எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யுத்த காண்டம்

எட்டாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 33 முதல் 38 முடிய)

இத்தகைய ஆரியப் புரளிகள் அளவிறந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பூசணிக்காய் ஒரு பிள்ளையைப் பெற்றதென்றும், அவன் ஒவ் வொரு ஊருக்கும்போய் வீடு வீடாக நுழைந்தன னென்றும், அவன் நுழைந்த வீடுகளிலெல்லாம் துன்பமும் நோயும் உண்டாயின என்றும் கதை கட்டி விட்டனர். அறியா மக்கள் அதை நம்பி அலறி அஞ்சி நடுங்குவாராயினர்.

சில நாள் கழிந்தபின், தமது வீட்டு கதவிலும் சுவரிலும் பட்டை நாமம் போட்டுவிட்டால், அப் பூசணிக்காய் மகன் துன்பம் செய்ய மாட்டா னென்று கட்டுக்கதை கட்டிவிட அதை நம்பி அறியா மக்கள் தம் கதவுகளிலும் சுவர்களிலும் நாமம் போட்டு வைத்தனர். இத்தகைய அறிவற்ற புரளிகள்தான் ஆரியப் புரளிகள் எனக் கூறப் படுகின்றன.

இராவணன் வடக்கே சுக சாரணர்களை வைத்தான் என்று கூறப்படுகிறது. அவர்களை அவன் சிறிது நேரத்தின்முன் வேலையிலிருந்து துரத்திவிட்டானென்று படித்தோம். இது இங்ங்ன மாக அவர்களைப் படைத் தலைவராய் வைத்தா னென்பது வியப்பே இது வியப்பாவதில்லை. ஏனெனில், முன்னர் அவன் அவர்களை வேலையிலிருந்து துரத்திவிட்டானென்ற செய்தி பொய்யோ! ஏனெனில், இராவணேசுவரனிடம் சிறுமை கற்பிக்க ஆரியர் கட்டிய கதையே அது.

இராவணன் காவலமைத்துத் தன் அரண் மனை புகுந்தான் என்பதாக இருக்க, அவனை இராமன் வடக்குவாயிலில் சென்று எதிர்ப்பதாக எண்ணிய தெங்ஙணம்? எனில், திரு. சீனிவாசய் யங்கார் மொழிபெயர்ப்பு இது. திரு.நடேச சாஸ் திரியாரும் பிறரும் அவன் சுகசாரணரை நியமித் துத் தானும் அவர்களோடு இருப்பதாகத் தீர் மானித்தான் என எழுதி இருக்கின்றனர். ஆதலின், இந்த இடத்தில் திரு. சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பும் பிழைபடுகின்றது. இராவணன் சுக சாரணரோடு தானும் இருப்பதாகத் தீர்மானித் தானெனின், அவன் அவர்களிடை வைத்திருந்த நம்பிக்கைதான் என்னே? அவன் அவர்களை வேலையை விட்டு விரட்டினான் என முன்னர் காணப்படும் செய்தி நம்பும் தகையதா? இல்லை; பொய்யே!

தானும் தம்பியும் வீடணனும் அவனது அமைச் சன் நால்வருமே மனித உருவுடன் இருப்பதாக இராமன் தீர்மானித்தானாம். இதனால் வீடணனும் அவனைச் சேர்ந்தாரும் மனிதரே யென்பது வெளிப் படை. இவர்களை அரக்கர் என்பது என்னே? ஆரி யப் புரளியே! இனி கம்பர் போக்கை ஆராய்வோம்.

மாலியவான் பேச்சில் நாம் மேலே விவரித்த அறிவில்லாப் பேச்சுகளை யெல்லாம் கம்பர் கூறாது மறைத்தார். அவர் கூறுவனவெல்லாம், “இராமனிடம் வலிமை கண்டோம். அதனால் நாம் அவனை எதிர்த்தல் கூடாது” என மாலியவான் கூறினான் என்பதே.

இராவணனே முதலில் அணிவகுத்துத் தனது சேனைத் தலைவரை ஒவ்வொரு வாயிலுக்கும் நியமித்தனன் என்றும், அதுகண்டு இராமன் தனது படையைப் பிரித்து ஒவ்வொரு வாயிலுக் கும் அனுமான் நீலன் முதலிய தலைவரை வைத்தனன் எனவும் வால்மீகி கூற, அதற்கு மாறாக இராமனே முதலில் படைத் தலைவரை நிறுத்த அதுகண்டு இராவணன் தனது தலைவரை அங்கங்கே நிறுத்தினன் எனக் கூறுகிறார். இதுவும் இராவணனுக்குச் சிறுமையும், இராமனுக்குப் பெருமையும் விளைவிக்கக் கருதியே. இராமனே முதலில் படை வகுத்தான் என்றால், அவனுக்குப் பெருமையே அன்றோ? தமிழராகிய கம்பருக்குத் தமிழனாகிய இராவணன் என்னகேடு செய்தான்? ஆரியனாகிய இராமன் என்ன நன்மை செய் தான்? இனி மேற்செல்லுதும்.

ஒன்பதாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 38 முதல் 40 முடிய)

மறுநாள் காலையில் இராமனும், வானரரும், சுவேலை மலையின் சிகரத்திலிருந்து இலங்கை யைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்கள். அதன் பேரழகு கண் கொண்டு பார்க்க முடியாததாயிருந் தது. இராமன் சுவேலையின் உச்சியில் ஒரு முகூர்த்த நேரம் தங்கினான். அப்போது இராவ ணன் தனது அரண்மனை மாடியில் உல்லாசமாக அமைச்சர் முதலாயினர் சூழ இருப்பதை இராமன் கண்டான்.

அப்போது சுக்கிரீவன் இராவணன்மேல் பாய்ந்து அவனுடைய முடியை, அடித்துக் கீழே தள்ளினான். இராவணன் சுக்கிரீவனை நியாயமாக வெல்ல முடியாது என எண்ணி, மாயையால் வெல்லக்கருதி எங்கே பார்த்தாலும் தன்னைப் போலக் காட்டினான். அதைக்கண்டு சுக்கிரீவன், இனி இவனுடன் போர் செய்வது தகுதியில்லை என எண்ணி விண்ணில் பாய்ந்து இராமனை யடைந்தான். இராமன் அவனை மார்போடு தழுவிக் கொண்டு,

“இனி இப்படிக் காரியங்களைச் செய்யாதே உனக்குக் கேடு வந்தால், பின் எனக்கு வேறு கேடும் வேண்டுமோ? நீ இறந்தால் இராவணனைக் கொன்று வீடணனை அரசனாக்கிப் பரதனுக்கும் முடிசூட்டி நான் இறந்து போக எண்ணியிருந்தேன் எனப் புகன்றான். சுக்கிரீவன் ‘இராவணனைக் கண்டவுடன் என் மனம் பொறுக்கவில்லை' என்று கூறினான்.

இராமனுடைய கட்டளைப்படி வானரர்கள் இலங்கைக் கோட்டையை முற்றுகையிட்டார்கள். இராமன் தம்பியுடன் வடக்கு வாயிலை அடைந் தான். அவன் தன் பகைவனுடன் போரிடுவதற்கு அவனை ஒரு தூதனால் அழைப்பது முறை என்று அங்கதனை அழைத்து, “நீ இராவணனை அடைந்து பின் வருமாறு சொல். சீதையை விட்டுவிடு, இல்லையானால், போருக்கு வந்து மடி. நீ சீதையைக் கொண்டு வந்து விட்டுப் பணிந்தால், வீடணனுக்கு வேறு நாட்டைக் கொடுத்து உன்னைக் கொல்லாமல் விடுவேன். இல்லையானால், உன்னைக் கொன்றே தீருவேன். உனக்குப் பிணச் சடங்குகளைச் செய்ய ஒருவரும் இரார். ஆதலின் நீயே அவற்றை இப்போது செய்து கொள் என்று சொல்லிவா என அனுப் பினான். அங்கதன் மனித உருவுடன் சென்று இராவணனை அடைந்து, தான் இன்னானெனக் கூறி, “நீ போருக்கு வா உன்னை வேரறுப்பேன்! இல்லையானால், சீதையைக் கொண்டு வந்து விடு எனக் கூறினான். அதைக் கேட்டு இராவணன், “இவனை இப்போதே கொல்லுங்கள் என்று தன் அமைச்சரிடம் அடிக்கடி கட்டளையிட்டான். நான்கு அரக்கர் அங்கதனைப் பிடித்தனர். தோளுக்கு இருவர் தொங்க, அங்கதன் உயரக் கிளம்பி அவர்களை உதறித் தள்ளி அரண்மனைச் சிகரத்தை மிதித்துத் தள்ளி இராமனை அடைந் தான். உடனே இரு திறத்தாரும் போருக்குச் சித்தமாயினர். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

சுக்கிரீவனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில், சுக்ரீவன் இராவணனுடைய மாயை வல்லமையைக் கண்டு அஞ்சி ஓடி விடுகிறான். ஓடினாலும், அவன் வெற்றியோடு மீண்டதாகக் கூறப்படுகிறான். குப்புற வீழ்ந்தாலும் மேல் மீசை யில் மண் ஒட்டவில்லை என்று கூறுவது போலவே இது இருக்கிறது. மேலும், இராவணன்மேல் அவன் பாய்ந்து சண்டையிடப் பிறர் பார்த்திருந்தும் சுக்கி ரீவன் உயிருடன் ஓடி வந்தான் என்பது இவ்விடத் திற்குப் பொருந்தா உரையாகவே இருக்கின்றது.

(தொடரும்)

இராவணன் அமைச்சர் சூழ கோலாகலமாக மாடிமிசை யிருந்ததைக் கீழிருந்த நாடிழந்த இராமன் காண்பதா என மதவெறி கொண்ட பிற்காலத்தார் கட்டிய கதையாகவே இது இருக்க வேண்டும். இராமன் வீடணனை மார்போடு தழுவிப் பேசிய பேச்சு, நீலிக் கண்ணீரே ஒழிய வேறில்லை. இல்லையானால், சுக்கிரீவன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் சேனையுடன் துணை வருவானா?

அங்கதனிடம் இராமன் சொல்லியனுப்பியதில், “நீ சீதையைக் கொண்டு வந்து விட்டுப் பணிந்தால், வீடணனுக்கு வேறு அரசாட்சியைத் தந்து உன்னைக் காப்பேன் என இராவணனிடம் சொல்லச் சொல்லுகிறான். இதைப்பற்றி மொழிபெயர்ப்பாளர் சீனிவாசய்யங்கார் பக்கம் 158 இல் பின்வருமாறு எழுதியிருக்கிறார். ‘இராவணன் தன்னைச் சரணமடைந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய கோசல ராஜ்யத்தை விபீஷணனுக்குக் கொடுக்கலாமென்று இராமன் கருத்து. ஆனால், தசரதர் அதைப் பரதனுக்குக் கொடுத்துவிட்டார். அந்த ஏற்பாட்டை மீறக் கூடாதென்று இராமன் காட்டிற்குப் போனான். அவன் அதைத் திருப்பிக் கொடுத்தும் வாங்கச் சம்மதிக்கவில்லை. ஆகையால், இராமனுக்கு இராஜ்யம் ஏது? பதினாலு வருடங்களுக்குப் பிறகு போனால் கிடைக்காதா என்றால், அதுவரையில் காட்டில் வசிக்க வேண்டும். பிறகு அயோத்திக்கு வரலாமென்று கைகேயியின் எண்ணமே அல்லாமல், பரதன் பதினாலு வருடங்களுக்குப் பிறகு இராமனுக்கு இராஜ்யத்தைத் கொடுக்க வேண்டுமென்று தசரதன் நிபந்தனை செய்யவில்லை. அவருடைய விவாக காலத்தில் செய்த ஏற்பாடும் அப்படி அன்று. வனவாசமான பிறகு பரதன் இராமனுக்கு இராஜ்யத்தைக் கொடுக்கலாம் என்றால், வனவாசத்திற்கு முன் இராமனுக்கு இருந்த ஆக்ஷேபங்கள் வனவாசத்திற்குப் பிறகு எப்படி நீங்கின? மறுபடியும் ஒப்புக்கொண்டது ஒழுங்கா? அப்படியானால், முன்பே அப்படிச் செய்து வனவாசத்தை நிறைவேற்றும் வரையில் பரதனை பிரதிநிதியாக ஏற்படுத்தியிருக்கலாம். பரதன் வேண்டிய பிறகே பாதுகைகளைக் கொடுத்தார்.

மேலே கண்ட அய்யங்காருடைய குறிப்பைப் படிப்போருக்கு, இராமனுக்குக் கோசல அரசாட்சியில் யாதொரு உரிமையும் கிடையா தென்பதும், இங்கே அவன் எண்ணம் மிகவும் தவறான தென்பதும் வெளிப்படை. இவ்வுண்மைகளை அறியாதார் இராமனுக்கே நாடு உரியதென்றும் கைகேசி மிகவும் கொடியவளென்றும் கூறி, விணே பாவத்தைத் தேடிக் கொள்கிறார்கள். மேலும் இராமன் இலங்கை ஆட்சியை வீடணனுக்கே என்று கூறி, அவனுக்கு முடி சூட்டி விட்டு இப்போது இங்ங்ணம் இராவணனுக்குச் சொல்லியனுப்புதல் முறையாகுமா? இராவணன் பணிந்து விட்டால், வீடணனுக்கு வேறு ஆட்சியைத் தருகிறேனென்று இராமன் கூறுவது எந்த ஆட்சியை? மக்களும் ஏனைய உயிர்களும் இல்லாத வெறும் மண்ணைக்கட்டி ஆளவே போலும்! பித்தலாட்டங்களுக்கும் ஒரு கணக்கில்லையோ? இத்தகைய இழிந்த மனநிலையினன் இராமன்! இவன் வாலியை மறைந்து நின்று கொன்றதற்குக் காரணமாக, வாலி முன் இராமனைக் கண்டு பணிந்துவிட்டால், இராமன் அவனைக் கொல்லாமல் விடவேண்டியிருக்கும். அப்போது சுக்கிரீவனை அரசனாக்குவேன் என்று கூறிய வாக்குப் பொய்யாகும். அதனாலேயே மறைந்து நின்று கொன்றான் என்று சில அறியா மக்கள் கூறுகின்றனர். இங்கே இராவணன் பணிந்தால், வீடணனுக்கு வேறு ஆட்சித் தருவதாகக் கூறியது போல அங்கே வாலி பணிந்தால் சுக்கிரீவனுக்கு வேறு ஆட்சியைத் தந்திருக்கலாமே? மேலும், அப்போது சுக்கிரீவனுக்குக் கிட்கிந்தையைத் தருவதாக வாக்குமாத்திரம் இராமன் கொடுத்திருந்தான். இப்போதோ, வீடணனுக்கு இலங்கை அரசனென முடிசூட்டி வைத்துவிட்டான். அதன் பின்னர் இராவணனுக்கு இவ்வாறு சொல்லியனுப்புவதென்றால், பொய்யும் புலையாட்டுமே இராமனது செயல் என்பதற்கு யாது அய்யம் உள்ளது? அறிஞர் இதனைத் தெள்ளத்தெளிய ஆராய்ந்து உண்மை உணர்வார்களாக அங்கதன் மனித உருவுடன் இராவணனை அடைந்து, தான் வாலிமகன் என்று கூறுகிறான். இவ்வாறு அவன் கூறத் தன் இயற்கை உருவுடனேயே போயிருக்க வேண்டும். இதனாலும் அங்கதன் முதலியோர் மக்களே ஆவர். குரங்கென அவரைக் கூறியது ஆரியக் குறும்பே என்பது தெளிவாகிறது. அங்கதன் இராவணனிடம் கூறியதற்கும், இராமன் அங்கதனிடம் தெரிவித்ததற்கும் வேறுபாடுகள் இருப்பதை அறிக. திரு. சீனிவாசய்யங்கார் பக்கம் 160 இல் “இதற்கு இராமன் சொல்லியனுப்பிய வார்த்தைகளுக்கு முள்ள பேதத்தைக் கவனிக்கவும் என எழுதுகிறார்.

அங்கதனைக் கொல்லும்படி இராவணன் பலமுறை கட்டளையிட்டனன் என்பது தவறு. ஏனெனில், அவ்வாறு அவன் பலமுறை சொல்ல வேண்டியதுமில்லை. அவன் சொன்னபடி அங்கதனை அணுகிய அரக்கர் அவனைக் கொல்ல முயலவே இல்லை. ஆனால், அவனுடைய தோளைப் பிடித்துத் தொங்கினார்கள் என்று மட்டுமே தெரிகிறது. இதனால் அங்கதனைக் கொல்ல இராவணன் கட்டளையிட்டனன் என்பது அவன்மீது வீண்பழி சுமத்த ஆரியர் எழுதிய பொய்க் கதை என்பது அவர்களுடைய கதையினாலேயே விளங்குகிறது. இனி கம்பர் புரளியை ஆராய்வோம்.

கம்பர் நாம் இக்கட்டுரையிலும், மேலே சில கட்டுரைகளிலும் குறித்த வரலாற்றை முன்பின்னாக மாற்றிச் சிலவற்றை மறைத்துக் கூறுகிறார். இராவணன் இரண்டாமுறை மாடிமிசைலிருந்தபோதே சுக்கிரீவன் பாய்ந்தனனென வால்மீகி கூற, கம்பர் அவன் முதன்முறை இருந்தபோதே பாய்ந்தானெனக் கூறி இரண்டாவதைக் கூறாமலே விடுத்தார். மேலும் சுக்கிரீவன் பாய்ந்து போரிடத் தொடங்கியபோது, இராவணனுடைய முடியைக் கீழேத் தள்ளினான் என வால்மீகி கூறுவதை மாற்றி அவன் ஓடிவரும்போது, இராவணனுடைய பத்து முடிகளிலும் பதிந்திருந்த மணிகளைப் பறித்துக் கொண்டு வந்து இராமனுடைய அடிகளில் வைத்தான் என்று நம்ப முடியாத பொய்ம்மை புகலுகிறார். வேகத்தில் ஒரு தலை முடிமணியை வேண்டுமானால் அவன் பறித்தான் எனப் பொய்யுரைக்கலாம் பத்து முடிமணிகளையும் பிடுங்கும்வரை இராவணன் கை புளியங்காய் பறிக்கப் போயிருந்தது போலும் கம்பர் வீடணன் வாக்காலும் இராமன் வாக்காலும் அச்செயலைப் பலபடப் புகழ்கிறார்.

மேலும் இராவணன், தன் மாயையால் எங்கே பார்த்தாலும் இராவணனாகச் சுக்கிரீவன் முன் நின்றான். அது கண்டு சுக்கிரீவன் ஓடினான் என்ற செய்தியைக் கம்பர் மறைத்துவிட்டார். ஏனெனில், இதனால் இராவணன் பெருமையும் சுக்கிரீவன் சிறுமையும் விளங்குமல்லவா? ஒ, பொய்ம்மையே! உன்னை என்று தமிழ் மக்கள் அறிந்து விலக்கி உண்மையைக் கடைப்பிடிப்பார்களோ?

சார்த்துலன் என்பவன் கடலில் அணை கட்டுவதற்கு முன்னரே சுக்கிரீவனைக் கலைப்பதற்கு இராவணனால் அனுப்பப்பட்ட தூதன் என வால்மீகி கூறுகிறார். கம்பரோ, அவனை மிகப் பின்னரே இராவணன் அனுப்பினான் என்றும், இராமனாதியர் அணிவகுத்து நின்றதை அவன் பார்த்துவந்து சுக்கிரீவன் முடியைப் பறித்தபின் இராவணனிடம் கூறினான் என்றும் கூறுகிறார். இராவணனுடைய மாமன் திரும்பவும் நல்லறிவு கூறினான் எனத் தவறு கூறுகிறார் கம்பர். அணிவகுப்புப்படலத்தில் தமக்கு விருப்பமான கொங்கைச் சொல்லைக் கூறி மகிழ இடமில்லாமல் கம்பர் இவ்வாறு மாறி இராவணனுக்கு நல்லறிவு கூறுகிறானெனச் சொல்லிக் கொண்டு, அவன் வாக்காக “இடைக்கல மருகல் செய்யும் முலையினால் தன்னை ஈந்து எனச் சீதையைக் கூறி மகிழ்கிறார்.

கம்பர் தம்மவனாகிய இராவணனைத் தமது கவிவாக்காலே பல இடங்களில் பாதகனென்றும் பாவியென்றும் கூறித் தமது இனப் பகைவனாகிய இராமனைப் புண்ணிய மூர்த்தியெனப் பலவாறு புகழ்கிறார். உத்தமனாகிய தமிழ்மகனான இராவணனைப்பாவியெனவும், பாதகனாகிய ஆரியன் இராமனை உத்தமனென்றும் கூறும் கம்பர் உத்தமரா? அன்றிப் பாதகரா? என ஆராயின், அறக் கொடும் பாதகரே இனத் துரோகியாகிய கம்பர் என்பது நிலைபெறும். உண்மை இதுவே. இதனால் இக்கம்பர் நூலைப் பாராட்டிப் படித்து மகிழ்பவர்களாகிய தமிழ் மக்கள் அனைவரும் பாவச் செயலே செய்பவராவர். இனியேனும் உண்மை தெரிந்து, அவர்கள் நல்வழி காண்பார்களாக தமது பொருளை நல்லறவழியில் செலவழிப்பார்களாக

அங்கதன் தூதினுள்ளும் இராமன் கூறினவற்றைக் கம்பர் மறைத்ததோடு நில்லாமல், இராவணன் அங்கதனைத் தன் பக்கம் சேர்ப்பதற்காகச் சுக்கிரீவனாதியாரைக் கொன்று உன்னைக் கிட்கிந்தை மன்னனாக்குவேன். நீ உன் தந்தையைக் கொன்ற பாதகனாகிய இராமனுக்குத் தூதனாக வந்தனையே என்று கூறிக் கலைத்தனனெனப் பொய் கூறுகிறார். வால்மீகியிலே இச்செய்தி காணப்படவில்லை. சார்த்துலனை ஏவிச் சுக்கிரீவனை இராவணன் கலைத்தனன் என்றே வால்மீகியில் காணப்படுகிறது. அதுவும் பொய்யுரை என்பதை முன்னர் விளக்கினோம். இனிமேற் செல்லுதும்.