எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறநிலையத்துறை வந்தது எப்படி? எதற்காக?

ஆய்வாளர் தரும் அரிய செய்திகள்!

ஆரிய சூழ்ச்சியைத் தகர்க்கும் கூரிய ஆயுதங்கள்!

 

தென்னிந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் சைவ, வைணவக் கோவில்கள் நிரம்ப இருக்கின்றன. பழங் காலம் தொடங்கி இக்கோவில்களுக்கு வழிபடச் செல்லும் பயணிகளும் பக்தர்களும் தங்கள் நிலங்களையும் மற்ற உடைமைகளையும் அறக்கட்டளைகளாக்கினர். கோவில் களன்றி மடங்களும், சமயம் சார்ந்த சிறிய அமைப்புகளும் வழக்கமாக உள்ள குரு - சீடர் முறையில் இயங்கின. சமய ஈடுபாடுள்ள மக்கள் இத்தகைய மடங்களுக்கு அறக் கட்டளை களை உருவாக்கினர். அவற்றுள் சில பெருமளவில் வளர்ந்து வளம் சேர்ந்தன. இம்மடங்களும் கோவில்களும் எப்பகுதியில் இருந்தனவோ அங்கே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு பல்வகைச் சமூக நிகழ்வுகளை நடத்துகின்ற மய் யங்களாகவும் அவை விளங்கின.

இப்படியே பல ஆண்டுகள் செல்ல, கோவில்கள் தென் னிந்திய உள் சமூக அமைப்பில் மகத்தான அதிகாரமுள்ள நிறுவனங்களாக வளர்ந்தன. எனவே மத்திய கால ஆட்சி யாளர்கள் கோவில்களின் மீது கட்டுப்பாடுகளை விதித்தனர். கோவில்களின் நிதிகள் தணிக்கை செய்யப்பட்டன, கோவில் களை ஆய்வு செய்வது என்பது அரசுக்குப் பெருமைப்பாடான பணியாயிற்று. ஆகவே அரசு நடவடிக்கைகளை விரிவு படுத்தும் அளவுக்கு வளர்ந்தது. பின்னாளில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கோவில் நிதிகளின் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். சென்னை மாகாண அரசின் 1817ஆம் ஆண்டுச் சட்டம் க்ஷிமிமிஆவது பிரிவு, கோவில்களை நிர் வகிக்கும் அதிகாரத்தை ரெவின்யூ போர்டுக்கு வழங்கியது.

ஆனால் அறங்காவலர்களால் இம்முறை ஏற்கப்பட வில்லை. அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். 19ஆம் நூற் றாண்டின் மத்தியில் இந்திய மதங்களில் தலையிடுவதில்லை எனும் பொதுக் கொள்கை வகுத்துக் கொண்டு, கோவில்களின் நிர்வாகங்களிலிருந்து பிரிட்டிஷ் அரசு விலகிக் கொண்டது. இதற்கு மரபுப்படியான ஒப்புதலைச் சட்டமன்றம் வழங்கிய தோடு 1863ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அறநிலையச் சட்டம் ஙீஙீ-ன்படி அரசின் நடுநிலைமையை வெளிப்படுத்தியது. இந்தச் சட்டப்படி அரசு எல்லாப் பொறுப்புகளையும் கோவில் களின் அறங்காவலர்களுக்கே வழங்கியது. இது குறித்து மக்களின் ஆழமான கருத்தை அறியவும், மேற்சொன்ன சட்டம் பற்றிய ஆய்வை வெளிப்படுத்தவும், அறக்கட்டளை களின் நல்ல நிர்வாகம் பாதுகாக்கப் படவும் 1874, 1876, 1884, 1894 ஆகிய ஆண்டுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் தன்னலம் என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாய் இருந்தது. அரசோ மதத்தில் தலையிடுவது இல்லை எனும் கொள்கையால் சில விஷயங்களில் அதிகமாகக் கவலைப் படவில்லை.

பல ஆண்டுகளாகக் கோவில் நிதிகள் முறையாகப் பயன்படுத்தப் படுவதில்லை. மிக மோசமான நிர்வாகச் சீர்குலைவுகள் நடைபெற்று வந்தன. அரசு மதத்தில் தலையிடு வதில்லை என்கிற கொள்கையைப் பின்பற்றி யதால் அவற் றையெல்லாம் புறக்கணித்து விட்டது. ஆனால் இந்திய அரசியல்வாதிகள் அரசின் மீது அக்கறை உள்ளவர்களாக இருந்தார்கள். கோவில் பிரச்சினைகளில் அரசு தலையிட்டுத் தகுந்த சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்தியது. எடுத்துக் காட்டிற்குக் கூற வேண்டுமானால் 1905ஆம் ஆண்டு பெல்லாரியில் கூடிய சென்னை மாகாண மாநாட்டில் ஒரு தீர்மானம் பின்வருமாறு நிறைவேற்றப்பட்டது.

“இந்து அறக்கட்டளைகளில் நிர்வாகச் சீர்குலைவும், நிதிமோசடிகளும் மிக அதிகமாக உள்ளன. இம்மாகாணத்தில் இவற்றை யெல்லாம் சோதனை செய்யச் சட்டம் இயற்றப் பட்டும் இன்னமும் குறைகள் இருக்கின்றன. ஆகவே தேவஸ்தான கமிட்டிகளின் உறுப்பினர்களை அளவாக நியமிக்கவும், கணக்குகளைப் பருவம்தோறும் வெளியிடவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது”.

இத்தகைய போக்குகளில் அதிருப்தியுற்ற சில இந்து சமயத்தினர், ‘தரும இரட்சண சபை’ அல்லது ‘அறக்கட்டளைப் பாதுகாப்புச் சங்கம்‘ எனும் பெயரில் 1907ஆம் ஆண்டு மதுரையில் ஓர் அமைப்பை உருவாக்கினர். இந்தச் சபை நிதிமோசடிகளை ஆய்வு செய்து கண்டறிந்தது, நீதிமன்றங் களுக்குச் சென்றது, குற்றம் செய்த அறங்காவலர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத் தரவேண்டுமென்றது. ஒழுக்கமற்ற அறங்காவலர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றவர் களுக்கு ஒரு பாடமாக, எச்சரிக்கையாக இருக்கும் என நினைத்தது. கணக்குகள் ஆண்டுதோறும் வெளியிடப்பட வேண்டும் எனும் கோரிக்கை அடிப்படையில் ஒழுங்கற்ற நிர்வாகத்தைக் கண்காணித்தால், விரும்பிய விளைவு ஏற்படும் எனச் சபை உணர்ந்தது. இவற்றைத் தொடர்ச்சியாக மேற்பார்வையிட ஆய்வாளர்களைச் சபை நியமனம் செய்யலாம் எனத் தீர்மானித்தது. இத்தகைய நடவடிக்கைகள் நல்ல முடிவுகளைத் தந்தன என்பதைச் சபையின் நான்காம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது, இந்த நிர்வாகச் சீர்குலை வுக்குக் காரணமானவர்கள் சபையின் செயல் பாடுகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை?

தரும இரட்சண சபையின் நடவடிக்கைளைச் சில பார்ப்பனர் அல்லாதார் சந்தேகமாகப் பார்த்தனர். எடுத்துக் காட்டிற்காகச் சொல்வதானால் மெட்ராஸ் மெயில் நாளேட்டில் (17.11.1916) ஒரு செய்தியாளர் ‘சமூகநீதி’ எனும் புனைபெயரில் அதன் ஆசிரியர்க்கு எழுதுகிறபோது,

“தரும இரட்சண சபையின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் பார்ப்பனர் அல்லாத அறங்காவலர்கள் உள்ள இடத்தில் பார்ப்பனர்களை நியமிப்பதற்காகத் தான் என்று பொதுவாகப்  பேசப்படுகிறதே, இது உண்மையா?’

என்று கேள்வி எழுப்பி இருந்தார். ‘சபையினுடைய நடவடிக்கைகள் பார்ப்பனர்களால் இயக்கப்பட்டன. ஆகவே அதன் பலன் பார்ப்பனர்களுக்குப் போய்ச் சேரும் விதத்தில் தான் நடவடிக்கைகள் அமைந்து உள்ளன. சீர்திருத்தம் உண்மையாக இருக்குமானால் அதன் பலன் ஒரு வகுப்புக்கு மட்டுமல்ல, எல்லா வகுப்பார்க்கும் கிடைத்திருக்க வேண்டும்‘ என்றும் அவர் எழுதியிருந்தார்.

