எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! - 7

ஆலயங்களை விட்டு அரசு விலக வேண்டுமா?

இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்ட நோக்கத்தை இந்துத்துவாவாதிகளின் கோரிக்கை சீரழிக்கும்!

 

[தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.நெ.இல.சீதரன் அவர்கள், இந்து அறநிலையத் துறை ஏன் இருக்க வேண்டும்? இல்லாதிருந்தபோது நிலை என்ன? இந்துத்துவாவாதிகளின் கோரிக்கை எப்படி ஆதிக்க, சுரண்டல் நோக்குடையது என்பதைத் தன் பணிக்கால பட்டறிவு மற்றும் உண்மை நிலைகளைக் கொண்டு விளக்கியுள்ளார். படித்துத் தெளிவு பெறுங்கள், பார்ப்பன சூழ்ச்சியை ஒன்று சேர்ந்து முறியடியுங்கள்!

- ஆசிரியர், ‘விடுதலை’]

 

 

- நெ.இல.சீதரன் -

காலம் காலமாய் கோயில்களை பராமரிப்பதும், அவற்றின் சொத்துக்களை பாதுகாப்பதும் அரசு களின் கடமையாகவே கருதப்பட்டு வந்துள்ளது. மூவேந்தர் காலம் ,முகலாயர் காலம், ஆங்கிலேயர் ஆட்சி காலம் என எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை ஆலய நிர்வாகத்தை சிறப்பாகவே மேம்படுத்தி உள்ளது.பல ஆலயங்களின் வருவாய் பல மடங்காக பெருகியுள்ளது. பல சீரிய பணிகளை செய்து வருகின்றது. இன்று இத்துறையின் கீழ் கிட்டத்தட்ட 38529 ஆலயங்கள் மற்றும் மடங்கள் உள்ளன.

பொதுமக்கள் மத்தியில் ஆலயங்கள் அனைத் தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது போன்ற பிரச் சாரத்தை, மாயையை சில இயக்கங்கள் உருவாக்கி வருகின்றன. ஆனால் உண்மை நிலை அதுவல்ல. இன்று ஆணையர்,இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வர், அலுவலக ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகள், தணிக்கையா ளர்கள் என விரல் விட்டு எண்ணக்கூடிய சில நூறு பேர்கள் இருந்தாலும், பெரும்பான்மையான ஆல யங்களின் நிர்வாகங்கள் பரம்பரை அல்லது பரம் பரை அல்லாத அறங்காவலர்கள் பொறுப்பில்தான் உள்ளது.

அறங்காவலர்களை மண்டலக் குழுதான் தேர்ந்தெடுக்கின்றது. இப்படி அரசு சார்பற்ற இந்து பொது மக்கள் கையில்தான் இன்னமும் ஆலய நிர்வாகம்இருந்து வருகின்றது. அறங்காவலர் பதவி என்பது ஒருகவுரவ பதவியாகும். நியமனம் செய் யப்படும் அறங்காவலர்கள் தங்கள் சொந்த வாழ்க் கையின் பணிகளில் ஈடுபட்டுஎஞ்சிய நேரங்களில் மட்டுமே ஆலயப் பணியில் ஈடுபடுகின்றனர். இத னால் ஆலயச் சொத்துக்கள் சரிவர பராமரிக்கப் படாமல், நிர்வாக நடைமுறைகளில் பங்கமேற்படு கின்றன.

ஆலயத்திற்கு சேர வேண்டிய பாக்கிகளை வசூலிக்க ஆர்வமாக நடவடிக்கை எடுப்பதில்லை. வழக்குகளை சரியாக நடத்துவதில்லை. தனக்கு ஏன் வம்பு என்று பலர் ஒதுங்கிடும் நிலை. அறநிலைய சட்ட விதிகளுக்குட்பட்டு பணிகளைச் செய்வதற்கு அறங்காவலர்கள் எல்லோரும் அக்கறையோடு முன்வருவதில்லை என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.

அதுமட்டுமின்றி அடுத்து நிர்வாக மாற்றம் ஏற் படும்போது ஆலயத்தின் பொறுப்புகளை மாற்றம் செய்யும்போது சரிவர மாற்றம் செய்வதில்லை. இதனால் ஆலயத்தில் முக்கிய தஸ்தாவேஜூகள், நகைகள்முதலியன முறைப்படி அடுத்தவரிடம் ஒப்படைப்பதில்லை. சட்டப்படி இது குறித்து உடன் இத்துறையினரால் நடவடிக்கை எடுக்க இயல வில்லை. நீதிமன்ற நடவடிக்கை எடுத்து முடிக்க பல ஆண்டுகள் ஆகின்றன. அதனால் பெரும்பான்மை யினர் தப்பிக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது.

இத்துடன் இடர்பாடுகளுக்கு இடையேயும் ஆல யங்களில் டிக்கெட்டுகள் அச்சிட்டு அதை உரிய அலுவலகத்தில் சீலிட்டு முறையாக கணக்கு வைத் திட இத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்டியல்கள் இலாகா அலுவலர்களால் சீலிடப் பட்டு முறையாக திறக்கப்பட்டு, அத்தொகையினை முறையாக ஆலயக் கணக்கில் சேர்க்கதக்க நடவடிக் கையை இத்துறை செய்துள்ளது. ஆலயகடைகள், வீடுகள், நிலங்கள், காலியிடங்கள் ஆகியவற்றை முறைப்படி வாடகைக்கு விட தக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. அதே போன்று ஆலயத்திற்கு வரு கின்ற நன்கொடைகள், காணிக்கை ரசீது போடப் பட்டு, முறையாக வரவு வைக்கப்படுகின்றன. முறையாக கணக்குகள் பேண நடவடிக்கை எடுக்கப்பட்டு தணிக்கையும் செய்து வருவதுடன், தணிக்கை குறைபாடுகளின் மீது தக்கநடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றது. பல ஆலயங்களில் திருப்பணி செய்து வருகின்றது ஆண்டுதோறும் அரசே திருப்பணிக்கு நிதி உதவி செய்து வருகின்றது.

மேலும் இத்துறை கல்வி மேம்பாடு, கலாச்சாரம், பரப்புதல், ஓய்வுற்றோருக்கு ஆதரவு, அனாதை சிறார்கள்பராமரிப்பு, மருத்துவமனை பேணுதல் ஆகிய பொது நலபணிகளையும் செய்து வருகின்றது. ஜாதி சார்பற்ற சிறப்புவழிபாடு மற்றும் சமபந்தி விருந்து. சுதந்திர தினத்தன்றும், அண்ணா நினைவு நாளன்றும் பெரும்பாலான ஆலயத்தில்நடத்தப்பட்டு வருகின்றது. இந்து ஆதி திராவிடர், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை, எளிய இந்துக்களின் திருமணத்திற்கு உதவி புரிந்து பல ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வருகின்றது.

அரசுத் துறை மூலமாக நடைபெறும் இத்தகைய நல்ல காரியங்கள் எல்லாம் ஏதோ சில தர்மகர்த் தாக்கள் மூலம்நடைபெறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே சிலர்வாரியம் என்றும், சிலர் சமயத் தலைவர்கள் மூலம் நிர்வாகம் என்றும் குரல் கொடுக்கிறார்கள் போலும்!

இந்து சமய அறநிலையத்துறை மேலும் சிறப்பாக செயல்பட செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?

இந்து அறநிலையத் துறையின் ஆளுகை யின் கீழ் உள்ள ஆலயங்களின் நிர்வாகத்தை அறநிலைய சட்டவிதிகளுக்குட்பட்டு நடத்துவ தற்கும், முறையான பூஜைகள்நடைபெறவும், சொத்துகளை பாதுகாக்கவும், சிலைகளை பாதுகாக்கவும், வருமானத்தை உயர்த்தவும், முறையான வரவு- செலவு கணக்குகளை வைக்கவும், பதிவேடுகளை பராமரிக்கவும். அவ்வப்போது பிறப்பிக்கப்படும் ஆணைகளை ஏற்று செயல்படவும், அரசிற்கும், ஆணையருக்கும் தேவைப்படும் விபரங்களை தருவதற்கும், ஒருபொறுப்பு வாய்ந்த அரசு கட்டுப்பாட்டில் உள்ள பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுவது அவசியமாகும். வருவாய் துறையில் எப்படி கிராம கணக்குகளை அரசு ஊழியரான கிராம நிர்வாக அலுவலர் பேணிக்காக்கின்றாரோ, அதே போல், பத்து அல்லது பதினைந்து ஆலயங்களை ஒருங் கிணைத்து ஒரு ஆலய நிர்வாக அறங்காவலர் பத வியினை உருவாக்கி அனைத்து ஆலயங்களையும் பத்திரமாக பாதுகாக்க அரசுஊழியர் நிலையில் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.

அனைத்து ஆலய ஊழியர்களையும் உடனடி யாக அரசு ஊழியராக்க வேண்டும்.

தமிழகத்தில் புதியதாக பல்வேறு ஆலயங்கள் கட்டப்படுகின்றன. புதிய குடியிருப்புகளில் இது போன்ற பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்டும் வருகின்றன. உடன டியாக அவைகளை இத்துறையில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். அதே போன்று புதிய ஆலயங்கள் கட்டும் போதும் இத்துறை அனுமதி பெற்று கட்ட வேண்டும். இதுபோன்று ஆந்திர சட்டத் தில் சட்டப் பிரிவுகள் உள்ளன.

இது போன்று இன்னமும் சில சீர்திருத்தங்கள் இத்துறையின் சட்டத்தின் செய்யப்பட வேண்டி யுள்ளது. பல இடர்பாடுகளிடையே அறநிலைய துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலே கூறிய மாற்றங்களை கொண்டுவந்தால் நிச்சயமாக அறநிலையத்துறையின் நிர்வாகம் செம்மையாகவும், மிகச் சிறப்பாகவும் இருக்கும்.இதனை விடுத்து இத் துறையை ஒரு வாரியமாக மாற்றினால், திருக் கோயில்கள் செம்மையாக நடத்துவதற்குப் பதிலாக எதிர்காலத்தில் சுயநலங்கள் கொண்டவர் கள் நிர்வாகத்தில் நுழைந்து விட்டால், திருக்கோயில்கள் தவறாக நிர்வகிக்கப்பட்டு சீர்கேடுகள் அடைந்துவிட வாய்ப்புண்டு.

இத்துறையில் 38,529 ஆலயங்களும் மடங்களும் சமய நிறுவனங்களும் உள்ளன. இதில் ரூ.10000/- ஆண்டு வருவாய்க்குக் கீழ் உள்ள ஆலயங்கள் 34,336, ரூ.10,000லிருந்து 2 லட்சம் வரை உள்ள ஆலயங்கள் 3402, இரண்டு லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் வரும் ஆலயங் கள் 557, ரூ 10 லட்சத்திற்குமேல் வருமானம்உள்ளவை 234. இதில் வரும் வருமானத்திலிருந்தே கல்லூரி 56, பாலிடெக்னிக் ஒன்று, மேல்நிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி 360, நாதஸ்வரபயிற்சிப் பள்ளியும், வேதஆகம பாடசாலை 3, தேவாரப் பயிற்சிப் பள்ளி 2, காது கேளார் பள்ளி 1 கருணை இல்லம், மருத்துவமனை கள் 45 ஆகியவை நடத்தப்படுகின்றன. இலவச திருமணங்கள், நூற்றுக்கணக்கான ஆலயங்களில் அன்னதானம்,ஒரு காலபூசை என பலவும் செயலாக் கப்படுகின்றன. இந்த நற்காரியங்கள், அனைத்தும் சில நூறு நிர்வாக அதிகாரிகள், ஆய்வர்கள் மூலமே நடத்தப்படுகின்றன. மேலும் அறங்காவலர்கள் நியமனம் என்பதே சமீபகாலமாக இல்லை. அதனால் ஒவ்வொரு நிர்வாக அதிகாரிகள், ஆய்வர்கள் 20 முதல் 30 ஆலயங்களை நிர்வகிக்கின்றனர்.

அரசியல்வாதிகளை அறங்காவலர்களாக நிய மிப்பதே நடைமுறையாக உள்ளது. எனவே, உடன் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்பட்டால் தான் அவர்களுக்கு ஆலயச் சொத்து, சிலைகள், ஆபரணங்கள் குறித்து தெரியும். வாடகைபற்றி எச்.ராசா குறிப்பிடுவது மிகவும் தவறு, எவ்வளவோ நிலங்கள் மடாதிபதிகளால் விற்கப் பட்டன. அதை மீட்க இவரால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு ஆதினம் பல ஆயிரம் ஏக்கர்களை பாண்டிச்சேரி தொழில் நிறுவனத்திற்கு அளிக்க முற்பட்டபோது அதை எதிர்த்து மீட்டது விவசாயிகள் சங்கமே. ஒரு புராதன மடத்தை விழுங்க நினைக்கும் கருநாடக மடாதிபதியை எதிர்ப் பதில் இவர் பங்கு என்ன? நதிகளை மீட்போம் எனச் சொல்லி காடுகளையும் மலைகளையும் முழுங்கும் ஆன்மீகவாதிபற்றி இவர் கருத்துஎன்ன? எத்தனை மருத்துவமனைகளுக்கு, கல்லூரிகளுக்கு மயிலாப் பூரில் பெரும் பிளாட்டுகளுக்கு விற்கப்பட்டதை எதிர்த்து ஏதாவது நடவடிக்கை உண்டா?

மாறாக ஒரு காலத்தில் ஆலயப் பணிகளை செய்ய, விளக்கு எரிக்க இலுப்பை எண்ணை, சுத்தம் செய்ய, திருவலகுபணி, சந்தனம் அரைக்க, பூமாலை கட்டிதருவது, சாமி தூக்குபவர்கள் என பல்வேறு ஆலயப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அளிக்கப் பட்ட ஒரு கிரவுண்ட், அரை கிரவுண்ட் நிலங்களை அதில் குடியிருக்க கோயிலை சுற்றி பெரும் பள்ளங்களை தூர்த்து பாதை அமைத்து ராஜ வீதி அமைத்தவர்கள் சொந்த செலவில் அவ்வீடுகளை கட்டியவர்கள் அவர்களுக்கு இன்று மார்க்கெட் விலையில் 2001 முதல் ரூ.5000, ரூ.10000-என வாடகை நிர்ணயித்து அதை 1998லிருந்து பல லட்சம் நிலுவை அளிக்க வேண்டும் என அவர்கள் மீதுபாய்வது ஏன்? வாடகை செலுத்த முடியாத சூழ்நிலையில் அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என கூறி காவல்துறை மூலமாக கட்டிய வீடுகளை இடிப்பதும் சீல் வைப்பதும் நடைமுறையில் உள்ளது. கோயில் நிலங்களில் தன் சொந்த செலவில் வீடுகட்டி வாழ்பவர்களாலேயே அந்நிலங்கள் ஆலயத்தின் பெயரில் இன்று வரை பட்டா உள்ளது.

இன்று கும்மிடிப்பூண்டி முதல் மாடம்பாக்கம் வரை 100 ஆண்டுகாலமாக குடியிருக்கும் அவர் களாலேயே சென்னை நகரம் உருவாகியுள்ளது. அறநிலையத்துறையில் சீர்திருத்தம் தேவை. மாறாக அரசு துறையை நீக்கி ஆலயங்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்படைப்பதால் பிரச் சனை தீராது, மாறாக பொதுமக்களால் பாது காக்கப்படும் பல்லாயிரம்கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் வணிக வளாகங்கள் மற்றும் தனியாருக்கு ஆலய நிலங்களை தாரைவார்க்கும் உள்நோக்கம் உள்ளது. இத் துறை எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட் டதோ அச்செயலை சீரழிக்கும் நோக்கமே தனி யாரிடம் ஒப்படைக்கும் என்ற கோரிக்கை.

கட்டுரையாளர்: உதவி ஆணையர் (ஓய்வு)

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை

தொடர்புக்கு : This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

நன்றி: ‘தீக்கதிர்’, 17.1.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner