எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

யுத்த காண்டம்

ஒன்பதாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 38 முதல் 40 முடிய)

அணிவகுப்புப்படலத்தில் தமக்கு விருப்பமான கொங்கைச் சொல்லைக் கூறி மகிழ இடமில்லாமல் கம்பர் இவ்வாறு மாறி இராவணனுக்கு நல்லறிவு கூறுகிறானெனச் சொல்லிக் கொண்டு, அவன் வாக்காக “இடைக்கல மருகல் செய்யும் முலையினால் தன்னை ஈந்து எனச் சீதையைக் கூறி மகிழ்கிறார்.

கம்பர் தம்மவனாகிய இராவணனைத் தமது கவிவாக்காலே பல இடங்களில் பாதகனென்றும் பாவியென்றும் கூறித் தமது இனப் பகைவனாகிய இராமனைப் புண்ணிய மூர்த்தியெனப் பலவாறு புகழ்கிறார். உத்தமனாகிய தமிழ்மகனான இராவண னைப்பாவியெனவும், பாதகனாகிய ஆரியன் இரா மனை உத்தமனென்றும் கூறும் கம்பர் உத்தமரா? அன்றிப் பாதகரா? என ஆராயின், அறக் கொடும் பாதகரே இனத் துரோகியாகிய கம்பர் என்பது நிலைபெறும். உண்மை இதுவே. இதனால் இக்கம்பர் நூலைப் பாராட்டிப் படித்து மகிழ்பவர்களாகிய தமிழ் மக்கள் அனைவரும் பாவச் செயலே செய்ப வராவர். இனியேனும் உண்மை தெரிந்து, அவர்கள் நல்வழி காண்பார்களாக தமது பொருளை நல்லற வழியில் செலவழிப்பார்களாக

அங்கதன் தூதினுள்ளும் இராமன் கூறினவற் றைக் கம்பர் மறைத்ததோடு நில்லாமல், இராவணன் அங்கதனைத் தன் பக்கம் சேர்ப்பதற்காகச் சுக்கிரீ வனாதியாரைக் கொன்று உன்னைக் கிட்கிந்தை மன்னனாக்குவேன். நீ உன் தந்தையைக் கொன்ற பாதகனாகிய இராமனுக்குத் தூதனாக வந்தனையே என்று கூறிக் கலைத்தனனெனப் பொய் கூறுகிறார். வால்மீகியிலே இச்செய்தி காணப்படவில்லை. சார்த்துலனை ஏவிச் சுக்கிரீவனை இராவணன் கலைத்தனன் என்றே வால்மீகியில் காணப்படுகிறது. அதுவும் பொய்யுரை என்பதை முன்னர் விளக்கி னோம். இனிமேற் செல்லுதும்.

பத்தாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 41 முதல் 50 முடிய)

இராவணன் மாடிமீதேறி, வானரர் இலங்கை யைச் சூழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் இலங் கையை அணுகி, அரக்கரால் நிறைந்திருப்பதைப் பார்த்துச் சீதையை நினைந்து ஏங்கினான். அவனு டைய ஏவலால், வானரர் போர் தொடங்கினர். இரா வணனும் அரக்கரை ஏவினான். இரு படைகளும் கைகலந்து போரிட்டன. வித்யுன்மாலி, சம்புமாலி, பிரகசன் முதலிய அரக்கத் தலைவர் இறந்தனர். இரவு தொடங்கிற்று மறுபடியும் இரவில் போர் நடந்தது. இராமன் எய்த அம்புகளால் அந்த இரவு மினுமினுப் பூச்சிகளால் விளங்கும் இரவைப் போல் தோன்றிற்று. அங்கதன், இந்திரசித்தை அடித்துத் துரத்தினான். இந்திரசித்து, அடங்காத சினம் கொண்டான். இராமன் வானரர்களைப் பார்த்து, “கவலைப்படாதீர்கள்! நான்முகன் தந்தவரத்தால் இந்திரசித்து நம்மை வெல்வான். நான் பொறுத்துக் கொண்டிருப்பேன் என எச்சரித்தான். இந்திரசித்தன் இராமனையும், இலக்குவனையும் பாம்பு போன்ற தளைகளால் கட்டினான். அவர்கள் தம் மேலெல் லாம் அம்புகளால் காயம்பட்டு இரத்தம் ஓடக் கண் விழிக்க மாட்டாமல் கீழே விழுந்தார்கள். இராமன் முதலில் விழுந்தான். இலக்குவன் அவனைத் திரும்பிப்பார்த்துபிழைப்பது அரிது என்று எண்ணி மிக வருந்தினான். அவர்களை அனுமான் முதலி யோர் சூழ்ந்து நின்று அழுதனர். இந்திரசித்தன் மகிழ்ந்து, அம்புகளால் அனுமான் முதலிய வீரர் களையும் அடித்து, இலங்கையுட் சென்றான். வீட ணன் வானரரைத் தேற்றினான். அவன் சுக்கிரீ வனைப் பார்த்து, “இவர்கள் சாகவில்லை. களை தெளியும்வரை காப்பாற்று. என்னைக் கண்டு வானரர் இந்திரசித்தோவென அஞ்சி ஒடிப் போவோமா எனப் பேசுகிறார்கள் என்று சொல்லி அவர்களைத் தெளிவித்தான். இருந்தாலும், அவர் கள் புல் அசைந்தாலும் அரக்கரென நடுங்கினர்.

இந்திரசித்தன் இராவணனை அடைந்து, இராம லக்குவரை நாகபாசத்தால் கட்டியதை உணர்த் தினான். இராவணன் மகிழ்ச்சி கொண்டு, சீதையைத் திரிசடையுடன் பூ விமானத்தில் ஏற்றி, இராமனைக் காட்டும்படி கட்டளையிட்டான். இராமனைக் கண்ட சீதை, அவன் மாண்டான் என எண்ணிப் பலவாறு புலம்பினாள். திரிசடை, இராமன் இறக்க வில்லையெனக் கூறி அவளைத் தேற்றினாள். சீதை தெளிந்தாளேனும், அளவற்ற துயரத்தை அடைந்திருந்தாள். இராமன் சற்றுக் களை தெளிந்து விழித்துத் தன் பக்கத்தில் இலக்குவன் கிடப்பதைக் கண்டு, பலவாறு புலம்பினான். பின் அவன் சுக்கிரீவனைப் பார்த்து, நீ உனது சேனை களுடன் கிட்கிந்தைத் திரும்பிப்போ! என்னால் நீ துன்புற்றாய் என்று சொன்னான். அப்போது வீடணன், சேனைகளை அங்கங்கே நிறுத்திவிட்டு அவ்விடம் வந்தான். அவனைக் கண்டு அஞ்சி, வானரர் மூலைக்கு மூலை நிலை குலைந்து ஓடினர். சாம்பவன் அவர்களைத் தெளிவித்துத் திரும்பினான். வீடணன் இராம லக்குவனரைக் கண்டு அழுதான். சுக்கிரீவன் அவனைத் தேற்றி னான். அப்போது கருடன் அங்கே வந்தனன். உடனே நாகங்கள் ஒடி மறைந்தன. கருடன் இராம லக்குவனரின் முகங்களைக் கையால் தடவி, அவர்களை மார்போடு அனைத்துக் கொண்டான். அவர்கள் புண்ணும் குணமாகி எழுந்தார்கள். இராமன், எங்களை ஆபத்திலிருந்து நீக்கிய தாம் யார்? என வினவினான். கருடன், “என் பெயர் கருடன். நான் உனக்குத் தோழன். உங்களுக்கு உதவி செய்ய வந்தேன் என்று அவனை இறுகத் தழுவி, “நான் உனக்கு எப்படித் தோழன் என இப்போது கேட்க வேண்டாம்.

(தொடரும்)