எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!! - 5

கோயில் பூனைகளின் கொள்ளைகள்!

கோவை கிழார் தோலுரிக்கிறார்!

இவற்றைத் தடுக்கத்தான் இந்து அறநிலையத் துறை!

 

[வெகுகாலம் வரைக்கும் நமது ஆலயங்களில் நாலுகால் பூனைகள் மாத்திரம் உண்டு என்று எண்ணி இருந்தேன். ஒரு நாள் எனது நண்பன் “ஒரு ஆலயத்தில் இரண்டு கால் பூனைகளும் இருக்கின்றன!'' என்றான். நானோ திகைத்துப் போனேன்! “அவ்வதிசயப் பூனைகளை எந்தப் பிரமன் படைத்தான்?'' என்றேன். அதற்கு நண்பன், “அவைகளைப் படைக்க ஒரு பிரமன் வேண்டியதில்லை. தாமே படைத்து கொள்ளும்'' என்றான். “அவர்களைப் பற்றிய குணங்கள் எவை?'' என்றேன். “நீங்கள் பார்த்த நான்குகால் பூனைகளுக்குள்ள குணங்களெல்லாம் உண்டு. அவைகளுக்கு மேலும் தாம் யாரால் ஆதரிக்கப்படுவார்களோ அவர்களையும் ஏமாற்றி அவர்கள் தலைமீது ஏறிக்கொள்ளும் வீரமும் உண்டு'' என்கிறார் “கோவை கிழார்'' (முன்னாள் இந்து அறநிலையத்துறை கமிஷனராக இருந்தவர் சி.எம்.இராமச்சந்திர செட்டியார், தமிழறிஞர்). அறநிலையத்துறையின் கட்டாயத் தேவை குறித்து இப்பகுதி விளக்குகிறது!           - ஆசிரியர், ‘விடுதலை’]

திருவாபரணத் திருட்டு!

திருவம்பலம் என்ற திருத்தலத்தில் திருஞானப் பிரகாச மூர்த்தி மடம் என்ற ஒரு பெயர் பெற்ற மடம் இருக்கிறது. அம்மடம் மிகப் பழமையானது. இப்போது குரு மூர்த்தமாக வீற்றிருக்கும் பெரியார் 25ஆவது பட்டம் பெற்ற மடாதிபதி. மடம் ஊருக்கு அடுத்தாற்போலச் சிவாலயத்தை ஒட்டி இருக்கிறது. சிவாலயமும் மிகப் பழமையானது. அய்வராலும் பாடப்பெற்றதெனச் சொல்லுவார்கள். ஒரு பண்டைய புராணமும் உண்டு. அம்மடத்து ஆதீனப் புலவர் ஒருவரால் முற் காலத்தில் அருமையான செய்யுளால் எழுதப்பெற்றது அது இன்னும் அச்சுவாகனம் ஏறவில்லை. ஆகையால், அதன் சொல்லழகும் பொருளழகும் பாமர மக்கள் அறியமுடியாது போயிற்று. ஆதீனத்தில் குரு பூசைத் திருவிழாவின் போதுதான் ஆதீனப் புலவர் அப்புராணத்திலிருந்து ஒன்றிரண்டு கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைக் கூறி மகிழ்வதுண்டு. அந்தத் தலத்திற்கு ஒரு வடமொழி புராணமும் இருக்கிறதாகக் கூறுவர். ஆலயக் குருக்கள் அது ஏட்டுப் பிரதியில் இருப்பதாகவும், அதனை அச்சடிக்க முயலுவதாகவும் சென்ற 25 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டு வருகின்றனர். இவ்வாலயத்தில் எழுந்தருளி யிருக்கும் மூர்த்தியே மடத்தாரின் ஆன்மார்த்த பூசைக்குரிய மூர்த்தமாம். ஆகவே, ஆலயத்தினுடைய சொத்துப் பரிபால னத்திலும் மடத்தார்கள் அடிக்கடி உரிமை பாராட்டுவதுண்டு. இந்த முறையில் அர்ச்சகர்களுக்கும் மடத்தார்களுக்கும் அடிக்கடி வழக்குகள் ஏற்பட்டு அதிகமாகத் தொகைகள் விரயமாயின, ஆகவே, இப்போது மடத்தின் பொருளாதார நிலைமையைப்பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது.

மடாதிபதி முதிர்ந்த கிழவர், இன்னமும் எத்தனை ஆண்டுகள் பட்டத்தில் வீற்றிருந்தருளுவர் என்று கூற முடியவில்லை. சீட வர்க்கங்களில் ஒவ்வொருவரும் அவர் சிவபதம் அடையும் நல்ல நாளை எதிர் பார்த்த வண்ணம் இருந்தனர். சிலர் ஜோதிடமும் ஆரூடமும் கேட்டார்கள். சிலர் அப்பெரியாரிடம் மிகுந்த அன்போடு இருந்தனர். இதுவரையிற் காட்டாத ஓர் அன்பை ஏன் இப்போது சீடர்கள் காட்டத் தொடங்கினார்கள் என்று கேட்பீர்களா? காரணம் நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். சுவாமிகள் சிவனடி அடைவதற்கு முந்தியே தம் ஆசாரிய பதவியாகிய காவியுடையையும் முத்திரையையும் தம் சீடர் ஒருவருக்கு அளிக்கவேண்டும். அவ்வாறு அளித்ததும் அளிக்கப்பட்டவர் மடாதிபதியாவர். இப்புனிதச் சடங்குகளுக்காகப் பல சீடர்கள் இரவும் பகலும் காத்திருந்தனர். அவர்களுக்குள் இருந்த போட்டிக்கு அளவே இல்லை. இவ்வாறு சில மாதங்கள் கழிந்தன.

ஒருநாள் காலையில் மடத்திற்கு ஒரு வாலிபத் துறவி வந்தார். உடல் - செக்கச் செவேல் என்றிருந்தது. முகம் மிகத் தெளிவாக இருந்தது. கண் மிகக் கூர்மை; பார்த்தவர் நெஞ்சை அவைகள் ஊடுறுவிச் செல்லும் தன்மை பொருந்தியவை; தலையை நன்றாக முண்டிதம் செய்து கொண்டிருந்தார்; அழகிய காவியுடை தரித்திருந்தார்; துறவியாக இருந்தபோதி லும் திருமேனியின் பொலிவு இரதி தேவியையும் கவர்ந்து விடும்; இப் புனிதவான் மடத்தை எட்டினதும் பலபேர் தங்களை அறியாமலேயே எதிர்கொண்டழைத் தனர். பெரிய சுவாமிகள் சமூகத்தில் கொண்டு விடுத்தனர். சுவாமிகளுக்குப் புதியவர் மீது ஒருவிதப் பற்று ஏற்பட்டது. சீடராக அங்கீகரித் தனர்; ஏனையபழைய சீடர்களுக்கோ மனத்தில் தம்மை அறியாமலேயே ஒருவித அழுக்காறு ஏற்பட்டது ; புதியவரும் மடத்திலேயே தங்கிவிட்டார்.

பெரிய சுவாமிகள் சீக்கிரம் பரமபதம் சென்றிடுவார் என்று எண்ணியது உலகம்; ஆனால் புதியவரைக் கண்டதும் அவருடைய உடல் நலிவு நீங்கித் திடம் பெற்றது. அதனைப்’ பலரும் விரும்பவில்லை. ஒருநாள் ஒரு சோதிடர் வந்தார். அவர் புதியவருக்கு அறிமுகப்பட்டவர் போலத் தோன்றிற்று. ஏனெனில் இருவரும் மிகப் பழகியவர் போல அந்தரங்கத்திற் பேசிக்கொண்டி ருந்தார்கள். அவர் சுவாமிகளுடைய சாதகக்குறிப்பைப் பார்த்து விட்டுச் சுவாமிகளுக்கு எதிரே ஒரு விதமாகச் சொல்லிவிட்டுச் சீடர்களிடம், “சுவாமிகளின் இருதயம் பலக்குறைவாக இருக்கின்றது. இரத்தக்கொதிப்பு ஒருவாறு தொடங்கியிருக்கின்றது. ஆகவே எதிர்காலத்தை பற்றி உறுதியாகக் கூற முடியாது” என்று சொல்லிப் பரிசு பெற்றுப்போனார். சீட வருக்கத்தில் மகிழ்ச்சியும் பொறா மையும் ஏற்பட்டன.

ஒருநாள் இரவு உண்டி முடிந்த பிறகு சீடர்கள் எல்லாரும் தம் தம் விடுதிகளுக்கு இளைப்பாறச் சென்று விட்டார்கள். புதியவர் மாத்திரம் பெரிய சுவாமிகளுடன் அந்தரங்கத்தில் இருந்தார். நடுயாமத்தில் பெரிய சுவாமிகளின் ஒடுக்கத்திலிருந்து, 'அரகர சம்போ மகா தேவா’ என்ற ஒலி பிறந்தது. கண்டாமணியும் அடித்தது. சீடர்கள் எல்லாரும் தடபுடலாக விழித்துக்கொண்டு ஒடுக்கத்தண்டை வந்தார்கள். பெரிய சுவாமிகள் தம் பீடத்தில் கண் உறங்கினாற்போல வீற்றிருந்தார். கண் பார்வை மேல் நோக்கி இருந்தது. முன்னிலையில் புதியவர் மிக பயபக்தியுடன் தலை வணங்கிக் கொண்டு பாதம் வருடிக்கொண்டி ருந்தார். அவர் உடலின்மீது காவி மேலாடையும், தாழ்வடமும், சின்முத்திரையும் இருந்தன. வந்த சீடர்கள் நடந்த சேதியைத் தெரிந்து கொண்டார்கள். “பெரிய சுவாமிகள் பரமபதம் அடைந்து விட்டனர். புதியவருக்குப் பட்டம் அளித்துவிட்டனர்” என்பதே. உடனே சிலர் புதிய சுவாமிகள் பக்கம் சேர்ந்தனர்; சிலர் ஏதோ கொடிய செயல் நடந்திருக்கிறது என்று ஆட்சேபித்தார்கள்.. சிறிது சிறிதாக முணுமுணுத்தல் தோன்றவே புதிய மடாதிபதி, “அரகர சம்போ மகாதேவா! பார்வதி பதயே அரகரமகாதேவா! தென்னாடுடைய சிவனே போற்றி!” என்று உரக்கக் கூவினர். எல்லோரும் “அரகர மகாதேவா, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று மாறொலி இட்டனர். இத்திருவொலிகள் ஓங்கிடவே புதிய குருக்கள் சார்பிலே பெரும்பான்மையோர் ஒதுங்கினார்கள். ஏனையோர் மெதுவாக வெளியேறினர். புதியவர் வெற்றியடைந்தார், உடனே பழையவருக்கு அந்தியக் கிரியைகள் நடத்தப்பட்டன. புதியவருக்கு எல்லா மரியாதைகளும் வந்தன. “பழையவர் எவ்வாறு உயிர் நீங்கினார்?” என்று கேள்வி கேட்பாரும் இல்லாமற் போய் விட்டது. ஓரிருவரே அதிகாரிகளுக்கு மொட்டை மனுக்கள் செய்தார்கள். ஆனால் அவர்கள் கையில் காசு இல்லை. ஆகவே அம்மனுக்கள் குப்பைத் தொட்டியிற் போய்ச் சேர்ந்தன.

புது ஞானப் பிரகாச சுவாமிகள் ஆதீனத்துப் பீடத்திற்கு அலங்காரமாக இருந்தார். வெறும் அலங்காரர் மாத்திரம் அல்லர். கூரிய மூளை பெற்றவர். ஆகவே மிக எளிதில் தாம் எண்ணியபடி மடத்தின் பொருள் வருவாய் இல்லை என அறிந்தார். பெரும்பான்மையான நிலங்கள் நிரந்தரக் குத்தகைக்காரர்களிடம் இருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் பத்து ஆண்டு பாக்கி வைத்திருந்தார்கள். அவைகளை நெருக்கிக் கேட்டால் வீண்சச்சரவு விளையுமேயன்றிப் பயன் இல்லை. மடத்தில் கணக்கும் சரியாக இல்லை. கச்சேரி ஏறுவ தற்கும் பயம். கார்பார்த் தம்பிரான் புதியவருக்கு இணங்கியவர் அல்லர். ஆகவே முதல் ஆண்டில் குத்தகைக்காரர்கள் கொடுத்த காற்பங்கு மாசூல்தான் கிடைத்தது. நான்கு வழிகளையும் (சதூர் உபாயங்கள்) பயன்படுத்த முயன்றார்; ஆனால் பலிக்கவில்லை. சுவாமியார் மிகவும் தந்திரசாலி யாகையால் மிக எச்சரிக்கையாகவும் சமாதானமாகவும் நடந்துகொண்டார். ஒவ்வொருவராக மெல்லச் சரிப்படுத்திக் கொண்டு நடந்து வந்தபடியால் இரண்டாண்டுகளில் தம் பீடத்தை நிலைப்படுத்திக் கொண்டார்.

மடத் தலைவராகி மூன்று ஆண்டுகள் ஆயின. தாம் எண்ணினபடி இந்திரபோக வாழ்விற்கு வேண்டிய வசதிகள் கிடைக்க வகையில்லை என்று அறிந்தார். சொத்துக்கள் கடிதத்தில் அதிகம் தோன்றின போதிலும் உண்மையில் சொற்பமே. வருவாயும் மற்றக் குடியானவர்களுக்குக் கிடைப்பதிற் காற் பங்கும் கிடைப்பதில்லை. சிறிது கண்டித்தால் பல விவகாரங்கள் விளைகின்றன. சுவாமிகளுக்கு மன அமைதி சிறிது குறைந்துவிட்டது, இந்த மடத்திற்குப் பொது மக்களில் சீடர்கள் குறைவு. மற்றச் சைவ மடங்களைப் போல் இது பெரியதுமல்ல. ஆகவே சீடர்கள் வருவதில்லை, காணிக்கையும் இல்லை, பெரிய பணக்காரர்களையும் ஜமின்தார்களையும் வலையிற் சிக்கவைப்பதற்கு இது சரியான காலமுமல்ல. ஆகவே சுவாமிகள் பல நாள் தீர ஆராய்ந்து ஒரு திடமான தீர்மானத்திற்கு வந்தார்.

பொது மக்களிடம் சமய உணர்ச்சி இன்னுங் குறைய வில்லை. அதிலும் ஆலயம் செல்லுவதில் நம்பிக்கை போகவில்லை. ஆலயத் திருப்பணிகளில் மக்களுக்கு அதிக ஊக்கம் இன்னமும் இருக்கிறது.

நாட்டில் பல பண்டைய கோவில்களையெல்லாம் செல்வர்கள் புதுப்பிக்கிறார்கள். பணக்காரர்களோ இலட்சக் கணக்கான பணங்களைக் கொட்டுகிறார்கள். நடுத்தர மக்களும் திருவாபரணங் களைச் செய்து காணிக்கையாகத் தருகின்றார்கள். ஒரு கோவிலில் எத்தனை நகை இருந்தாலும், கோரிகொள்ளுகிற மக்கள் புதிதாகத் திருவாபரணங்களைத் தானம் செய்கிறார்கள். ஆகவே திருவாபரணத் திருப்பணியினால் மக்களை வலைவீசிப் பிடிக்கலாம் என்று அவர் தீர்மானித்தார்.

உடனே அவர் சில கைதேர்ந்த கம்மாளர்களை வேலைக்குச் சேர்த்துக்கொண்டு திருவாபரணப் பட்டறை ஒன்று மடத்தில் ஏற்படுத்தினார். முதன் முதலில் மடத்திலிருந்த பழைய பொன் வெள்ளி எல்லாம் உருக்கி... இரத்தினங்களைப் பொறுக்கித் திருவாபரணம் செய்வித்தார். கண்டிகை, அட்டிகை, மோகனமாலை, மாங்காய் மாலை, தோடு, சுட்டி, முடி, தலையலங்காரம் முதலிய நகைகள் மாதிரிக்கொன்று செய்வித்தார். அவைகளைத் திருவம்பலப் பெருமானுக்குச் சாத்துவதாகப் பெரிய விளம்பரம் விட்டார். அதற்கு ஒரு பெரிய திருவிழா நடத்தினார், பல செல்வர்கள் வந்தார்கள். சிலர் காணிக்கைகள் தந்தார்கள். சிலர் அவ்விதத் திருப்பணியைத் தாமும் செய்வதாக வாக்களித்தார்கள். திருவிழா வெற்றியாக முடிந்தது. செலவழித்த பணம் முழுவதும் காணிக்கைகளிலேயே வந்து விட்டது . ஆபரணத் திருப்பணி என்பது முப்பத்திரண்டு அறங்களிலும் சிறந்த தென்றும், அதுவே பெருமானின் திருமேனியைத் தொடுவத னால் மிகுந்த புனிதமான திருப்பணி என்றும், அதனால் பலன் அதிகம் என்றும் தெரியப்படுத்தினார். நம்பிக்கை உள்ள பலரும் அவ்வலையில் வீழ்ந்தார்கள். பெரிய மீன்களைச் சரியான வலையில் வீழ்த்தி விட்டார் சுவாமிகள்.

ஆபரணத் திருப்பணி என்ற காய்ச்சல் நாடெங்கும் பரவிவிட்டது. பல கோயில்களிலும் புதுப்புது ஆபரணங்களைச் செய்து திருமேனிகளுக்குச் சாத்தினார்கள். ஆனால் அதில் சுவாமிகளுக்குத் திருப்தி இல்லை. ஒரு நகரத்துச் செட்டியாருக்குத் திருமுகம் அனுப்புவார். அவர் வருவார். பேரம்பலத் திருக்கோயிற் பெருமானுக்கு மோகன மாலை கட்டாயமாகச் சாத்தவேண்டுமென்பார். வைரமாலை ரூபாய் பதினாயிரம் என்பார். செட்டியார் ஏற்றுக்கொண்டு தொகை தருவார். அதனை மடத்துப் பட்டறையில் செய்விப்பார். உடனே அது மடத்திலேயே பூசையில் வைக்கப்பெற்று பிறகு ஒரு குறித்த நாளில் சுவாமிக்கு அணிவிக்கப்படும். ஒரு திருமுழுக்கும் நடைபெறும். சாத்துகிற செலவு ரூபாய் அய்யாயிரம் ஆகிவிடும். சுவாமிகளுக்கு வேண்டிய காணிக் கைகள் கிடைக்கும். இந்த வகையில் பெருத்த திருப்பணிக் கோலாகலம் நடந்து வந்தது. பல செட்டியார்கள் இத்திருப் பணியில் ஈடுபட்டார்கள். திருவாபரணம் மடத்துப் பூசையில் இருக்குமட்டும் மாசிலா நகைதான். அப்போது செட்டியாரும் பார்த்திருப்பார். ஆனால், பெருமான் திருமேனியின்மீது படும்போதும், கோயிற் பண்டாரத்துக்குச் செல்லும்போதும் அது தானா வேறா என்று யாரும் பார்த்ததில்லை. திருவம்பலம் கோவில் நகைகள் சொக்க நகைகள்தான். அவைகள் சுவாமியார் வசத்திலேயேதான் இருக்கும். ஆனால் ஏனைய கோவில்களுக்குச் சென்ற நகைகள் போலி நகைகள் என்று சொன்னால் நம்பமாட்டோம். எந்த நகையானாலும் சொக்க நகையின் விலையே சுவாமியார் கைக்கு வந்தது. இந்த வகையில் மடம் செல்வத்தில் திளைத்தது.

நடுவம்பலத் திருக்கோயிலுகந்த பெருமானுக்கு ஒரு மோகனமாலை சாத்தவேண்டுமென்று திரு. கரு. பெரு. அரு. சாமி செட்டியார் வேண்டிக்கொண்டார். உடனே மட..த்துக்குத் தெரியப்படுத்தினார். கூடிய விரைவில் ரூபாய் பதினாயிரம் அனுப்பப்பட்டது. ஒரு மாதத்தில் நகை தயாராகி விட்டதாகச் சுவாமிகள் தெரிவித்தார்கள். செட்டியார் உடனே மடத்திற்கு வரவில்லை. சிறிது உடல் நலம் குன்றி இருந்தது. தம் செயலாளரை அனுப்பி நகையைக் கொண்டுவரும்படிச் சொன்னார். செயலாளர் வந்தார், சுவாமிகள் தாம் முன்ன மேயே செய்து வைத்த ஏதோ மாலையை மெருகிட்டுச் செயலாளரிடம் கொடுத்தார். கொண்டு வந்த நகையைச் செட்டியார் பார்த்தார். அக்காலத்து விலைக்கு நகை சிறிது கூடுதலான மதிப்பைப் பெற்றிருந்தது. செட்டியார்கள் குணம் தெரியுமே! உடனே தட்டானை அழைத்து அந்நகையின் முகப்பில் தம் விலாசம் செதுக்கி வைத்து அதில் நடுவம்பலப் பெருமானுக்கு, திரு. கரு. பெரு. அரு. சாமி செட்டியார் உபயம் என்று எழுதி வைத்தார். எழுத்துக்கள் மிகவும் நுட்பமாய் எழுதிவைத்ததினால் ஊன்றிப் பார்த்தால்தான் தெரியும். பிறகு அதனை மடத்திற்கு அனுப்பிப் பூசையில் வைக்கச் சொன்னார். பூசையில் அது வைக்கப்பட்டது. பெயர் செதுக்கினதை மடத்தில் எவரும் கண்டுகொள்ளவில்லை. சுவாமிக்கு நகை சாத்துகிறதற்கு ஒருநாள் குறிக்கப்பட்டது. எப்போதையும் போலவே அது இரவு 10 மணிக்கு மேல் என்று விளம்பரப்படுத்தினதால் யாதொரு வியப்பும் இல்லை. செட்டியாரும் ஆலயத்திற்கு வந்தார். பெருமான் நகை சாத்திக்கொண்டு திருவுலா வந்தார். நகை பேரொளியுடன் விளங்கிற்று. திருவிழாவிற்கு வந்த மக்கள் அனைவரும் செட்டியாரின் தருமசீலத்தை மெச்சிப் புகழ்ந்தார்கள். சுவாமியாரின் தெய்வபக்தியை வியந்தார்கள். செட்டியாரும் சுவாமிகள் திருவடியில் விழுந்து தகுந்த காணிக்கை இட்டுத் தொழுதுவிட்டுச் சென்றார்.

திருவாபரணத் திருவிழா நடந்த ஆறாம் மாதம் நடுவம்பலத்துக் கோவிலில் பெருந் திருவிழா நடந்தது. செட்டியார் அன்று போய், சுவாமியைத் தாம் சாத்தின நகையோடு காணவேண்டுமென்ற அவாவுடன் சென்றார். திருவுலாவில் சுவாமி அணிந்த நகை, முன் தாம் கொடுத்த போது இருந்த விதமாக ஒளி வீசவில்லை. செட்டியாருக்கு என்னவோ சிறிது அய்யம் ஏற்பட்டது. மறுநாள் அங்கேயே தங்கியிருந்து குருக்களுக்குச் சம்பாவனை கொடுத்து அந்நகையைக் காட்டும்படி சொன்னார். பணம் என்னதான் செய்யாது? குருக்கள் நகையைக் காட்டினார். செட்டியார் தம் விலாசம் அதன் முகப்பில் இருக்கிறதா என்று தேடினார். அதில் ஒரு முகவரியும் இருக்கவில்லை. மேலும் கற்கள் போலிக் கற்கள் என்பது செவ்வையாகத் தெரிந்தது. குருக்களோ அதேதான் செட்டியார் சாத்தின நகை என்று சத்தியம் செய்தார். செட்டியார் தாம் ஏமாந்துவிட்டதை அறிந்தார். தாம் இப்போது கண்ட நகையோ அய்ந்நூறு ரூபாய்க்குமேல் போகாது. எத்தனை பெரிய களவு! இதனை யார் செய்திருக்கவேண்டும்? செட்டியாருக்கு ஒரே ஏக்கமும் பித்தும் ஏற்பட்டுவிட்டது.

ஊருக்குச் சென்றதும் செட்டியார் தம் வழக்கறிஞரைக் கேட்டார். உடனே ஒரு பிராது எழுதிப் போலீசுக்கு அனுப் பப்பட்டது. பெரிய திருட்டாகையினாலே அதனை விசாரிப்ப தற்கு அரசாங்கத்தார் ஒரு துப்பறியும் வல்லவரை அனுப் பினார்கள். அவரும் இரகசியமாய்ப் பல ஆலயங்களுக்கும் சென்று விசாரித்தார். நகைகளைச் சோதித்தார். மடத்தின் மூலமாக வந்த நகைகள் எல்லாம் போலி நகைகளே என்பது தெரிய வந்தது. துப்பு முழுதும் கண்டுபிடித்தப் பிறகு நீதிபதியிடம் சுவாமிகளைக் கைது செய்ய ஒரு உத்தரவும் பெற்றுக் கொண்டு துப்பறிபவர் மடத்திற்கு வந்தார்; அவர் முன் எச்சரிக்கையாய்ப் பல செந்தலைச் சேவகர்களை மடத்தின் நாலா திக்குகளிலும்; வாசல்களிலும் காக்கும்படி நிறுத்திவைத்தார். பிறகு உள்ளே சென்றார். சுவாமிகள் இந்த ஆர்ப்பாட்டச் செயல்களை எப்படியோ அறிந்துகொண்டு தம் ஒடுக்க அறைக்குள் சென்றுவிட்டார். துப்பு வல்லார் உள்ளே சென்றதும் சுவாமிகள் எங்கே என்று விசாரித்தார். சுவாமிகள் ஒடுக்கத்தில் நிட்டையில் இருக்கிறார் என்றும், யாரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றும் சொல்லப் பட்டது. அறையும் உள்ளே தாள் இடப்பட்டிருந்தது. அவர் சிறிது நேரம் காத்துப் பார்த்தார். கதவு திறக்கப்படவில்லை. வருவது வரட்டும் என்று சொல்லி துப்பறிஞர் கதவைத் தட்டினார். சீடர்கள், அது சம்பிரதாயத்திற்கு விரோதமென்றும் ஆட்சேபித்தனர். பதில்ஒன்றுமில்லை. ஒருமணி நேரம் காத்திருந்தும் கதவு திறந்தபாடில்லை. உடனே சேவகர்களைக் கொண்டு கதவு பிளக்கப்பட்டது. என்ன ஆச்சரியம்! உள்ளே யாரும் இல்லை. எல்லாப் பொருள்களும் மிக அமைதியாக வைக்கப்பட்டிருந்தன, மடம் முழுவதும் தேடினார்கள். சுவாமிகளைக் காணோம். சேவகர்கள் விசாரிக்கப்பட்டார்கள் சுவாமியார் வெளியே செல்லவில்லை, பின் வாசல் சேவகன் மாத்திரம், “ஒரு தோட்ட வேலையாள் ஒரு பூக்குடலையை எடுத்துச் சென்றான்’’ என்றான். “ஏன் அவனை விட்டாய்?’’ என்று கேட்டு விட்டு, “இனிமேல் மிரட்டி, என்ன பயன்?’’ என்று எண்ணினார் துப்பு வல்லார். அந்தக் கூடைக் கூலியாளுக்குச் சடை, முடி, தாடி இல்லை, அப்படியாயின் யார் அவனைச் சந்தேகிக்க முடி யும்? கூடையில் பூ இருந்ததோ, நகையும் பணமும் இருந்தனவோ என்று யார் அறிந்தார்கள்?

ஒடுக்க அறையைச் சோதித்ததில் ஒருவித நகையோ பணமோ இருக்கவில்லை. அவை மடத்தில் எங்கும் காணப் படவும் இல்லை. ஆனால் ஒடுக்கத்தில் இரகசியக்கதவு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருட்டு கண்டுபிடிக்கப் படவில்லை என்று போலீசார் வெளியிட்டார்கள். செட்டியார் முகம் வாடியது. ஆனால் போலீசாருக்கோ சில இரகசியங்கள் கிடைத்தன, சுவாமிகள் ஒரு பழைய கைதி என்றும், சிறையிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முந்தித் தப்பிச் சென்றவன் என்றும்தான் துப்புக் கிடைத்தது. ஆனால் என்ன பயன்? கிளி பறந்துவிட்டது. வெறும் கூண்டுதான் மிச்சம். ஆனால் ஒரு வெற்றி நாட்டிற்குக் கிடைத்தது. திருவாபரணத் திருப்பணி அன்றோடு நின்று விட்டது என்பதே!

- நாளை தொடரும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner