்றுதான் கேட்கிறோம்.

இனி, ஆறாவதாக, கோயில் தருமகர்த்தாக்கள் ஏன் நம்மை எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதன் உண் மையும் விளங்காமல் போகாது. நமது இயக்கப் பிரசாரம் காரணமாக வரவர கோயில்களுக்குப் போகும் ஜனங்களும் குறைந்து வருகிறார்கள். கோயில் உண்டிகளில் விழும் பணமும் குறைந்து வருகிறது. அன்றியும் நாம் கோயில்களின் சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்து அவைகளைக் கல்வி, கைத்தொழில், சுகாதாரம் முதலியவைகளுக்குச் செலவு செய்யவேண்டுமென்று கூறி வருகிறோம். இவ்வா றாகி விட்டால், பரம்பரை யாகக் கோயில்களுக்குத் தரும கர்த்தாக்களாக இருந்து கொண்டு அவைகளின் செல் வங்களை அனுபவித்து வரும் கூட்டத்தாரின் சுக வாழ்விற்கு ஆபத்து ஏற்பட்டு விடுமல்லவா? ஆகையால் தான் இக்கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு விரோதமாக இருந்து வருகின்றார்கள்.

இனி, அடுத்தபடி ஏழாவதாக, மடாதிபதிகள் நமது இயக்கத்தை எதிர்ப்பதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். இந்தக்கூட்டத்தார், ஏராளமான சொத்துக் களை வைத்துக் கொண்டுஅவைகளை நாட்டு மக்களின் நன்மைக்காக ஒரு சிறிதும் பயன்படுத்தாமல் தங்கள் தங்கள் சுக வாழ்வுக்கே செலவு செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுடைய சொத்துக்களோ தேச மக்களுடைய சொத்துக்கள் என்பதில் அய்ய மில்லை. அன்றியும் இவர்கள் "மடாதிபதிகள்" என்று பெயர் வைத்துக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம் மதமேயாகும். ஆகை யினால் மதத்தையும் அழிக்க வேண்டும் மதத்தின் பேரால் வீணாகச் செலவழித்து வரும் மடாதிபதிகள் சொத்துக்கள் போன்றவைகளையெல் லாம் தேச நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறோம், இதனால் இந்த மடங்களின் கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு எதிராக இருந்து வருகின்றார்கள்.

இனி எட்டாவதாக, நாடகக்காரர்களை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளில் உள்ள நாடகக்காரர்களோ, சிறந்த படிப்பாளிகளாகவும், தேசத்தைச் சீர்திருத்த வேண்டும் என்னும் எண்ணமுடையவர்களாகவும் இருந்து வருகிறார்கள், இதற்குத் தகுந்தபடி பாமர மக்களின் மனத்தில் பகுத்தறிவு உணர்ச்சியை ஊட்டத் தகுந்த சிறந்த நாடகங்களை நடத்தி வருகின்றவர்கள். ஆனால், நமது நாட்டு நாடகக்காரர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் வயிற்றுப் பிழைப்யே குறியாகக் கொண்டவர்களாதலால் இவர்கள் பாமர மக்களின் அறியாமையை இன்னும் வளர்க்கக் கூடிய மத சம்பந்தமான புராணங்களையே நாடகங்களாக நடத்தி வருகிறார்கள். நமது இயக்கம் பரவுவதன் காரணமாக, இந்தப் புராணப் பிழைப்பு நாடகக் காரர்களுக்கு வருவாயும் குறைய ஆரம்பித்து வருகிறது ஆதலால், இவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குச் "சீன்"களும், நாடகம் நடத்தும் போதெல்லாம் அதிகப் பணத்தைச் செலவு செய்து விளம்பரமும் செய்ய வேண் டியிருக்கிறது. அப்படியும் சரியானப்படி பணம் வசூல் ஆவதில்லை. ஆகையால், இவர்களும் இப்பொழுது நம்மை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும், அதிகமாக நமது இயக்கத்தை மறைமுகமாகத் தாக்கும் நாடகக்காரர்கள் பார்ப்பனர்களே என்பதை நாம் கூற வேண்டியதில்லை. ஏனெனில், மதத்தினால் பாமர மக்களை ஏமாற்றி வருபவர்கள் பார்ப்பனக் கூட்டத்தார் அல்லவா? ஆகையால் நாடகக்காரர்கள் நமது இயக்கத்திற்கு எதிரான பிரசாரம் பண்ண ஆரம்பித்திருப்பதும் ஆச்சரியமில்லை. இனி இவ்வாறு மதத்திற்கும், வருணாசிரம தருமத்திற்கும் புராணங்களுக்கும் பரிந்து  பேசி, நம்மை எதிர்க்க மேற்கூறிய அரசியல்வாதிகள், பண்டிதர்கள், புரோகிதர்கள் முதலான கூட்டத்தார்க்கு அக்கறை உண்டாகக் காரணமென்ன? என்பதைப் பற்றி வாசகர்களே தெரிந்து கொண்டிருக்கலாம். இக்கூட்டத்தார்கள் அனைவரும் மதத்தின் பெயராலும் வருணாசிரம தருமத்தின் பெயராலும், புராணங்களின் பெயராலும், வயிறு வளர்க்கின்றவர்கள். இவைகளைக் கொண்டு ஏழை மக்களின் செல்வத்தைக் கொள்ளையடிக் கின்றவர்கள். ஆகையால் தான் இவற்றைத் தடுக்கும் நம்மைப் பற்றித் தப்புப் பிரசாரம் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதில் அய்யமில்லை.

ஆகையால், இனியும் இக்கூட்டத்தாரின் வார்த்தை களுக்கு ஏமாறாமல் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும்படி பாமர மக்களுக்கு உதவி செய்வது தான் நமது கடமையாகும். அரசியல்வாதிகளின் பேச்சையும், புராணப்பிரசங்கிகளின் பேச்சையும், புரோகிதர்களின் பேச்சையும் நம்பி தாம் சம்பாதிக்கும் பொருளை இவர்கள் கையிற் கொடுத்து விட்டு தரித்திரமாகவும் அடிமையாகவும் வாழ வேண்டாம் எனப் பாமர மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டியதே சுயமரியாதைத் தோழர்களின் கடமை யாகும். மதத்திற்கு 'வக்காலத்து வாங்கிப்' பேசுபவர்களின் பேச்சை கேட்டு யாரும் ஏமாறப் போவதில்லையென்றும், இவர்களால் சுயமரியாதை இயக்கம் அழிந்துவிட போவ தில்லையென்றும் எச்சரிக்கை செய்வதுடன், இக்கூட்டத் தாரையும் மதத்தின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றுத் தொழிலை மேற்கொள்ளாமல் வேறு கவுரவமான தொழிலை செய்து ஜீவிக்குமாறு வேண்டுகிறோம்.

'குடிஅரசு' - தலையங்கம் - 04.09.1932

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! - 2

இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து

அரசால் செலவு செய்யப்படுகின்றதா?

இந்து சமய அறநிலையைக் குறித்து எழுப்பப்படும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு, அந்தத் துறையின் பணத்தை எடுத்து பிற துறைகளுக்கு செலவழிக்கிறார்கள் என்பது. இது இந்துத்துவவாதிகளால் தொடர்ந்து சொல்லப் படும் பொய். கட்டுக்கதை.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆகவே, எந்த ஒரு மதத்திற்காகவும் தன் நிதியைச் செலவுசெய்ய முடியாது. இது ஒரு அடிப்படையான விஷயம். ஆகவே, இந்து சமய அறநிலையத் துறையின் நிதியை அரசு பயன்படுத்துவதும் இல்லை. மாநில அரசின் நிதியை கோவில்களுக்கென செலவழிப்பதும் இல்லை. இதைப் புரிந்துகொள்ள கோவில் கள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 38,635 கோவில்கள் உள்ளன. இவற்றில் திருக் கோவில்கள் 36,595. திருமடங்கள் 56. திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் 57.  Specified அறக்கட்ட ளைகள் 1,721. அறக்கட்டளைகள் 189. அரசியல்சாஸனத்தைப் பொறுத்தவரை, சமணர்களும் இந்துக்கள் என்பதால், சமணக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையே நிர்வகிக்கிறது. அப்படி 17 சமணக் கோவில்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மொத்தமாக 38,635.

இந்தக் கோவில்கள் பிறகு Non-Listed Temples (பட்டியலைச் சாராத கோவில்கள்), Listed Temples
- (பட்டியல் கோவில்கள்)  என்று பிரிக்கப்படுகின்றன. இதற்கு அந்தக் கோவில்களின் வருமானமே அடிப்படையாக அமைகிறது. கோவில்களுக்கு உண்டியல், வாடகை என ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள கோவில்கள்  Non-Listed  கோவில்கள். அந்த வகையில் 34,082 கோவில்கள் இருக்கின்றன.

ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள கோவில்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவு, ஆண்டு வருமானம் 10,000 முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை உள்ள கோவில்கள். இவற்றின் எண்ணிக்கை 3,550. இரண்டாவது பிரிவு, ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை உள்ளவை. இவற்றின் எண்ணிக்கை 672. மூன்றாவதாக ஆண்டு வருவாய் 1,00,000 ரூபாய்க்கு மேற்பட்டவை. இவற்றின் எண்ணிக்கை 331.ஆக, கிட்டத்தட்ட 85 சதவீதக் கோவில்கள் ஆண்டு வருவாய் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ளவைதான்.

இத்தனை ஆயிரம் கோவில்களையும் நிர்வகிக்க மிகப் பெரிய கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக் கிறது. இந்த கட்டமைப்பின் ஒட்டுமொத்த தலைவர் ஆணையர். அவருக்குக் கீழே, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தனி அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,  முதுநிலை வரை நிலை அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது. இவை தவிர, கோவிலை நிர்வகிக்கும் அந்தந்த கோவில்களின் ஊழியர்கள் தனி.

சரி, இவர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது, அரசா, கோவில்களா? கோவில் ஊழியர்களைத் தவிர்த்த அனைவருக்கும் தமிழக அரசுதான் சம்பளத்தைத் தரு கிறது. ஆணையரில் துவங்கி, தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். சரி, ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி இந்துக் கோவில்களின் நிர்வாகத்திற்காக தன் பணத்தை செலவிட முடியும் என கேள்வியெழுப்பலாம்.

அதற்கும் ஒரு ஏற்பாடு இருக்கிறது. Assessible income   என்று சொல்லக்கூடிய வரி செலுத்தக்கூடிய வருவாயில் 14 சதவீதம் அரசுக்குச் செல்லும். இந்த 14 சத வீதத்தை கோவில்களில் இருந்து பெற்று, இந்தக் கட்ட மைப்பை நிர்வகிக்கிறது தமிழக அரசு. கோவிலின் நேரடி ஊழியர்கள், அந்தக் கோவிலின் நிதி நிலைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.

இந்த 14 சதவீதத்தைத் தவிர, இந்துக் கோவில்களின் வருவாய் எதையும் அரசு எடுப்பதில்லை.

இதற்கு மற்றொரு ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. அதாவது Commissioner Common Good Fund
என்று இதற்குப் பெயர். அதிக வருவாய் உள்ள கோவில்கள் இந்த நிதிக்கென ஒரு குறிப்பிட்ட அளவு வருவாயைச் செலுத்த வேண்டும். இந்த நிதியிலிருந்துதான் வருவாய் கிடைக்காத கோவில்களின் திருப்பணிகளும் பிற செலவுகளும் சமாளிக்கப்படுகின்றன.

உண்மையில், ஒரு கோவிலில் கிடைக்கும் வருவாயை வங்கியில் போட்டுவைக்கவே பல விதிமுறைகளை அரசு வகுத்திருக்கிறது. முதலாவதாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டாவதாக கூட்டுறவு வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். மூன்றா வதாக, அதிக வட்டி கிடைக்கும் வங்கியில் குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். அரசு குறிப்பிட்ட அளவு மாறினால்,  தணிக்கையின்போது அது கவனிக்கப் பட்டு, கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப் பப்படும்.

கோவிலின் நிதி என்பது இவ்வளவு கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ஏதோ இந்துக் கோவில் களின் பணத்தை எடுத்து இலவசத் திட்டங்களுக்கு அரசு செலவுசெய்வதைப்போல ஒரு பொய்ப் பிரச்சாரம் தீவிர மாகச் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவிலேயே மிகச் சுத்தமாக நிர் வகிக்கப்படும் கோவிலுக்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெற்றது. அதற்குத் தகுதியான கோவில் தான் அது என்பதை அங்கு சொல்பவர்கள் உடனடியாக உணர முடியும்.

ஒவ்வொரு கோவிலையையும் அறநிலையத் துறை கையகப்படுத்தும்போது, அந்தக் கோவிலுக்கென உள்ள நகைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு பதிவு செய்யப் படுகின்றன. ஒரு நகை இந்தப் பட்டியலுக்குள் இடம் பெற்று விட்டால், அந்த நகை காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படும். வருடந்தோறும் இந்த நகைகள் எடுத்து, பரிசோதிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதையெல்லாம் மீறி ஒரு சிலை திருட்டுப்போனால், அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி, அறங்காவலர்கள், பாதுகாவலர்கள், ஊழியர்கள் என பல தரப்பினரும் விசார ணைக்கு உள்ளாக்கப்படுவதோடு, வழக்கையும் எதிர் கொள்வார்கள். அப்படியானால், சிலை திருட்டுகள் நடப்ப தில்லையா என்றால், நடக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், அவை விதிவிலக்குகள். இம்மாதிரி திருட்டில் ஈடுபடுபவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள் என் பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதை விடுத்துவிட்டு, அறநிலையத் துறை என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும் என்று கோருவது முட்டாள்தனமானது. இவ்வளவு பெரிய அமைப்பைக் கலைத்துவிட்டு, சட்டங்களை நீக்கிவிட்டு, இந்த நிர் வாகத்தை யாரிடம் கொடுப்பது? பச்சை பொய் ராஜாக் களிடமா?

ஏற்கனவே ஆதீனங்கள்தான் மதுரைக் கோவிலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்; அரசு அநியாயமாக அந்தச் சொத்தைப் பிடுங்கிக்கொண்டுவிட்டது. மீண்டும் சமயப் பெரியார்களிடம் அதை ஒப்படைப்பதே முறை என்கிறது இந்தக் கும்பல். ஆனால், உண்மை என்ன? மீனாட்சி அம்மன் கோவில் ஆதீனத்தின் சொத்தா? அவர்கள் எப்போதாவது நிர்வாகம் செய்திருக்கிறார்களா? இதோ விளக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் துவக்கம் குலசேகர பாண்டியனது காலத்தில் ஆரம்பிக்கிறது.அந்த மன்னன், கோவில் வழிபாடுகளை நடத்த சில கவுட பிராமணர்களை நியமித்தார். ஆனால், கோவில் நிர்வாகம் நேரடியாக மன்னனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலை 14ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டியன் காலம் வரை நீடித்தது. 1310ல் மாலிக் காஃபூர் மதுரை மீது படையெடுத்துவந்து, கோவி லைச் சூறையாடினான். பாண்டியர்கள் மதுரையை நீங் கினர். பிறகு குமார கம்பன்னர்கள் 1378ல் மதுரையை மீட்டு, கோவிலில் வழிபாடுகளைத் தொடரச் செய்தனர். அப் போது துவங்கி நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வரும்வரை மீண்டும் மன்னர்கள் கட்டுப்பாட்டிலேயே மதுரைக் கோவில் இருந்தது. குறிப்பாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரையும் மீனாட்சி அம்மன் கோவிலும் பெரும் வளர்ச்சியை அடைந்தன. கடைசி அரசி மீனாட்சி சாந்தாசாகிபால் கொல்லப்பட்ட பிறகு உற்சவ மூர்த்திகள் மானாமதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டன. கோவிலில் அரச ஆதரவின்மையால் வழிபாடுகள் குன்றின. பிறகு கிழக்கிந்திய கம்பெனி மதுரையின் நிர்வாகத்தைக் கைப் பற்றியது.

1801ல் மதுரை ஆட்சியராக உர்திஸ் பதவியேற்றார். அப்போது முதல் 1841 வரை மாவட்ட ஆட்சியர் வசமே கோவில் நிர்வாகம் இருந்தது. ஆனால், இந்துக் கோவில் களை ஏன் கிறிஸ்தவர்கள் நிர்வகிக்க வேண்டும் என பாதிரிமார்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கவனிக்கவும், இந்துக்கள் கிளர்ச்சி செய்யவில்லை. கிறிஸ்தவர்களே கிளர்ச்சி செய்தனர். இதனால் கோவில் நிர்வாகம் முத்து செல்லத் தேவர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீது ஊழல் புகார்கள் எழவே, தனசிங் என்பவரிடம் ஒப் படைக்கப்பட்டது. அவர் மீதும் புகார்கள் எழுந்தன.

அப்போதுதான் முதன்முதலாக கோவில் நிர்வாகம் 1859ல் மதுரை ஆதீனம் எனப்படும் திருஞானசம்பந்தர் மடத்தின் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், நிர் வாகம் சரியில்லையென புகார்கள் எழுந்தன. இதையடுத்து 1864ல் ஆதினகர்த்தர் தலைமையில் அய்வர் குழு அமைக் கப்பட்டது. இருந்தபோதும் தினசரி நிர்வாகத்தை தாசில்தார் கவனித்துவந்தார்.

ஆனால், இதிலும் நிலைமை சரியில்லாத நிலையில் மீண்டும் கோவில் நிர்வாகம் பிரிட்டிஷ் அரசின் வசம் சென்றது. அவர்கள் முத்து கரு.வெ. அழகப்பச் செட்டி யாரை ரிசீவராக வைத்து கோவிலை நிர்வகித்தனர். அதற் குப் பிறகு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசுதான் கோவில் நிர்வாகத்தைக் கவனித்துவந்தது.

1937இல் கோவிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ். நாயுடுதான் தமிழகத்திலேயே முதன் முறையாக தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். தனிநபர்களின் வசம் கோவில் இருந்திருந்தால், குறிப்பாக மதுரை ஆதீனம் வசம் கோவில் இருந்திருந்தால் நித்யானந்தாவிற்கு வரவேற்பு கிடைத்திருக்குமே தவிர, எளிய மக்கள் உள்ளேயே நுழைந்திருக்க முடியாது.

ஆக, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீளும் வரலாற் றில் ஆதீனம் கோவிலை நிர்வாகம் செய்தது வெறும் 5 ஆண்டுகள்தான். அதிலும் ஆயிரம் புகார்கள்.

உண்மையில் திருமலை நாயக்கர் காலத்திற்குப் பிறகு, மதுரைக் கோவில் தன் மகோன்னத நிலையை எட்டியிருப் பது இப்போதுதான். ஒரு தீ விபத்தால் எல்லாம் மாறிவிடாது.

நமது திருக்கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவை பொதுமக்களின் வாழ்வின் அங்கம். அவற்றை ஒருபோதும் தனிநபர்களால் நிர்வகிக்க முடியாது.

தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் சமூக நீதி செயல்பாடுகளால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி யினர், பிற்படுத்தப்பட்டவர்கள் எனப் பலரும் அறநிலையத் துறையில் பணியாற்றிவருகின்றனர். அறங்காவலர் குழு வில் நிச்சயமாக ஒரு தாழ்த்தப்பட்டவர் இடம்பெற வேண் டுமென்கிறது சட்டம். இதைப் பலரால் சகிக்க முடியவில்லை. ஆகவேதான் மீண்டும் தங்களது தனியுரிமை கோலோச்ச வேண்டும் என்கிறார்கள்.

தமிழ்நாட்டுக் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் கொள்ளை போகின்றன என்பது நீண்டகாலமாக சொல்லப் பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் கோவில்கள் என்பவை வெறும் வழி பாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. கோவிலைச் சுற்றி வழிபாடு தவிர்த்து மிகப் பெரிய வாழ்க்கை இருந்தது. இலக்கியம், இசை, நடனம், பழக்க வழக்கங்கள், சடங்குகள் எல்லாமே அந்தந்த ஊரின் கோவில்களைச் சார்ந்தவை. இப்போதும் மதுரை மக்களின் ஆழ்மனதில் மீனாட்சி அம்மன் கோவில் என்பது எப்போதும் நிலை கொண்டி ருக்கும், அவர் எந்த மதத்தவராயினும் சரி. மீனாட்சி கோவி லின் திருவிழாக்களை ஒட்டியே, மக்கள் தங்கள் திட்டங் களை, நல்லது - கெட்டதுகளை வகுத்துக்கொள்வார்கள்.

ஆகவே, இம்மாதிரி கோவில்கள் நல்ல முறையில் செயல்பட, அவை தோன்றிய காலம்தொட்டே மன்னர் களும் ஆட்சியாளர்களும் அந்தக் கோவில்களுக்கு நிலங் களையும் செல்வங்களையும் பெரும் அளவில் அளித்தனர். அப்படி அளிக்கப்பட்ட நிலங்களுக்கு வரி கிடையாது. ஆகவே அவை ‘இறையிலி நிலங்கள்’ என்று அழைக்கப் பட்டன.

இப்படி வழங்கப்பட்ட நிலங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று, கோவில் பெயரிலேயே முற்றிலுமாக இறைவனுக்கு எழுதிவைக்கப்பட்ட இறையிலி நிலங்கள். இரண்டாவது, ‘குடி நீங்கா தேவதான’ நிலங்கள். முதல் வகை நிலத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலுமாக கோவிலுக்குச் சொந்த மான நிலம். அதன் பயன்பாடு கோவிலைச் சார்ந்தது.

இரண்டாவது வகை நிலத்தைப் பொறுத்தவரை, அந்த நிலம் குடியானவருக்குச் சொந்தமாக இருக்கும். ஆனால், அந்த நிலத்தில் விளையும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை கோவிலுக்குச் செலுத்த வேண்டும்.  இந்த நிலங் களை குடியானவர்கள் விற்கலாம், குத்தகைக்கு விடலாம், வாடகைக்கு விடலாம். ஆனால், இறைவனுக்கு விதிக்கப் பட்டதை தந்துவிட வேண்டும்.  மதுரையில் சிறிய கோவில் களுக்குக்கூட இப்படி ‘குடி நீங்கா தேவதான’ நிலங்கள், வீடுகள் இப்போதும் உண்டு.

தமிழகத்தில் ஆங்கில ஆட்சி வந்த பிறகு, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு வரி வருவதில்லை என்று கண்டுபிடித்தனர். அப்படி எந்தெந்த நிலங்கள் வரி விதிக்கப்படாமல் இருக்கின்றன என்பதைக் கண்டறிய ஒரு ஆணையம் ஒன்றை அமைத்தனர். அந்த ஆணையத்தின் பெயர்  . இந்த ஆணையத்தின் அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று, நிலங்களை அளந்து, இனாம் நிலங் களைக் கண்டறிந்து அவற்றை உறுதிப்படுத்தினர். அந்த நிலங்களை யாரெல்லாம் பயன்படுத்திவந்தார்களோ அவர் களுக்கு   என்ற உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. பிறகு இந்த விவரம் இனாம் சுத்த நகல் பதிவேட்டில் -   - பதிவுசெய்யப்பட்டது. இந்தப் பதிவேடு இரு பிரதிகளாக உருவாக்கப்பட்டது. ஒரு பிரதி மாவட்ட தலைமையகத்தில் வைக்கப்பட்டது. இரண்டாவது பிரதி சென்னை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டது. தமிழக ஆலயங்களுக்கு கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் செய்த மிகப் பெரிய சேவை இது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இனாம் நிலங்கள், ஜமீன்தாரி நிலங்களை ஒழித்து அவற்றை வரி விதிக்கும் முறைக்குள் - ரயத்வாரி - கொண்டுவருவதற்கான நடை முறைகள் உருவாக்கப்பட்டன. அப்போதுதான் தமிழக கோவில் நிலங்களுக்கு மிகப் பெரிய அநீதி நிகழ்ந்தது.

அதாவது, 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியன்று யாரெல்லாம் ஜமீன் நிலங்கள், கோவில் நிலங்கள், புறம் போக்கு நிலங்களை 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந் திருக்கிறார்களோ, அவர்களுக்கு நிலங்கள் பட்டா போட் டுத் தரப்பட்டன. 12 ஆண்டுக்குக் குறைவான காலத்திற்கு நிலத்தைப் பயன்படுத்தியவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்த பிறகு, நிலத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் கூறியது.

கோவில்களுக்கு சொந்தமான நிலம் இவ்வாறு தனிநபர் களுக்கு வழங்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு அந்தக் கோவில்களுக்கு தரும் என்று கூறப்பட்டது. அப்போதுவரை இப்போதுவரை இந்த இழப்பீடு வந்து சேரவில்லை.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1963.

திராவிடக் கட்சிகள் மீது

குற்றம் சாட்டுவது தப்பு!

இப்படி நிலங்களை அப்போது அனுபவித்துவந்தவர்கள், பா.ஜ.ககாரர்கள் சொல்வதைப் போல தி.மு.கவினர் அல்ல. கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், ஆளும் கட்சியின் செல்வாக்கைப் பெற்றவர்கள்தான். பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சர்வ மானிய கிராமங்கள் இந்தச் சட்டத் தினால் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டன. இந்தக் காரி யத்தைச் செய்தது எம். பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இப்படி பறிபோனது போக எஞ்சியிருப் பதே தற்போதுள்ள கோவில் நிலங்கள்.

பொதுவாக கோவிலுக்கு நிலங்களை எழுதி வைப்ப வர்கள், கோவில் பெயரில் எழுதிவைக்க மாட்டார்கள். அந்தக் கோவிலில் உறையும் இறைவனின் பெயருக்கே எழுதிவைப்பார்கள். இறைவனின் பெயரிலேயே கோவில் நிலங்கள் இருக்கும். ஆகவே, பதிவாளர்கள், உள்ளூர் வட்டாட்சியர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு, இறைவனின் பெயரைக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பெயரில்தான் அந்த நிலங்கள் இருக்கின்றன என்று பட்டா போட்டுக்கொண்டார்கள்.

கோவில்களின் நிர்வாகத்தை அரசிடமிருந்து மீட்க வேண்டும் என்று சொல்லும் இந்து அமைப்புகள், திராவிட கட்சிகள்தான் கோவில் நிலங்களை, சொத்துக்களைக் கொள்ளையடித்ததாகக் குறைகூறுவார்கள். ஆனால், இந்த நில விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசில் இரு முக்கிய மான விஷயங்கள் நடைபெற்றன.

அதாவது, ஒரு நிலத்தை மீட்பதற்கான வழக்குத் தொடுக்கும்போது, எந்த நிலத்தை மீட்க வழக்குத் தொடுக் கிறோமோ அதன் மதிப்பில் 7.5 சதவீதத்தை நீதிமன்றத்திற் குக் கட்ட வேண்டும்.  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் என்றால், ஏழரை லட்ச ரூபாய் கட்ட வேண்டும். இவ்வளவு தொகையை புரட்டுவது அறநிலையத் துறைக்கு சிரமமான காரியம். ஆகவே, தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒரு அர சாணை வெளியிடப்பட்டது. அதன்படி, அறநிலையத் துறை சொத்து தொடர்பான வழக்குகளுக்கு 15 ரூபாய் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தினால் போதும்.

தவிர, சென்னையில் அமலில் இருந்த வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம், கோவிலுக்குச் சொந்தமான வீடு களில் இருந்து, வாடகை செலுத்தாத நபர்களை வெளி யேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தியது. ஆகவே, தமிழக அரசு மற்றொரு அரசாணையின் மூலமாக, கோவில் கட்ட டங்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்தது.

இந்த இரு அரசாணைகளும் பல ஏக்கர் விஸ்தீரண முள்ள கோவில் நிலங்களையும் பல ஆயிரம் சதுர அடி பரப்புள்ள கட்டங்களையும் மீட்க உதவியது. இந்த இரு அரசாணைகளும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டவை.

 

நாளை தொடரும்

 

2.12.1970 இல் அப்போதைய தமிழக அரசு  இந்து சமய அறநிலையத்துறை திருத்தச் சட்டம்  கொண்டுவந்து, பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்தது. அதை எதிர்த்து 12 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.  அவ்வழக்குகளில்  14.03.1972 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தச்சட்டம் செல்லும் என்றும், ஆனால்  அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும்  கூறப்பட்டது. அதன்பின் அரசாணை எண் . 118 நாள் 23.05.2006 தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு, “ஆகம விதிகளில் தகுந்த பயிற்சி பெற்ற எவரும், (எந்த ஜாதியினராக இருந்தாலும்) அர்ச்சகராக நியமிக்கப்படலாம்'' என ஆணை வெளியிடப்பட்டது. இதனையும் எதிர்த்து ஆதி  சைவ  சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் மற்றும் இருவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு போட்டனர். அதில் உச்சநீதிமன்றம் 16.12.2015 இல் தீர்ப்பு வழங்கியது. அதில் முதல் வழக்கான சேஷம்மாள் வழக்கில் 14.03.1972 இல் கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் செய்யலாம் என்று கூறி சிவாச்சாரியார்கள் கூறிய அனைத்து  வாதங்களையும் நிராகரித்துவிட்டது. ஆனால் அத்தீர்ப்பின் இறுதிப் பகுதி கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

43. What then is the eventual result? The answer defies a straight forward resolution and it is the considered view of the court that the validity or otherwise of the impugned G.O. would depend on the facts of each case of appointment. What is found and held to be prescribed by one particular or a set of Agamas for a solitary or a group of temples, as may be, would be determinative of the issue. In this regard it will be necessary to re-emphasise what has been already stated with regard to the purport and effect of Article 16(5) of the Constitution, namely, that the exclusion of some and inclusion of a particular segment or denomination for appointment as Archakas would not violate Article 14 so long such inclusion/exclusion is not based on the criteria of caste, birth or any other constitutionally unacceptable parameter. So long as the prescription(s) under a particular Agama or Agamas is not contrary to any constitutional mandate as discussed above, the impugned G.O. dated 23.05.2006 by its blanket fiat to the effect that, “Any person who is a Hindu and possessing the requisite qualification and training can be appointed as a Archaka in Hindu temples” has the potential of falling foul of the dictum laid down in Seshammal (supra). A determination of the contours of a claimed custom or usage would be imperative and it is in that light that the validity of the impugned G.O. dated 23.05.2006 will have to be decided in each case of appointment of Archakas whenever and wherever the issue is raised.

(43) பின் என்னதான் முடிவு? இதற்கான பதில் வெளிப்படையாகத் தெரிவிக்கும் தீர்மானம் யாதெனில் இந்நீதிமன்றத்தின் தீர்மானிக்கப்பட்ட பார்வை என்பது ஆட்சேபிக்கப்பட்ட அரசாணை செல்லுமா? இல்லையா? என்பது ஒவ்வொரு நியமனத்தின் சங்கதிகளைப் பொறுத்தே உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஆகமம் அல்லது ஆகமங்களில் ஒரு தனிப்பட்ட ஆலயம் அல்லது ஆல யங்களின் குழுவிற்கு எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து தீர்மானிக்க வேண்டும் என்பதே பிரச்சினை. இந்நிலையில் திரும்ப வலியுறுத்தப்பட வேண்டியது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் அல்லது பிரிவினரை அர்ச்சகர் நியமனத்தில் சேர்ப்பதோ விலக்குவதோ அது சாதி, பிறப்பு அல்லது அரசியல் சட்டப்படி ஏற்கப்படாத அளவுகோல் படி இல்லாதவரை அரசியல் சட்டப்பிரிவு 14அய் மீறியதாகாது என பிரிவு 16(5) இன் நோக்கம் மற்றும் விளைவு என ஏற்கெனவே கூறப் பட்டிருப்பதை மறுபடியும் வலியுறுத்துவது அவசியமாகும். குறிப்பிட்ட ஆகமமோ அல்லது ஆகமங்களோ ஏற்கனவே விவாதிக்கப்பட்டபடி அரசியல் சட்ட அதிகாரத்திற்கு எதிராக இல்லாதவரை ‘‘இந்து மதத்தைப் பின்பற்றுகிற ஒருவர் தேவையான தகுதி மற்றும் பயிற்சி பெற்றிருந்தால் இந்துக் கோவிலில் அர்ச்சகராகலாம்'' என்ற அரசாணை (தேதி 23.5.2006) ஏற்கெனவே சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்ட கருத்தை பொய்யாக்குகிறது. பழக்கம் அல்லது வழக்கம் என்ற கோரிக்கைகளின் எல்லைக்கோடுகளை தீர்மானிப்பது மிக முக்கியமானது என்பதால் இதனடிப் படையில் அரசாணை (தேதி 23.5.2006) இன் படியிலான அர்ச்சகர் நியமனங்கள் ஒவ்வொன்றையும் தீர்மானிக்க வேண்டும்.

இதன்படி ஏதேனும் ஆகமத்தில் குறிப்பிட்ட ஜாதியினர்தான் அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாலும் கூட அது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று இத்தீர்ப்பிலேயே தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

அதோடு, தமிழக அரசின் முயற்சிக்கு முன்னரே, கேரளாவில் சுவாமி வியோமாகேசானந்தா  அவர்களால் தயாரிக்கப்பட்ட திட்டமான அனைத்து  சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி  அளிக்கும் திட்டம் திருவாங்கூர் தேவஸ் வம், போர்டால் 07.05.1969 இல் அங்கீகரிக்கப்பட்டு பயிற்சி பள்ளியும் துவக்கப்பட்டது. இதை எதிர்த்து  என்.ஆதித்தியன்  என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்  எஸ்.ராஜேந்திரபாபு, மற்றும் டி.ராஜு ஆகியோர் 03.10.2002 இல் தீர்ப்பு வழங்கும்போது அவ்வழக்கை தள்ளுபடி செய்ததோடு “தகுந்த  பயிற்சி பெற்றவர்களையே  அர்ச்சகராக நியமனம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான் அல்லது குறிப்பிட்ட பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் தான் அர்ச்சகராக நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை மதச்  சடங்கு, சம்பிரதாயம், நடைமுறை என்று கருத முடியாது. அரசியல் சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய காலகட்டங்களில் பின்பற்றப்பட்ட பழக்கவழக்கங்கள், மனித உரிமைகள், மரியாதை, சமுதாய சமத்துவம் ஆகிய வற்றிற்கு எதிராக இருக்கும்போது அவற்றை நீதிமன்றங் களில் சட்ட ஆதாரமாகக்  கொண்டு உரிமை கோரமுடியாது” என ஆணி அடித்தாற்போல் உறுதியான தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

எனவே, ஆகமம், ஆகம விதிகள் என ஆதிக்க சாதிகள் பூச்சாண்டி காட்டுவதை தமிழக அரசு பொருட்படுத்தாமல் துணிச்சலாக உடனடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்டத்தின்படி அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை உடனடியாக அர்ச்சகராக நியமனம் செய்யவேண்டும்.

 

நீதிபதி பொ. நடராசன்

(பணி நிறைவு)

செயலாளர்,

திராவிடர் கழக வழக்குரைஞரணி

Banner
Banner