1917ஆம் ஆண்டு ஆகஸ்டில் கோவையில் கூடிய பார்ப் பனர் அல்லாதார் மாநாடு, இந்துமத அறக் கட்டளைகள் தமது நிதிகளைப் பயன்படுத்தி சமஸ்கிருதப் பள்ளிகளை உருவாக்கு வதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியதோடு, அதே தீர்மானத்தில் அரசுக்கும் சமஸ்கிருதப் பள்ளிகளை உருவாக் கும் நிறுவனங்களுக்கும், அந்த நிதிகளைப் பயன்படுத்தி ஆரம்பப் பள்ளிகளைத் திறக்குமாறும் பரிந்துரைத்தது. அம்மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள் எல்லாம் சமஸ்கிருதப் பள்ளிகள் திறப்பதால் பார்ப்பனர் மட்டுமே பயனடைய முடியும். என்று குறிப்பிட்டனர்.

காலம் செல்லச் செல்ல அரசியல்வாதிகளால் மோசமான சூழ்நிலை உருவானதை அறிந்த மக்கள், அரசைத் தலையிடு மாறு கோரினர். 1920ஆம் ஆண்டு “மெட்ராஸ் மெயில்’’ தலையங்கத்தில் (13.01.1920) எழுதுகிறபோது,

“மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட் டிஷ் அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளதைப் பின்பற்றி வருகிறது. ஆனால், கோவில்களின் அறங்காவல் குழுவினரின் நடைமுறை மனநிறைவு தருவதாக இல்லை. அவர்கள் செய்கிற தவறுகளால் அந்த நிர்வாகங்கள் அதிகமாகக் கண்காணிக்கும்படியான நிலைக்கு ஆளாகி உள்ளன. பெரும்பாலான அறக்குழுக்களின் நிர்வாகச் சீர்கேடுகளும் மோசடிகளும் மிகவும் இழிவாக இருக்கின்றன”

என்று குறிப்பிட்டது. இதனால் நான்காவது பார்ப்பனர் அல்லாதார் மாநாடு, பார்ப்பனர் அல்லாதார் மடங்களை நல்ல நிலைக்கு உயர்த்துவதற்குச் சட்டம் இயற்றுவது தேவை என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

இப்பிரச்சினையை நீதிக்கட்சியினுடைய முதல் அமைச் சரவை மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்தது. மேலும் இப்பிரச்சினை மாகாண அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ளதாகும். சென்னை மாகாணத்தில் இந்து அறக்கட்ட ளைகளின் நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ப தற்காக அரசு, 1922ஆம் ஆண்டு ஒரு மசோதாவைத் தயாரிக்க ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. அந்த மசோதா 1922 டிசம்பரிலேயே வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாக ‘அறக் கட்டளைகளில் தேவைக்கு அதிகமாக உள்ள உபரி நிதிக ளைப் பொதுவான பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள் ளலாம்‘ எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த விதியால் பெருத்த கருத்து வேறுபாடுகள் உண்டாகி, ஆண்டுக் கணக்கில் அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஆனால் இத்திட் டத்தை மெட்ராஸ் மெயில் நாளேடு (13.12.1922) பாராட்டி எழு தியிருந்தது. அது வருமாறு:

‘உபரி நிதியை மற்ற செயல்கள் செய்வதற்குப் பயன் படுத்திக் கொள்ளுவது புரட்சிகரமான இலட்சியமாகும். மேலும் நன்கொடையாளர்களின் எண்ணம் தெரியாத நிலை யில்  அறக்கட்டளைப் பணி முழுமையடைந்த பின் வேறு பணிகள் செய்வது சரியானதே ஆகும். மருத்துவ 1மனைகள் மற்றும் மருந்தகங்கள், பள்ளிகள் போன்ற நிறுவனங்களை உருவாக்குவதற்கு அந்நிதிகளைப் பயன்படுத்திக் கொண்டால் மக்கள் பெரும்பயன் அடைவர். கோவில் களுக்கு இத்தகைய நிதி ஆதாரங்களை ஏற்படுத்திய சமயத் தாளாளர்கள் மீண்டும் பிறந்து வந்து தங்களது அறக்கட்டளைச் செயல்பாடுகளையும் அவற்றின் புதிய பணி களையும் கவனிப்பார்களானால் அவற்றை மகிழ்ச்சியோடு வரவேற்பர்’

ஆனால் இந்து வாரப் பதிப்பில் (21.12.1922), அதன் குரல்,

‘மசோதாவில் தெரிவிக்கப்பட்ட கருத்தினால் இந்து சமூகத்தினரிடையே பெருமளவில் அச்சம் எழுந்துள்ளது. அறக்கட்டளைகளில் உன்ன உபரி நிதியை வேறுவிதத்திற்குச் செலவிடுவது சரியல்ல. சில நன்கொடை யாளர்கள் வேண்டுமானால் அறக்கட்டளைக் கருத்திற்கு நெருக்கமான கல்விக்கும், மருத்துவத்திற்கும் செலவிடுவதில் மகிழ்ச்சி யடைவார்கள். ஆனால் அந்த நிதியைக் கொண்டு அமைக்கப்படுகின்ற சாலைகள், சுகாதார வசதிகளால் இந்துக்களைப் போல மற்ற சமூகத்தாரும் பலன் பெறுவார்கள் என்று சொல்ல முடியாது’

என்று ஒலித்தது. இந்த மசோதாவைப் பற்றிய விவாதம் சட்டமன்றத்தில் நிகழ்ந்தபோது நீதிக்கட்சி உறுப்பினர்கள் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதாரின் கருத்து வேறுபாடு களை ஒளிவு மறைவின்றிப் பேசினர். நீதிக்கட்சியின் நிறு வனத் தலைவர்களுள் ஒருவரான சி.நடேச முதலியார் பேசு கையில்,

‘கோவில் நிதிகளை ஒரு குறிப்பிட்ட வகுப்பார் நிர்வகிக் கிறார்கள். இதனால் அவ்வகுப்பாருள் இருக்கிற வேலையில்லா தவர்கள் பயன் அடைகிறார்கள். அதே வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் மிகப்பெருமளவில் பலன் பெறுகிறார்கள். பேச்சுவழக்கில் இல்லாத இறந்த மொழியான சமஸ்கிருதத்தைக் கற்பிக்கப் பாடசாலைகள் நடத்துகிறார்கள். ஆனால் எல்லாச் சமயங்களாலும் போற்றப் பெறுகிற மொழியான தமிழைப் புறக்கணிக்கிறார்கள்’

என்று கடுமையாகக் குறிப்பிட்டார். இதற்கு இந்து வாரப் பதிப்பு (21.12.1922) கீழ்க்காணும்படி விமர்சனம் செய்து எழுதி யிருந்தது:

‘சில உறுப்பினர்கள் மசோதாவைச் சரியானது என நிலைநாட்ட முயன்றனர். ஆனால் ஓர் உறுப்பினர் சமஸ்கிருத மொழியை ‘செத்த மொழி’ என்று அவர் தேர்ந்தெடுத்துப் பேசிய முறை புகழ்பெற்ற ஒரு மொழியிலிருந்து கற்க இயலாமையையே அது காட்டுகிறது. ஆனாலும் மசோதாவை ஆதரித்தவர்கள் சிலராவது நியாயமாக நடந்து கொண்டது வெளிப்படையாகத் தெரிகிறது. வேதங்களைக் கற்பதும், சொந்த மண்ணின் பண்பாட்டை அறிவதும் தவறு என்று யாரும் வாதிட முடியாது. நகராட்சி மருத்துவ மனைகளை அமைப்பது, சுற்றுலாப் பயணிகள் சுகமாக மோட்டாரில் செல்ல நல்ல தார்ச்சாலைகள் அமைப்பதைவிட, வேதம் படிப்பதையும் நமது மண்ணின் பண்பாட்டை அறிவதையுமே அந்த நன்கொடையாளர்களின் மனம் விரும்பும்‘ என்று குறிப்பிட்டிருந்தது.

மசோதாவிற்குப் பார்ப்பனரிடமிருந்து மட்டுமல்ல வைதீகப் பற்றுடைய பார்ப்பனர் அல்லாதாரிடமிருந்துமாக இரு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. எடுத்துக் காட் டிற்காகக் குறிப்பிட வேண்டும் என்றால் ‘மக்கள் கருத்திற்கு எதிராக இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது. இம்மசோதா கொண்டு வருவதைக் கைவிட வேண்டும்‘ என்று தருமபுர ஆதீனம் ஏகமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருந்ததைக் குறிப்பிடலாம். ரங்கோனில் இருந்த நாட்டுக் கோட்டை நகரத்தார், கோவில்களுக்கான ஏராளமான அறக் கட்டளைகளைத் தமிழ் நாட்டில் நிறுவியிருந்தனர். அவர்கள் ரங்கோனில் ஒரு கூட்டம் நடத்தி மசோதாவிற்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதே நேரத்தில் மிக ஏராளமான பார்ப்பனர் அல்லாதார் அமைப்புகள் மசோதாவிற்கு ஆத ரவைத் தெரிவித்துத் தீர்மானங்களை நிறைவேற்றின.

கோவில்களின் உபரி வருவாயைப் பொது நலத்திற்குப் பயன்படுத்துகிற ஆலோசனைக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு வலுக்கவே செய்தது. மசோதா பற்றிய எதிர்ப்பையும் ஆட் சேபணைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பொறுப்புக் குழுவினர் திரும்பவும் மசோதாவைத் திருத்தி, புதிய வரைவு ஒன்றை எழுதினர். அதில், முதலாவதாக, குறிப்பிடப்படும் இந்து அறநிலைய வாரியம் கோவில் வருவாய் உபரியாக உள்ளது என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும், இரண்டாவதாக, அப்படி இருக்கிற உபரி வருவாயில் ஒரு பகுதியை அதே மத அமைப்பின் கீழ்கையிருப்பாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும், கடைசியாக, இப்படி இருப்பாக ஒதுக்கி வைத்த நிதியிலிருந்து அந்த நிறுவனங்களுக்கு ஒத்த கருத்துடைய பிற செலவினங்களுக்குப் பயன்படுத்துவது என்றும் திருத்தங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டன. இந்த முடிவுகளைச் செயல்படுத்துவதற்காக ஒரு மத்திய கட்டுப் பாட்டுக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் திருத்த மசோ தாவில் கூறப்பட்டு இருந்தது.

மேலே குறிப்பிட்ட குழு பற்றி இந்து நாளேடு (15.03.1923) தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது. அதில், ‘குழு உள்ளுரில் எடுக்கும் முடிவுகளை எதிர்த்து, வரும் விண்ணப்பங்களை விசாரிப்பதில் நீதிமன்றம் போலச் செயல்படலாம். வழக்காடுபவர்கள் இதற்காகச் சென் னைக்கு வரச் செலவு ஆகும்; இந்தக் குழுவினரின் நிர்வாகத் திற்கும் ஆகும். இந்தக் குழு நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுகிறது’ என்று எழுதியது.

இந்து அறநிலைய வாரிய மசோதா பனகல் அரசர் முதல் அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டு 1923ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது. மெட்ராஸ் மெயில் நாளேடு (05.04.1923) தனது தலையங்கத்தில், “இந்த மசோதா திறம்பட வடிவமைக்கப் பட்டதோடு, பல ஆண்டு களாக இத்தகைய சீர்திருத்தங் களைத் தொடர்ந்து எதிர்த்து வந்த நிலைமைகளுக்கு எதிராகத் தைரியமாகப் போராடி வெற்றி பெற்ற முயற்சி” என்று பாராட்டி எழுதியிருந்தது.

சென்னைச் சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டவுடன் கோவில்கள், மடங்கள், மத நிறுவனங்கள் அந்த மசோதாவில் கையெழுத்திட வேண்டாம் என்று வைசிராயைக் கேட்டுக் கொண்டன. எடுத்துகாட்டிற்குச் சொல்ல வேண்டு மானால் இந்துமத மாநாட்டுப் பிரதிநிதிகளின் குழுவினர் உடுப்பி, தென் கன்னடம் ஆகிய பகுதிகளிலிருந்து சென்று வைசிராயிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர். அம்மனுவில் ‘இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட சென்னைச் சட்டமன்றம், ஒரு குறிப் பிட்ட மதத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் ஒரு சட்டத்தை இயற்றும் அதிகாரம் படைத்தது ஆகாது. மடங்களையும், கோவில்களையும் இந்த மசோதா எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இயற்றப்பட்ட தாகும். இம்மசோதா மடங்கள், கோவில்கள் கடைப்பிடிக்கும் பழமையான வைதீகப் பழக்க வழக்கங்களுக்கும் பாதகமா னது. நடைமுறையில் உள்ள உரிமையியல் நீதிமன்றப் பணி களைச் செய்ய முற்படும் மத்திய குழு நியமனம் பெரும் செலவாகக் கூடியது’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்து மதப் பிரதிநிதிகள் வைசிராயைச் சந்தித்து வழங்கிய மனுவினால் மசோதாவில் வைசிராய் கையெழுத்திடத் தாமதமாகியது.

இதனால் வைசிராய் ரீடிங்குக்கும் சென்னை கவர்னராய் இருந்த வெலிங்டனுக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டது. ‘அறநிலைய மசோதா கொண்டு வருவதன் மூலம் கோவில் மற்றும் மதத் தொடர்புடைய நிறுவனங் களைச் சிறப்பான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியும். பழைய நிர்வாகச் சீர்கேடுகளையும் ஊழல்களையும் ஒழிக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது’ என்று வைசிராயிடத்திலே கவர்னர் வாதிட்டார். மேலும் கவர்னர், ‘இந்தச் சட்டம், சரியானதா? இல்லையா? என்பதை வர இருக்கிற பொதுத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறுவதிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்‘ என்றும் வைசிராயிடத்திலே விளக்கினார்.

கவர்னர் வெலிங்டன் குறிப்பிட்டது போலவே 1923ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றது. நீதிக்கட்சி இரட்டை ஆட்சியின் கீழ் இரண்டாவது அமைச்சரவையை அமைத்தது. இதனால் வைசிராயிக்கும் கவர்னருக்கும் இருந்த வேறுபாடு குறைந்தது. 1924ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மசோதாவை இரண்டா வது முறையாகச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது மிகவிரைவாக நிறைவேறியது. இதை இந்து நாளேடு (10.04.1924) பின்வருமாறு விமர்சனம் செய்து எழுதி இருந்தது.

'பெருபான்மையான அரசு ஆதரவு உள்ள 48 உறுப்பினர் களைக் கொண்ட சட்டமன்றத்தில் இரண்டு மணி நேரத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை. இது சாத்தியமானதுதான். இந்த மசோதாவுக்கு நாட்டி னுடைய 300 இலட்சம் மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிற போது இந்தச் சட்டமன்றம் பெரும்பான்மையானது என்று சொல்லப் படுவது எவ்வளவு கேலிக் கூத்தானது’

இறுதியில் இந்த மசோதா வைசிராயினுடைய கையொப் பம் பெற்று 1925ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டமாக்கப் பட்டது.

பார்ப்பனர் அல்லாத இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்து அறநிலையச் சட்டம் இடம்பிடித்திருப் பதை ஆய்வு செய்து பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கிற பாகுபாடு சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்ந் திருப்பதைக் காணமுடிகிறது. இந்து அறநிலையச் சட்டம் கடைசியாக வைசிராயின் ஒப்புதல் பெற்றவுடன் திராவிட இன உணர்வு வலுவடைந்தது. இதுவரை கேள்வி கேட்பா ரின்றிக் காலம் காலமாக மடங் களையும், கோவில்களையும் சுற்றியே தங்கள் வாழ்க்கை வசதிகளை மதத்தலைவர்கள் என்ற போர்வையில் அனுபவித்து வந்தவர்களை இப்போது நிறைவேற்றப்பட்ட இந்து அறநிலையச் சட்டம் தடுத்து நிறுத்தியது. கோவில்களின் உபரி நிதிகளைப் பொதுநலத் திற்குப் பயன்படுத்துவதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் உயர் அமைப்பை ஏற்படுத்தி மதம் சாரா நிலையில் கட்டுப் பாட்டிற்குள் மதநிறுவனங்களைக் கொண்டு வந்ததும் நீதிக் கட்சி அரசின் குறிப்பிடத்தக்க வெற்றிகளாகும். 1925இல் அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டதும், கோயில் விவ காரங்களில் தலையிடுவதில்லை என்ற தன் கொள்கையை ஆங்கில அரசு கைவிட்டது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டில்தான் கட வுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் நடைபெற்று வந்த சமூகத்தின் சுரண்டலைப் புறக்கணிப்பதற்காகச் சுயமரி யாதை இயக்கம் தொடங்கப்பட்டது. சுயமரியாதை இயக்கத் தின் கொள்கைகள் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நீதிக்கட்சி யின் வேலைத் திட்டத்தில் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்டன.

 

 

(நாளை தொடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner