எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

 

 

என்ற மிழ் நாடும் எழில்மிகு மொழியும்

நின்று நிலவிட நாடெலாம் போற்றிட,

புதுவை தன்னில் எளியதோர் வீட்டில்

கொட்டும் மழையாய்க் கொட்டிய பாக்கள்

குன்று போல் குவியும் குவலயம் போற்றும்

நாத்திக நெஞ்சத்தான் நற்றமிழ்க் கவிக்கோ

பெரியாரைப் போற்றிப் பெருமை மிகு கவி வடித்தான்

“வயதில் அறிவில் பெரியார் - நாட்டின்

வாய்மைப் போருக்கு என்றுமே இளையார்”

“மண்டைச்சுரப்பை உலகு தொழும் - அவர்

மனக்குகையில் சிறுத்தை எழும்” என்று

சமூக விடுதலை வேந்தனுக்குச் சிறப்புக் கவி தந்தான்

என்னருந் தமிழ் நாட்டில்

எழுச்சிக் கவி வடித்த கவிஞன்

முதல் கவிதையிலேயே முழக்கமிட்டவன்

நாடு மணக்க வந்த நற்றமிழ் - கவிக்கோமான்

செந்தமிழ் செழிக்கச் செய்த

சீர்மிகு கருத்தாளன் - இவன்

வண்டமிழ்ப் பாட்டுக் கேட்டு

வளமாகக் காதினிக்கக் கருத்திணிக்க

வீரத்தமிழ் ஒலித்திட்ட வேங்கை

சங்கநாதம் முழக்கமிட்ட கவிக்கங்கை

காடு கழனி கார்முகில் எல்லாம்

காலை மலரச் சோலை மலரும்

கனக சுப்புவிற்கோ கவிகள் மலரும்

உழைக்கும் தோழர்க்கு உன்னத நண்பன் அவன்

“சித்திரச்சோலைகளே - உமைநன்கு

திருத்த இப் பாரினிலே - முன்னர்

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!

உங்கள் வேரினிலே!” - என

அவர்தம் உழைப்பை உணர்ந்து உருகிய பெருமகன்

அழகு தமிழில் அதிரசப்பாக்கள் அள்ளி வீசினான்

சக்தியைப் பாடிய செந்தமிழ்க் கவிஞன்

இயற்கை எழிலின் இன்பம் மற்றும்

குயில் மயில் போன்ற குருவிகள் வாழ்க்கை

அனைத்தும் கவியாய் அவன் பாட்டில் புகுந்தன!

சமுதாயக் கொடுமைகள் சாடியே நின்றான்.

“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே - இங்கு

வேரிற் பழுத்த பலா - மிகக்

கொடியதென்றெண்ணிடப் பட்டதண்ணே - குளிர்

வடிகின்ற வட்ட நிலா” என

விதவையர் நிலைக்கு வருந்திய பாக்கள்!

“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

மங்கையொருத்தி தரும் சுகமும் எங்கள்

மாத்தமிழுக்கு ஈடில்லை கண்டீர்!” எனத்

தமிழின் பெருமைக்குத் தனிச்சுவைப் பாடல்கள்

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்!

கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என்

உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதே!” எனக்

காதல் ததும்பும் கவிதைகள் யாத்தார்!

அறியாமை இருளை அகற்ற நினைத்தவர்

“சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார்

செய்கைக்கு நாணி உறங்கு நகைத்து நீ

கண்ணுறங்கு” எனத்தாலாட்டுப் பாடித்

தண்டமிழ்ப் பெண்களைத் தட்டியெழுப்பினார்!

இம்மட்டோ அம்மட்டோ அப்பப்பா

இருமும் போதும் இன்றமிழ்ப்பாட்டு

தும்மும் பொழுதும் தூய்தமிழ்பாக்கள்

பாரதிதாசனின் பாக்கள் யாவுமே

வெல்லம் சர்க்கரை விழையும் தேனே!

கற்கண்டுச் சுவைபோல் கவிதைகள் இனிக்கும்!

பலாச்சுளைக் கவிதையைப் படித்து மகிழ்க!

சுந்தரத் தமிழைச் சுவைத்து மகிழ்க!

சிந்தை தெளிவுறச் சீர்மிகு தமிழில்

சந்தனப்பாக்கள் தரணிக்கு அளித்த

விந்தைக் கவிஞன் பாரதிதாசன்

செந்தமிழ் வாழும் காலமெல்லாம்

வாழிய வாழிய வாழிய பல்லாண்டே!

- எழில் அண்ணாமலை,

தஞ்சை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner