எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! - 7

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி

கூறப்படும் தடைகளும் அதற்கான விடைகளும்!

கூறப்படும் தடைகள்

“சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட் டில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலி யுறுத்தி உள்ளார். இதில் எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியம் உள்ளது?

தொன்மையும் வளமும் நிறைந்த மொழி தமிழ் மொழி என்பதில் சந்தேகமில்லை; இதற்கு தடை யார் என தெரிந்து கொள்ள வேண்டும்

இந்திய அரசியல் சட்டத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றப் பரிபாலன மொழி என்ன என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு முன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 214 (5) மற்றும் 227இன் கீழ் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலனம் இருக்க வேண்டிய காரணத்தால், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசில் இயற்றப்படும் சட்டங்கள், ஆளுநர் மற்றும் அரசு உத்தரவு, அதைப் பரிசீலனை செய்து தீர்ப்பு அளிக்கும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும். இதைப் போக்க வேண்டுமானால் அனை வரும் ஏற்கும் ஒரே மொழியில்தான் சட்டம் மற்றும் தீர்ப்புகள் தேசிய மற்றும் மாநில அளவில் இருக்க வேண்டும். இன்றுள்ள இந்திய அரசியல் பின்னணி யில் “ஆங்கிலம்” ஒன்றே “ஓர் இணைப்பு மொழி’. ஹிந்தியோ, தமிழோ அல்லது மற்ற மொழிகளோ அல்ல.

அரசியலமைப்புச் சட்டம் 348ஆவது பிரிவில் கூட முதல் பிரிவு இதையே வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு மாற்றாக அல்லது விதிவிலக்காக 348(2)ஆவது பிரிவில் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் அந்த மாநிலத்தில் இயற்றப்படும் சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற நடவடிக்கை (வழக்காடு மொழி) அந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கலாம் என்று வழிவகை செய்கிறது.

அதேநேரத்தில் உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழி, தமிழில் இருந்தாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் இருக்க முடியும், தமிழில் அல்ல. மேலும் அரசு சட்டங்கள் கூட தமிழில் இயற்றினாலும் அதனுடைய அதிகாரப்பூர்வ மொழியாக்கம் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அவ்வாறு மொழிமாற்றம் செய் யப்பட்ட ஷரத்துகளே அதிகாரப்பூர்வ சட்டமாகும் என்று உள்ளது.

இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரு மொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு?

நான், தமிழில் என்ன பேசினேன் என்பது ஆங்கிலத் தீர்ப்பாக வரும்போது மொழிபெயர்க்கும் (ஆங்கிலத் தீர்ப்பு எழுதும்) நீதிபதி சரியாக மொழி இடைவெளி இல்லாமல் புரிந்துகொண்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இதுமட்டுமல்ல, உயர் நீதிமன்றங்கள் மாநில வரம்புக்குள் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் ஒன்றே. ஆனால் 21 மொழிகள் அலுவலக மொழி என்று அட்டவணை 8இல் உள்ள போது, 21 அட்டவணை மொழிகளும் உயர் நீதிமன் றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?

அப்படியானால் அலகாபாத், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கிறதே என்ற வாதத்துக்கு, அங்கு கூட ஒரு நீதிபதி ஹிந்தியில் போடும் மனுக்கள் போன்ற வைக்கு ஆங்கில மொழியாக்கம் பெற நிர்ப்பந்திக் கலாம். மேலும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஏற்கெனவே நீதிமன்ற நடவடிக்கை தாமதம் ஆகும் இவ்வேளையில், மொழியாக்க நேரம், செலவு தேவைதானா? அது விரயம் இல்லையா? தமிழில் வாதாடினால் சட்டம் தெரியும் என்று அர்த்தம் அல்ல. மொழி வேறு, ஒரு பிரிவில் பாண்டித்யம் என்பது வேறு. சட்டம் தெரியா மல் தமிழ் தெரிந்தவர்கள் எவ்வளவு பேர்?

இந்தியா போல பல மொழி பேசும் மாநிலங்களின் கூட்டாக ஒரு தேசம் இருக்கையில் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல. அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, இதர நாடுகளின் பரிவர்த்தனைக்கும்! இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லை.

இந்தியராய் எந்த மாநிலத்திலும் தங்கி, உயிர் வாழ்ந்து, தொழில் செய்யும் உரிமை, அடிப்படை உரிமையாக இருக்கும்போது, ஒரு மாநிலத்தின் ஆட்சிமொழி ஓர் அளவுக்கு மேல் இந்த அடிப்படை உரிமையைப் பாதிக் காததாக இருக்க வேண்டும்.

தமிழ் வழக்காடு மொழியாவதற்கு முன், தேவை யாக உள் கட்டமைப்பு, எல்லா சட்டங்களின் தமிழாக் கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக் காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லா மல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது!

- ஷான் (மயிலாடுதுறை)

==================================

தடைகளுக்கான விடைகள்

- நீதியர தடைகளுக்கான விடைகள்

சர் ஏ.கே.ராஜன் -

 

தமிழ், உயர்நீதிமன்ற மொழியாக வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான வேலைகள் என்ன என்பதுதான். ஆக்கப்பூர்வமான யோசனைகள் என்ன என்பதைப் பற்றித்தான் சிந்தித்துப்பேச வேண்டும். அதிகம் படித்தவர்களுக்கு நாம் தவறு செய்து விடு வோமோ என்ற அச்ச உணர்வுதான் அதிகமாக இருக் கும். தவறு செய்துவிடக்கூடாது என்ற அந்த அச்ச உணர்வுதான் அதிகமாக இருக்கும். மெத்தப் படித்தவர் கள் அச்சம் அதிகம் கொண்டவர்கள்தான்; அதில் நிச்சய மாக சந்தேகமே இல்லை. எனவே அதிகம் படித்தவர்களி டம் கருத்துக் கேட்டால் அதிகமான பயத்தைத்தான் உண்டு பண்ணுவார்கள். எதிர்மறை விளக்கம் அதிகமாக இருக்கும்.

அந்த அச்சத்தை விட்டொழியுங்கள். நம்மால், தமி ழில் முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள். தமிழில்தான் இப்போதும் வாதங்கள் நடைபெறுகின்றன. தமிழில்தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. தமிழில்தான் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழில்தான் தட்டச்சு செய்து தருகிறார்கள். சுருக்கெழுத்தர்கள் எழுதிக் கொள்கிறார் கள். தமிழ் சுருக்கெழுத்தர்கள், தட்டச்சர்கள் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. நம்மு டைய தமிழ் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கற்றறிந்த, தகுதி பெற்ற தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. நீங்கள் மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று பார்த்தீர் களேயானால், தமிழில் மிக வேகமாகத் தட்டச்சு செய்ப வர்களை நீங்கள் பார்க்கலாம். பேசுகின்ற பொழுதே தட்டச்சு செய்து தருபவர்கள் என்னிடம் பணிபுரிந்திருக் கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லும்போதே தட்டச்சு செய்து முடித்தவர்கள் என்னிடம் பணியில் இருந்திருக் கிறார்கள். இப்பொழுதும் பலர் இருக்கிறார்கள். எனவே, நம்முடைய தமிழ் நாட்டில் தமிழ்த் தட்டச்சுத் திறமையில் எந்தவிதமான குறையுமில்லை. சுருக்கெழுத்தாளர்களும் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றனர். அவர்களை நாம் பயன்படுத்திக்கொள்வதுதான் நாம் செய்ய வேண் டிய செயல். தடைகளைக் கடந்து நடைமுறைப்படுத்துவ தற்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லி வழி நடத்த வேண்டும்.

கலைச் சொற்கள் என்பது ஒரே நாளில் உருவாகி விடுவதல்ல. பல அறிஞர்கள் ஒன்றுகூடி அமர்ந்து சிந் தித்தாலுங்கூட, சில, பல, நாட்களில் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துவிட முடியாது. ஒரு சொல், சரியான  நிலையை அடைவதற்குப் பல நாட்கள், பல ஆண்டுகள் தேவை. 50 ஆண்டுகள் கழித்துத்தான் மிஸீபீவீணீஸீ சிஷீஸீstவீtutவீஷீஸீ என்பதற்கு “இந்திய அரசமைப்பு” என்ற சொல் கிடைத் திருக்கிறது.

மேலும், வழக்குத் தமிழ் வேறு, சட்டத் தமிழ் வேறு என்ற வார்த்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயல வில்லை. வழக்குத் தமிழ் தான் சட்டத் தமிழ். சட்டத் தமிழ்தான் வழக்குத் தமிழ். சில வார்த்தைகள் சட்டத்தில் வருமே தவிர வழக்குத் தமிழை விட்டு மாறிவிடாது.

நீதிமன்றங்களில் வாதிடுவதற்கு வாதத் திறமை வேண்டும், தமிழில் எங்களுக்கு வாதத்திறமை வராது. ஆங்கிலத்தில்தான் வரும் என்றும் சொன்னார்கள். நிச்சயமாக இது உண்மை அல்ல. ஒரு நீதிபதியை ஏமாற்றி வாதத் திறமையால் வென்றுவிடுவது எல்லாம் அந்தக் காலம். இப்பொழுது எந்தவொரு நீதிபதியையும் வாதத்தால் ஏமாற்றி வென்று விட முடியாது. ஏனென்றால், அவர்கள் சட்டத்தைப் பார்த்துத்தான் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

தமிழில் வாதிக்க முடியாது எனவே, தமிழில் வேண் டாம் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல என்பதற்காக இதைச் சொல்கிறேன். தற்பொழுது தமிழில் சட்டம் இல்லை என்றார்கள். அரசியல் சட்டம் இன்னும் தமிழில்; மொழி மாற்றம் செய்யப்படவில்லை என்றார்கள். பல சட்டங்கள் மாற்றப்படவில்லை என்றார்கள். அவை எல்லாம் உண்மை அல்ல. இந்திய அரசு அமைப்புச் சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்துவிட்டது. அகில இந்திய அனைத்துச் சட்டங்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்துவிட்டன. குறிப்பாக, தற்பொழுது தமிழ் நாடு சட்டசபையில் இயற்றப்படுகின்ற சட்டங்கள் அவ்வப்பொழுது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப் படுகின்றன. எனவே, மொழி மாற்றம் இல்லை என்பது சரியான வாதம் அல்ல.

ஆட்சி மொழி குறித்தான 1963ஆம் ஆண்டு சட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. இச் சட்டம், உயர் நீதிமன்ற வழக்கு மொழியை மாற்றிக் கொள்ள வழிவகை செய்துள்ள சட்டமாகும். உயர் நீதி மன்றங்களைப் பொருத்தமட்டில் அரசமைப்பன் 348வது பிரிவு நடைமுறையில் இல்லை. அப்பிரிவு உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே பொருந்தும். தற்போது, உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் ஆட்சி மொழி ஆங்கிலம்தான். உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, ஆங்கிலத்துடன் அந்தந்த வழக்கு மாநிலத்தின் ஆட்சி மொழியும் வழக்கு மொழி ஆகலாம். நாம் தமிழை மட்டும் வழக்கு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்கவில்லை. ஆங்கிலத்துடன் தமிழையும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதே நேரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தீர்ப்புகளை தமி ழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதுவதற்கு முழு உரிமை உண்டு. தமிழில்தான் தீர்ப்புகளை எழுத வேண் டும் என்று கட்டாயமில்லை. நீதிபதிகள் தமிழில் தீர்ப்பு கள் எழுத விரும்பினால் அவர்களுக்கு தக்க மொழி பெயர்ப்பாளர் அமர்த்தப்படும். தற்போது மொழி பெயர்க்க வழிவகைகள் மிகவும் அதிகம். மொழி பெயர்ப்பாளர்கள் உயர் நீதிமன்றத்திலே உள்ளனர். சுருக்கெழுத்தாளர்களும் உள்ளனர். தற்போது நடை முறையில் உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் நீதிபதி அவர்கள் பேசினாலே, தானே மொழி பெயர்த்து விடும் வசதி வாய்ப்புகளும் உள்ளன. இன்னும் வசதி வாய்ப் புகள் வளர்ச்சி அடைந்து இப்பணியை மிகச் சுலபமாக மாற்ற வாய்ப்புள்ளது. தற்போது தமிழில் தீர்ப்புகள் வழங் குவதற்கும் தமிழ் மொழியை நீதி மன்ற மொழியாகப் பயன்படுத்துவதற்கும் எந்தவித தடையும்; இல்லை. சட்டச் சிக்கலும் இல்லை.

 

================

- நீதிபதி தாவிது அன்னுசாமி -

எல்லா சுதந்திர நாடுகளிலும் அந்தந்த நாட்டின் மொழியே நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலும் அவ்வாறே அமைய வேண்டுமென்று தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எண்ணினர். எனினும் நாடு சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலமே வேரூன்றி நிற்கிறது. அது மக்களுக்கு சங்கடத்தையும் கவலையையும் அளித்து வருகின்றது.

வழக்குத் தொடர்பவர்கள் தம் சார்பாக அல்லது தமக்கு எதிராக என்ன எழுதப்பட்டுள்ளது; என்ன பேசப் படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவர்களின் இயற்கையான உரிமை. மேலும் ஒரு குடிமகனுக்கு மரண தண்டனையை உறுதி செய்யும் போதும் கூட அவனுக்குபுரியாத மொழியில் தீர்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் உயர்நீதிமன்றம் உள்ளது. அதே நீதி மன்றம் குற்றவாளியின் தாய் மொழியிலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்கவேண்டும் என்பதை பலமுறை தெரிவித்திருக்கிறது. குற்றப்பத்திரிகை தமிழில் இருக்க வேண்டும் என்றும் ஆணை இட்டிருக்கிறது.

தாமதத்தின் காரணம்

சிலர் உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு தமிழ் தகுதி அற்றது என்று கருதி வருகின்றனர். இதற்கு ஒரு ஆதா ரமும் இல்லை. மொழி உயிருள்ளது. நாம் எதற்கு அதை உபயோகப்படுத்துகிறோமோ அதற்கு ஒத்துவரக்கூடிய தன்மை உள்ளது.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின் முதற்பகுதியில் வட்டார நீதிமன்றங்களில் தமிழில்தான் தீர்ப்பு அளிக்கப் பட்டு வந்தது... (பேரெழுத்தாளர் வேதநாயகம் பிள்ளைத் தீர்ப்புகளும் இருக்கின்றன) நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அந்நீதிமன்றங்கள் நவீன முறையில் தங்களது தீர்ப்பை தமிழில் மக்கள் - புரிந்துக்கொள்ளும்படி வழங்கி விடுகின்றன. இப்போது ஆங்கிலத்தில் உள்ள உச்சநீதிமன்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்கூட தமிழில் செம்மையாக மொழி பெயர்க்கப்பட்டு சட்டக் கதிர் இதழில் வெளிவருகின்றன. உயர் நீதிமன்றமும் அவ்வா றான ஒரு தீர்ப்புத் திரட்டை பல ஆண்டுகளாக வெளி யிட்டு வருகிறது.

தாமதத்திற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. தீர்ப்புத் தமிழில் அமைந்து விட்டால் அது மற்ற உயர் நீதிமன்றங்களுக்கு உதவாமல் போய்விடும் என்பது. அதேதொனியில் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யும்போதும் சங்கடம் ஏற்படும் என்று சொல்லப்படு கிறது. இது குறித்து - நம் மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால் எல்லாத் தீர்ப்புகளும் அச்சிடப்படுவ தில்லை. எல்லாத் தீர்ப்புகள் மீதும் மேல்முறையீடு செய் யப்படுவதில்லை. மிகச் சிலமட்டும் இவ்விரண்டிற்கும் உட்படுகின்றன. அவைகளை முன்வைத்து எல்லாத் தீர்ப்புகளையும் ஆங்கிலத்தில் எழுதுவது சரியாகாது. தேவையான தீர்ப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப் பதற்கு எளிதில் ஏற்பாடு செய்துவிடலாமே.

எதிர்ப்புக்கு மூலக்காரணம் என்னவென்றால் சிலர் ஆங்கில மொழியைக் கற்பதற்கு நிறைய பணமும் முயற்சியும் செலவிட்டிருக்கின்றனர். அந்த முதலீடு பறிபோய்விடுமோ என்ற அச்சம். இரண்டாவதாக ஒரு பழக்கத்தைத் கைவிடுவதென்றால் மனம் இடம் தருவ தில்லை. இந்த மனப்பான்மை வழக்குரைஞர்களுக்கு அவர்கள் பயிற்சியினால் அதிகமாகவே காணப்படும். இம்மாதிரிதான் இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டுவரை ஆங்கிலம் நீதிமன்ற உபயோகத்திற்கு சரிவராது என்று கூறி பிரெஞ்சுமொழியைப் பயன்படுத்திவந்தனர். அதே சமயத்தில் பிரெஞ்சு நாட்டில் பிரெஞ்சுமொழி தகுதியற்ற தாகக் கருதப்பட்டு இலத்தீன் பயன்படுத்தப்பட்டு வந் தது. ஆங்கிலத்தை நிலை நாட்டுவதற்காக சிக்ஷீஷீனீஷ்மீறீறீ என்ற முதல் அமைச்சர் தீவிர ஏற்பாடு செய்து வெற்றி கண்டார்.

மொழிமாற்றத்தால் சங்கடங்கள் ஏற்படுவது இயல்பே. எனினும் அதை வழக்குரைஞர்களால் சமாளிக்கமுடியும். அதுவுமின்றி மக்கள் தேவை எனும் போது சிலரின் சங்கடம் பொருட்படுத்தத்தக்கதன்று. அவர்கள் மாற்றத் திற்கு ஆயத்தம் செய்துகொள்ளவேண்டியது தான். மாற்றம் கொண்டு வரும்போதும் அவர்களின் சங்கடம் குறை இருக்கும் அதை போக்க முடியும். மேலும் சங்கடம் எல் லோருக்கும் ஒரே அளவில் இருக்காது. இளம் வழக்கறி ஞர்களுக்குத் மொழி மாற்றம் நல்ல வாய்ப்பை அளிக்கும்.

எப்படி செயல்படுத்துவது?

நீதிமன்ற ஆணையினால் தமிழை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு வரமுடியாது என்பதை முன்பே சுட்டிக் காட்டினோம். அதற்கான வழிவகைகள் இந்திய அரசு சட்டத்தில் 348 (2) ஆம் அங்கத்தில் தெளிவாக உள்ளது. முதற்படியாக தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு ஆளுநர் உத்தரவைப் பெறலாம். அதற்கு தமிழக அர சாங்கத்தின் முயற்சி தேவை. முறையாக அரசாங்கத்தை அணுகினால் அது ஆவன செய்யுமென்று நம்பலாம்.

நாடாளுமன்ற ஒப்புதலும் தேவை. இதற்கு தமிழக அரசாங்கத்தையும் தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்களையும் அணுகி ஏற்பாடு செய்ய வேண்டிக் கொள்ளலாம். இதற்குத் தகுந்த முயற்சி எடுத்தால் எல்லா கட்சியினரும் இதை ஆதரிப்பார்கள்.

அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் 15 ஆண்டுகளுக்குள்ளாகவே மாநில மொழிகள் உயர்நீதி மன்றங்களில் புழக்கத்தில் வந்துவிடலாமென்று எதிர் பார்த்தனர். அதற்கென தனிவழிமுறையை 349 ஆம் அங்கத்தில் குறிப்பிட்டனர். இப்போது 50 ஆண்டு களுக்குமேல் ஓடிவிட்டதால் உடனடி யாக மேற்கண்ட செயலில் இறங்கினால் இது நிறைவேறும்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner