எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யுத்த காண்டம்

ஆறாம் அத்தியாயம் தொடர்ச்சி

எல்லாம் அறிவுக்குக் கொஞ்சமும் பொருத்த மில்லாப் பொய்யுரைகளாகவே இவை இருக் கின்றன. இதுகாறும் இப் பொய்யுரைகளை மக்கள் எங்ஙனம் நம்பி வந்தனரென்பது வியப்பாகவே இருக்கிறது. அறியாமைக்கும் ஏமாற்றத்திற்கும் ஓர் எல்லையே கிடையாது போலும் இத்தனையும் ஆரியர் தமக்கு உதவி செய்த வானரரைப் பற்றிச் செய்ந்நன்றி மறந்து கூறுகின்றனரே,

இவர்கள் உத்தமமான தமிழ் மக்களுக்குப் பிறந் தவராயிருந்தும், நமது இனத்தவரான இராவணாதி யருடன் போர் செய்து, அந்நியனாகிய இராமன் அவர்களைக் கொல்வதற்கு, உதவி செய்தனரே! ஆதலின் இக்குலத்தைக் கெடுத்த கோடரிக் காம்புகளாகிய வானரரைப்பற்றி ஆரியர்கள்கூறும் இச்செய்திகள் உண்மையே போலும் இருந்தாலும், எல்லாரையும் அவனுக்குப் பிறந்தவன் இவனுக்குப் பிறந்தவன் என்று கூறுவது வெறுக்கத்தகுந்த நன்றி கெட்ட செயலே இத்தனையும் இந்த வானரருக்கு வேண்டும் மக்களைக் குரங்காக்கினர் இவர்கள் தம் வாலைச் சுழற்றிக் கொண்டிருந்தனராம் ஆதலின் இவர்கள் தமக்குப்பின் புலிவேஷக்காரர்களைப் போலப் பொய்வாலை வைத்துக் கட்டிக் கொண்டி ருந்தனரோ என அய்யுற வேண்டியதாயிருக்கிறது.

இக்காலத்தில் பண்டிகைகளில் வீரர்கள் புலிபோல வேடம் கொண்டு வால்களை வைத்துக் கட்டிக்கொண்டு வருகிறதை நாம் கண்ணாரக் காண்கின்றோமல்லவா? நான்முகன் கொட்டாவி விடும்பொழுது, அவனுடைய முகத்திலிருந்து பிறந்தவன் சாம்பன் என்று வால்மீகி கூறுகிறார். கொட்டாவி விடுபவனுடைய முகத்திலிருந்து பிறந்தவன் சோம்பேறியாகத்தானே இருப்பான்? நான்முகன் முழுச் சோம்பேறி போலும் அதனா லல்லவா கொட்டாவி விட்டிருந்தான்! அவனுடைய முகத்தில் சாம்பன் பிறந்தானென்றால், அவ்விடத் தில் பிள்ளை பெறும் பெண்குறி இருத்தல் வேண்டும்.

நான்முகன் ஆணா பெண்ணா? பெண்ணேயாயினும் முகத்தில் குறியேது? இருந்தாலும் அதனில் பிள்ளையுண்டாக்கிய ஆண் யார்? திருமாலை யாவது மோகினியாகிப் பெண்ணுருவந்தாங்கி சிவனால் சேரப்பட்டுப்பிள்ளையைப் பெற்றான் என்று கதைகள் புராணங்களில் உள. நான்முகன் பெண்ணுருவாகிப் பிள்ளையைப் பெற்ற கதை எங்கும் இல்லை. அப்படியிருக்க அவன் முகத்தின் வழியாகச் சாம்பனைப் பெற்றான் என்று இங்கே நாம் காண்பது வியப்பாகவே உள்ளது.

மேலும், நான்முகன் முகத்திலுள்ள பெண் குறிகளிலிருந்துபார்ப்பனரையும், நெஞ்சிலுள்ள பெண் குறியிலிருந்து கூடித்திரியரையும், அரையிலுள்ள பெண் குறிகளிலிருந்து வைசியரையும், காலிலுள்ள பெண்குறிகளிலிருந்து சூத்திரரையும் பெற்றான் என்ற கதையைப் போலல்லவா இது இருக்கிறது? இத்தனை பிள்ளைகளையும் பெறு வதற்கு எத்தனை மாப்பிள்ளைகள் வேண்டும்? அவர்களுடைய குறிகள் எங்கெங்கு இருந்தனவோ இதற்கு விடையாகப் புராணக்காரர் இன்னும் கதைகட்டி விடவில்லை என்னே அறியாமை இக்கதைகளையும் உலகம் நம்பி மகிழ்கின்றதே அறியாமைக்கும் ஓர் அளவில்லை போலும் இது பற்றிய கம்பர் போக்கைப்பின்னர் ஆராய்வோம். இனிமேற் செல்லுதும்.

ஏழாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 30 முதல் 33 முடிய)

இராவணன் தன் அரண்மனைக்குச் சென்று வித்யுச்சிவ்வனை அழைத்துப் பல பரிசுகளும் தந்து, இராமனுடைய தலையையும் வில்லையும் போலப் பொய்யாகச் செய்து வைக்கச் சொல்லிச் சீதையை அடைந்தான். அவன் அவளை நோக்கி, “சீதே இனி என் செய்வாய்? நீ என்னைச் சேராமல் முடியாது. இராமனை என்னுடைய வீரர் கொன்று விட்டு, அவனுடைய தலையையும் வில்லையும் இங்கே கொண்டு வந்திருக்கின்றனர். இராமன் வானரர் சேனையோடு கடலின் வடகரையில் வந்திருந்தனன். என்னுடைய அமைச்சனாகிய பிரகதத்தன், இராமன் தூங்கிக் கொண்டி ருக்கும்போது, அவனை வெட்டிக் கொன்றான். வானரச் சேனைகள் திசை தடுமாறி ஓடி மறைந் தன. இலக்குவனும் அவர்களோடு ஓடிவிட்டான். வீடணன் சிறை பிடிக்கப்பட்டான். அனுமான், சுக்கிரீவன் முதலியோர் தவடையும் கழுத்தும் ஒடிந்து கிடக்கின்றனர். இராமனுடைய தலையை இதோ பார் என்று சொல்லி வித்யுச்சிவ்வனை அழைத்தான். அவன் வர இராவணன், “இவள் நம்பும்படி அதை அவள் பக்கத்தில் வை என்றான். அவன் அவற்றைச் சீதையருகே வைத்துச் சென்றான். இதோ பார், சீதே இனியாவது என் பேச்சைக் கேள் என்றான் இராவணன்.

அதைக் கண்டவுடனே சீதை கோவென்றலறி, “அடி பாதகி, கைகேசி உன் எண்ணம் ஈடேறிற்றா? என்று சொல்லிக் கீழே விழுந்து மூர்ச்சையடைந்து பின் தெளிந்தெழுந்து இராமனுடைய தலையை மடியிலே எடுத்து வைத்து உச்சிமோந்து, “அய்யோ! என்னைத் தனியே தவிக்கவிட்டுச் சென்றீரே! நான் என்ன பாவம் செய்தேன்? மிக வல்லவராகிய தங்களை எப்படிக் கொன்றார்கள்? காளாத்திரி என்ற தீய பெண் தங்களைத் தழுவி அபகரித்துவிட்டாளோ? தங்களுடைய வில் இப்படிக் கிடக்கின்றதே! என்னைத் திக்கற்றவளாக விட்டுப் போனீரே.

அயோத்திக்குப் போய்ப் பல யாகங்களும் செய்து அத்தீயால் எரிக்கப்பட வேண்டிய உடல் இப்படித் துர்மரணத்தால் நரியும் பேயும் தின்னக் கிடக்கின்றதே. இராவணா! என்னையும் கொன்று இராமனுடலுடன் சேர்த்து வை’ என்று புலம்பி அழுதாள். அப்பொழுது ஒரு காவலன் தோன்றிப் பிரகதத்தன் அவசரமாக அழைத்தானெனக் கூற, இராவணன் சீதையை விட்டுச் சென்றான். பொய்த் தலையுடன் வில்லும் மறைந்தன. இராவ ணன் சேனைகளை உடனே தயார் செய்தான்.

இராவணனால் நியமிக்கப்பட்டுச் சீதையைக் காத்து வரும் வீடணனுடைய மனைவியாகிய சரமை சீதையைத் தேற்றி, அந்நிகழ்ச்சி பொய் யெனக் கூறியதோடு, இராமனாதியர் அங்கு வந்திருப்பதையும், இராவணன் சேனையைத் தயாரிப்பதையும் உயிர் போனாலும் சீதையை விடாத இராவணனுடைய துணிவையும் நேரில் சென்று அறிந்து வந்து அவனிடம் புகன்றான். அதனால் சீதை தெளிந்து அழுகை யொழிந்தாள். இவ்வரலாற்றை ஆராய்வோம். இராமன் இறந்த செய்தியை உணர்ந்தவுடன், சீதை கைகேசியை நிந்தித்தாள். கைகேசி குற்றமற்றவள் என்பதை முன் பல இடங்களில் விளக்கினோம். இங்கும் மொழிபெயர்ப்பாளர் சீனிவாசய்யங்கார் சருக்கம் 31 இன் கடைசியில் பக்கம் 131 இல் ‘சீதை கைகேசியை நிந்திப்பது பொருந்தாது. முன்பு இப்படிச் சொன்ன இலக்ஷ்மணனை இராமன் கண்டித்திருக்கிறார். அது சீதைக்குத் தெரியும். மேலும், கைகேசிக்கு வரம் கொடுத்த உண்மை யான காரணத்தை இராமன் பரதனுக்குச் சொன் னது சீதைக்குத் தெரியாதா? கைகேசியின் ஸ்தா னத்தில் வேறு எந்த ஸ்திரீயும் அப்படியே நடந்திருப்பாள். பிசகு தசரதனிடத்தில் இருக்க நிரபராதியான கைகேயியை நிந்திப்பது அநி யாயம். கேவலம் லோகத்து ஸ்தீரிகள் நடப்பது போல் சீதையும் நடத்திக் காட்டினாளென்றே சொல்ல வேண்டும். இராமனைப் போல் தானும் மனுஷ்யபாவனையையே காட்டுகிறாள். மகா லட்சுமிக்குத் தெரியாததுண்டோ? என எழுதி யிருக்கிறார்.

இது இவர் முன் பல இடங்களில் எழுதிய உண்மையே. ஆனால், இங்கே இவர் சீதை மகாலட்சுமியென்றும், அவள் உலக மக்களைப் போல சாதாரணமாக  நடத்திக் காட்டுகிறாள் என்றும் புதிதாகக் குறித்திருக்கிறார். அறிஞராகிய அய்யங்கார் இவ்வாறு எழுதியதுதான் வியப்பாக இருக்கிறது.

- தொடரும்